2.2.07

சூரியன் - 170

ஜோ கிளம்பிச் சென்றதும் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருந்த பத்திரிகை நிரூபர்களின் கூட்டம் நினைவுக்கு வர மாதவனின் காரியதரிசி சுபோத்திடம் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டதா என்று வினவும் நோக்கத்துடன் இண்டர்காமை எடுத்தார் ஃபிலிப் சுந்தரம்.

எதிர்முனையில் வெகுநேரம் யாரும் எடுக்காதிருக்க சலிப்புடன் இணைப்பைத் துண்டிக்க முயல சுபோத்தின் உதவியாளருடைய குரல் கேட்கவே, ‘Where is Mr.Subodh? What happened to the Press Meet?’ என்றார்.

சற்று நேர இடைவெளிக்குப் பிறகு தயக்கத்துடன் வந்த குரல் அவரை திடுக்கிட வைத்தது. ‘What do you mean?’

‘Yes Sir.. Subodh Sir has been summoned to the ED’s cabin half an hour back. He told me just a minute back that the meet would be presided over by our ED and our CGM Mr.Sundaralingam Sir.’

ஃபிலிப் சுந்தரம் ஒரு நொடி யோசித்துவிட்டு தன்னுடைய மேலதிகாரிகளின் நடத்தையைக் குறித்து சுபோத்தின் உதவியாளரிடம் விவாதிப்பது முறையல்ல என்பதை உணர்ந்தவராய், ‘It’s ok...’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

நிர்வாக இயக்குனர் சேதுமாதவன் இப்படி செய்வார் என்பது அவர் எதிர்பார்த்திருந்ததுதான். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தார். மாதவன் புறப்பட்டுச் சென்றபோது இதைத்தான் செய்திருக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தவர் ஃபிலிப். ஆகவே அவராகவே கூட்டத்தை தலைமையேற்ற தீர்மானித்ததில் வியப்பில்லை. ஆனால் அவரிடமிருந்து மறைத்ததில்தான் அவருக்கு லேசான வருத்தம். அதொன்றும் பெரிதில்லை. சேதுமாதவனிடத்திலிருந்து அதை எதை எதிர்பார்த்ததுதான் தன்னுடைய முட்டாள்தனம் என்று ஆறுதலடைந்தார்.

ஆனால் சுந்தரலிங்கத்தின் போக்கைக் கண்டுதான் அவர் கூடுதல் வேதனையடைந்தார். அவருமல்லவா தன்னை புறக்கணித்துவிட்டார்! இத்தனை வருடப் பழக்கத்திற்கு அர்த்தமே இல்லாமல் செய்துவிட்டாரே என்று மாய்ந்துப் போனார்.

ஆயினும் இதைப் பெரிதுபடுத்தி மற்ற அதிகாரிகள் மத்தியில் குழுப்பத்தை உண்டுபண்ண விரும்பவில்லை அவர். ஆகவே சிறிது நேரம் கழித்து அவருடைய அறைக்குள் நுழைந்து, ‘என்ன சார் நீங்க ப்ரஸ் மீட்டுக்கு போகலையா?’ என்று வினவிய அவருடைய காரியதரிசி ராஜியிடம், ‘I am not feeling well Raji.. that’s why I’ve asked our CGM to assist our ED.. I am going home..’ என்று அவரை அனுப்பிவைத்தார்.

அத்துடன் நில்லாமல் நிரூபர்கள் கூட்டம் முடிவுறும் சமயத்தில் தான் அலுவலகத்தில் இருப்பது சரியல்ல என்ற நினைத்து இண்டர்காமில் வரவேற்பாளரை அழைத்து தன்னுடைய வாகன ஓட்டுனரை வாகனத்தை போர்ட்டிகோவுக்கு கொண்டுவர பணித்தார். அடுத்த சிலநொடிகளில் கிளம்பி தன்னுடைய காரியதரிசியைத் தவிர வேறு யாரிடமும் கூறிக்கொள்ளாமல் தன் அறையை விட்டு வெளியேறினார்.

அவர் போர்ட்டிகோவில் நுழைந்தவுடன் அங்கு குழுமியிருந்த பல அதிகாரிகளின் பார்வை தன்னைத் துளைப்பதைப் பொருட்படுத்தாமல் வாகனத்தில் ஏறி புறப்பட்டு வளாகத்தைக் கடந்ததும், ‘வீட்டுக்கு போகாதீங்க. நேரா சர்ச்சுல டிராப் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போங்க. என் வேல முடிஞ்சதும் நானே கார எடுத்துக்கிட்டு போறேன்.’ என்று கூறிவிட்டு பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினார். ‘போதும்.. இது போதும்.. Time has come for me to leave..’ என்று அவரையுமறியாமல் அவருடைய உதடுகள் முனுமுனுத்தன.

***

‘ஏங்க இன்னொரு தடவ வீட்டுக்கு போன் போட்டு பாருங்களேன். மேக்கொண்டு விசாலத்துக்கு ஏதாச்சும் விவரம் கிடைச்சிதான்னு கேக்கலாமில்லே?’

பெட்டிகளில் துணிகளை அடுக்கி முடித்து அப்போதுதான் சோபாவில் சாய்ந்த மாதவன் தன் மனைவியை சலிப்புடன் பார்த்தார். ‘எதுக்கு சரோ. அப்புறம் அந்த மாமியோட புலம்பலத்தான் கேக்க வேண்டி வரும். பேசாம கிளம்பி போவோம். மிஞ்சிப்போனா இன்னும் நாலு மணி நேரம். அப்படியே ஏதாச்சும் டெவலப்மெண்ட் இருந்தாலும் சேர்மன் கூப்பிடுவார். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரேன்.’

‘ஆமாம்மா. போலீஸ் சீனிய பிக்கப் பண்ணதுன்னு உண்மைன்னா அவ்வளவு சீக்கிரம் விட்டுர மாட்டாங்க. வேணும்னா மைதிலிக்கு ஃபோன் பண்லாம். அதையும் நீ வேணாங்கற. அவங்களுக்கே ஃபோன் பண்ணக்கூடாதுன்னா வேற யாருக்குமே ஃபோன் பண்ண முடியாது. அதனால அப்பா சொல்றா மாதிரி நீ கொஞ்சம் பொறுமையா இருக்கறதுதான் நல்லது. ப்ளீஸ்மா’ என்றாள் வத்ஸலா.

அவளுக்கு சரோஜாவைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும் எங்கே சிவகாமியை மீண்டும் அழைத்து அவள் சீனியை இன்னும் விடவில்லையென்றோ அல்லது அவனுக்கிருந்த போதைப் பழக்கத்தைப் பற்றி மாலைப் பத்திரிகைகளில் வந்துவிட்டதென்றோ சொல்லிவிட்டால் தன் தாயைக் கட்டுப்படுத்த முடியாதோ என்ற அச்சமும் இருந்தது. பிறகு மும்பைச் சென்று சேரும் வரை அழுது ஆர்ப்பட்டம் செய்து தன்னையும் தன் தந்தையையும் சேர்த்து டென்ஷனாக்கிவிடுவார்கள் என்று நினைத்தாள்.

சீனிவாசனுக்கும் வத்ஸலாவுக்கும் இடையிலிருந்த நெருக்கம் அவன் போதைப் பொருட்களுக்கு அடிமையானதும் குறைந்து நாளடைவில் மறைந்தே போயிருந்தது. அவனைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்ததோ அதே அளவுதான் அவனுடைய நட்பு வட்டத்தைப் பற்றியும். ஆனால் அவனுக்கிருந்த விரும்பத்தகாத நட்புகளெல்லாம் மைதிலியுடன் பழக ஆரம்பித்து பிறகு போதைப் பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டதும் அறவே அற்றுப்போனதையும் அவனுடைய போக்கில் ஏற்பட்ட மாறுதலையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

தன்னைப் போன்றே மைதிலியும் MSW முடித்து அரசு சாரா சேவை மையங்களுடைய பொதுநல தொண்டு திட்டங்களில் ஒருங்கினைப்பாளராக பணியாற்றி வந்திருந்ததால் தன்னுடைய சகாக்கள் வழியாக அவளைப் பற்றி தெளிவாக கேட்டறிந்திருந்தாள். அவளுடைய அலுவலில் ஒருபாகமாகத்தான் சீனியை அவனுடைய போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து புனர்வாழ்வு அளிக்க அவள் முயல்கிறாள் என்றும் அவளுக்கு சீனியின் மீதிருந்தது வெறும் நட்பு மட்டும்தான் என்றும் நினைத்திருந்தாள்.

ஆனால் அது சீனியைப் பொறுத்தவரைக் காதல் என்பதும் அவன் அவளையே திருமணம் செய்துக்கொள்வதில் உறுதியாயிருந்தான் என்பதும் சரோஜா சொல்லித்தான் தெரியவந்தது. கல்லூரிப் படிப்பை முழுவதும் முடிக்காமல், ஒரு வேலையும் இல்லாமல் சுதந்திரமாய் சொல்லப் போனால் எவ்வித பொறுப்பும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இவனுடைய விருப்பத்தை மைதிலி ஏற்றுக்கொள்வாள் என்பது வத்ஸலாவைப் பொறுத்தவரை நம்பமுடியாததாகவே இருந்தது. ஆகவே அவர்களுடன் மும்பைக்குப் புறப்பட்டு வராமல் மும்பையில் தங்கி மைதிலியை இறுதியாக சந்தித்துவிட்டு வருகிறேன் என்றபோது ‘சரி முயற்சித்து பார்க்கட்டுமே’ என்ற நினைப்பில் அவளும் சேர்ந்து தன்னுடைய தாயிடம் பரிந்துபேசினாள். ஆனால் அதுவே இப்படியொரு பிரச்சினையில் கொண்டு விடும் என்று அவளும் நினைக்கவில்லை.

‘நீயும் ஒங்கப்பாவோட சேர்ந்துக்கிட்டு அவனெ அங்க விட்டுட்டு வரலாம்னு சொல்லாம இருந்திருந்தே இதுக்கு நா சம்மதிச்சே இருக்க மாட்டேன். இப்ப பார்.. நாம இல்லாத நேரத்துல.. அவன் பாவம் அங்க என்னெல்லாம் கஷ்டபடறானோ தெரியலையேடி..’ என்று மும்பையிலிருந்து ஃபோன் வந்தவுடனே இதற்கு நீதான் காரணம் என்பதுபோல் சரோஜா பழித்ததும் நினைவுக்கு வரவே இனியும் ஒருமுறை ஃபோன் செய்தால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தாள் வத்ஸலா.

‘என்னமோ போங்க.. ஊருக்கு எப்ப போவோம் சீனிய எப்ப பாப்போம்னு இருக்கு. நாம போறதுக்குள்ள அவன அந்த மராத்தி பயலுங்க என்ன பாடுபடுத்திருவானுங்களோ தெரியலையேங்க..’ என்று மீண்டும் சரோஜா அங்கலாய்க்க வத்ஸலா தன் தந்தையைப் பார்த்தாள். அவர் ‘நீ ஒன்னும் பதில் பேசாதே.. பேசாம இரு..’ என்பதுபோல் கண்களால் சைகை செய்ய வத்ஸ்லா இங்கிருந்தால் வம்பு என்ற நினைப்பில் பால்கணிக்குச் சென்று சாலையில் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்று தோற்றுப் போய் பெருமூச்சுடன் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களை சுவாரஸ்யத்துடன் வேடிக்கைப் பார்க்கலானாள். சென்னையும் மும்பைக்கு சளைத்ததில்லைப் போல.. இருந்தும் இடுக்குகளில் லாவகமாக நுழைந்துச் செல்லும் இரு சக்கர வாகனங்களை செலுத்தும் இளைஞிகளைக் கவனித்தவள் ‘பாரேன்.. சென்னை girls பயங்கரமான ஆளுங்கதான் போலருக்கு..’ என்று முனுமுனுத்தாள்.

****

ஜோ மீண்டும் காவல் நிலையத்தில் நுழைந்ததுமே அங்கு மாணிக்கவேல் இல்லையென்பதைக் கவனித்தான். உடனே திரும்பி சபரியைப் பார்த்தான்.

‘பதட்டப்படாதீங்க. கேட்போம்.’

நிலையத்தில் நடுநாயகமாக இருந்த மேசையில் உதவி ஆய்வாளரையும் காணவில்லை. சபரி திரும்பி வலதுபுறமிருந்த இரு சிறையறைகளையும் பார்த்தார். காலியாயிருந்தன.

வலதுகோடியில் அமர்ந்திருந்த காவலர் ஒருவரை அணுகி, ‘எஸ்.ஐ. இல்லைங்களா?’ என்றார்.

அவர் அசுவாரஸ்யத்துடன் நிமிர்ந்துப் பார்த்து, ‘ஓ நீங்களா?’ என்று கூறிவிட்டு தன் வேலையைக் கவனிக்கலானார்.

ஜோவுக்கு ஆத்திரமாக வந்தது. ‘பார்த்தீங்களா சார்?’ என்று சபரியின் காதைக் கடித்தான். ‘நீங்க சொன்னீங்களேன்னு பாக்கேன்.’

அவன் ரகசியமாய் கூறியது காவலருடைய காதில் விழுந்துவிட்டது போலும். அவர் அவனைப் பார்த்து அலட்சியத்துடன் சிரித்தார். ‘தம்பி ஒங்களுக்கு வயசு போறாது. அதான் நீங்க எங்கன இருக்கீங்கன்னு மறந்துட்டு பேசறீங்க. அவர் வேணும்னா ஒங்களுக்கு பெரிய சாரா இருக்கலாம். எங்கள பொறுத்தவர அவர் ஒரு சாதாரண குற்றவாளி.. அதுவும் மர்டர் கேஸ்.. நீங்க எதிர்பாக்கற மரியாதையெல்லாம் இங்க குடுக்க மாட்டோம்.. பேசாம போய் அங்கன ஒக்காருங்க.. ஐயா வரட்டும்.. அத்தோட இன்ஸ்பெக்டர் அய்யாவும் வர்ற நேரம்.. இங்கன எல்லாம் நீங்க நிக்கப்படாது.. போங்க போய் ஒக்காருங்க..’

சபரி ஜோவைப் பார்த்தார். ‘போங்க ஜோ.. நா பேசிட்டு வரேன்..’

வேறு வழியில்லாமல் ஜோ வாசலை நோக்கி நகர சபரி காவலருடைய மேசையில் சாய்ந்து, ‘சார்.. இத வச்சிக்குங்க..’ என்ற கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை அவர் கையில் வைத்து மூடினார். அடுத்த நொடியே அது மாயமாய் மறைந்துபோக காவலரின் முகத்தில் ஒரு அசட்டு புன்னகை மலர்ந்தது. ‘ நீங்க அவர் பேசினத மனசுல வச்சிக்காதீங்க.. நாங்க போறப்போ இங்க இருந்த மாணிக்கவேல் சார எஸ்.ஐ. எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுப் போயிருக்காரான்னு மட்டும் சொல்லுங்க. மத்தத நாங்க தனபால்சாமி சார்கிட்ட பேசிக்கறோம். அவர் சொல்லித்தான் மறுபடியும் எஸ்.ஐய பாக்க வந்தோம்.’

எஸ்.பி தனபால்சாமியின் பெயரைக் கேட்டதுமே காவலர் உஷாரானார். பொய் சொல்லுகிறானோ என்ற சந்தேகத்தில் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சபரி சட்டைப்பையிலிருந்த எஸ்.பியின் அட்டையை எடுத்து நீட்ட காவலருடைய முகத்தில் கலவரம் பற்றிக்கொண்டது. ‘சார்.. எஸ்.பி சார தெரியும்னு அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. என்ன சார்.. நா வேற நீங்க நீட்டுனத வாங்கிக்கிட்டேன்.. ஒக்காருங்க சார்.. அவர்கிட்ட போயி நம்மள போட்டுக் குடுத்துராதீங்க சார்.. நா இப்பத்தான் கொஞ்சம் இங்கன நிம்மதியாயிருக்கேன்.. இது அவருக்கு தெரிஞ்சதுன்னா நா தொலைஞ்சேன்..’

சபரி ஒரு புன்முறுவலுடன், ‘அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. நீங்க நா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்..’ என்றார்.

கை நீட்டி பணத்தை வாங்கும்போது சுற்றும் முற்றும் பார்க்காத காவலர் மறுகோடியில் அமர்ந்திருந்த காவலரைப் பார்த்தார். பிறகு குரலை சற்றே இறக்கி. ‘சார்.. அந்த ஹாஸ்பத்திரியிலருந்து ஃபோன் வந்துது.. அதான் இவரையும் கூட்டிக்கிட்டு போயிருக்காரு.. போய் ஒரு மணி நேரத்துக்கு மேல வுது.. அந்தம்மா மரண வாக்குமூல ஏதாச்சும் குடுக்கணும்னு சொன்னதா கேள்வி.. சரியா தெரியலை.. மத்தியானம் பாம்பேல பாம்ப் ஏதோ வெடிச்சிருச்சாமே.. என்னையும் அதோ அங்கன இருக்காரே அவரையும் ஸ்டேஷன பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு இன்ஸ்பெக்டரய்யாவும் கமிஷனர் பீசுக்கு கெளம்பிப் போய்ட்டாரு.. ரெண்டு பேரும் வர்ற நேரம்தான்.’

‘தாங்ஸ்ங்க..’ என்றவாறு எழுந்த சபரி ஜோவை நோக்கி நகரவும் வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து எஸ்.ஐ இறங்கவும் சரியாக இருந்தது. மாணிக்கவேலைக் காணவில்லை.

ஜோ பதற்றத்துடன் சபரியைப் பார்க்க அவர்.. ‘Please Joe.. மறுபடியும் அப்செட் ஆகி ஏதாவது பேசி காரியத்த கெடுத்துராதீங்க.. நா பேசிக்கறேன்..’ என்றார்.

தொடரும்..

2 comments:

Meenapriya said...

என்ன சார் 2 நாளா பதிவே காணோம் ஆட்டோ அனுப்பனுமா

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனாப்ரியா,

சூரியன் உதிக்கும் நாட்கள் புதன், வியாழன், வெள்ளியாயிற்றே..

இன்று வரும்..