16.2.07

சூரியன் 176

'டேய் சீனி.. வாசல்ல யாரோ வந்து பெல்லடிக்கறாளே.. என்ன செய்யறது?'

கடந்த சில மணி நேரங்களாக தன்னுடைய படுக்கையறைக்குள் அடைந்துக் கிடந்த சீனிவாசன், 'என்னமும் பண்ணுங்கோ மாமி.. எனக்கு இப்போ வெளிய வர்ற மூடில்லை.' என்றான்.

சிவகாமி என்ன செய்யலாம் என்று ஒரு நொடி ஆலோசித்தாள். ஹாலின் மறுகோடியிலிருந்த சன்னல் வழியாக வாசலைப் பார்த்தாள். முன் கேட் இன்னமும் மூடியேத்தான் இருந்தது. ஆனால் வாசலில் நின்றிருந்த கும்பல் கலைந்து செல்வதாயில்லை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் காலையில் அலுவலகம் சென்றிருந்த வாகனங்கள் ஒவ்வொன்றாய் திரும்பி வர துவங்கும். இவர்கள் கேட்கும் கேள்விகளைத் தவிர்க்க முடியாமல் அவர்கள் திண்டாடக்கூடிய வாய்ப்புள்ளதென்று நினைத்தாள்.

வாசலில் விடாது மணியோசை கேட்கவே வேறு வழியில்லாமல் சென்று கதவைத் திறந்தாள். மாதவனுடன் பணியாற்றிய உயர் அதிகாரி. தமிழர். சுந்தரராஜன். அதே குடியிருப்பில் குடியிருப்பவர். தமிழ்நாடு அதுவும் சென்னையைச் சேர்ந்த ஐயங்கார். சற்று முன்னர்தான் அவருடைய வாகனம் வளாகத்திற்குள் நுழைந்ததையும் வாசலில் குழுமியிருந்த கூட்டத்துடன் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்திருந்தாள். இவர் வேறு என்ன சொல்லப் போகிறாரோ என்ற நினைப்பில், 'வாங்கோ.. என்ன வேணுமாம் அவாளுக்கு?' என்றாள் பொதுவாக.

'என்ன மாமி இது இப்படி சர்வசாதாரணமா கேக்கறேள்.. ப்ரெஸ் காரா என்னென்னமோ சொல்றாளே.. ஊர் கிடக்கற நிலைமையில இவன் பேர்லருக்கற இந்த பொல்லாப்புக்கு பதில் சொல்லணுமே. இப்படி உள்ளயே அடைஞ்சி கிடந்தா இதுக்கு என்னதான் வழி? அவ கேக்கற கேள்விக்கு பதில் சொல்லிட்டு வந்துர வேண்டியதுதானே.. இல்லன்னா அவாளா ஏதாச்சும் கதைய கட்டிருவா. அப்புறம் அவஸ்தை அவனுக்கு மட்டுமில்லை.. நாம எல்லாருக்குந்தான். இந்த நியூஸ் சிவசேனாவுக்கு மட்டும் தெரிஞ்சிதுன்னு வச்சுக்குங்கோ.. இந்த பில்டிங்கையே நாசம் பண்ணிருவா.. போலீச கூப்ட்டா கூட வருவாளோ மாட்டாளோ.. அவனெ செத்த கூப்டுங்கோ.' என்றவாறு அவர் சுதந்திரமாக வீட்டிற்குள் நுழைந்து சீனிவாசனின் அறைக்கதவைத் தட்டினார்.

சிவகாமி வேறுவழியில்லாமல் வாசற்கதவை மூடி தாளிட்டுவிட்டு சீனிவாசனின் அறையை நெருங்கினாள். 'டேய் சீனி.. செத்த வெளியில வாயேன். பக்கத்து ஃப்ளாட் மாமா வந்திருக்கார்றா.. வந்து பேசேன்..'

'மாமி நீங்க போயி சூடா ஒரு காப்பி போட்டு கொண்டாங்கோ.. இவனாண்ட நா பேசிக்கறேன்.'

'சரி' என்றவாறு சிவகாமி சமையலறையை நோக்கி நடக்க சுந்தரராஜன் சீனிவாசனின் கதவை தட்டியவாறு நின்றார். 'சீனி.. பயப்படாம வெளிய வாயேன். ஒன்னெ போலீஸ் அழைச்சிண்டு போனாள்னு சொல்றாளேடா.. என்ன விஷயம்னு எங்கிட்ட சொல்லு.. அவாள நா பாத்துக்கறேன்..'

ஒரு சில நிமிடங்கள் கழித்து கட்டைகளை ஊன்றியவாறு காலில் கட்டுடன் வெளியில் வந்தவனைப் பார்த்ததும் ஓரடி பின்வாங்கினார் ராஜன். 'என்னடாயிது கட்டு.. சொல்லவேயில்லையே.. எப்ப ஆச்சிது இது? இத்தோடயா ஒன்னெ போலீஸ் வந்து கூப்ட்டுண்டு போனா?'

சீனிவாசன் அசிரத்தையுடன் தலையை அசைத்தவாறு தட்டுத் தடுமாறி ஹாலுக்குள் நுழைந்து தெருவோர சன்னல் வழியாக வாசலில் கேட்டருகே நின்றிருந்த கும்பலைப் பார்த்தான். பிறகு திரும்பி அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த தன் தந்தையின் சிநேகிதரைப் பார்த்தான்.

சுந்தரராஜன் அவனை நெருங்கி அவனருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். 'என்னடா சீனி.. என்ன நடந்துதுன்னு சொல்லேன். நோக்கு அவாள பாக்க விருப்பமில்லையா.. எங்கிட்ட சொல்லு நா பேசி அனுப்பறேன்.. இல்லன்னா அவா போமாட்டாளேடா?'

'என்ன சொல்லணுங்கறீங்க அங்கிள்?' என்றான் சீனி சலிப்புடன். 'காலைல திபுதிபுன்னு நாலஞ்சு போலீஸ் வந்தாங்க. என்ன ஏதுன்னு கேக்கவிடல. ஜீப்ல ஏத்திக்கிட்டு போனாங்க. அப்புறம் அங்க நம்ம டி.ஜி.பி ரெபைரோ வந்தார். அடுத்த நிமிசமே இந்த பையனுக்கு அதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னார். அப்புறம் ஒன்னோட ஃபோன எப்ப தொலைச்சேன்னு அவராவே கேட்டார். நான் சொன்னேன்.. அவர் அத வச்சித்தான் அந்த கும்பல் போலீசுக்கு இன்ஃபர்மேஷன் குடுத்துருக்குன்னு சொல்லிட்டு இவனெ கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு அவன் ஃபோனோட IMIE நம்பர மட்டும் வாங்கியாங்கோன்னு சொன்னார். ஆனால் மத்த போலீஸ் ஆஃபீசர்ங்களுக்கு என்னெ விடறதுல இஷ்டமில்லேங்கறது நல்லாவே தெரிஞ்சது. வீட்டுக்கு வர்ற வழியில எங்கிட்ட என்னென்னவோ கேட்டாங்க... நீ தாதர்ல விழுந்தேங்கறே.. அங்கயே நிறைய க்ளினிக் இருக்கறப்போ செம்பூர்லருக்கற அந்த டாக்டர்கிட்ட ஏன் போனே, நீ தனியா போனியா இல்ல யாராச்சும் ஒன்னெ கூப்ட்டுக்கிட்டு போனாங்களான்னு என்னென்னவோ சம்பந்தமில்லாத கேள்விங்கல்லாம் கேட்டுட்டு நா சொன்னத எழுதிக்கிட்டாங்க.. அப்புறம் என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு என் செல்ஃபோன் ஐ.டி நம்பர வாங்கிட்டு போய்ட்டாங்க.. இதான் நடந்தது.. என் பேர்ல சந்தேகமில்லேங்கறா மாதிரி வீட்ல கொண்டு வந்து விட்டுட்டதுக்கப்புறம் ப்ரெஸ் ப்யூப்பிளுக்கு யார் சொன்னான்னுதான் தெரியல.. இப்ப இவங்களுக்கு நா எதுக்கு அங்கிள் பதில் சொல்லணும்.. என்ன இருக்கு இவங்ககிட்ட பேசறதுக்கு? அத்தோட எப்படியோ எங்க வீட்டு நம்பரும் தெரிஞ்சிக்கிட்டாங்க.. அப்பத்துலருந்து போன் அடிச்சிக்கிட்டே இருக்கு.. ரெண்டு மூனுதரம் எடுத்தேன்.. நீ இன்னைக்கி ராத்திரியோட க்ளோஸ்னுல்லாம் எவனெவனோ மிரட்டுறான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் அங்கிள் ரூமுக்குள்ளயே அடைஞ்சி கிடக்கேன்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கு இது மட்டும் தெரிஞ்சா..' என கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்தான் சீனிவாசன்.

ராஜனுக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. மாதவனுக்கு இப்படியொரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். ரெண்டு வருசத்துக்கு முன்னால இவன் ட்ரக்சுக்கு அடிக்டாயி இவனால குடும்பமே ரெண்டா போற அளவுக்கு வந்துதே.. எப்படியோ அதுலருந்து தப்பிச்சான்.. மறுபடியும் எங்க அந்த ஃப்ரெண்ட்சோட சேர்ந்து கெட்டுப்போயிருவானோன்னு நினைச்சித்தான் மும்பைய விட்டே போயிரலாம்னு மாதவன் நினைச்சார். ஆனா அதுவும் இப்ப நடக்காதுங்கற மாதிரி பண்ணிட்டு வந்து நிக்கறான்.. மாதவனுக்கு இன்னும் தெரியாது போலருக்கே?

'இப்பத்தான் நானும் ஆஃபீஸ்லருந்து வந்தேன். என்னாண்ட அவா கேட்ட கேள்வியிலருந்துதான் நேக்கு ஒன் விஷயமே தெரிஞ்சிது. சொல்லு. ஒனக்கு அவாள ஃபேஸ் பண்ண தைரியம் இருக்கா. Can you handle their questions Seeni?'

சீனிவாசன் தன்னால் இயலாது என்பதை சைகையால் தெரிவித்துவிட்டு எழுந்து நின்றான். 'தப்பா நினைச்சிக்காதீங்க அங்கிள். அவங்க எப்படியெல்லாம் கேள்வி கேட்டு மடக்குவாங்கறதத்தான் டி.வியில பாக்கறமே.. I am fed up.. really fed up. நான் என்னோட செல் ஃபோன தொலைச்சத தவிர வேறெந்த தப்பையும் செய்யல. I don't think I need to explain that to those people. Let them wait.. I don't simply care. If you want to tell them this.. that's left to you. Sorry Uncle.. I would like to take some rest.. அப்பாவோடயே நானும் போயிருந்தேன்னா இந்த பிரச்சினையில சிக்கியிருக்க மாட்டேன்.. இப்போ நா நெனச்சாலும் போக முடியாது போலருக்கு.. You should not leave Mumbaiன்னு டி.ஜி.பியே சொல்லிட்டார்.. What do you expect me to do? I am just stuck up in this damned place.. It's like hell.. I was never pushed into this kind of mess.. I am tired.. damned tired..'

தட்டுத்தடுமாறியவாறு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்தியவனை தடுக்க மனமில்லாமல் சிறிது நேரம் இருக்கையிலேயே அமர்ந்திருந்த சுந்தரராஜன் மெள்ள எழுந்து காப்பிக் கோப்பையுடன் நின்றிருந்த சிவகாமியைப் பார்த்தார். 'இவனெ பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு. அவன் சொல்றதும் சரிதான். இவா ஒரு வல்ச்சர்ஸ் மாதிரி. என்ன செய்வான்னே சொல்ல முடியாது. சரி.. அவாள அவாய்ட் பண்ணாலும் தப்பாச்சே.. எதையாச்சும் சொல்லி அனுப்ப பாக்கேன். வரேன் மாமி, இந்த காப்பிய கொண்டு அவன்கிட்ட கொடுங்கோ..'

அவர் வாசலை நோக்கி நடக்க உடனே தொலைபேசி அலறியது. சிவகாமி மாமி அதை பொருட்படுத்தாமல் காப்பி கோப்பையுடன் சீனியின் அறையை நோக்கி நடக்கலானாள்.

******
'ச்சே.. எதுக்கு எடுக்க மாட்டேங்கறான்? மாமி இருப்பாளே.. அவளாவது எடுக்கப்படாதா?' சலிப்புடன் செல்போனை அணைத்து சோபாவில் எறிந்தாள் மைதிலி.

அவளையே கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் பெற்றோரை வெறுப்புடன் பார்த்தாள்.

'இப்ப திருப்தியா ஒங்க ரெண்டு பேருக்கும்? அங்க தன்னந்தனியா என்ன பண்றதுன்னு தெரியாம ரூமுக்குள்ளயே முடங்கிக் கிடக்கான் போலருக்கு. இத்தன நாள் பழகுன பழக்கத்துக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்டேளேப்பா.' மேற்கொண்டு பேச முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழும் மகளை தேற்றுவதெப்படியென புரியாமல் பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். 'நான் என் பொண்ணுக்காக செஞ்சது தப்பாடி.. மரம் மாதிரி நிக்கறயே.. சொல்லேன்... நா அவளோட நல்லதுக்காகத்தானேடி இவ்வளத்தையும் பண்றேன்.. இவளுக்கேன் புரியமாட்டேங்குது?'

'நீங்க வேற ஏன்னா புலம்பிக்கிட்டிருக்கேள். அவளுக்கு எல்லாம் தெரியும். நீங்க செத்தெ சும்மாயிருங்கோ.. வேணும்னா வெளியில போய்ட்டு வாங்கோளேன்.. நா அவ கிட்ட பேசறேன்.. போங்கோ..'

'என்னமோ போ.. நீயாச்சு ஒன் மகளாச்சி.. நா போறேன்.. கறிகா எதாச்சும் வாங்கணுமா?' என்றவாறு எழுந்து நின்றார் பட்டாபி.

'ஒன்னும் வேணாம்.. காலாற ஒரு நடை போய்ட்டு அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு வாங்கோ.. ஒன்னும் அவசரமில்லை..'

பட்டாபி வாசலை நோக்கி நடக்க ஜானகி தன் மகளை பார்த்தாள். 'இவள பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு. என்ன பண்றது.. அந்த பகவாந்தான் அந்த பையன மறக்கறதுக்கு வழி பண்ணணும்.. ஈஸ்வரா.. என்றவாறு சமையல்கட்டை நோக்கி நகர்ந்தாள்..

தொடரும்..

4 comments:

Meenapriya said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ரொம்ப lateஆ... ஏன் சார் 200 வாரம் தான் சூரியன் வரும்னு சொல்லிட்டீங்க... நீங்க எழுதுங்க சார்.. படிக்கறதுக்கு தான் எங்கள மாதிரி வாசகர்கள் இருக்கோமே...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனா,

திருமண நாள் வாழ்த்துக்கள் ரொம்ப lateஆ... //

பெட்டர் லேட் தேன் நெவர்.. நன்றி..

ஏன் சார் 200 வாரம் தான் சூரியன் வரும்னு சொல்லிட்டீங்க... நீங்க எழுதுங்க சார்.. படிக்கறதுக்கு தான் எங்கள மாதிரி வாசகர்கள் இருக்கோமே... //

இருக்கீங்கதான்.. இல்லேன்னு சொல்லல.. ஆனா எங்கயாவது கத முடிஞ்சிதான ஆகணும்.. எவ்வளவு வேணும்னாலு எழுதலாம்.. ஆனா இப்போதைக்கு இதை நிறுத்திட்டு வேற ஒரு தொடர தொடங்கலாம்னு இருக்கேன்..

அதுக்கப்புறம் இதுக்கு மறுபடியும் வரலாம்..

'நாளை நமதே'ங்கற தலைப்புல ஒரு ஐந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள், அவர்களுடைய குடும்பங்கள், நண்பர்கள் எல்லாரையும் சுற்றி ஒரு கதைச் சுருக்கம் எழுதி வச்சிருக்கேன்.. முதல் நூறு எப்பிசோடுக்கு குறிப்புகள் முடிஞ்சிருச்சி...

இத முடிச்சதும்.. அநேகமா ஏப்ரல் ரெண்டாம் தேதி (ஒன்னாம் தேதி வேணாம்) துவங்கலாம்னு இருக்கேன்..

பார்க்கலாம்..

siva gnanamji(#18100882083107547329) said...

though late, pls accept my greetings.......

who is philip madhavan(175) i know
one mr. philip sundaram , cgm. is this philip madhavan , a new character?

why there is such a long break in
"looking back"( thi. paa)?

sivagnanamji

டிபிஆர்.ஜோசப் said...

Welcome Ji!

is this philip madhavan , a new character?//

Paatheengala.. marubatiyum ungakittaye mattikiten.. avar veru yarum illa, namma philip sundaram dhan.

thi.paa thodar puthan (nalai) muthal meendum varum..

Nan ippo kochiyile. athaan thamizhla type panna mudiyalai.