ராசேந்திரன் தன் முன் அமர்ந்திருந்த ஆடிட்டரையும் வழக்கறிஞரையும் பார்த்தான்.
எல்லாம் இவ்விருவருடைய முட்டாள்தனத்தால் ஏற்பட்ட குழப்பங்கள்.
முதல் தவறு. அவனும் அவனுடைய தந்தை ரத்தினவேலுவும் நியூ இந்தியா பவன் நிறுவனம் சார்பாக வங்கியிலிருந்து பெற்றிருந்த ஓவர்டிராஃப்ட் கணக்குக்கு இட்டிருந்த ஜாமீனை விலக்கிக்கொள்வதன் மூலம் நாடாருடைய வர்த்தகம் ஸ்தம்பித்து போய்விடும் என்று இவ்விருவரும் கூறிய யோசனை சாத்தியமானதுதானா என்று ஆராயாமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுடைய தந்தையின் மறுப்புகளை பொருட்படுத்தாமல் வங்கிக்கு கடிதம் எழுதியது.
அவன் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக அந்த வங்கி மேலாளர் நாடாரின் ஆடிட்டரையும் வழக்கறிஞரையும் அழைத்து நடந்தவற்றைக் கூறியதுடன் வர்த்தகம் தடையில்லாமல் நடைபெற ஏதுவான ஆலோசனைகளையும் வழங்கி அவர்கள் இருவரும் செய்த செயலை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும தன்னையும் ரத்தினவேலுவையும் நிறுவன இயக்குனர்கள் பதவியிலிருந்தே விலக்கிவிட பரிந்துரைத்திருந்ததும் பிறகுதான் அவனுக்கு தெரியவந்தது.
இரண்டாவது தவறு நியூ இந்தியா பவன் நிறுவனத்தில் தனக்கும் தன் தந்தைக்குமிருந்த இருபது விழுக்காடு பங்குகளை ரகசியமாக விற்றுவிட தீர்மானித்து அந்த பொறுப்பை இவர்கள் இருவரிடமும் தான் ஒப்படைத்தது.
இதே வர்த்தகத்தில் சென்னையில் மிகவும் பிரபலமாகவிருந்த ஒரு உணவக நிறுவனத்தின் உரிமையாளருக்கு இப்பங்குகளை விற்பதன் மூலம் அந்நிறுவனத்தின் செயலாக்கத்தை ஸ்திம்பக்க செய்துவிடலாம் எனறுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் இவ்விருவருடைய ஆலோசனையின்பேரில் அப்பங்குகளை ஒரு சேட்டிடம் கொண்டு விற்றதன் மூலம் அதை அவர் கூடுதல் விலைக்கு நாடாரிடமே பேரம் பேச இடமளித்துவிட்டனர்.
‘என்னவே ரெண்டு பேரும் இப்படி திருட்டு முளி முளிச்சிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? ஏதாச்சும் சொல்லுங்கய்யா!’ என்று எரிந்து விழுந்தார் ரத்தினவேல். ‘இந்த பயதான் புத்திக்கெட்டு போயி பேங்க்ல நாம கொடுத்திருந்த ஜாமீன விலக்கிருவோம்னு சொன்னா ஒங்க புத்தி எங்கய்யா போச்சிது? ஒரு நாலு பேங்க்ல விசாரிச்சி செஞ்சிருந்தா இந்த பிரச்சினை இல்லேல்லே?’
ஆடிட்டர் வழக்கறிஞரைப் பார்க்க அவர் ராசேந்திரனைப் பார்த்தார். நீரே சொல்லும் என்ற தோரணையில் டிட்டர் திரும்பி வழக்கறிஞரைப் பார்த்தார்.
ரத்தினவேல் எரிச்சலுடன் இருவரையும் பார்த்தார். ‘என்னவே யார் சொல்றதுன்னு ஒங்களுக்குள்ள போட்டியாக்கும்? யாராச்சும் ஒருத்தர் சொல்லி அழ வேண்டியதுதானேய்யா?’
‘ஐயா நாம செஞ்சதுல எந்த தப்பும் இல்லைங்கய்யா. எப்போ நாம ஜாமீன விலக்கிக்கிட்டோமோ அப்பவே பேங்க் மானேசர் ஓவர்டிராஃப்ட் கணக்க சட்டப்படி நிறுத்திருக்கணும்யா. ஆனா அந்தாளு அவிய ஆடிட்டரோட தோஸ்த்து போலருக்கு. அந்தாள்கிட்ட நீங்க ஜாமீன் விலக்கிட்ட விஷயத்த சொல்ல அவரு ஒடனே மோகன் வக்கீல்கிட்ட சொல்ல அந்தாளுக்குதான் பயங்கரமான குறுக்கு மூளையாச்சிங்களே.. மேனேசர என்னத்தையோ குடுத்து சரிகட்டிட்டாருங்கய்யா.. அதான்..’
அவரை முடிக்கவிடாமல், ‘ஏன்யா தெரியாமத்தான் கேக்கேன். அந்தாளுக்குருக்கற குறுக்கு மூளை ஒங்களுக்கு இருக்க வேணாம்? நீங்க என்ன செஞ்சிருக்கணும்? அந்த மேனேசர சரிகட்டி ஒடனே அந்த நாடானுக்கு நோட்டீஸ் விட வச்சிருக்கணும்லே.. பேங்குலருந்து ஒரு நோட்டீஸ் மட்டும் போயிருந்திச்சின்னா பெறவு அவன் ஆடிட்டரும் வக்கீலும் என்னத்தைய்யா செஞ்சிருக்க முடியும்? அத கோட்ட விட்டுட்டு இப்ப வீம்பு பேசிக்கிட்டு... எலேய் ராசேந்திரா ஒன்னைய சொல்லணும்லே..’ என்று எரிந்து விழுந்தார் ரத்தினவேல்.
‘அப்பா.. நடந்தத பேசறத விட்டுட்டு இனி என்ன செய்யலாம்னு பேசுங்கப்பா!’ என்றான் ராசேந்திரன் பதிலுக்கு.
‘ஆம்மா.. உள்ளதச் சொன்னா கோவம் மூக்குக்கு மேல வந்துருமே..’ என்று முனுமுனுத்தவாறு தன் முன் அமர்ந்திருந்த ஆடிட்டரை பார்த்தார். ‘சொல்லும்யா. இனி என்ன செய்யலாம்னு ஐயா கேக்காரில்லே.. சொல்லுமே..’ என்றார் கேலியுடன்.
ஆடிட்டர் உடனே வழக்கறிஞரைப் பார்த்தார். அவர் தான் குறித்து வைத்திருந்த குறிப்புகளை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு நிமிர்ந்து ரத்தினவேலுவைப் பார்த்தார்.
‘அய்யா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிரல..’
ரத்தினவேலு குறுக்கிட்டு, ‘அத நீர் சொல்லாதேயும்.. இதுக்கு என்ன வழி.. அதெ மட்டும் சொல்லும்..’ என்றார் எரிச்சலுடன்.
இக்குறுக்கிட்டை எதிர்பார்த்திராத வழக்கறிஞர் ஒரு நொடி தடுமாறிப்போனார். பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘இப்ப நாம செய்யக் கூடியது ஒன்னு இருக்குய்யா. அந்த மேனேசருக்கு எதிரா ஒரு புகார அவங்க ஹெட் ஆஃபீசுக்கு குடுக்கலாம். ஓவர்டிராஃப்ட் கணக்க மேல தொடர்ந்து அனுமதிச்சா இப்பருக்கற கடனுக்குக் கூட நாங்க ஜவாப்தாரியில்லே. அதனால ஒடனே கணக்க நிறுத்தச்சொல்லி உத்தரவு போடணும்னு.’
ரத்தினவேலு தன் மகனைப் பார்த்தார். ‘என்னலே இந்த யோசனையாவது உருப்படியா நடக்குமா?’
ராசேந்திரன் எனக்கென்ன தெரியும் என்பதுபோல் தோள்களைக் குலுக்கினான். ‘ஒங்களுக்கு என்ன தோனுதோ அப்படி செய்ங்க. அப்புறம் என்னாலத்தான் ஆச்சின்னு சொல்லாதீங்க.’
ரத்தினவேலு பொங்கி வந்த ஆத்திரத்தை மென்று விழுங்கினார். தறுதலப்பய மவனே, ஒன்னைய பெறவு வச்சிக்கறேன்.
‘சரிய்யா. ஒம்ம புகார அவிய ஹெட் ப்பீசும் சட்டை செய்யலேன்னு வச்சிக்குவம். வேற மேக்கொண்டு என்ன செய்யறதா உத்தேசம்?’ என்றார் வழக்கறிஞரைப் பார்த்து.
‘அப்படியெல்லாம் ஆகாதுய்யா.’
‘வேய் வக்கீலு.. ஒரு காரியத்துல எறங்குறதுக்கு முன்னால ரெண்டையும் யோசிக்கணும்யா? சட்டை செய்யலன்னா அதுக்கு என்ன செய்வீரு? அப்படி சிந்தியும்.’
இதென்னடா தொல்லை? முன்னால போன முட்டுறதும் பின்னால வந்தா ஒதைக்கறதுமால்ல இருக்கு என்று யோசித்தவாறு தன் அருகிலிருந்த ஆடிட்டரைப் பார்த்தார் வழக்கறிஞர்.
அவர் சட்டென்று, ‘நம்மால மேக்கொண்டு ஒன்னும் செய்ய முடியாதுய்யா.’ என்றார்.
‘அப்படி போடும் அருவாள. அதானய்யா கேக்கேன்? சரி.. அப்படியே வச்சிக்கிருவோம். அவிய நம்ம போடற புகார குப்பையில வீசிட்டு அந்த பய கணக்க தொடர்ந்து குடுக்கான்வன்னு வச்சிக்குவம். சட்டத்துல அத தடபண்றதுக்கு வளி இருக்கா? அதாம்யா, கோர்ட்ல ஸ்டே கெடைக்குமான்னு கேக்கேன்.’
ராசேந்திரன் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தான். கையில் கரண்டியுடன் சமையற்காரராக தன்னுடைய வாழ்க்கையை துவக்கியவரா இவர்?
‘எலேய் என்ன பாக்கே? என்னடா படிக்காத தற்குறின்னு நாம நெனச்சிக்கிட்டிருக்க இந்த போடு போடறானேன்னா?’
ராசேந்திரன் அவசரமாய் மறுத்தான். ‘இல்லப்பா..’
‘அதான பார்த்தேன். நீர் சொல்லும்யா.. சட்டத்துல வளி இருக்கா?’
வழக்கறிஞர் சங்கடத்துடன் நெளிந்தார். ‘அப்படி செய்றதுனால நமக்குத்தானய்யா நஷ்டம்?’
ரத்தினவேலு முறைத்தார். ‘எப்படிய்யா? அதையுந்தான் சொல்லுமே?’
ஆடிட்டர் குறுக்கிட்டார். ‘அய்யா.. பேங்கே ஒங்க ஜாமீன் எங்களுக்கு இல்லாட்டியும் பரவால்லை. கம்பெனிய நம்பி நாங்க கடன தொடர்ந்து குடுக்கப் போறோம்கறப்ப நமக்கு கடன திருப்பிக்குடுக்கறதுல எந்த பங்கும் இருக்காதுல்ல? அப்புறம் எதுக்கு அத ஸ்டே பண்றது?’
ரத்தினவேலு உரக்க சிரித்தார். ‘பாத்தியாலே ராசேந்திரா. இவியளுக்கு நாம பணத்த கட்டாம தப்பிச்சிக்கலாமாம். அதாடா வேணும் நமக்கு?’
வழக்கறிஞரும் ஆடிட்டரும் விளங்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
ராசேந்திரன் இனியும் தான் மவுனமாக இருப்பது சரியல்ல என்று நினைத்தானோ என்னவோ, 'ஆடிட்டர் சார். நீங்க என்ன செஞ்சாலும் அந்த ஓவர்டிராஃப்ட் லயபிலிட்டி நமக்கு வராம இருக்காது. அவ்வளவு ஈசியா மாமா எங்க ரெண்டு பேரையும் தப்பிக்க விடமாட்டார். அதுக்கும் ஏதாச்சும் ஐடியா வச்சிருப்பார். அதனால அப்பா சொல்றா மாதிரி அவரும் அந்த கணக்க எஞ்சாய் பண்ண முடியாம அவர் குடுத்துருக்கற செக்கெல்லாம் ரிடர்ன் ஆகி பிசினஸ் அப்படியே நின்னு போயிரணும்.. அதான் முக்கியம்..’என்றான். ‘என்னப்பா?’
‘கரெக்டா மவனே.. இப்பத்தான் நீ என் மவன்னு நிரூபிச்சிட்டே.’ என்ற ரத்தினவேலும் ஆடிட்டரைப் பார்த்தார். ‘என்னய்யா.. அதான் தெளிவா சொல்லிட்டோம்லே.. அதுக்கு ஏதாச்சும் வளி இருக்கான்னு பாருங்க. பாக்கறதென்ன பாக்கறது.. வளி இருக்கும், இருக்கணும்.. போய் ஒங்க மண்டைய ஒடச்சிக்கிட்டு கண்டுபிடிங்க.. இல்லேய்யான்னு மட்டும் வந்து நிக்காதீய, சொல்லிட்டன்.’
சரி என்று அரைமனதுடன் வழக்கறிஞர் தலையை அசைக்க ஆடிட்டர் பரிதாபமாக அவரைப் பார்த்தார்.
‘சரிய்யா.. அது முடிஞ்சிது. பெறவு அந்த ஷேர் விஷயம். அத என்ன செய்ய போறீய? அந்த சேட்டுப் பயகிட்டருந்து அத மறுபடியும் நம்மால வாங்கிர முடியுமா?’ என்றார் ரத்தினவேலு.
ஓ! அது வேற இருக்கோ.. இன்னைக்கி நம்ம நேரம் சரியில்ல போலருக்கு என்பதுபோல் விழித்தனர் ஆடிட்டரும், வழக்கறிஞரும்.
‘அதெப்படிங்கய்யா முடியும்? நாம பணத்த வாங்கி பவர் குடுத்துட்டில்ல வந்துருக்கோம்.’
ரத்தினவேலு எரிந்து விழுந்தார். ‘ஏம்யா அது தெரியாமய்யா கெடக்கு? நாம வித்தோம்.. பவர குடுத்தோம். இப்ப வேணாங்கறோம். பணத்த திருப்பி குடுத்துட்டு பவர் கேன்சல் செஞ்சிர வேண்டியதுதானய்யா? அவந்தான் இன்னும் யாருக்கும் விக்கயில்லையே? என்ன நா சொல்றது?’
வழக்கறிஞர் ஆடிட்டரைப் பார்த்தார். ‘அய்யா அந்தாளு அதுக்கு ஒத்துக்கணுமே..?’
‘ஏம்யா அதுக்குத்தானெ ஒங்கள வளி கேக்கோம்? நானே எல்லாத்தையும் சொல்லிட்டா பெறவு நீங்க ரெண்டு பேரும் எதுக்குய்யா? வருசா வருசம் கொட்டிக் குடுக்கோம்லே.. அந்த சேட்டுப் பய ஒத்துக்கணும்னா நாம என்ன செய்யணும்? அந்த ரூட்ல சிந்திங்கய்யா.. அந்த பய ஏற்கனவே இவன் மாமன்கிட்ட பேரம் பேசியிருக்கான். அந்த டீல் நடக்கக் கூடாது. அது மட்டும் நடந்திருச்சின்னா எங்க ரெண்டு பேரையும் கம்பெனிய விட்டே தூக்கிருவான். பெறவு தலை கீழா நின்னாலும் அந்த பயல ஒன்னும் செய்ய முடியாது.’ என்றவர் தன் மகனைப் பார்த்தார். ‘எலேய் ராசேந்திரா.. நீ கம்பெனிக்குள்ள செஞ்சிருக்கற தில்லுமுல்லு எல்லாத்தையும் அந்த செல்வம் பய கண்டுபிடிக்கறதுக்கு ரொம்ப நேரமாவாது.. இந்த ரெண்டு பேரையும் மாத்திரம் நீ நம்பிக்கிட்டிருக்காம ஒம் புத்தியையும் தட்டிவிட்டு ஒரு வளிய கண்டுபிடிக்கற வளிய பாரு. சொல்லிட்டேன்.. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள இதுக்கு வளி கண்டுபிடிக்கலே.. பெறவு ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லேன்னு கைய களுவிட்டு நாம் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்..’ என்றவாறு எழுந்து நின்றார்.
ராசேந்திரனும் மற்ற இருவரும் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க ரத்தினவேல் படிகளிலேறி தன்னுடைய அறையை நோக்கி சென்றார்.
தொடரும்.
1 comment:
"உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்
தப்பை செய்தவன் தண்டனை பெறுவான்....."
Post a Comment