6.11.06

சூரியன் 138

‘எதுக்கு அப்படிச் சொன்னீங்க?’

குளியலறையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மாதவன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். ‘என்ன சொன்னேன்?’

‘சீனிக்கிட்ட சொன்னதத்தான் கேக்கேன்.’

‘ஏன் அதுல என்ன தப்பு?’

சரோஜா எரிச்சலுடன் தன் கணவரைப் பார்த்தாள். ‘என்னங்க நீங்க, அந்த மனுஷந்தான் அவங்க ரெண்டு பேரும் பழகறதையே விரும்பலையே. அவர் கிட்ட போயி இவன் என்னத்தங்க பேசறது?’

மாதவன் தங்கள் இருவருடைய சம்பாஷனையிலும் தலையிடாமல் அறையிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த தன் மகளைப் பார்த்தார். ‘நீ என்ன சொல்றே வத்ஸ்?’

வத்ஸலா தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றாமல் தன்னுடைய தோள்களை உயர்த்தி இறக்கி தனக்கு இதில் கருத்து ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தினாள்.

‘அவ கிட்ட கேட்டா? அவளுக்கு எப்ப சீனியோட விஷயத்துல அக்கறை இருந்திருக்கு? அவதான் கல்யாணம்னால காத தூரம் ஓடறவளாச்சே?’

வத்ஸ்லா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். ‘ஏம்மா சும்மா இருக்கற என்னெ வம்புக்கு இழுக்கறே?’

சரோஜா தன் மகளை எரிச்சலுடன் பார்த்தாள். ‘பின்னே என்னடி? நாங்க ரெண்டு பேரும் பேசிக்கறதுல ஒனக்கு எந்த பங்கும் இல்லேங்கறா மாதிரி தோளப் போட்டு அந்த குலுக்கு குலுக்கறே?’

மாதவன் புன்னகையுடன் இருவரையும் மாறி, மாறி பார்த்தார்.

வத்ஸ்லா அப்படியே அச்சாக தன் மனைவியை உரித்து வைத்திருந்ததை அப்போதுதான் முதல் முதலாக பார்ப்பதுபோல் அதிசயத்துடன் பார்த்தார்.

இருவரும் எரிச்சலுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற பாவனையும் அச்சாக அப்படியே இருந்தது!

‘ஏய், ஏய்.. போறும்.. வந்த இடத்துல ஒங்க சண்டைய ஆரம்பிச்சிராதீங்க.. இது வீடு இல்ல.. ஹோட்டல்..’

சரோஜாவும், வத்ஸலாவும் திரும்பி மாதவனைப் பார்த்தனர்.

‘நா சும்மாத்தானப்பா இருந்தேன்.. இந்த அம்மாதானே வம்புக்கு இழுத்தாங்க.’

மாதவன் தன் மகளை நெருங்கி தன் கையிலிருந்த துவாலையை அவளுடைய தோளைச் சுற்றி இட்டு விளையாட்டாக அவளுடைய தலையைக் குட்டினார்.

தன் தந்தையின் இந்த செயலை எதிர்பார்த்திராத வத்ஸ்லா வியப்புடனும் சந்தோஷத்துடனும் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டாள். ‘I did not expect this from you Dad.’

மாதவன் சிரிப்புடன் தன் மகளை அணைத்துக்கொண்டார். பிறகு திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.

‘இங்க பார் சரோ.. சீனி நமக்கு எப்படி முக்கியமோ அதே மாதிரி அந்த பொண்ணும் அவங்க பேரண்ட்சுக்கு. நா கேள்விப்பட்ட வரைக்கும் அவங்களுக்கு அந்த பொண்ணெ விட்டா வேற யாருமில்ல போலருக்கே?’

சரோஜா வியப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். எப்படி இந்த மனுசனால சட்டுன்னு ரெண்டே நாள்ல மாற முடிஞ்சது? அந்த பரபரப்பு புடிச்ச மும்பைதான் இவர அப்படி ஒரு ஜடமா, குடும்பத்த பத்திய நினைப்பே இல்லாதவரா மாற்றி வச்சிருந்ததா?

அவரைத் திருமணம் புரிந்துக்கொண்டு வந்த புதிதில் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு இப்படி எந்தவித சொந்தமுமில்லாமல் தனிமரமாக நின்ற மனிதரை நம்பி வந்துவிட்டோமே என்று பல இரவுகள் உறங்காமல் அழுதிருக்கிறாள்.

மாதவன் கிளை மேலாளர் பதவிக்கு உயரும் வரை தன்னுடைய மனைவி, மக்கள் என்று ஒரு சராசரி குடும்பத் தலைவனுக்குரிய எல்லா கடமைகளையும் செய்வதில் எவ்வித குறையும் வைக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆனால் தன்னுடைய முப்பதாவது வயதில் வங்கிலேயே வயது குறைந்த மேலாளர் என்ற பெருமையை அடைந்தபோது அவருக்கு குடும்பம் என்று ஒரு இருந்ததே மறந்துபோனது.

வேலை, வேலை, வேலை.. இதுதான் அவருடைய நினைப்பாயிருந்தது.

சரோஜாவும் படித்து பட்டம் பெற்றிருந்ததால் அவருடைய துணை இல்லாமலே வத்ஸ்லா மற்றும் சீனிவாசனின் படிப்பு விஷயங்களைக் கவனித்துக்கொள்ள முடிந்தது.

அவள் ஏற்கனவே வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்ததால் தன்னுடைய பொருளாதார தேவைகளுக்கும் மாதவனைச் சார்ந்திருக்க தேவையிருந்ததில்லை.

மாதவன் ஊர், ஊராக மாற்றலாகிச் சென்றபோதும் அவள் தன்னுடைய குழந்தைகள் இருவருடனும் தன்னுடைய பெற்றோர் வசித்திருந்த திருச்சியிலேயே தங்கிவிட்டாள்.

மாதவன் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் உயர் அதிகாரிகளுள் ஒருவராக சென்னையில் பதவியேற்றபோதுதான் தன்னுடைய மனைவியையும் மக்களையும் சென்னைக்கு கொண்டு வந்து குடியமர்ந்தார்.

பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக விடுமுறைக்கு மட்டும் வந்து சென்ற மாதவனுடன் பள்ளிப் பருவத்திலிருந்த வத்ஸ்லாவும், சீனிவாசனும் ஒட்ட மறுத்தனர்.

மாதவனுக்கு அது ஒரு பொருட்டான விஷயமாக படாவிட்டாலும் சரோஜாவுக்கு அது ஒரு குறையாகப்பட்டது.

மாதவனுடைய கவனத்தை தன்னாலியன்றவரை அவர்கள் இருவர் பேரிலும் திருப்ப முயற்சி செய்தாள்.

ஆனால் மாதவன் தன் வயதையொத்த சேதுமாதவனுடன் பதவி போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்க ஒரே வீட்டிலிருந்தும் தலைவனில்லா குடும்பம் போலவேதான் இருந்தது.

ஆனால் நாளடைவில் அதுவே அவர்களுக்குப் பழகிப் போனது. ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் சரோஜாவுக்கும் நண்பிகள் வட்டம் பெருக ஆரம்பித்து அவர்கள் குடியிருந்த வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் ஒரு மகளிர் கழகத்தையும் உருவாக்கி அதிலேயே மூழ்கிப் போனாள்.

அவளுடைய குடும்பத்துக்கு எந்தவித உறவோ, பந்தமோ இல்லாத சிவகாமி ஒரு சாதாரண வேலையாளாய் வந்து சேர்ந்து அவளுடைய குழந்தைகள் இருவரையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது அவளுக்கு மிகவும் வசதியாய்ப்போனது.

சரோஜாவின் இந்த முடிவு மாதவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தன்னுடைய தந்தையின் பாசத்தை அறிந்திராத சீனிவாசன் தன்னுடைய தாயையும் இழந்ததுபோல் உணர்ந்ததை அவள் கவனிக்க தவறியதன் விளைவு அவன் தன்னுடைய பள்ளியிறுதி தேர்வில் தோற்றுவிட்டு வந்து நின்றான்.

‘இங்க பார் சரோ.. சீனி இப்படி ஆனதுக்கு நான் காரணம்னு மட்டும் சொல்லாத. நான் ஒரு அப்பனா என்னோட பிள்ளைங்களுக்கு எல்லா வசதிகளையும் செஞ்சி குடுத்துருக்கேன். சிட்டியிலயே பெஸ்ட் காலேஜ்.. சிட்டியிலேயே பெஸ்ட் ஸ்கூல்.. போய் வரதுக்கு கார்.. வருசம் ஒருதடவ சம்மர்ல வெக்கேஷன்.. இத விட ஒரு அப்பனால என்ன செய்ய முடியும்?’

உண்மைதான். ஆனால் சீனிவாசனுடைய பார்வையில் அது முக்கியமாகப் படவில்லை..

அவன் எதிர்பார்த்தது தன்னுடைய நண்பர்களுடைய தந்தையரைப் போலவே தன்னுடன் அமர்ந்து ஒரு நண்பனாக பேசி, சிரித்து, விளையாடி, தன்னுடைய பள்ளி ஆண்டு விழாவுக்கு தன்னுடன் வந்துபோகும் ஒரு சராசரி தந்தையை.. பணக்காரத்தனமான காரில் தன்னந்தனியாய் பள்ளிக்கு சென்றுவருவதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதை மாதவனோ, சரோஜாவா உணர ஆரம்பித்தபோது காலம் கடந்திருந்தது....

மாதவன் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு அதைவிட உயர்ந்த பதவியைத் தேடி மும்பைக்குச் சென்றபோது நிலைமை இன்னும் மோசமாகிப் போனது.

சென்னையிலிருந்தபோது இரவு ஒன்பது மணிக்கு வந்துக்கொண்டிருந்த மாதவன் மும்பைக்கு குடிபெயர்ந்த ஒரே மாதத்தில் அடியோடு மாறிப் போனார்.

மும்பை வாசம் வத்ஸலாவையும் சீனிவாசனையும் ஏன் சரோஜாவையும் கூட அடியோடு மாற்றிப் போட்டது.

நாளடைவில் குடும்பத்திலிருந்த நால்வருமே தினமும் நள்ளிரவைக் கடந்து வீடு திரும்ப இரவு உணவு தயாரிப்பதையே நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானாள் சிவகாமி மாமி..

‘ஏய்.. சரோ.. என்னாச்சி.. ஏன் இப்படி பாக்கறே?’

பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சரோஜா திடுக்கிட்டு தன்னுடைய தோள்களைப் பற்றியவாறு தன் முன்னே நின்றுக்கொண்டிருந்த மாதவனைப் பார்த்தாள்..

‘அம்மா ஃப்ளாஷ்பேக்குல போயிருப்பாங்க.. என்னம்மா?’

சரோஜா மாதவனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.. மாதவனும் அவளுக்கருகில் அமர்ந்து அவளுடைய கரத்தைப் பற்றினார்..

‘நம்ம கடந்த கால வாழ்க்கை திரும்பிப் பார்த்து சந்தோஷப்படறா மாதிரி ஏதாச்சும் இருக்கா என்ன? I mean.. we four as a family.. Have we ever.. நா ஒனக்கோ இல்ல பிள்ளைகளுக்கோ ஏதாச்சும் நல்லது செஞ்சிருக்கேனான்னு என்னையே கேட்டுப் பாக்கறேன்.. நல்ல அப்பாவா வேணும்னா இருந்திருப்பேனோ என்னவோ.. I’ve provided my children all that I could provide.. maybe except love and affection.. ஆனா நான் ஒனக்கு ஒரு நல்ல புருஷனா இருந்திருக்கல சரோ.. I know that..’

வத்ஸ்லா தான் இருந்த இருக்கையிலிருந்தவாறே தன் தந்தையைப் பார்த்தாள்..

அவளுடைய பார்வையிலிருந்த வியப்பு மாதவனை ஒருவகையான வேதனைக்குள்ளாக்கியது. அவளைப் பார்த்து ஆறுதலாக புன்னகைத்தார்.

‘என்னாச்சி இந்த அப்பாவுக்குன்னு பாக்கறியா வத்ஸ்.. Yes.. I now realise that I’ve been a fool all these years.. I never realised that there is something out there.. outside the office.. outside the positions.. the power.. the money.. இன்னைக்கி ஆபீஸ்ல நடந்தத எல்லாம் நினைச்சிப் பார்த்தா.. நா ஏன் இப்பவும் இந்த சிக்கல்ல மாட்டிக்கிட்டு அவஸ்த்தைப் படணும்னு தோனுது.. Why shouldn’t I simply throw in the towel and walk offனு தோனுது.. But, at the same time.. Is it that simple? Could I walk off as simple as thatம்னும் தோனுது.. But one thing is sure.. I am going to make myself available to my wife.. to my children.. the family.. என்ன சொல்றே வத்ஸ்.. Will that be fine?’

அவர் பேசி முடிக்கும் வரை அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வத்ஸ்லா கண்கள் நிறைந்த கண்ணீருடன் எழுந்து வந்து தன் தந்தையையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சரோஜா அமர்ந்திருந்த இருக்கையின் மறு கையில் அமர்ந்து அவளை அணைத்துக்கொள்ள மாதவன் உணர்ச்சி மேலீட்டால் சற்று நேரம் பேச்சற்று அமர்ந்திருந்தார்..

அறை முழுக்க ஒரு கணத்த மவுனம் நிறைந்திருக்க சுவர்க்கடிகாரத்தின் ஓசை மட்டும்...

தொடரும்..



2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

காலம் கடந்த ஞானோதயம் ஆயினும்
இப்பொழுதாவது மனிதன் மாறினாரே
எனும் நிம்மதி........
மைதி-ஸ்ரீனி பிரச்சனை ஒருவாறு முடிந்துவிடும்.........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இப்பொழுதாவது மனிதன் மாறினாரே
எனும் நிம்மதி........//

யாராருந்தாலும் நேரம், காலம் வந்தா மாறிருவாங்க..

மைதி-ஸ்ரீனி பிரச்சனை ஒருவாறு முடிந்துவிடும்.........//

முடிஞ்சா நல்லதுதான்:)