20.11.06

சூரியன் 143

எந்த நேரத்திலும் நாடாருடைய தொலைப்பேசி அழைப்பு வரப்போகிறது என்று அவர் நினைக்கவும் அவருடைய செல்ஃபோன் ஒலிக்கவும் சரியாயிருந்தது..

Think of the devil and there he is..னு சும்மாவா சொன்னாங்க என்ற நினைப்புடன், ‘சார் சொல்லுங்க?’ என்றார் எதிர் முனையிலிருந்த நாடாரிடம்..

‘என்னது, நான் சொல்லவா? நீர்தானய்யா அஞ்சு மணிக்குள்ளாற சொல்றேன்னு சொன்னீரு? மணி இப்ப ஆறாகப் போகுதில்லே.. நீரா கூப்பிடுவீருன்னு காத்திருந்தேன்.. கூப்டறாப்பல தெரியல.. அதான் கூப்ட்டேன்.. நான் சொன்னது என்னாச்சி.. முடிஞ்சிதா இல்லையா?’

ஃபிலிப் சுந்தரம் என்ன செய்யலாம் என்று ஒரு நொடி யோசித்தார். இவரிடம் சொன்னாலும் சிக்கல், சொல்லாமல் இருப்பதிலும் சிக்கல்..

சொன்னால் ஏற்படும் சிக்கலைவிட சொல்லாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல் தீவிரமானது என்று அவர் நினைத்ததால் சொல்லிவிடுவதென தீர்மானித்தார். ஆனால் முழுவதும் சொல்லாமல்..

அதற்கும் வேட்டு வைத்தார் நாடார். ‘என்ன சார்.. சொல்லலாமா வேணாமான்னு யோசிக்கிறீராக்கும்?’

‘இல்ல சார்..’

‘என்ன இல்ல.. யோசிக்கலேங்கறீரா? இல்ல இன்னும் கண்டுபிடிக்கலேங்கறீரா?’

இப்படி எதிராளியைச் சிந்திக்க விடாமல் கிடுக்கி போடுவதில் நாடார் கைதேர்ந்தவர் என்பது சுந்தரத்திற்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்கிறோமே என்று ஒருமுறை தன்னையே நொந்துக்கொண்டார் ஃபிலிப்..

‘கண்டுபிடிச்சிருக்கேன் சார்.. ஆனா இன்னும் கொஞ்சம் உறுதிபடுத்திக்கிட்டு ஒங்கக் கிட்ட சொல்லலாமேன்னுதான்.. இன்னும் சேர்மன் கிட்டக் கூட சொல்லலை..’ என்றவர் தவறிப்போய் உளறிவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டார்.

‘என்னது சேர்மனுக்கே தெரியாதா? அவருக்குத்தானய்யா ஃபேக்ஸ் வந்தது? அதெப்படி அவருக்கு தெரியாம போவும்? என்னய்யா நடக்குது...? அதான் வந்த ஃபேக்ஸ்லயே அனுப்புன நம்பர் இருக்குமில்ல? பிறவென்ன?’

அதானே.. இந்த சின்ன விஷயம் ஏன் நமக்கு தெரியாமல் போனது? சரி அந்த வழிக்குத்தான் தேவையில்லாமல் போய்விட்டதே.. இருப்பினும் அந்த வழியில் நாம் சிந்திக்காமல் போனோம் என்பதை இவரிடம் ஏன் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நொடிப்பொழுதில் முடிவெடுத்து சமாளித்தார்.

‘நீங்க சொல்றதும் உண்மைதான் சார்.. ஆனா அந்த நம்பர்ல எங்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கல..’

‘என்னது கெடைக்கலே?’

சுந்தரம் தன்னுடைய தவறை உணர்ந்து, ‘சாரி சார்.. சரியான பதில் கிடைக்கலேன்னு சொல்ல வந்தேன்.’ என்றார்.

எதிர்முனையில் எரிச்சல் தொனித்தது. ‘சரி என்ன எளவோ.. எங்கருந்து வந்துதுன்னு உறுதிபடுத்திக்கிடலேன்னு சொன்னா என்ன அர்த்தம். யார் அனுப்புனான்னு தெரிஞ்சிருக்கு.. ஆனா உண்மையா இல்லையான்னு தெரியலன்னு அர்த்தமா? தெளிவாச் சொல்லும்யா.’

‘ஆமாம் சார்.. அதான் யோசிக்கேன்..’

நாடார் பொறுமையிழந்து இரைந்தார். ‘நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீரே?’

நீங்க சொன்னத என்னைக்கி தப்பா எடுத்துருக்கேன்.. மானம், ரோஷம் எல்லாத்தையும் விட்டுப்போட்டுட்டுத்தானே இந்த ரெண்டு வருசமா ஒங்கள மாதிரி ஆளுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கேன்.. விட்டுட்டு போகணும்னாலும் முடியலையே..

‘சொல்லுங்க சார்.’ என்றார் மெல்லிய குரலில்..

‘என்னய்யா திடீர்னு கொரல் சுருதி எறங்கிருச்சி.. சொல்றதுக்கு முன்னாலயே வருத்தப்படுறீராக்கும்.. சரி, சரி.. சொல்ல வந்தத சொல்லி முடியும்.. நீர் கண்டுபிடிச்ச வரைக்கும் சொல்லும்.. யார் அது?’

‘யாரோ ஒருத்தர் நம்ம வந்தனா மேடத்தோட பி.ஏ.ன்னு சொல்லி அந்த நிரூபர்கிட்ட பேசியிருக்கார் சார்..’

‘யாரு.. வந்தனா மேடத்தோட பி.ஏ.வா? அது ஒரு சின்ன பொண்ணாச்சேய்யா? அதுவா?’

ஃபிலிப் அவசர, அவசரமாக மறுத்தார். ‘அவங்க இல்ல சார்.. நான் ஏற்கனவே விசாரிச்சிட்டேன்..’

நாடார் சிரித்தார். ‘விசாரிச்சிட்டீரா? யார அந்த பொண்ணையா? நல்ல ஆளுய்யா.. தெரியாமத்தான் கேக்கேன்.. அப்படியே செஞ்சிருந்தாலும் நீங்க கேட்டதும் ஒத்துக்கிருமாக்கும்.. சரி இந்த விஷயத்த ஒமக்கு யார் சொன்னது?’

இது தேவையா என்று யோசித்தார் ஃபிலிப். அவருக்கு மிகவும் பழக்கமான நிரூபர் தன்னுடைய பெயர் வெளியில் தெரியவந்தால் தன்னுடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும் என்று தன்னிடம் அவர் கேட்டுக்கொண்டிருந்ததை ஒரு நொடி நினைத்துப் பார்த்தார்.

‘சார் அது வந்து..’

‘என்ன? அதுவும் சொல்லப்படாதாக்கும்.. சரி போட்டும்.. அந்த பொண்ணு கேக்கலை.. வேற யார் கேட்டிருப்பா? அந்த சேர்மனோட பி.ஏ. இருக்கானே அந்த வடக்கத்தி பய.. அவனெ கேக்க வேண்டியதுதானே.. அவனுக்கு ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாமில்லே.. அவனுக்குத்தானெ ஃபேக்ஸ் வந்திருக்கணும்?’

நாடார் இப்படியெல்லாம் கேட்பார் என்று முன்கூட்டிய் யூகித்து வைத்திருந்தாலும் அவருடைய இந்த கேள்வியை எப்படி சமாளிப்பதென ஒரு நொடி தடுமாறினார் ஃபிலிப். இனியும் சொல்லாமல் இழுத்தடிப்பது உசிதமல்ல என்று நினைத்தவர் அதே சமயம் சேர்மனிடம் தெரிவிப்பதற்கு முன் இவரிடம் எப்படி சொல்வது என்ற தயக்கமும் இருந்தது.. ஆகவே ‘விசாரிச்சிட்டேன் சார்.. ஆனாலும் அவரோட பதில்ல எனக்கு கொஞ்சம் தயக்கம். அதான் இன்னும் ஒரு நாள் குடுத்தா சரியா விசாரிச்சிட்டு சொல்லலாம்னு..’ என்று இழுத்தார்.

நாடார் அதற்கு தயாராக இல்லை.

‘சரிய்யா.. நீர் தீர விசாரிச்சிட்டு மத்தவங்கக் கிட்ட சொல்லும்.. அந்த பி.ஏ பய ஒம்மகிட்ட என்ன சொன்னான்? அத அப்படியே சொல்லும்.. தப்பாருந்தாலும் பரவால்லை..’

ஃபிலிப் சுந்தரத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ‘நம்ம யூனியன் லீடர் முரளி.... சார், இது மிஸ்டர் சுபோத்தோட யூகம்தான்..’

‘யாரு..?’

‘நம்ம சேர்மனோட பி.ஏ சார்.. சுபோத்னு பேரு..’

‘என்ன எளவோ.. அதுவா இப்ப முக்கியம்? சரிய்யா.. அந்த யூனியன் ஆளு.. அவந்தானே.. இருக்கட்டும்.. இதச் சொல்றதுக்கு எதுக்குய்யா இப்படி முக்குறீரு? நா யார்கிட்டயாவது சொல்லிருவேன்னா? நீர் வேறய்யா.. இந்த ஃபேக்ஸ¤க்கு பின்னால நாந்தான் இருக்கேன்னுல்லே அந்த டாக்டர் பய நினைச்சிக்கிட்டிருக்கான்? இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே ஒமக்கு ஃபோன் செஞ்சாலும் செய்வான்.. சாக்கிரதையா இரும்..’

ச்சை.. இது வேறயா? இவர்கிட்ட பேசி முடிச்சதுமே கெளம்பிர வேண்டியதுதான்.. செல்ஃபோன நாளைக்கி காலைல வரைக்கும் ஆஃப் செஞ்சி வச்சாத்தான் சரியா வரும்..

‘சரி.. இவ்வளவு தூரம் இழுத்தடிச்சாலும் கடைசியா ஒம்ம மனசுலருக்கறத சொன்னீருல்லே.. அதுக்காக நானும் ஒமக்கு ஒரு ரகசியம் சொல்றேன்.. இன்னும் சேர்மனுக்குக் கூட தெரியாதுய்யா.. அதனால நா இப்ப சொல்லப் போறத நீரும் ரகசியமா வச்சிருக்கணும்.. என்ன வெளங்குதா?’

ரகசியமா? இருக்கற தொல்லை போறாதுன்னு இது வேறயா?

‘நம்ம டாக்டர் எடத்துக்கு நம்ம வக்கீல் தம்பிய போடப்போறேன்னு சொன்னேனில்ல.. அது நடக்காது போலருக்கு. அதுக்கு அவரோட பொண்ணு இருக்கில்ல.. அத நாமினேட் பண்ணணுமாம்..’

யா? அந்த பெண்ணா என்று வியந்துபோனார் ஃபிலிப்..

‘அடுத்த போர்ட்லயே கோ ஆப்ட் (co-opt) பண்ணணுமாம்.. நாளைக்கு அவரே சேர்மன்கிட்ட பேசிக்குவார்.. அதுவரைக்கும் ஒம்ம மனசுலயே இது கெடக்கட்டும்..என்ன நா சொல்றது வெளங்குதா?’

‘சரி சார்..’

‘இரும் வச்சிடாதேயும்.. இன்னும் ஒன்னு இருக்கு..’

விடமாட்டார் போலிருக்கிறதே என்றிருந்தது சுந்தரத்திற்கு.. ‘சொல்லுங்க சார்..’

‘ரெண்டு மாசத்துக்கு முன்னால ரிஜர்வ் பேங்க்லருந்து ஒரு கடுதாசி வந்துதில்ல.. நம்ம போர்ட்ல ஒரு வக்கீலும், ஆடிட்டரும் இருக்கணும்னு?’

நாடார் எதற்கு அடிபோடுகிறார் என்று புரிந்தது அவருக்கு. ‘ஆமாம் சார்..’

‘அந்த லெட்டரோ காப்பிய எனக்கு காலைல நான் தர்ற நம்பருக்கு ஃபேக்ஸ் பண்ணும்.. என்ன பண்ணுவீரா இல்ல இதுக்கும் சேர்மனெ கேக்கணும்னு சொல்லுவீரா?’

சுந்தரத்திற்கு பகீர் என்றது. என்ன மனிதர் இவர்? அதெப்படி ரிசர்வ் பேங்கின் கடிதத்தை இவருக்கு ஃபேக்ஸ் செய்வது? இருப்பினும் இவரிடம் முடியாது என்று எப்படி சொல்வது? இன்றைக்கி நம்முடைய நேரமே சரியில்லை போலிருக்கிறதே..

‘சரிய்யா.. நீர் யோசிக்கிறீர் போலருக்கு.. நல்லா யோசியும்.. ஆனா நாளைக்கு பதினோரு மணிக்குள்ளாற எனக்கு அனுப்பிரணும்.. ஆனா பேங்க்ல யாருக்கும் தெரியக்கூடாது.. என்ன விளங்குதா, வச்சிடறேன்..’

‘சார்.. வந்து..’

ஹுஹூம்.. பலனில்லை..

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்ஃபோனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் சுந்தரம்..

தொடரும்..

8 comments:

krishjapan said...

நாடார் எப்படியெல்லாம் மடக்க்க்குவார்னு எழுதறதுக்கு, இவ்வளவு நாள் அவகாசம் தேவைதான்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

இவ்வளவு நாள் அவகாசம் தேவைதான்.. //

ஏதாவது உள்குத்து இருக்கா:)

ஆனா அதுக்காக போடாம இல்ல. வெள்ளிக்கிழமை திடுதிடுப்புன்னு ஒரு மீட்டிங் ஏற்பாடாயிருச்சி.. திரும்பி வர லேட்டானதால போட முடியலை..

இந்த வாரமும் பிரச்சினைதான்..

புதன், வியாழன் கூட்டங்கள் இருப்பதால் புதன் கிழமை போடவேண்டிய பதிவு நாளையே வரும்..

அடுத்தது வெள்ளிக் கிழமை..

krishjapan said...

உள்குத்தா..சே, சே,...எல்லாமே வெளிகுத்துதான்...

siva gnanamji(#18100882083107547329) said...

//எதிராளியை சிந்திக்க விடாமல்
கிடுக்கி போடுவதில் நாடார் கைதேர்ந்தவர்//-அவருடைய வெற்றியின் ரகசியம் இதுதானோ?

டிபிஆர்.ஜோசப் said...

உள்குத்தா..சே, சே,...எல்லாமே வெளிகுத்துதான்... //

அப்படீன்னா சரி:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

அவருடைய வெற்றியின் ரகசியம் இதுதானோ? //

இருக்கலாம்.. ஆனா எதிராளி யாருன்னு தெரிஞ்சிதான் கிடுக்கி போடணும் இல்லையா? அதுவும் தெரிஞ்சிருக்கணும்.. இல்லன்னா நாமளே அந்த கிடுக்கியில மாட்டிக்க வேண்டி வரும்!

அருண்மொழி said...

சார் ரவி பாவம். அவர் caseஐ சீக்கிரம் முடித்து வேலைக்கு சேர ஏற்பாடு செய்யுங்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

ரவி பாவம். அவர் caseஐ சீக்கிரம் முடித்து வேலைக்கு சேர ஏற்பாடு செய்யுங்கள். //

செஞ்சிரலாம்:)