'நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?' என்றாள் மைதிலி தன் தந்தையைப் பார்த்து கோபமாக.
பட்டாபி பதிலளிக்காமல் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார். வாகனம் பாந்த்ராவைக் கடந்து விரைந்துக்கொண்டிருந்தது.
மருத்துவர் ராஜகோபாலனுடைய தொலைப்பேசி வந்ததுமே பதறியடித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனையை அடைந்து அவர் காவல்துறையிலிருந்து இரு அதிகாரிகள் வந்து போன விஷயத்தைக் கூறியதுமே என்ன செய்வதென தெரியாமல் கலக்கமடைந்தார் பட்டாபி.
'என்ன கோபால் சொல்றே?' என்றார் தான் கேட்டதை நம்பமுடியாமல்.
'ஆமா சார். இப்பத்தான் வந்து கால் மணி நேரமா குடஞ்சி எடுத்துட்டு போறாங்க. அவங்களுக்கு நா சொன்னதுல அவ்வளவா நம்பிக்கையில்லேன்னு நினைக்கேன். அந்த பையன அவ்வளவு ஈசியா விடமாட்டாங்கன்னு நினைக்கேன். ஆனா மைதிலி இங்கருந்து போறதுக்கு முன்னால அவன்கிட்டருந்து ஃபோன் வந்தா மாதிரித்தான் தெரியுது. ஆனா என்ன ஏதுன்னு நா கேக்கறதுக்கு முன்னால அவ கெளம்பிப் போய்ட்டா. அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கப்புறந்தான் தெரியுது இன்னும் அந்த பையன் கஸ்டடியிலதான் இருக்கான்னுட்டு. இந்த நேரத்துல இவ அந்த பையனோட வீட்டுக்கு எங்கானும் போயி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான்னா அப்புறம் இவ வாழ்க்கையும் சேர்ந்து க்ளோஸ்.. அதான் ஒங்கள கூப்ட்டு வரச்சொன்னேன். என்ன செய்யப் போறீங்க? எதாருந்தாலும் அதிகம் தாமசிக்காம செஞ்சிரணும். Time is the most important factor now.'
'என்ன கோபால் என்னென்னவோ சொல்றீயே.. நேக்கு என்ன பண்றதுன்னே தெரியலையே.. இப்ப மைதிலி எங்க போயிருப்பான்னு நினைக்கறே?'
'எனக்கென்னவோ அவ அந்த பையன் வீட்டுக்குத்தான் போயிருப்பான்னு தோனுது.. அந்த வீடு ஒங்களுக்கு தெரியுமோல்லியோ?'
பட்டாபி ஆமாம் என்று தலையை அசைத்தார். 'நா இதுவரைக்கும் போய்ட்டில்லை.. ஆனா மைதிலி சொன்னத வச்சி கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கேன். ஒரு கார் மட்டும் வேணும்.. அவ அங்க இருந்தான்னா அவள அதிகமா பேச விடாமல் ஃபோர்சா கார்ல ஏத்திக்கிட்டு வந்துரவேண்டியதுதான். அதுக்கு கோபால் நீயும் வந்தா நன்னாருக்கும். நேக்கு தனியா போறதுல பிரச்சினையில்லன்னாலும் பயமாருக்கு கோபால்.'
ராஜகோபாலன் மறுபேச்சு பேசாமல் கிளம்பினார். தன்னுடைய வாகனத்தில் செல்வதைவிட ஒரு டாக்சியில் செல்வதுதான் உசிதமென தீர்மானித்து தனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தை அழைத்து ஒரு வாகனத்தை அனுப்பச் சொல்லி அது வந்ததும் பட்டாபி விலாசத்தை சொல்ல வாகனம் பாந்த்ராவை நோக்கி விரைந்தது.
மாதவன் முன்பு உயர் பதவியிலிருந்த வங்கியின் அதிகாரிகளுடைய குடியிருப்பு என்பதால் அவர்களால் மிக எளிதாக இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குடியிருப்பை நெருங்குவதற்கு முன்பே வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நிறுவன வாகனங்களையும் காமிரா சகிதம் நின்றிருந்த ஒரு சிறு கும்பலையும் கண்ட பட்டாபி ராஜகோபாலனைப் பார்த்தார். 'என்ன கோபால் விஷயம் நாம நினைச்சதுக்கு மேல சிக்கலாருக்கும் போலருக்கே. இவனுங்கள தாண்டி நம்மால ஃப்ளாட்டுக்குள்ள போக முடியுமா?'
ராஜகோபாலன் பதிலளிப்பதற்கு முன்னரே பட்டாபி சாலையோரத்தில் நின்றிருந்த தன் மகளைப் பார்த்துவிட்டார். 'கோபால்.. அங்க பார்.. அது மைதிலிதானே..'
ராஜகோபாலன் ஆமாம் என்று தலையை அசைத்தார். 'இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்கோ.. அப்படியே கிட்டக்க போயி நிறுத்தி அவள ஏறச்சொல்லலாமா?'
'சரி.. ஆனா கார நிறுத்தி நாம இறங்கி கூப்பிட்டு அவ அவ்வளவு ஈசியா வரமாட்டா. அங்க வச்சிண்டு தகராறு பண்ணிக்கிட்டிருந்தோம்னா அவா எல்லாரும் பாக்கறதுக்கும் சான்ஸ் இருக்கு. அதனால வண்டிய அவ பக்கத்துல போய் நிறுத்தச் சொல்லு.. இஞ்சின ஆஃப் பண்ண வேணாம்.. நா கதவ மட்டும் தொறந்து அவள இழுத்து உள்ள போட்டுடறேன்.. கார் ஒரு நிமிசம் கூட தாமசிக்காம அங்கருந்து கெளம்பிறணும்.. என்ன சொல்றே?'
ராஜகோபாலன் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தார். 'இது நடக்குமா? மைதிலி ஒங்கள சரியா பாக்காம சத்தம் போட ஆரம்பிச்சானா அது வேற பிரச்சினையாயிரும். யோசிச்சிக்கோங்கோ..'
'வேற வழியில்ல கோபால். அந்த ரிஸ்க் எடுக்கத்தான் வேணும்.. அவ சுதாரிக்கறதுக்குள்ள நாம செஞ்சிரணும்.. நீ நா சொன்னபடி போ.. மத்தத நா பாத்துக்கறேன்.'
நல்லவேளையாக அவர் நினைத்தபடியே மைதிலி தன்னை இழுத்து வாகனத்திற்குள் ஏற்றியது யார் என்பதை கண்டுக்கொள்வதற்கு முன்பே வாகன ஓட்டி லாவகமாக வாகனத்தை கிளப்ப காரியம் கனகச்சிதமாக முடிந்தது.
***
மைதிலி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜகோபாலனைப் பார்த்தாள். 'நீங்க செஞ்ச வேலையா இது அங்கிள். I am sorry but I did not expect this from you.'
பட்டாபி திரும்பி தன் மகளைப் பார்த்தார். 'ஏய் மைதிலி.. கோபால் மட்டும் இல்லன்னா ... நீ என்ன காரியம் செய்ய இருந்தேன்னு தெரிஞ்சிதான் பேசறியா?'
மைதிலியின் கண்கள் இரண்டும் கோபத்தால் சிவந்து போயிருந்தன. 'என்னத்தப்பா செஞ்சிட்டேன்? எதுக்கு இப்போ என்னெ அங்கருந்து கெளப்பிக்கிட்டு வந்தேள்? யாராச்சும் பார்த்து கார நிறுத்தியிருந்தா என்ன செஞ்சிருப்பேள். நா ஒங்க பொண்ணு நீங்க சொல்லியிருந்தாக் கூட யாரும் நம்பியிருக்கமாட்டா.. நீங்க செஞ்சது கிட்நாப் மாதிரி இருந்தது.. அத நெனச்சி பாத்தேளா நீங்க?'
பட்டாபி பதிலளிக்காமல் தன் தோள்களைக் குலுக்கினார். 'அதான் யாரும் பாக்கலையே.. பகவான் நம்ம பக்கம் இருக்கறச்சே நாம நெனச்சா மாதிரிதானே நடக்கும்?'
'இப்ப நீங்க வண்டிய நிறுத்தப் போறேளா இல்ல நா குதிச்சிரவா?'
பட்டாபி அதிர்ந்துபோய் தன் மகளுடைய கையைப் பிடித்துக்கொண்டார். 'ஏய்.. நோக்கென்ன பைத்தியமா? ஓடிட்டிருக்கற வண்டியிலருந்து குதிச்சி சாகற அளவுக்கு அந்த பையன் நோக்கு முக்கியமா படறதா? அப்ப நானும் ஒங்கம்மாவும் முக்கியமில்லை நோக்கு.. அப்படித்தானெ?'
'ஐயோ அப்பா.. ஒங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னே தெரியலை.. சீனிக்கு ஹெல்ப் பண்றதுக்கு நம்மள விட்ட வேற யாரும் இல்லப்பா.. அங்கிளும் ஆண்டியும் சென்னைக்கு போய்ட்டான்னு நா சொன்னேனே மறந்துட்டேளா? என்னெ இறக்கி விட்டுறுங்கப்பா.. ப்ளீஸ்..' மேலே தொடரமுடியாமல் மைதிலி கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விசும்ப பட்டாபி என்ன செய்வதென தெரியாமல் ராஜகோபாலனைப் பார்த்தார். 'நீங்க ஒன்னும் பேசாம இருங்கோ' என்பதுபோல் அவர் சைகைக் காட்டிவிட்டு, 'ஜரா ஜல்தி சலாதோ..' என்றார் டிரைவரிடம்.. இதற்கெனவே காத்திருந்ததுபோல ஆக்சிலரேட்டரை மிதித்தார் டிரைவர். வாகனம் சீறிக்கொண்டு முன்னேறியது.
********
'என்னவாம்? அவர் இருந்தாரா இல்லையா?'
மாதன் பதிலளிக்காமல் தன் மகளைப் பார்த்தார்.
'அவர் லைன்ல வரலம்மா. என்னமோ மீட்டிங்ல இருக்காராம். நாம மும்பை போய் இறங்குனதும் கூப்பிடணுமாம்.'
சரோஜா நம்பிக்கையில்லாமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். என்னத்தையோ அப்பனும் பொண்ணும் எங்கிட்டருந்து மறைக்குதுங்க. அந்த சீனிப் பயலுக்கு ஏதாச்சும் பிரச்சினையா மட்டும் இருக்கட்டும். வச்சிக்கறேன்.. நீயும் வேணாம் ஒன் ஒறவும் வேணாம்னுட்டு போயிடறேன்..
'உண்மையத்தான் சொல்றீங்களா? இதுக்கா அப்பனும் மகளுமா குசுகுசுன்னு பேசிக்கிட்டு நீன்னீங்க? உண்மையச் சொல்லுங்க.. சீனிக்கு ஒன்னுமில்லையே?'
மாதவன் தன் மனைவியின் அருகில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றினார். 'இங்க பார் சரோ.. அனாவசியமா எதையாச்சி கற்பனை பண்ணாத.. சீனிக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நம்ம சேர்மன் எங்கிட்ட சொல்லாம இருக்க மாட்டார். இது வேற யார்கிட்டயும் சொல்லக் கூடிய விஷயமும் இல்லையா அதான் ஏர்போர்ட்லருந்து கூப்பிடச் சொல்லுன்னு மட்டும் சொல்லி வச்சிருக்கார். இந்தா நீயே வேணும்னா பண்ணிக் கேளு...'
சரோஜா வேண்டாம் என்று தலையை அசைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூட அவளுடைய கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை பரிதாபமாகப் பார்த்தனர் மாதவனும் வத்ஸ்லாவும். 'சொல்லிரலாமா?' என்று உதடுகளை அசைத்தார் மாதவன். 'வேணாம்ப்பா.. ப்ளீஸ்.' என்று வத்ஸ்லா கைகளைக் கூப்பினாள்..
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் செல்லவிருந்த விமானம் புறப்பட தயாராக இருக்கிறதென்ற அறிவிப்பு வர மூவரும் எழுந்து வாசலை நோக்கி விரைந்தனர்.
தொடரும்..
1 comment:
நன்றாக கதை எழுதுகிறீர்கள். ஆனால் ஒன்று போன இதழில் மைதிலி விஷயத்தை சற்ற்நே ஊகித்து விட்டேன்.
ஒரு சந்தேகம்.
சமையற்கார மாமி ஏன் மாதவனுக்கு போன் செய்து விஷயத்தை கூறியிருக்கக் கூடாது? பல மன உளைச்சல்களை தவிர்த்திருக்கலாமே.
இந்த சந்தேகத்தை ஏதேனும் டயலாக் மூலம் தீர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.கண்டிப்பாக மெட்டி ஒலி திருமுருகன் கோஷ்டியினர் யாராவது இக்கதையைப் பார்த்தால் அப்படியே கொத்திக் கொண்டு போய் விடுவார்கள். சீரியஸாகவே கூறுகிறேன். மெகா சீரியல் வேண்டாம். வார சீரியலாக குறைந்த பட்சம் 52 எபிடோடுகள் வரும் வரை இந்த கதையில் சுவாரசியமான விஷயங்கள் உள்ளன.
பை தி வே, //மாதன் பதிலளிக்காமல் தன் மகளைப் பார்த்தார்.// --> மாதவன் என்று சரி செய்து விடுங்கள்
என்னுலகத்துக்கு ஏன் இந்த பிரேக்? அதன் ஆங்கில வெர்ஷனுக்கு வந்தது போன்று ஏதேனும்...?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment