9.2.07

சூரியன் 173

மைதிலி் சீனியின் வீட்டை நெருங்கியபோது வாசலில் நின்றிருந்த கூட்டம்தான் முதலில் அவளுடைய கண்களுக்கு தென்பட்டது. தொலைக்காட்சி வாகனங்கள், காமராக்கள் சகிதம் நின்றிருந்தவர்களைப் பார்த்ததுமே சீனியை காவல்துறையினர் கைது செய்த விஷயம் எப்படியோ இவர்களுக்கு தெரிந்துவிட்டிருக்கிறது என்பது மட்டும் அவளுக்கு விளங்கியது.

ஆட்டோவை சற்றுத் தொலைவிலேயே நிறுத்தி இறங்கி நடக்கவாரம்பித்தாள். கூட்டத்தின் விளிம்பில் நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் குர்க்காவைத் தவிர யாரையும் காணவில்லை. கண்ணுக்கெட்டியவரை சீனியையோ அல்லது மாமியையோ காணவில்லை. ஆக சீனி இவர்களை அதுவரை சந்திக்கவில்லை என்பதை உணரமுடிந்தது.

இந்த கூட்டத்தை சமாளித்து எப்படி சீனியை சந்திக்கப்போகிறேன் என்பது மலைப்பாக இருந்தது அவளுக்கு. சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு கூட்டத்திலிருந்து விலகி செல் ஃபோனை எடுத்து டயல் செய்தாள். எதிர்முனையில் அடித்துக்கொண்டே இருந்தது. ஒன்று சீனி வீட்டில் இல்லை.. இல்லையென்றால் அவனுக்கு எடுத்து பதில்பேச துணிவில்லை. சீனி வீட்டில் இல்லையென்றால் மாமி எங்கே.. சீனியை அவனுடைய செல்ஃபோனில் அழைத்தாலென்ன என்று தோன்றியத.

சீனியின் செல்ஃபோன் என்றதும் சட்டென்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஐயோ.. அதுவும் அவங்கிட்ட இல்லையே.. அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பகலில் ராஜகோபாலனுடைய மருத்துவமனையில் தான் பத்திரிகையில் வாசித்தது நினைவுக்கு வர.. சீனியின் கைதுக்கு பின்னாலிருந்த மர்மம் அவளுக்கு விளங்கியது. 'That's it.. அன்னைக்கே சீனி சொன்னானே போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும்னு.. நாந்தான் முட்டாத்தனமா இருந்துட்டேன் போலருக்கே.. அதான்.. அவனோட செல்ஃபோன எடுத்த ராஸ்கல்தான் இந்த வேலைய செஞ்சிருக்கணும்.. அது போலீஸ்க்கு பின்னாலதான் தெரிய வந்துருக்கும். அதான் அவனெ விட்டுட்டா.. ஆனா இது எப்படி இவாளுக்கு தெரிய வந்துது.. மழை விட்டும் தூறல் விடலேங்கறா மாதிரி.. இது எப்படி? சீனியோட செல்ஃபோன யூஸ் பண்ண கேங்கே இதயும் செஞ்சிருக்குமோ.. அவங்களுக்கு கிடைச்ச செல்ஃபோன் யாரோடதுன்னு அவங்களாலயா கண்டுபிடிச்சிருக்க முடியாது.. இது அவங்க வேலையாத்தான் இருக்கும்..

சரி.. இப்ப இத எப்படி டீல் பண்றது? ப்ரெஸ் ஆளுங்க பயங்கரமான ஆளுங்களாச்சே.. சீனியோட பழைய பழக்கங்கள் முக்கியமா அவனுக்கு போதைப் பொருள் யூஸ் இருந்துதுன்னு கண்டுபிடிச்சி அதப்பத்தி அவன்கிட்ட எதையாவது கேட்டு.. அது பேப்பர்லெல்லாம் வந்தா.. ஐயோ அத நினைக்கவே பயமாருக்கே.. சரோஜா ஆண்டிக்கு மட்டும் இது தெரியவந்தா என்னாவறது.. அதுமட்டுமா அந்த பையனோட சகவாசமே ஒனக்கு வேணாம்னு அப்பா வேற மறுபடியும் ஆரம்பிச்சிருவாரே.. ராஜகோபலன் அங்கிள் வேற சொல்லிட்டாரோ என்னவோ.. அவர்கிட்ட உதவி கேக்கப் போனது எத்தன முட்டாத்தனம்.. என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டு சாலையோரத்தில் நின்றிருந்தாள் மைதிலி.

அடுத்த நொடியே அவளுக்கு மிக அருகில் ஒரு வாகனம் வந்து நின்றது. அவள் யாரென்று நிதானிக்கும் முன்பே ஒரு கரம் அவளை வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்து கதவை மூட சுற்றிலுமிருந்தவர்கள் நிதானிக்கும் முன்பே வாகனம் சர்ரென கிளம்பி சென்றது.

********

மாதவன் அவருடைய மனைவி மற்றும் மகள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து புறப்பாடு கூடத்தில் அமர்ந்திருந்தனர். நல்லவேளையாக மும்பையிலிருந்து வந்து திரும்பிச் செல்லவிருந்த விமானம் சரியான நேரத்தில் வரவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது.

'கடவுள் புண்ணியத்துல ஃப்ளைட் சரியான நேரத்துக்கு கிளம்புனா நல்லாருக்கும்.. அவன் என்ன அவஸ்தை படறானோ தெரியலையே..' என்ற தனக்குள்ளேயே முனகியவாறு அமர்ந்திருந்த தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தாள் வத்ஸ்லா.. 'Don't worryமா.. அதான் அனவுன்ஸ் பண்ணிட்டானே.'

'ஒங்கப்பா எங்கடி காணம்?' என்றாள் சரோஜா கூடத்தை ஒருமுறை அலசிவிட்டு.

'அப்பா அவரோட சேர்மன கூப்ட போயிருக்கார். செல் ஃபோன்ல க்ளியரா இல்லையாம். ஏர் டெல் பூத்லருந்து பேச போயிருக்கார். இப்ப வந்துருவார்.'

'இங்கருந்து பேசி என்னடி புண்ணியம்? இன்னும் ரெண்டு மணி நேரத்துல போயி சேந்துரப் போறோம். அப்பவே கூப்டுங்கன்னு சொன்னேன். அப்பாவும் பொண்ணுமா தடுத்துட்டீங்க. அதெப்படிதான் என்ன நடந்தாலும் அசராம இருக்கீங்களோ ரெண்டு பேரும்.. என்னால முடியலடிம்மா.. முடியல..'

சரோஜாவுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் இருந்ததை நினைத்துக்கொண்டாள் வத்ஸ்லா. 'அம்மா ப்ளீஸ்.. நீ பேசி பேசியே டென்ஷயாருவே.. ப்ர்ஷர் ஏறிடப்போவுதும்மா.. அப்படியே சாஞ்சி கண்ணெ மூடு.. அப்புறம் ஒனக்கேதும் ஆயிருச்சின்னா சீனிய பாத்து ஒழுங்கா பேசக் கூட முடியாம ஆயிரப்போவுது..'

சரோஜா தன் மகளை எரிச்சலுடன் பார்த்தாள். 'ஏன்டி ஒன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா.. கருநாக்கு, கருநாக்கு.. பலிச்சிரப் போவுதுடீ..'

வத்ஸலா எரிச்சலுடன் இது ஒனக்கு தேவையா என்றாள் தனக்குத்தானே.. 'சாரிம்மா.. தெரியாம சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் கண்ணெ மூடிக்கிட்டு ரெஸ்ட் எடுக்க ட்ரை பண்ணேன்..'

சரோஜா வேறு வழிய் தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய தூரத்தில் மாதவன் பரபரப்புடன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த வத்ஸ்லா உடனே எழுந்து அவரை நோக்கி விரைந்தாள். 'என்ன டாட்.. என்னவாம்?'

மாதவன் உற்சாகத்துடன் காணப்பட்டார். 'ஏய் வத்ஸ்.. சீனிய ரிலீஸ் பண்ணிட்டாங்களாம். சேர்மனுக்கு இப்பத்தான் நியூஸ் வந்ததாம். உடனே மும்பை மெட்ரோ போலீஸ் டிஜிபியவே போன்ல கூப்ட்டு கேட்டுட்டாராம். சீனியோட செல்ஃபோன யாரோ யூஸ் பண்ணிருக்காங்கன்னு சீனிய விசாரிச்சப்பதான் தெரிஞ்சிதாம்.' என்றவர் தொடர்ந்து, 'இந்த இடியட் செல் ஃபோன தொலைச்சிட்டு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இருந்துருக்கான். இவன் பண்ண வேல இப்ப எல்லாருக்கும் டென்ஷன்.. டைம் வேஸ்ட்.. ச்சே.. இப்ப என்ன பண்லாம் வத்ஸ்?'

வத்ஸ்லா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். 'டாட்.. நாம மூனு பேரும் போய்ட்டே வந்துடறதுதான் நல்லதுன்னு படுது. நீங்க என்ன சொன்னாலும் அம்மா நம்பப் போறதில்லை. இந்த ட்ரிப்ப கேன்சல் பண்றதுக்காக நீங்க சும்மா சீனி ரிலீஸ் ஆய்ட்டான்னு சொல்றீங்கன்னு சொல்வாங்க. அதனால..'

இடைமறித்தார் மாதவன். 'அதனால? அம்மாகிட்ட இத சொல்ல வேணாங்கறியா? சேர்மன் என்ன சொல்வார்னு கேப்பாளே?'

'லைன் கெடைக்கலேன்னு சொல்லிருங்கப்பா. அம்மாவுக்கும் ஒரு ப்ளெசண்ட் சர்ப்ரைசா இருக்கட்டுமே.'

மாதவன் புரியாமல் தன் மகளைப் பார்த்தார். 'அது சரி வராது வத்ஸ். அவளுக்கு ஏற்கனவே ப்ரஷர் இருக்கு.. பாசிட்டிவ் எமோஷன்சும் கூட அத பாதிக்கும். நாம போய் இறங்கி சீனிய வீட்டுல பார்த்ததும் ஒருவேள அவ ஓவரா ரியாக்ட் பண்ணிட்டா.. ஏற்கனவே இருநூறுக்கு மேலருக்கற சிஸ்டாலிக் ப்ரஷர் இன்னும் ஜாஸ்தியாயி ஏதாச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிர சான்ஸ் இருக்கு..'

கருநாக்கு, கருநாக்கு என்று சரோஜா தன்னை பழித்தது நினைவுக்கு வர தன்னையுமறியாமல் புன்னகைத்தாள் வத்ஸலா.

அவளுடைய புன்னகையின் பொருள் விளங்காமல் எரிச்சலுடன் பார்த்தார் மாதவன். 'ஏய், என்ன, நா சீரியசா பேசிக்கிட்டிருக்கேன்.. நீ ஸ்மைல் பண்றே?'

வத்ஸ்லா வாய்விட்டுச் சிரித்துவிட்டு சற்று முன் தன் தாய் தன்னை பழித்ததை கூறினாள். மாதவனுக்கும் தன்னுடைய தவறு உணர்த்த, 'சாரிடா.. அம்மா சொல்றது உண்மைதான்.. நம்ம ரெண்டு பேருமே நிறைய விஷயங்கள்ல இப்படித்தான் நெகட்டிவாவே திங்க் பண்றோம்.. I think we will have to change..' என்றார் சரோஜா கண்விழித்து தங்கள் இருவரையும் கவனிப்பதைப் பார்த்தவாறு. 'ஏய் அம்மா நம்மளையே பாக்கறா.. நீயே எதையாவது சொல்லி சமாளி.. நா வாய் தொறக்கலை..'

தொடரும்..

2 comments:

அருண்மொழி said...

காதல், ஊடல் என்பது கடத்தல் ஆகிவிட்டதா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

காதல், ஊடல் என்பது கடத்தல் ஆகிவிட்டதா?//

இந்த மூனும் இல்லாத தொலைக்காட்சி தொடர் ஏதாச்சும் இருக்கா.. சூரியனையும் ஒரு தொலைக்காட்சி தொடரா கொண்டு வரவேண்டியிருந்தா (ஒரு நப்பாசைதான்:)). அதான் முன்கூட்டியே எல்லா மசாலாவையும் சேர்த்துரலாம்னு...