மாலதி அன்று வீடு திரும்பியபோது இருட்டிவிட்டிருந்தது.
சாதாரணமாகவே அலுவலகம் முடிந்தவுடனேயே புறப்பட்டுவிடும் பெண்கள் குழுவினருடன் அவளும் புறப்பட்டுவிடுவாள். பாரீஸ் கார்னரிலிருந்து பஸ் பிடித்து வீடு திரும்பும்போது ஆறு மணியாகிவிடும்.
மாலதி அழைப்பு மணியில் கைவைத்ததுமே காத்திருந்ததுபோல் ப்ரியா வாசற்கதவைத் திறந்துவிடுவது வழக்கம்.
ஆனால் அன்று குடியிருப்பின் வாசலிலிருந்த அழைப்பு மணியை பலமுறை அடித்தும் கதவு திறக்கப்படவில்லை.
தன் கைவசமிருந்த சாவியைக் கொண்டு திறக்க முயன்றாள். திறந்துக்கொண்டது. ப்ரியா வீட்டில் இல்லை என்பது தெளிவானது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு!
எங்கே போயிருப்பாள்? அவளுடைய செல்பேசிக்கு டயல் செய்தால் என்ன என்று நினைத்தாள். ரிங் சென்றுக்கொண்டே இருந்தது. திரையில் தன்னுடைய எண்ணைப் பார்த்துவிட்டு எடுக்காமல் இருப்பாளோ என்று நினைத்தாள்.
கைப்பையை சோபாவில் எரிந்துவிட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.
எதுக்கு என்னெ புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா? ரெண்டு நாளாவே அவ போக்கே சரியில்லையே? இப்ப எங்க போயிருப்பா?
குடியிருப்பில் இருந்த லிஃப்ட் அவளுடைய குடியிருப்பு இருந்த தளத்தில் நின்று கதவு திறக்கப்படுவது கேட்டது. அவளாகத்தான் இருக்கும். வந்ததும் என்ன ஏதுன்னு கேட்டு தொந்தரவு பண்ண வேணாம். அவளா சொல்றாளான்னு பார்ப்போம்.
எழுந்து தலையை முடிந்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். காலையில் அவள் சிங்க்கில் போட்டுவைத்த பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே கிடந்தன.
சாதாரணமாக, ப்ரியா பள்ளியிலிருந்து வந்ததும் சமையலறை சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களையெல்லாம் கழுவி அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, மேடையை கழுவி ஒரு சிறிய கோலமும் போட்டுவிடுவதுடன் மாலதிக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காப்பியையும் போட்டு வைத்துவிட்டு முன் அறையில் அமர்ந்து தன்னுடைய வகுப்பு பாடத்தில் மூழ்கிப் போயிருப்பாள்.
மிக இளம் வயதிலேயே கணவனிடமிருந்து பிரிந்து சென்னையில் தன்னுடைய வாழ்க்கையை துவக்கிய மாலதி ப்ரியாவுக்கு வீட்டு வேலைகளை அவளுடன் பகிர்ந்துக்கொள்ள பழக்கியிருந்தாள்.
தாயைப் போல பிள்ளை என்பார்களே அந்த ரகம்தான் ப்ரியா. அழகிலும், நிறத்திலும், உடல்வாகிலும் தாயைக் கொண்டிருந்த ப்ரியா அறிவிலும் திறனிலும், அவளையும் விட மிஞ்சியிருந்தாள். வீட்டு வேலைகளை செய்யும் பாங்கும் அவளிடம் அபிரிதமாகவே இருந்தது.
அவர்களுடைய குடியிருப்பில் குடியிருந்த பணிக்கு செல்லும் மற்றம் இளம் தாய்மார்கள் ப்ரியாவுடன் அவள் வயதொத்த தங்களுடைய மகள்களை ஒப்பிட்டுப் பார்த்து குறை கூறும் அளவுக்கு திறனுள்ளவளாக இருந்தாள் ப்ரியா.
தாய்க்கும் மகளுக்கும் இடையில் இத்தனை ஒற்றுமை இருந்தும் மாலதி ஏனோ ப்ரியாவின் மனதை முழுவதுமாக புரிந்துக்கொண்டதே இல்லை. தன்னுடைய போக்கு மகளுக்கு முற்றிலுமாக விருப்பமில்லை என்று தெரிந்திருந்தும் அதை கண்டுகொள்ளவில்லை.. அல்லது வேண்டுமென்றே அறியாததுபோல் நடித்துக்கொண்டிருந்தாள்.
ஒருவேளை தன்னுடைய போக்கில் தவறேதும் இல்லை என்று நினைத்தாளோ என்னவோ. தன்னுடைய அழகில் ஆண்களை கிறங்கடிப்பது பள்ளி வயதுமுதலே அவளுக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதையே நாளடைவில் தன்னுடைய வசதி வாய்ப்புகளை பெருக்கும் ஒரு வழியாக மாற்றிக்கொள்ளவும் அவள் தயங்கவில்லை. ஆடம்பரமில்லாவிட்டாலும் தன்னுடைய வருமானத்திற்கு மிஞ்சிய செலவினங்களை ஈடுகட்ட அது உதவுகிறதே என்ற எண்ணம் அவளுக்கு. தன்னை தேவையில்லாமல் சந்தேகித்து தன்னை ஒரு வேசியாகவே கற்பித்துவிட்டு ஒதுங்கிய கணவன் மீது இருந்த துவேஷம் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே பழிவாங்க அவளுக்கு கிடைத்த ஆயுதம்தான் கடவுள் தனக்கு அளித்துள்ள உடலழகு என்ற சால்ஜாப்பு வேறு. ஆனால் ஆண்களை ஒரு எல்லைக்கு மீறி தன்னிடம் நெருங்க விடுவதில்லை என்றும் எந்த ஒரு சூழலிலும் தன்னை எவனுக்கும் இனி இழந்துவிடுவதில்லை என்ற வைராக்கியமும் அவளிடம் இருந்தது. ஆசைக்காட்டி முடிந்தவரை பணத்தை கறந்துவிடுவதிலேயே அவள் குறியாயிருந்தாள்... எப்பாடு பட்டாவது தன்னுடைய ஒரே மகளை நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கிவிடவேண்டும் என்ற உறுதி அதை அடையும் நோக்கத்தில் அவள் பயணித்த பாதை சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்க முனைந்ததில்லை. நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை.... நாயகன் வசனங்கள்... தன் மகளுக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்லை என்பது அவளுடைய எண்ணம்.
ப்ரியா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு நுழைவது கேட்டும் அடுக்களைக்குள் இருந்து வெளியே வராமல் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவுவதில் முனைப்பாயிருந்தாள். அவளுடைய செவிகள் மட்டும் ப்ரியாவின் காலடி ஓசைக்கு காத்திருந்தன. நேரே சமையலறைக்குள் வருவாள் என்று அவள் நினைத்திருக்க ப்ரியா தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்வது கேட்டது.
இருப்பினும் சட்டை செய்யாமல் பாத்திரங்களை கழுவி முடித்து ஸ்டவ்வைப் பற்ற வைத்து இருவருக்குமாக சேர்த்து காப்பியை கலந்து எடுத்துக்கொண்டு உணவு மேசையில் வைத்துவிட்டு ப்ரியாவின் அறைக்கதவை தட்டினாள். பதிலில்லை.
'ஏய் உள்ள என்ன பண்றே? காப்பி கலந்து வச்சிருக்கேன்.' என்றாள்.
'எனக்கு வேணாம். டயர்டாருக்கு. பஸ்ல பயங்கர கூட்டம், தலைய பயங்கரமா வலிக்கறது. செத்த நேரம் தூங்கப் போறேன்.'
மாலதி பதிலளிக்காமல் உணவு மேசைக்கு திரும்பி காப்பியை குடித்து முடித்துவிட்டு ப்ரியாவின் காப்பியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு காப்பித் தம்ளர்கள் இரண்டையும் கழுவினாள்.
எதுக்கு பஸ்ல வரணும்? எப்பவும் போல ஆட்டோவுல வரவேண்டியதுதானே? எங்கதான் போயிருப்பா? கேள்விகள் அவளுடைய தலையை குடைந்தெடுக்க தம்ளர்களை சமையலறை மேடையில் வைத்துவிட்டு மீண்டும் சென்று அறைக்கதவைத் தட்டினாள், சற்று வேகமாக.
'ஏய் ப்ரியா, எங்க போயிருந்தே? எப்பவும் போல ஆட்டோவுல வராம ஏன் பஸ்ல வந்த?'
உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை.
ப்ரியா விடவில்லை. அவள் எதையோ தன்னிடம் இருந்து மறைக்கிறாள் என்பதுமட்டும் விளங்கியது. இதுவரை அவளிடம் சொல்லாமல் அவள் வெளியில் சென்றதில்லை என்பதுடன் சென்னைப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்ததும் இல்லை. 'எப்படா ஒரு பொண்ணு ஏறலாம் இடிக்கலாம்னு பாத்துக்கிட்டுருக்கானுங்கம்மா... பஸ்சுல போறதுக்கே அருவருப்பா இருக்கு.' என்பவள் இன்று எதற்கு பஸ்சில்?
'ஏய் ப்ரியா இப்ப வெளியில வரப்போறியா இல்லையா? டென்ஷன் பண்ணாம வெளிய வா, ப்ளீஸ்... அம்மா மேல ஏதோ கோவமாருக்கேன்னு மட்டும் தெரியுது. அது ஏன்னுதான் தெரியல. வெளிய வா.'
அடுத்த சில நொடிகளில் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்த ப்ரியா சிடுசிடுப்புடன் தன் தாயைப் பார்த்தாள், 'என்ன தெரியணும் நோக்கு? நா எங்க போயிருந்தேன்னு... அவ்வளவுதான? இங்கதான் போயிருந்தேன்.'
ப்ரியா நீட்டிய சென்னை எத்திராஜ் கல்லூரியின் நாட்காட்டியை (college diary) வியப்புடன் வாங்கி பிரித்தாள். முதல் பக்கத்திலேயே ப்ரியா பி.எஸ்.சி (கம்ப்) முதலாம் ஆண்டு என்று எழுதியிருந்ததைப் பார்த்தாள். அவளையுமறியாமல் கோபம் தலைவரை ஏறியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு உணவு மேசையில் அமர்ந்து காப்பியைப் பருகிக்கொண்டிருந்த மகளைப் பார்த்தாள்.
'இதுக்கென்னடி அர்த்தம்?'
ப்ரியா காப்பியை குடித்து முடித்துவிட்டு எழுந்து வாஷ் பேசனில் வாயை அலம்பிக்கொண்டு திரும்பி வந்து தன் தாயை சலனமில்லாமல் பார்த்தாள். 'நான் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டேன். ரெண்டு நாளாச்சி காலேஜ் ஸ்டார்ட் பண்ணி. இன்னைக்கி ஃப்ரெண்ட்சோட புக்ஸ் வாங்க போயிருந்தேன். அதான் லேட். போறுமா, இல்ல இன்னும் ஏதாச்சும் தெரியணுமா?'
தன் செவிகளையே நம்பமுடியாமல் தன் மகளைப் பார்த்தாள். 'ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்துட்டியா? யார கேட்டு சேர்ந்தே? இதுக்கு ஏது பணம்?'
ப்ரியா பதிலளிக்காமல் வரவேற்பறைக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து டிவியை முடுக்கிவிட மாலதி விரைந்து வந்து ப்ரியாவின் கையில் இருந்த ரிமோட்டை பறித்து டிவியை அணைத்தாள். கோபத்தில் வார்த்தைகள் வராமல் தடுமாறியவாறு சலனமில்லாமல் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தாள்.
அவள் திருப்பி தன்னைப் பார்த்த பார்வையில் தன்னையே பார்ப்பதுபோலிருந்தது மாலதிக்கு. 'நீயும் என் வயசுல இப்படித்தானே இருந்தே? தாத்தா சொல்றத கேட்டு நடக்கல இல்லே... அதத்தான் நானும் இப்ப செய்றேன்... எதுக்கு கோபிக்கறே?' என சொல்லாமல் அவள் சொல்வது அவளுடைய உள் மனதில் கேட்டது. வாய் மூடி மவுனியாய் போனாள்.
சில நொடிகள் மவுனத்தில் கரைய தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தாள் ப்ரியா. அவளுடைய கரங்களை ஆதரவாய் தொட்டாள். 'I am sorryமா... நேக்கு வேற வழி தெரியலை... எனக்கு எஞ்சினியரிங்ல சேரணும்னு ஆசைதான். ஆனா அது நம்மோட பணத்துல முடியணும். எனக்கு எப்படியும் ஃப்ரீ சீட் கிடைக்க சான்ஸ் இல்லேன்னு தெரியும். அதான் ஆர்ட்ஸ் காலேஜ்... ஏழைக்கேத்த எள்ளுருண்டை...'
கண்களில் நிறைந்து நின்ற கண்ணீருடன் தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'அம்மாவ பார்த்தா வெறுப்பாருக்கு நோக்கு, இல்ல? இவ ஒடம்ப வித்து கிடைக்கற காசு நமக்கெதுக்குன்னு நினைக்கறே... அப்படித்தானே?' மேலே தொடர முடியாமல் முகத்தை கரங்களில் மூடிக்கொண்டு விசும்ப அவளை தடைசெய்ய மனமில்லாமல் அமர்ந்திருந்தாள் ப்ரியா.
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு முகத்தை துடைத்துக்கொண்டு தன் மகளைப் பார்த்தாள் மாலதி. 'சரிடி... நீ நினைக்கறதும் சரிதான். ஆனா அதுக்கு இது முடிவில்லை... நீ வாங்கியிருக்கற மார்க்குக்கு நீ நிச்சயம் எஞ்சினியரிங்லதான் சேரணும்... அதுக்கு ஒரு வழியிருக்கு.'
ப்ரியா என்ன என்பதுபோல் தன் தாயைப் பார்த்தாள்.
'எதாச்சும் பேங்க்ல எஜுகேஷன் லோன் போடலாம். என்ன சொல்றே?'
'நமக்கு யார் லோன் தருவா? ஜாமீன், செக்யூரிட்டின்னு கேப்பாளே?'
மாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'அதப்பத்தி நீ கவலைப் படாத... என்னோட சாலரி அக்கவுண்ட் இருக்கற பேங்க்லயே கேப்போம். நாலு லட்சம் வரைக்கும் ஜாமீன் கேக்கமாட்டாளாம். செக்யூரிட்டின்னு கூட எதுவும் பெருசா கேக்கமாட்டாளாம். என் ஃப்ரெண்டு ஒருத்தி அவன் பையனுக்கு போன வருசம் எஜுகேஷன் லோந்தான் எடுத்ததா சொன்னா. அவ வழியாவே எங்க பேங்க்ல கேட்டா நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கேன். மாசா மாசம் என் சாலரியிலருந்தே கட்றேன்னு அண்டர்டேக்கிங் குடுத்துருவோம்... நீ சரின்னு சொல்லு... மத்தத நா பாத்துக்கறேன். நிச்சயமா நீ நினைக்கற எடத்துலருந்து பணத்த பொரட்ட மாட்டேன்... என்னெ நம்புடி..'
ப்ரியா தன் தாயை அணைத்துக்கொண்டாள். 'இன்னொரு கண்டிஷன்.'
'தெரியும்.... அதுக்கும் ஒத்துக்கறேன்... இனி எனக்கு நீ, ஒனக்கு நான்... போறுமா?'
ப்ரியா தன் தாயின் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்தாள். 'ப்ராமிஸ்?'
மாலதி தன் முகத்தை விடுவித்துக்கொண்டு ப்ரியாவின் கரங்களைப் பற்றினாள். 'ப்ராமிஸ்.' என்றாள் புன்னகையுடன்..
'அப்ப சரி... எனக்கு கவுன்சிலிங் வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுவரைக்கும் இந்த காலேஜுக்கு போய்ட்டு வந்துட்டு நின்னுடறேன். I need that changeமா... வீட்டுல அடைஞ்சி கிடந்து போரடிக்குது... மனசு தேவையில்லாம எதையெல்லாமோ நினைச்சி... I feel totally caged...'
இதுவரைக்கும் இறங்கி வந்தாளே என்று நினைத்தவாறு கைகளை விடுவித்துக்கொண்டு எழுந்து நின்றாள் மாலதி. 'ஓக்கே... ஆனா இந்த பஸ்ல எல்லாம் போய் அவஸ்தை பட வேணாம்... ஆட்டோவுல போய்ட்டு வந்துரு...' என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாய், 'ஏய் இதுக்கு ஏது பணம்?' என்றாள்.
'எல்லாம் நீ அப்பப்போ குடுத்ததுதான் சாலரியிலருந்து... அத சேத்து வச்சிருந்தேன், எதுக்காச்சும் ஒதவுமேன்னு... ஆனா இப்ப கட்டுன பணம் திருப்பி கிடைக்காது போலருக்கு.'
'ஏன்... ரீஃபண்ட் கிடைக்காதா என்ன? கேட்டுப் பாரேன்.'
ப்ரியாவின் கண்களுக்கு முன் அவளுடைய கல்லூரி ப்ரின்சியின் முகம் வந்துபோனது. 'அட்மிஷன் குடுக்கறப்பவே நீ எஞ்சினியரிங் காலேஜ்ல கிடைச்சதும் போமாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்க... அவங்கக்கிட்ட போயி டி.சி கேக்கவே பயமாருக்கு... இந்த லட்சணத்துல கட்டுன ஃபீசையும் திருப்பி கேட்டேன்னு வையி... அவ்வளவுதான் டி.சி கூட தரமாட்டேன்னு சொன்னாலும் சொல்லிருவாங்க... நா மாட்டேன்...'
மாலதி புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தாள். 'இது தேவையாடி நோக்கு... எவ்வளவு கட்டுனே?'
'வேணாம் கேக்காத... அப்புறம் டென்ஷனாயிருவே...' என்றாள் ப்ரியா பதிலுக்கு...
'எப்படியோ... போ... தெண்டம் அழுவணும்னு இருந்துது போலருக்கு... போட்டும் விடு....' என்றவாறு மாலதி சமையலறையை நோக்கி நடக்க ப்ரியா மீண்டும் தொலைக்காட்சியை முடுக்கி விட்டாள்..
தொடரும்...
4 comments:
ஒரு திருப்புமுனையாக அமையட்டும்..
வாங்க ஜி!
ஒரு திருப்புமுனையாக அமையட்டும்.. //
ஆனால் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு ஒரு சொல் இருக்கே... அதுபோலத்தான் மாலதியும்..
Saarval,
//ஆனால் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு ஒரு சொல் இருக்கே... அதுபோலத்தான் மாலதியும்.. //
Puriyudhu , nallaveh puriyudhu
salangai katina kaalum, aridharam (makeup) potunda mugamum summa irukamaataanganu oru saying iruku
சூப்பரா சொல்லிட்டீங்க ஆணி:-)
Post a Comment