28.2.07

சூரியன் 179

அன்று இரவு நாடார் சற்று முன்னதாகவே வீட்டை வந்தடைந்திருந்தார்.

அன்று மாலை அவருடைய ஆடிட்டரிடமிருந்து ராசேந்திரனும் அவனுடைய தந்தையும் வந்து சென்ற விவரம் அறிந்ததிலிருந்தே மனம் ஒரு நிலையில் நில்லாமல் அவரை அலைக்கழித்தது.

ராசேந்திரனைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை. அவன் ஒரு சுகவாசி ஆனால் ஆபத்தில்லாதவன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவருடைய சம்மந்தி ரத்தினவேல் அப்படிப்பட்டவரல்ல.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் கரண்டியுடன் வந்து நின்ற ரத்தினவேல் அல்ல இன்று தனக்கு போட்டியாக நிற்கும் ரத்தினவேல். கரண்டி பிடித்து பழுப்பேறிப்போன அவருடைய கரங்களைப் போலவே பேராசை என்ற 'பழுப்பு' அவனுடைய இதயத்தைப் பிடித்திருப்பதை அவர் உணர்ந்துதானிருந்தார்.

'அய்யா மோகன்.. அவனுங்க ரெண்டு பேரையும் சமாளிச்சி அனுப்பிட்டோம்னு நினைச்சிறாதீங்க. அவனுக இப்ப அடிப்பட்ட புலிங்க.. முக்கியமா ரத்தினவேலு.. அவன் என்ன வேணும்னாலும் செய்ய துணிஞ்சி நிக்கறத பாக்க முடியுதுய்யா.. எதுக்கும் சாக்கிரதையாவே இருங்க.. எந்த எடத்துலருந்து எப்படி, என்னமாதிரியான தாக்குதல் வரும்னு சொல்ல முடியாதுய்யா.. பாத்துக்கிருங்க.. நம்ம ஆடிட்டர்கிட்டயும் சொல்லி வைங்க..'

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய அலுவலக மேலாளரை அழைத்து, 'காலையில ஃபோன் போட்டார்னு சொன்னீய இல்லய்யா, நம்ம மாப்பிள்ளை. அவர் மறுபடியும் போன் போட்டார்னா பொஸ்தகங்கள காட்ட முடியாதுன்னு ஒரேயடியா சொல்லிறாதீய்ங்க.. . இப்ப கைவசமில்ல.. ஆடிட்டர் கிட்ட போயிருக்கு.. இன்னும் ரெண்டு நா கழிச்சி போன் போடுங்கன்னு சொல்லி வைங்க.. என்ன வெளங்குதா?'

அவர் தலையை ஆட்டிய வேகத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். 'என்னத்த வெளங்குதோ போங்க.. சொல்லும்போது மண்டைய, மண்டைய ஆட்டிட்டு பெறவு குட்டைய கொளப்பிருங்க.. போய் நா சொன்னத மறந்துராம செய்ங்க.. போங்க..'

'இந்த நேரம் பார்த்து இந்த செல்வம் பய இல்லாம போய்ட்டானே.. ' என்றிருந்தது அவருக்கு. 'சரி வீட்டுக்கு போய் ராசம்மாக்கிட்டயும் சொல்லி வைப்போம்.. பொட்டப் பொண்ணுன்னாலும் அதுவும் வெவரமாத்தானே இருக்கு.' என்றவர் மணியைப் பார்த்தார். எட்டு மணி அடித்திருந்தது. 'எலேய் டிரைவர கார எடுக்கச் சொல்லு' என்றவாறு கிளம்பி வீடு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

வீட்டில் நுழைந்ததுமே ஹாலில் டி.விக்கு முன்னால் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தார். 'என்ன புள்ள ஆச்சரியமா டி.வி. பொட்டி முன்னால ஒக்காந்திருக்கே?' என்றவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராய், 'ஓ பாம்பேல நடந்ததப்பத்தி சொல்றாங்களாக்கும்.. என்னத்த சொல்றது? நல்ல வேளையாலே.. நம்ம பிராஞ்ச் இருக்கற எடங்கள்ல ஒன்னுமில்லையாம்.. செல்வம் ஊர்லருந்தே ஃபோன் போட்டு கேட்டுட்டு சொன்னான். என்ன இருந்தாலும் செல்வம் இல்லாம கை ஒடஞ்சா மாதிரி இருக்கு ராசிம்மா.'

அவர் பேசுவதை ஒரு காதிலும் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து நிரூபர் பேசுவதை ஒரு காதிலும் கேட்பதில் கவனமாயிருந்த ராசம்மாள் சற்று நேரத்தில் தொலைக்காட்சி பெட்டியின் ஒலியைக் குறைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். 'ஒங்களுக்கு இந்த விஷயம் தெரியுமாப்பா?'

'எதச் சொல்றே.. அந்த பாம்ப் விஷயந்தானே.. அதான் முக்குக்கு முக்கு ரேடியோ அலறுதே.. அதானே நம்ம ஆஃபீஸ்லருந்து இங்கன வந்து சேர்றதுக்கே இன்னைக்கி ஒரு மணி நேரமாயிருக்கு.. '

'அதில்லப்பா..'

நாடார் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார். 'பின்னே.. வேற எதச் சொல்றே?'

'நம்ம பேங்கோட புது சேர்மன் இருக்காரில்ல அவரப்பத்தி.'

'என்ன சொல்றே.. அவருக்கென்ன? அவர் ஜாய்ன் பண்ணதப் பத்தி ஏதாச்சும் சொல்றாய்ங்களா என்ன?'

'அவர்னா.. அவரப்பத்தியில்ல.. அவர் பையனப் பத்தி.' என்ற ராசம்மாள் சற்று முன் தான் டிவியில் கேட்டதை விவரிக்க நாடார் கண்களை மூடியவாறு யோசனையில் ஆழ்ந்துப்போனார்.

'என்னப்பா என்ன யோசிக்கறீங்க?'

நாடார் பதிலளிக்காமல் தன் செல்ஃபோனை எடுத்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'எலேய் நாந்தாலே.. நீ ஒரு வேலை ச்செய்யி.. ஒடனே நம்ம தாதர் பிராஞ்சுக்கு போன் போட்டு நம்ம மேனேஜர நான் சொல்ற எடத்துக்கு போயி என்ன ஏதுன்னு கேட்டுக்கிட்டு எனக்கு போன் போடச் சொல்லு என்ன?.' என்றார். 'லேய்.. இது ரகசியமா இருக்கணும்.. அவனால முடியுமான்னு தெரியல.. ஏதாச்சும் முளிச்சான்னா நம்ம தாராவி ஆள கூப்டு..ஒனக்குத்தான் தெரியுமே.. என்ன செய்யணுமோ செய்யி.. ஆனா அடுத்த அரை மணிக்குள்ள.. அங்கத்து விஷயம் முழுசும் எனக்க வந்துரணும்.. என்ன ச்சரியா?'

'யார்ப்பா அது? செல்வமா?' என்ற மகளைப் பார்த்தார்.

'ஆமாம்மா.. அவனெ விட்டா இதுக்கு யார் இருக்கா?' என்றவர் தன் செல்ஃபோன் அடிப்பதைப் பார்த்தார். 'இவனுக்கு மூக்குல வேர்த்துருமே.. கரெக்டா கூப்டறான் பார்.' என்றவாறு தன் மகளைப் பார்த்து சிரித்தார். 'யார்.. டாக்டர் அங்கிள்தானெ.' என்றாள் ராசம்மாள் புன்னகையுடன்..

'சொல்லும்யா டாக்டரே.. என்ன விஷயம்?'

எதிர் முனையிலிருந்து வந்ததை பதில் பேசாமல் கேட்டு முடித்து, 'ச்சரிய்யா.. இப்ப என்ன செய்யலாம் அதச் சொல்லு.. போறவர் என்ன ஏதுன்னு தெரியாமலே போயிருக்கார். இதுல நம்மக்கிட்ட சொல்லாம போய்ட்டாரேன்னு சொல்றீரேய்யா.. புள்ள சமாச்சாரமாச்சே.. அதுவும் ஒரே பையன்னு கேள்வியாச்சே.. போய்ட்டு ஆற அமர வரட்டும்யா.. இப்ப என்ன குடியா முளுகிப் போயிருச்சி..' என்றவர் தொடர்ந்து, 'டாக்டரே அந்த சேதுப் பய சொல்றதையெல்லாம் நம்பாதீரும்.. அவன் ஒரு... அண்ணன் எப்பச் சாவான் திண்ண எப்ப காலியாவும்னு பாக்கற பய இல்ல.. மாட்டுக்கறி திங்கற பயலுவ.. அவனெ விட்டுத்தள்ளும்..' என்றார்.

'இல்லை நாடார்.. எனக்கென்னவோ மாதவன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவார்னு தோனலை..டிவியில சொல்றத பார்த்தா அந்த பையன் இன்னும் போலீஸ் கஸ்டடியிலதான் இருக்காப்ல இருக்கு. ஒங்களுக்கு போலீஸ் விஷயம்லாம் தெரியுமில்லே.. அதனாலதான் சொல்றேன்....'

'நீர் சொல்றதும் சரியாத்தான் இருக்கு இல்லேங்கலே.. ஆனா அந்த சேதுவையெல்லாம் ஆக்ட்ங் சேர்மனாக்கறது நடக்காத காரியம்யா... கொஞ்சம் யோசிச்சித்தான் செய்யணும்..'

'எனக்கும் யோசனையாத்தான் இருக்கு நாடார் ஆனா இதுவரைக்கு சேது ரெண்டு தரம் போன் போட்டு என்னென்னவோ சொல்றாரே.. அந்த பையன் ஏற்கனவே ட்ரக் அடிக்டாமே?'

'என்னது.. என்னய்யா சொல்றீரு அப்படின்னா?' என்றவாறு மகளைப் பார்த்தார் நாடார். அவள் 'போதைப் பொருள் பழக்கம்ப்பா' என்றாள்

'யார் நாடார் பக்கத்துல பொண்ணா?'

'ஆமாம்யா.. இப்பல்லாம் நம்மளவிட அதுங்களுக்குத்தானே எல்லாம் தெரியுது.' என்றார். 'சரிய்யா.. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?'

சோமசுந்தரம் சிரித்தார். 'இங்கயும் அதேதான் நாடார்.. எப்படா அப்பா சீட்ட புடிச்சிக்கலாம்னு காத்துக்கிட்டுருக்கா ஒருத்தி. சரி அது இருக்கட்டும். இந்த பையனோட விஷயம் வெளிய நீயூஸ் பேப்பர்காரங்களுக்கு தெரிஞ்சிதுன்னு வைங்க அப்புறம் மாதவனால அவ்வளவு சீக்கிரமா திரும்பி வரமுடியாது.. அதான் யோசிக்கேன்.'

நாடார் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். முதலில் அந்த சேதுமாதவனின் முயற்சியை முறியடிக்க வேண்டும். 'இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு இந்த ஃபிலிப் ஏன் நமக்கு ஃபோனே பண்ணலை?'

'சரிய்யா.. நாம நாளைக்கு இதப்பத்தி பேசலாம்.. பத்து மணி போல நா ஒம்ம ஈஸ்ட் கோஸ்ட் பங்களாவுக்கு வரேன்.. நம்ம செட்டியாரையும் கூப்டுவோம்.. அவரும் நம்ம மேனேஜ்மெண்ட் கமிட்டி மெம்பர்தானே.. மத்தவன் எவனுந்தான் ஊர்ல இல்லையே..நாம பேசி முடிவு செஞ்சிட்டு அவன்க கிட்ட சொல்லிக்கிருவம்.. என்ன சொல்றீரு?' என்றவர் எதிர் முனனயில் ஒத்துக்கொண்டதும் இணைப்பைத் துண்டித்துவிட்டு உடனே ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணைச் சுழற்ற ஆரம்பிக்க, 'என்ன சொல்றார்ப்பா..?' என்ற மகளைப் பார்த்தார் 'ஒரு நிமிஷம்மா.. நம்ம ஃபிலிப் சார் கிட்ட பேசிட்டு முழுசும் சொல்றேன்.'

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ருத்ரபூமியில் சாம்ராஜ்ஜியம் அமைக்கும்
சேதுவின் முயற்சிக்கும் சிலர் துணை
போவாரோ?

சிவஞானம்ஜி

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ருத்ரபூமியில் சாம்ராஜ்ஜியம் அமைக்கும்
சேதுவின் முயற்சிக்கும் சிலர் துணை
போவாரோ?//

ஏன் போமாட்டாங்க? ஆனா நடக்குமாங்கறது வேற விஷயம்?