24.11.06

சூரியன் 145

ஊமையாகிப் போன செல்ஃபோனை அணைத்துவிட்டு தன்னுடைய படுக்கையில் அமர்ந்த பாபு சுரேஷ¤க்கு அதிர்ச்சியிலிருந்து மீள சில நிமிடங்கள் பிடித்தன.

இதுவரை சோமசுந்தரம் அவரிடம் இப்படி நடந்துக்கொண்டதில்லை என்பதை நினைத்துப் பார்த்தார்.

இன்னைக்கிக் காலையிலதான் மனிதர் என்னைத் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று புது சேர்மன் முன்னிலையில் தன்னைக் காட்டினார்? அதற்குள் என்னாயிற்று? தன்னுடைய பதவி பறிபோன வருத்தத்தில் தன்னிடம் தொலைப்பேசியில் பேசியிருப்பாரோ என்றும் தோன்றாமலில்லை.

ஒருவேளை வங்கியின் இயக்குனர் குழுவில் நாம் இனிமேல் இருக்கப் போவதில்லையே? அதற்குப் பிறகு அந்த பயிற்சி அதிகாரிகளை பணிக்கு சேர்க்க தன்னால் எப்படி சாத்தியமாகப் போகிறது? அதற்குத்தானே இவனை எச்.ஆர் இலாக்காவின் தலைவராக நியமிக்கவிருந்தோம்? முன்னது சாத்தியமில்லாதபோது பின்னது இனி எதற்கு என்று நினைத்திருப்பாரோ?

ஏற்கனவே சோமசுந்தரத்தின் கோரிக்கையைத் தட்டமுடியாமல் தனது அதிகார வரம்பை மீறி பல காரியங்களை செய்திருந்த பாபுவுக்கு அவருடைய ஆதரவும் இல்லாமல் போனால் தன்னுடைய நிலமை என்ன ஆகுமோ என்ற அச்சம் பிடித்துக்கொண்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்க வேண்டிவரும் என்று சோமசுந்தரம் இயக்குனர் பதவியிலிருந்த கடந்த ஏழாண்டு காலத்தில் பாபு கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவர் சோமசுந்தரத்தின் ஆள் என்று வங்கியிலிருந்த அனைவருக்குமே தெரிந்துதானிருந்தது. அதனாலேயே தனக்கு இணையாக மற்றும் தனக்கு மேலிருந்த பல அதிகாரிகளுக்கும் தன் மீது அத்தனை நல்ல அபிப்பிராயமில்லை என்பதும் அவருக்கு தெரியும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் சென்னைக் கிளையொன்றில் மேலாளராக இருந்த காலத்தில் சோமசுந்தரத்திற்கு அவர் தன்னுடைய அதிகார வரம்பை மீறி வழங்கிய கடன்களைக் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டபோதே அவருடைய அலுவலக வாழ்க்கையில் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால் சோமசுந்தரம் தன்னுடயை இயக்குனர் பதவியளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருடைய பதவியைக் காப்பாற்றியதும் நினைவிருந்தது.

ஆனால் சோமசுந்தரத்தின் பதவியே பறிபோய்விட்ட சூழலில் அந்த பழைய கோப்புகளை மீண்டும் திறந்து தற்போது ரவி பிரபாக்கருக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் தன் மீதும் பாயுமோ என்று அஞ்சினார்.

முந்தைய சேர்மனின் பதவிகாலத்தில் வங்கியிலேயே மிகச் சிறந்த மேலாளர் என்ற விருதைப் பெற்ற ரவிக்கே இந்த கதியென்றால் தன்னைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்கலானார்.

சோமசுந்தரத்தின் பதவிகாலம் முடிய இன்னும் ஐந்தாறு மாதங்கள் இருக்கும் சூழலில் அவருடைய இடத்தில் யார் அமர்த்தப்படப் போகிறார்கள் என்பதிலும் தன்னுடைய எதிர்காலம் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார். நிச்சயம் நாடார் அல்லது குழுவிலிருந்த மற்ற எந்த இயக்குனருடைய நாமினியையும் தன்னுடைய இடத்தில் அமர்த்தப்படுவதை சோமசுந்தரம் அனுமதிக்கமாட்டார் என்பதும் பாபுவுக்குத் தெரியும்.

சோமசுந்தரத்தின் பரிந்துரையில் அமர்த்தப்படும் எந்த நபரும் அவருக்கு தேவைப்பட்ட சமயத்தில் உதவி புரிந்த தனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கமாட்டார் என்றும் அவருடைய சிந்தனை ஓடியது.

ஆக, அடுத்த சில மாதங்களில் தனக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்ற நினைப்பே அவருக்கு ஆறுதலை அளித்தது.

நடக்க வாய்ப்பில்லாத ஒரு விஷயத்தை நினைத்து எதற்கு நாம் வருத்தப்பட வேண்டும்? நம்முடைய மனதில் இப்படியொரு வருத்தம் குடிகொண்டிருந்தால் நடக்கவிருக்கும் ரம்யாவின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திவைக்க முடியாதே..

நமக்கு இப்போது அதுதான் முக்கியம். குடும்பத்தில் இதுவரை இல்லாத சமாதானமும் சந்தோஷமும் ஏற்பட்டுள்ள இந்நேரத்தில் தன்னுடைய அலுவலகத்தையும் தனக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் பற்றி நினைத்து அதைக் கெடுத்துவிடலாகாது என்ற உறுதியுடன் கட்டிலிலிருந்து எழுந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தார்..

I should keep this thought aside for the time being.. at least till this marriage gets over..

இந்த நினைப்புடன் அறையை விட்டு வெளியேறி மாடியிலிருந்து கீழே ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி கையில் ஒரு லிஸ்ட்டை வைத்துக்கொண்டு மும்முரமாக விவாதித்துக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியையும் மகளையும் பார்த்தார்.

‘ஏய்.. என்ன ரெண்டு பேரும் ரொம்ப பிசியா இருக்கீங்க போலருக்கு?’ என்றவாறு புன்னகையுடன் அவர்களை நோக்கி படிகட்டில் இறங்கினார்.

******

சீனிவாசனின் வீட்டிலிருந்து புறப்பட்டபோது மைதிலியின் மனதில் இனந்தெரியாத ஒரு சந்தோஷம் நிறைந்திருந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால் தன்னுடைய வீட்டை நெருங்க, நெருங்க அந்த சந்தோஷம் கொஞ்சம், கொஞ்சமாக மாறி இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோர்களிடம் எப்படி எடுத்துரைக்கப் போகிறோம் என்ற ஒருவித அச்சமாக உருவெடுத்தது.

ஆரம்பத்தில் சீனிவாசனும் அவளும் நண்பர்களாக பழகியதற்கே அவளுடைய தந்தை உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நினைத்துப் பார்த்தாள் மைதிலி.

‘இது ஒனக்கு வேணும்னா இது வெறும் நட்பா இருக்கலாம் மைதிலி.. ஆனா அந்த பையன் என்னத்தெ நெனச்சிக்கிட்டிருக்கானோ தெரியலையே.. அந்த பையன் போதை பொருளுக்கு அடிமையாகி அவஸ்த்தைப் பட்டிருக்கற சமயத்துல நீ அவனெ சந்திச்சே.. அதனால அவன் மேல பச்சாதபம் வந்திருக்கலாம்.. இல்லேன்னு சொல்லல.. அந்த பையன அந்த பழக்கத்துலருந்து விடுவிக்கத்தான் அவனோட ஃப்ரண்ட்ஷிப்ப வச்சிக்கிட்டிருக்கேன்னும் எனக்கும் அம்மாவுக்கும் தெரியுது..  ஆனா வீட்டுல அன்பு கிடைக்கலேங்கறதுக்காக போதை பழக்கத்துக்குள்ளான அந்த பையன் நீ காட்டுற பச்சாதாபத்த வேற விதமா நெனெச்சுட்டா? அப்போ என்ன செய்யறதா உத்தேசம்?’

'அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுப்பா.. நீங்க எதுக்கும் சும்மான்னாச்சும் எதெதையோ கற்பனைப் பண்றேள்.. எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கறது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்..' என்று அப்போது தந்தையின் வாதத்தை ஏற்க மறுத்த தன்னுடைய கண் முன்பே அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் மத்தியிலிருந்த நட்பு சீனிவாசனின் கண்மூடித்தனமான பிடிவாதத்தால் மறுக்க முடியாத காதலாக உருவெடுத்ததை உணர்ந்தும் மைதிலியால் ஒன்றும் செய்ய இயலாமற் போனது.

சீனிவாசன் தன்னுடைய காதலை அவளிடம் தெரிவித்த ஒவ்வொரு முறையும் அதை கேலியுடன் ஒதுக்கித் தள்ளிய மைதிலி அவன் மீதிருந்தது வெறும் நட்பு மட்டுமே என்று நினைத்திருந்தாள்.

ஆனால் மைதிலியுடனான தன்னுடைய காதலை அவளுடைய தந்தை ஒத்துக்கொள்ளப் போவதில்லையென்பதை அவர் மூலமாகவே அறிந்துக்கொண்ட சீனிவாசன் அவளை மறந்து மும்பையை விட்டு நிரந்தரமாக செல்வதென தீர்மானித்தபோதுதான் அவனுடான தன்னுடைய உறவு வெறும் நட்பு மட்டுமல்ல என்பதை உணர்ந்தாள் மைதிலி.

கடந்த பத்து நிமிடங்களாக பாந்த்ரா சந்திப்பில் வழக்கம்போல போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தன்னுடைய வாகனத்தில் அமர்ந்திருந்த மைதிலிக்கு இந்த பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்தால் போதும் என்று தோன்றியது.

இப்படித்தான் ஒருமுறை அவர்கள் மூவரும் மத்துங்காவிலிருந்த ஷண்முகானந்தா அரங்கில் ஒரு இசைக் கச்சேரிக்குச் சென்றுவிட்டு இரவு பதினோரு மணிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் சயான் சந்திப்பில் நெரிசலில் சிக்கிக்கொண்டு அரைமணிக்கும் கூடுதலாக இருந்த இடத்தில் நகர முடியாமல் தவித்தபோது, ‘எதுக்கும்மா இந்த அவஸ்தை? பேசாம இங்கருந்து போயிரலாம்.’ என்று மைதிலி கூற,

'எங்கடி போவே.. அந்த பட்டிக்காட்டு சிரீரங்கத்துக்கா?’ என்றாள் அவளுடைய தாய் ஜானகி எரிச்சலுடன்.

‘என்னம்மா நீ..  நீ பொறந்து வளர்ந்த ஊர் இப்போ ஒனக்கு பட்டிக்காடா போயிருச்சா? நீ ரொம்பத்தான் மாறிட்டம்மா.’

‘ஏய்.. ஏய்.. செத்தெ நிறுத்தறேளா? யாரும் இந்த பம்பாய விட்டுப் போகப் போறதில்லே.. இந்த டிராஃபிக் ஜாமெ இன்னைக்கி நேத்தாடி பாக்கறேள்.. இப்ப வீட்டுக்கு எப்படி போய்ச் சேர்றதுன்னு பாக்கறத விட்டுட்டு ஆர்க்யூ பண்ணாதேள்.. ஆட்டோக்காரன் ஒரு மாதிரி பாக்கறான் பார்.. இவாளுக்கு ஹிந்தி தெரியாது போலருக்குன்னு நெனச்சுண்டு ஆட்டோக்கு மேல ஜாஸ்தியா ஏதாச்சும் கேப்பான் பாத்துண்டே இருங்கோ..’ என்றார் பட்டாபி குறுக்கிட்டு..

தனக்கு பின்னாலிருந்த வாகனங்களின் ஹார்ன் ஒலி அவளுடைய நினைவுகளிலிருந்து மீட்க தன்னுடைய இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு விரைந்த  மைதிலியின் மூளை தன்னிச்சையாக வாகனத்தைச் செலுத்த அவளுடைய மனமோ அவளுக்கு முன்னேயிருந்த பிரச்சினையை விட்ட இடத்திலிருந்து மீண்டும் அலச ஆரம்பித்தது..

இப்படிப்பட்ட அப்பாவா சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயரலாம் என்ற தன்னுடைய யோசனையை ஏற்றுக்கொள்ளப் போகிறார்? சரி.. என்னுடைய யோசனையை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கும் பட்சத்தில் என்னுடைய பதில் என்னவாயிருக்கும்?

I am sorry Dad.. My relationship with Sreeni is more important to me than anything else in this world.. என்று தன்னுடைய பெற்றோர்களை உதறியெறிந்துவிட்டு சீனியுடன் சென்னை சென்றுவிட முடியுமா தன்னால்?

அப்படியொரு சூழ்நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டிக்கொண்டவாறு வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்துவதில் முனைந்தாள் மைதிலி.

****

அலுவலக நேரம் முடிந்து வெகு நேரமாகியும் சுபோத் மிகவும் சோர்வுடன் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான்.

அன்றைய தினம் தனக்கு ஒரு பெரிய சோதனை தினமாக இருந்துவிட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்து மருகினான்.

அவனுடைய தலைமையகத்தில் ஒரு அதிகாரியாக பணிக்கு சேர்ந்த இந்த நான்காண்டு காலத்தில் இன்று முதன் முறையாக ஃபிலிப் சுந்தரத்தின் கோபத்திற்கு ஆளானதை மட்டும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சேதுமாதவன் அவனிடம் தரக்குறைவாகப் பேசியதுகூட அவனுக்கு பெரிதில்லை. அவருடைய பிறவிக் குணமே அதுதான் என்று தலைமையகத்தில் இருந்த அனைவருக்குமே தெரிந்ததுதான்..

ஆனால் எப்போதுமே நிதானம் தவறாத ஃபிலிப் சார்..

எல்லாம் அந்த முரளியால் வந்த வினை..

எதற்கு அவன் என்னை இந்த காரியத்துக்கு தேர்ந்தெடுத்தான்?

அவனுடைய சகாக்கள் எத்தனையோ பேர் இதே அலுவலகத்தில் இருக்க என்னை மட்டும் ஏன்?

முரளியை நினைத்ததுமே அவனுடைய பெயரை ஃபிலிப் சுந்தரத்திடம் தெரிவித்துவிட்டோமே அதனால் தனக்கு வேறு வழிகளில் ஏதேனும் பிரச்சினை வந்து சேருமோ என்ற கலக்கமும் பிடித்துக்கொள்ள இப்போது என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான்..

முரளியின் பெயரை நாம் கூறியதாக யாரிடமும் கூறுவதில்லையென்று ஃபிலிப் சார் உறுதியளித்திருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர் சேர்மனிடமோ அல்லது வேறு எவரிடமோ கூறிவிட்டால் முரளி வழியாக தனக்கு நிச்சயம் பிரச்சினை வரும் என்று கருதினான்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று முரளியையே தொலைப்பேசியில் அழைத்து தன்னிடமிருந்து சாமர்த்தியமாக அவனுடைய பெயரை ஃபிலிப் சார் வரவழைத்துவிட்டார் என்று கூறிவிட்டாலென்ன?

அவனாக வேறு வழியாகக் கேள்விப்படுவதற்கு முன் நாமாகவே அவனிடம் கூறிவிடுவது மேல் என்று நினைத்து தன்னுடைய செல்ஃபோனை எடுத்து முரளியின் எண்ணைத் தேடலானான்.

தொடரும்..

2 comments:

அருண்மொழி said...

ஆஹா!!! இன்று மூன்று கதை.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

நாலு கூட போடலாம்..

ஆனா படிக்கறவங்க முடிய பிச்சிக்கிறக் கூடாதேன்னு பாக்கேன்.:))