நாடார் தன்னுடைய செல் ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த மோகனைப் பார்த்தார்.
அவர் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்ததிலிருந்தே தான் ஃபிலிப் சுந்தரத்திடம் பேசிய தோரணையில் அவருக்கு உடன்பாடில்லை என்பதைப் புரிந்துக்கொண்டார்.
உதடுகள் கேலியுடன் வளைய, ‘என்ன தம்பி தலையக் குனிஞ்சிக்கிட்டீங்க? நான் பேசன ஸ்டைல் ஒங்களுக்கு பிடிக்கல.. சரிதான?’ என்றார்.
மோகன் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். பதிலளிக்காமல் அமர்ந்திருந்தார்.
நாடார் எழுந்து நின்றார். ‘பெறவென்ன தம்பி.. யார்யா ஃபேக்ஸ அனுப்புனா கேட்டா சட்டுன்னு சொல்லிற வேண்டியதுதான? எதுக்கு சவ்வு மிட்டாய் மாதிரி இளுக்கறது? அவருக்கென்ன.. அந்த டாக்டர் பய நான் அனுப்புனேன்னுல்ல நெனச்சிக்கிட்டிருக்கான்? இல்ல தம்பி, தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த பயல போர்ட விட்டு அனுப்பனும்னு நா எதுக்கு நெனெக்கப் போறேன்? எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு வருசத்துக்குள்ள போகத்தான போறீரு.. பெறவென்ன? களவாணிப்பய.. என்னதான் சொல்லுங்க தம்பி.. அந்த யூனியன்காரப் பய பயங்கர கில்லாடிதான் போங்க.. அவன் மட்டும் இத ஃபேக்ஸ் வழியா அனுப்பலேன்னு வைங்க.. இந்த பயலும் அவன் ஆடிட்டருமா சேர்ந்துக்கிட்டு அந்த நியூச வெளியவே வரவிடாதபடி செஞ்சிருப்பாய்ங்க.. என்ன தம்பி, நாஞ்சொல்றது சரிதான?’
மோகன் அவரை மவுனமாகப் பார்த்தார். பிறகு இல்லையென்று தலையை அசைத்தார்.
நாடாருடைய முகம் சட்டென்று கோபத்தில் சிவந்துபோனது. ‘என்ன தம்பி சொல்றீங்க..?’
‘நா சொல்ல வந்தது அது இல்ல.. அந்த ஃபேக்ஸ் விஷயம்..’
நாடார் கோபத்துடன், ‘நா மட்டும் இவ்வளவு நேரமா அந்த ஃபேக்ஸ் விசயத்தத்தான தம்பி பேசிக்கிட்டிருக்கேன்..’ என்றார். ‘என்னாச்சி ஒங்களுக்கு? நீங்களும் அந்த சுந்தரம் ஐயா மாதிரியே பேசறீங்க?’
மோகனின் உதடுகள் அவரையுமறியாமல் புன்னகையுடன் விரிந்தன. ‘நா சொல்ல வந்தது சேர்மனுக்கு வந்த ஃபேக்ஸ பத்தியில்ல.. சுந்தரம் சார அனுப்ப சொன்னீங்களே அதப்பத்தி.’
நாடார் உரக்கச் சிரித்தார். ‘ஓ! நீங்க அதச் சொல்றீங்களா? ஏன்.. கேட்டதுல என்ன தப்பு?’
‘அது ஒரு ரகசியமான லெட்டராச்சே.. அத எப்படி சி.ஜி.எம் ராங்லருக்கற ஒருத்தர் ஒங்களுக்கு அனுப்புவார்? எதுக்கு நாடார் அவர தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?’
நாடார் மீண்டும் சிரித்தார். ‘நல்ல ஆளுங்கய்யா.. அதிகமா படிக்கறதோட வெனயா இதெல்லாம். எத செய்யச் சொன்னாலும் அது சரியாருக்குமா, தப்பாருக்குமான்னுல்லாம் யோசிச்சிக்கிட்டிருந்தா... எய்யா.. நா என்ன அவரெ களவு செய்யிங்கய்யான்னா கேக்கேன்? ஒரு லெட்டர்.. அத கேக்கறதுல என்னய்யா தப்பு? அத வச்சிக்கிட்டு நா என்ன கோட்டையையா புடிச்சிறப்போறேன்..? இதுக்கு எதுக்கு சங்கடப்படறது?’
மோகனுக்கு இவரிடம் இதைக் குறித்து மேலும் விவாதிப்பதில் பயனில்லையென்று தோன்றியது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கத் தெரிந்த இவரைப் போன்றவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி எங்கே நினைப்பு இருக்கப் போகிறது?
‘என்ன தம்பி சைலண்டாய்ட்டீங்க?’
‘இல்ல நாடார்.. நீங்க நெனக்கறதுல தப்பு இருக்கா இல்லையாங்கறதில்ல பிரச்சினை. சுந்தரம் சார் ஒரு பொறுப்பான பதவியில இருக்கறவர். அதுமட்டுமில்ல. நிச்சயமா நீங்க கேட்ட லெட்டர் அவர் கைவசம் இருக்க சான்ஸ் இல்ல. அத அவர் கேட்டு வாங்குனாலும்.. அவருக்கு பெர்சனலா ஒரு ஃபேக்ஸ் இருந்தாத்தான் யாருக்கும் தெரியாம ஒங்களுக்கு அவரால அனுப்ப முடியும்.. இருந்தாச் சரி.. இல்லாட்டி? வேற யார் மூலமாவதுதான அனுப்பணும்? அப்புறம் அத ரகசியமா வச்சிருக்கறதெப்படி? அதத்தான் சங்கடம்னு சொல்றேன்..’
நாடார் பதிலளிக்காமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு திரும்பி மோகனைப் பார்த்தார். ‘இதுக்குத்தான்யா படிச்சிருக்கணுங்கறது.. சரியா பிட்டு, பிட்டு வச்சிட்டீங்க தம்பி.. நீங்க சொல்றது சரிதான்.. அதுக்குத்தான் அந்த சுந்தரம் அப்படி யோசிச்சிருக்கார்.. சரி.. ஃபேக்ஸ்ல வேணாம்.. ஒரு ஆள விட்டு வாங்கிருவோம்.. என்ன தம்பி?’
மோகன் நொந்துப் போனார். சரி.. மனுஷன் இந்த விஷயத்த விட்டுருவார்னு பார்த்தா.. ஃபேக்ஸ் அனுப்பறதவிட இது மோசமான விஷயமாச்சே.. நாடார் அனுப்புற மனுசன் அஜாக்கிரதையா அந்த லெட்டர வழியில தொலைச்சிட்டு வந்து நின்னா வேற வெனையே வேணாம்.. அந்த லெட்டர வச்சிக்கிட்டு என்ன செய்யறதா உத்தேசம்னு வெளிப்படையாவே கேட்டுட்டா என்ன?
‘என்ன தம்பி அந்த லெட்டர நா எதுக்கு இப்படி விடாப்பிடியா கேக்கறேன்னு பாக்கீங்களோ?’
மோகன் வியப்புடன் அவரைப் பார்த்தார். நாம மனசுல கூட ஒன்னையும் நினக்க முடியாது போலருக்கே..
நாடார் மீண்டும் எழுந்து அறையின் குறுக்கே நடக்க ரம்பித்தார். ‘தம்பி.. இது நீங்க நெனைக்கறா மாதிரி சின்ன விஷயமில்ல.. ஏன்னு கேளுங்க.. நா தெரியாத்தனமா இந்த லெட்டரப் பத்தி அந்த டாக்டர் பயகிட்ட சொல்லிட்டேன்.. அவனோட குறுக்குப் புத்தி இன்னேரம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கும்.. நாளைக்குள்ள அந்த லெட்டரையே இருக்கற எடம் தெரியாம செஞ்சிட்டாலும் செஞ்சிருவான்.. புது சேர்மனுக்கு இந்த வெவரம் தெரியாதுல்ல தம்பி.. அதான்.. அதுக்குத்தான் அந்த ஃபேக்ஸ் காப்பி..’
மோகன் அதிர்ச்சியில் என்ன பதிலளிப்பதென தெரியாமல் அவரையே பார்த்தார். இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதோ.. பாம்பின் கால் பாம்பறியும்னு சும்மாவா சொன்னாங்க?
******
ஃபிலிப் சுந்தரம் நாடாருடைய வில்லங்கம் பிடித்த கோரிக்கையிலிருந்து எப்படி தப்புவதென தெரியாமல் சற்று நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தார். பிறகு சட்டென நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய இண்டர்காம் வழியாக மாதவனின் காரியதரிசி சுபோத்தை அழைத்தார்.
எதிர் முனையில் தொலைப்பேசி உபயோகத்திலிருந்தது தெரிந்தது. எழுந்து முதல் வேலையாக தன்னுடைய செல்ஃபோனை அணைத்து பாக்கெட்டில் வைத்தார். அதால் இன்று பட்ட பாடு போதும் என்று தோன்றியது. இதற்கு மேலும் சோமசுந்தரமோ அல்லது நாடாரோ அழைத்து அவதிப்பட அவர் தயாராக இல்லை. மேசை மீதிருந்த மடிக் கணினியை மூடி இழுப்பில் வைத்து பூட்டினார். சனிக்கிழமைகளைத் தவிர வார நாட்களில் அவர் கணினியை வீட்டிற்கு கொண்டு செல்வதில்லை. வீடு திரும்பியதும் உடையை மாற்றிக்கொண்டு காலையில் செல்லும் ஜிம்முக்கே உடை பயிற்சிக்காகச் செல்வது வழக்கம். திரும்பி வந்து இரா உணவை தயாரித்து உண்டு சற்று நேரம் பிரார்த்தித்துவிட்டு பத்து மணி செய்தியைக் கேட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுவார். ஆகவே, அவருக்கு வார நாட்களில் வீட்டில் கணினி தேவைப்பட்டதில்லை.
அவர் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியேறி வெளியே அமர்ந்திருந்த தன்னுடைய பிரத்தியேக அலுவலக அதிகாரிகளை ஒரு பார்வை பார்த்தார். தன்னை நிமிர்ந்து நோக்கிய அதிகாரியிடம் நான் போறேன் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நேரே சேர்மனின் அறை இருந்த நான்காவது மாடிக்கு விரைந்தார்.
நாடார் விரும்பிய கடிதம் இருந்த கோப்பு முந்தைய சேர்மனின் தனிப்பட்ட பொறுப்பில்தான் இருந்ததாக நினைவு அவருக்கு. ஆகவே அதை இப்போதே வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்தார்.
நாடாருடைய வேண்டுகோளை நாம் பூர்த்தி செய்யக் காண்பித்த தயக்கம் அவரை வேறு யார் மூலமாகவாவது முயற்சி செய்ய ஒருவேளை தூண்டலாம் என்று நினைத்தார் சுந்தரம்.
It should somehow be prevented.. It might lead to unnecessary complications.. Mr.Madhavan also may not like it.. Subodh should be advised to be careful..
ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவர் அங்கு சென்றடைந்தபோது சுபோத்தின் இருக்கை காலியாக இருந்தது. விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்டு அந்த தளத்தின் பிரத்தியேக பாதுக்காப்பு அதிகாரியைத் தவிர எவரும் இல்லாமலிருக்கவே ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தார்.
********
சுபோத் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை முடுக்கி சாலையில் இறங்கி வாகன நெரிசலில் கலந்தான். மாலை நேர நெரிசலில் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டியிருந்தது.
சற்று முன் முரளியுடன் தொலைப்பேசியில் பேசியது அவனது மனதை நெருடிக்கொண்டே இருந்தது.
தொலைப்பேசியில் முரளி விடுத்தது ஒரு மிரட்டலோ என்று கூட எண்ணத் தோன்றியது.
சென்னைக்கு அவன் மாற்றலாகி வந்து நான்கு வருடங்கள்..
முந்தைய மும்பைவாசம் அலுத்துப் போய் சென்னை வந்தவனுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மிகவும் பிடித்துப் போனதென்னவோ உண்மைதான்.
ஆங்கிலம் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மராத்தியில் பேச விரும்பும் மும்பைவாசிகளுடன் ஓப்பிடுகையில் சென்னையில் ரிக்ஷ¡ ஓட்டுனர் முதல், பால்காரர், காய்கறி வியாபாரி என சகலரும் அரைகுறை ஆங்கிலத்திலாவது பேசி அவனைப் போன்ற மொழி தெரியாதவர்களின் சங்கடத்தைக் குறைக்க முயன்றது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தவர் விஷயத்தில் அதீத விருப்பம் காட்டும் சென்னைவாசிகளின் அன்புத் தொல்லையும் நாளடைவில் பழகிப் போக மும்பைவாசிகளின் யாரையும் ஒரு பொருட்டாக கருதாத விட்டேத்தியான குணத்துக்கு இது மேல் என்றே தோன்றியது...
அலுவலகத்திலும் அவனுக்கு எந்தவித சங்கடமும் இருந்ததில்லை. அலுவலகத்தில் கடைநிலை ஊழியனுக்கும் ஆங்கிலத்தைப் புரிந்துக்கொள்ளக் கூடிய திறமை இருந்ததைப் பார்த்தான். மும்பையை ஒப்பிடுகையில் இங்கே வேலையில் ஒரு ஒழுக்கமும், சட்டத்திட்டங்களுக்கு பணியும் குணமும், நட்புடன் பழகும் விதமும் அவனை மிகவும் கவர்ந்துபோக நிர்வாகமே தன்னை மாற்றாத வரையில் இங்கேயே பணிபுரியும் நோக்கத்துடன் இருந்தான்.
தலைமையகத்தில் எச். ஆர் இலாக்காவில் பணிபுரிந்துக்கொண்டிருந்த அவனுடைய திறமையையும், அடக்கத்தையும் கவனித்த இலாக்கா தலைவரின் பரிந்துரையால் முந்தைய சேர்மன் பதவியேற்றவுடன் அவருக்கு அந்தரங்க காரியதரிசியாக நியமிக்கப்பட்டான்..
அவரும் அவனுடைய அதீத புத்திசாலித்தனத்தால் கவரப்பட அதே பதவியில் இதோ இரண்டரையாண்டு காலம்.. அவ்வப்போது சேதுமாதவன் சார் தரும் தொல்லைகள் இருந்தாலும் அவன் மீது முழுநம்பிக்கை வைத்திருந்த ஃபிலிப் சுந்தரம் சாரும் வந்தனா மேடமும் அளித்த ஆதரவில் எந்த பிரச்சினையுமில்லாமல் அவனால் பணியாற்ற முடிந்தது.
ஆனால் முந்தைய சேர்மன் யாரும் எதிர்பாராத நேரத்தில் பதவி விலக அந்த பதவிக்கு சேதுமாதவன் சார் முயற்சி செய்து தோற்க கடந்த ஒரு மாதகாலமாக அவன் அனுபவித்து வந்த சங்கடம் கடந்த இரு நாட்களாக உச்சத்திற்கு எட்டியிருந்ததாக கருதினான்.
அதுவும் இன்று எப்போதும் இல்லாமல் ஃபிலிப் சுந்தரம் சாரும் தன்னை சாடுவார் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை..
இறுதியில் இந்த முரளி வேறு..
அவன் முரளியின் பெயரை வேறு வழியில்லாமல் சுந்தரம் சாரிடம் சொல்ல வேண்டிவந்துவிட்டது என்று அவனிடம் தொலைப்பேசியில் கூறியபோது ஆரம்பத்தில், ‘It is Ok.. நா பார்த்துக்கறேன்.’ என்றவன் இறுதியில், ‘இருந்தாலும் ஒங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன் சுபோத்.. இதுல நீங்க ஏதாச்சும் டர்ட்டி கேம் விளையாடுனீங்கன்னு கேள்விபட்டேன்.. அப்புறம் ஒங்கள ஊர விட்டே ஓட்டிருவேன்.. ஜாக்கிரதை..’ என்றவுடன் கலங்கிப் போனான்.
‘சிக்னல் போட்டது கூட தெரியாம என்னத்த சார் யோசிச்சிட்டிருக்கீங்க? போங்க சார்.. பின்னால எத்தனெ வண்டி நிக்குது பாருங்க.’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு தன் எதிரில் கோபத்துடன் நின்ற போக்குவரத்து காவலரைப் பார்த்தான். ‘சாரி.. சார்’ என்றவாறு வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு விரைந்தான்..
ஆனால் மனமோ முரளியின் இந்த மிரட்டலை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று சிந்திக்கத் துவங்கியது..
தொடரும்..
No comments:
Post a Comment