15.2.07

சூரியன் 175

ஃபிலிப் மாதவன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு தன்னுடைய குடியிருப்பை அடைந்து உடை மாற்றிக்கொண்டு இரவு உணவை தயாரிக்க மனமில்லாமல் இருக்கையிலமர்ந்து டி.வியை ஆன் செய்தார்.

அவர் படுக்கச் செல்லுமுன் சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் சேனல்களின் செய்திகளைக் கேட்காமல் இருந்ததில்லை. அத்துடன் அன்று மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திருந்ததால் உடை மாற்றி அமர்ந்ததுமே அதைக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார்.

மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ND TVயின் ஆங்கிலச் செய்தியைக் கண்டுவிட்டு சன் நியூஸ் சானலைப் பார்க்கலாம் என்ற நோக்கில் ND TV சானலைத் தேடிப்பிடித்தார்.

எடுத்த எடுப்பிலேயே மாதவனுடைய பெயர் கேட்கவே திடுக்கிட்டு உன்னிப்புடன் கேட்கலானார். அவர் கேட்டதை அவராலேயே நம்பமுடியவில்லை. மாதவன் சாருடைய மகனா? இதில் தொடர்புள்ளதா? என்ன சோதனை? அதனால்தான் என்ன ஏது என்று சொல்லாமலேயே புறப்பட்டு போனாரா?

டி.வியில் காண்பித்த குடியிருப்பையும் அதன் வாசலில் குழுமி நின்றிருந்த நிரூபர் கூட்டத்தையும் பார்த்த ஃபிலிப் அதில் மாதவன் தெரிகிறாரா என்று துழாவினார். ஹுஹூம்.. காணவில்லை.. ஒருவேளை இன்னமும் சென்று சேர்ந்திருக்க மாட்டாரோ.. சுபோத் எந்த ஃப்ளைட்டில் டிக்கட் எடுத்து கொடுத்திருந்தார் என்பது தெரியாததால் அவனை உடனே அழைத்தாலென்ன என்று நினைத்து செல் ஃபோனை நெருங்கினார்.

அவர் சுபோத்தின் எண்ணைத் தேடி எடுக்கவும் அது ஒலிக்கவும் சரியாக இருந்தது. சுபோத் எதிர் முனையில்!

'சார் நா சுபோத் பேசறேன்.. டி.வி நியூஸ் கேட்டீங்களா சார்?'

'ஆமா சுபோத். மாதவனுக்கு எந்த ஃப்ளைட்ல டிக்கட் எடுத்தீங்க?'

'8.50 ஃப்ளைட்ல சார்.. இப்பத்தான் ஏர் க்ராஃப்ட்லருந்து சார் ஃபோன் பண்ணார். எப்படியும் ரெண்டு மூனு நாளைக்குள்ள நா வந்துருவேன். சிஜிஎம் கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு ப்ரெஸ் கான்ஃபரன்ஸ் எப்படி போச்சின்னுல்லாம் கேட்டார் சார். அவர் டோன்லருந்து பிரச்சினை ஒன்னுமில்லேன்னுதான் நினைச்சேன்.. ஆனா நியூச பார்த்தா...' என்ற சுபோத் சட்டென்று, 'நா வேணும்னா நம்ம பாந்தரா பிராஞ்ச் சி.எம் வீட்ல கூப்ட்டு போய் பாக்க சொல்லட்டுமா சார்?' என்றான்.

'வேணாம் சுபோத்.. It might unnecessarily complicate the matter. We will wait.. ' என்றார் ஃபிலிப். அவருடைய குரலிலிருந்த எரிச்சலைப் புரிந்துக்கொண்ட சுபோத், 'சாரி சார்.. I just thought.. OK Sir.. Goodnight.' என்றவாறு துண்டித்தான்.

இணைப்பைத் துண்டித்த ஃபிலிப் சுந்தரலிங்கத்தை அழைக்கலாமா என்று ஒரு நொடி ஆலோசித்தார். ஆனால் அடுத்த நொடியே வேண்டாம்.. அவரா கூப்பிடறாரான்னு பார்ப்போம்.. ஒருவேளை இது மும்பை ப்ரெஸ் பண்ற யூஷுவல் guess workஆ இருக்கும்.. இவங்களுக்குத்தான் எந்த நியூசையும் சென்சேஷனலைஸ் பண்ணி வ்யூவர்ஷிப்ப கூட்டறதுதான முக்கியம்? அதனால பாதிக்கப்படப் போறவங்களபத்தி இவங்களுக்கு என்ன வந்தது?

இனியும் விழித்திருக்க விருப்பமில்லாமல் பேருக்கு ஒரு தம்ளர் போர்ன்விட்டாவைக் கலக்கி குடித்துவிட்டு சிறிது நேர பிரார்த்தனைக்குப் பிறது படுக்கையில் விழுந்தார்.

ஆனால் உறக்கம் வரவில்லை. இப்படியொரு சூழ்நிலையில மாதவன் உடனே திரும்பி வருவாரா? அவர் திரும்பி வந்ததும் அவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துவிடலாம் என்ற தன்னுடைய நினைவு நனவாகுமா? அவர் ஒத்துக்கொண்டாலும் சிலுவை மாணிக்கம் நாடார் ஒத்துக்கொள்வாரா? அதுக்கு முன்னால யூ.எஸ் சுக்கு ஃபோன்போட்டு எஸ்தர் கிட்ட பேசுவோமா?

ஒவ்வொரு சிந்தனையும் அவருடைய குழப்பத்தை அதிகரித்து தூங்கவிடாமல் செய்ய படுக்கையில் நெடுநேரம் உறக்கம் வராமல் படுத்துக்கிடந்தார்.

*****

'ஏய்.. மாயே.. இங்கோட்டு வாடி.. ஒரு ஹேப்பி நியூஸ்.' என்று குடிபோதையின் உச்சியில் இரைந்தார் சேதுமாதவன்.

தன்னுடைய படுக்கையறையில் அமர்ந்தவாறு மலையாள வாரப்பத்திரிகை ஒன்றில் மூழ்கிப் போயிருந்த அவருடைய மனைவி சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தாள். ஒங்களுக்கென்ன வேலை.. மூச்சு முட்ட குடிக்க வேண்டியது.. ஃபேஷன் டிவியில அரைகுறை அம்மணமா அலையற பொண்ணுங்கள பார்த்துட்டு அப்பப்போ கத்த வேண்டியது.. வெவஸ்த கெட்ட மனுசன்.. பேரன் பேத்தி எடுத்தப்புறமும் வாலிபன்னு நெனப்பு..

சேதுமாதவனுக்கு சந்தோஷம் தலைக்கேறியது. கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்கில் சாய்த்தார். போதை உச்சந்தலைவரை ஏற எழுந்திருக்க முயன்று முடியாமல் சோபாவிலேயே விழுந்தார். 'ஏட்டி. இங்கன வந்நு நோக்கு..' என்றார் மீண்டும்.

தான் இனியும் சென்று பார்க்காமல் இருந்தா மனுஷன் கத்தறத நிறுத்தமாட்டார் போலருக்கே என்று நினைதவாறு படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை படுக்கையில் கவிழ்த்து வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்து டி.வியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்தாள். 'எந்தான..?' என்றாள் எரிச்சலுடன்.

சேதுமாதவன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தாள். 'ஏடி.. நமக்கு நல்ல காலமாக்கும்.. மாதவன் இந்நு மும்பை பொறப்பட்டு போயின்னு பறஞ்சில்லே? அது எந்துனான்னு அறியோ?'

மாயாவுக்கு எரிச்சலு கூடியது. இவருக்கு வேற வேலையில்லை. இருந்தாலும் கேட்காவிட்டால் விடமாட்டார் என்பதால், 'எந்துனா? பறயு!'

சேதுமாதன் இன்னொரு கோப்பை நிறைய திரவத்தை ஊற்றி ஒரே மடக்கில் தள்ளியவாறு சிரித்தார். 'எடி.. அயாள்டே மோன் போலீஸ் லாக்கப்பிலா.. அவனானத்தற ப்ளாஸ்ட்டெ குறிச்சி போலீஸ்லேக்கி போன் செஞ்சது.. அதனால அவனெ கூட்டிக்கிட்டு போயி என்க்வயரி பண்றாங்களாம்... அவன் இத்தோட க்ளோஸ்..'

மாயா அதிர்ச்சியுடன் அவரை நெருங்கி, 'என்ன சொல்றீங்க? குடிச்சிட்டு வாய்ல வந்ததயெல்லாம் உளராதீங்க.' என்றாள் கோபத்துடன்.

சேதுமாதவன் டி.வியை சுட்டிக்காட்டினார். 'நானா சொல்றேன்.. தோ.. ந்யூஸ்லயே வந்துருச்சே.. நீ மிஸ் பண்ணிட்டே.. இப்படி ஒக்கார் மறுபடியும் ஹெட் லைன்ஸ்ல சொல்வான்.. நீயே கேளு..' என்றவாறு மாயாவின் கைகளைப் பிடித்து இழுக்க அவர் மீது அடித்த விஸ்க்கியின் நாற்றம் தாங்காமல் முகத்தைச் சுளித்துக்கொண்டு அடுத்திருந்த சோபாவில் அமர்ந்த மாயா டிவியைக் கவனிக்கலானாள்.

சேதுமாதவன் கூறியது சரிதான் என்பதுபோலிருந்த செய்தியறிவிப்பாளரின் இறுதி தொகுப்பு.. அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான் என்றாலும் அந்த குடும்பத்தில் அவளுக்கு பிடித்தது சீனிவாசனைத்தான். ஆண்பிள்ளை இல்லாதிருந்த அவளுக்கு சீனிவாசனை என்ன காரணத்தாலோ பிடித்திருந்தது. சரோஜாவை தன்னுடைய எதிரியாய் கருதிய அவளால் அந்த பதினைந்து வயது சிறுவனை வெறுக்க முடியவில்லை. அவனா இந்த கதிக்கு ஆளாகிப் போனான்? பாவமாயிருந்தது அவளுக்கு. சேதுமாதவனை வெறுப்புடன் பார்த்தவாறு எழுந்து நின்றாள். 'இதுல ஒங்களுக்கு ஏங்க இவ்வளவு சந்தோஷம்.. ஒங்களுக்கு மாதவந்தானே எதிரி.. இந்த பையன் என்ன பண்ணுவான் பாவம்.. ஆண்ட்டி, ஆண்டின்னு எப்ப பார்த்தாலும் நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வந்த பையங்க அவன்.. நீங்களும் ஒங்க பாலிடிக்சும்.. ச்சீ.. குடிச்சி, குடிச்சி மிருகமாவே ஆய்ட்டீங்க..'

'அடப் போட்ட்டி.. பிராந்தி.. அவன் அந்த மாதவனோட மகந்தானடி.. அவனுக்கு புள்ளையா பொறந்ததுக்கு இவனுக்கு வேணும்..'

மாயா வெறுப்புடன் முகத்தை சுளித்தவாறு எழுந்து தன் அறையை நோக்கி நகர சேதுமாதவன் இன்னுமொரு முழு அளவு கோப்பையை ஊற்றி குடித்தார்.. 'எடோ திரு.. ஷாப்பிடறதுக்கு என்ன இருக்கு.. ஸ்வீட் இருந்தா எடுத்து வை.. இன்னைக்கி கொண்டாடிருவோம்..' என்று மேலும் உச்சஸ்தாயியில் இரைய என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு நான்கு கால் பாய்ச்சலில் மாடிப்படிகளில் ஏறிவந்தான் திருநாவுக்கரசு.

தொடரும்..

No comments: