காலை - பாஸ்கரின் குடியிருப்பு - பாஸ்கர் மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கிறான் - அருகில் நளினியின் கோப்பு -
பாஸ்கர் Internet இணைப்பை தொடுத்து கூகுள் தேடுதலில் congenital cataract என்று அடிக்கிறான் - கூகுள் தேடி தந்த பட்டியலில் இருந்து
ஒவ்வொரு இணைப்பாக தேர்ந்தெடுத்து படிக்கிறான்.
செல்ஃபோன் ஒலிக்கிறது - செல்ஃபோன் திரையைப் பார்க்கிறான் - முந்தைய தினம் அவனுடன் பேசிய அலுவலக நண்பர்
பாஸ்கர் - ஹலோ சுரேஷ் சொல்லுங்க... என்ன கேட்டீங்களா?
இடைவெளி
பாஸ்கர் - ஆமா file வாங்கிட்டு வந்துருக்கேன் - ஆனா அதனால பெரிசா யூஸ் இருக்கும்னு தோனல - கடைசியா இருக்கற பேப்பரே பத்து
வருசத்துக்கு முந்தியுள்ளது.
இடைவெளி
பாஸ்கர் - ஆமா... சின்னவயசுலதான் - approximately மூனு வயசுல - congenital cataract - amblyopiaன்னுலாம் மென்ஷன் பண்ணியிருக்காங்க - கூகுள்ல அடிச்சி பார்த்தேன் - இருந்தாலும் நமக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது
இடைவெளி
பாஸ்கர் - வேணும்னா என் கையிலருக்கற fileஅ Just for referenceக்கு குடுத்தனுப்பறேன் - நீங்க ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குங்க.
இடைவெளி
பாஸ்கர் - யார் அவங்களா? ஊஹும் வருவாங்கன்னு தோனல... சாதாரணமா இந்த மாதிரி ஆளுங்க எப்படி ரெஸ்பாண்ட் பண்ணுவாங்களோ அது மாதிரிதான் - ட்ரீட்மெண்ட் செஞ்சி, செஞ்சி பாத்து அலுத்துப் போயிருக்காங்க - விருப்பமே இல்லாமத்தான் இந்த fileஐயே குடுத்தாங்க.
இடைவெளி
பாஸ்கர் - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - நீங்க இந்த ஃபைல கொண்டு போய் குடுங்க. அவர் ஹோப் ஏதாச்சும் குடுத்தார்னா அவங்கள எப்படியாவது சமாதானம் செஞ்சி நா கூட்டிக்கிட்டு வரேன்.
இடைவெளி
பாஸ்கர் - ஓக்கே... கேட்டுட்டு சொல்லுங்க - எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சா பரவால்லை.
சரி, பை.
..........
முன்பகல் - பாஸ்கரின் குடியிருப்பு - பாஸ்கர் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வருகிறான் - வாசல் மணி ஒலிக்கிறது.
பாஸ்கர் கட்டிலில் கிடந்த வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு சென்று திறக்கிறான். - கோபத்துடன் நிற்கும் மல்லிகாவை பார்க்கிறான்.
மல்லிகா - நா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.
பாஸ்கர் - உள்ள வாங்க.
மல்லிகா - இல்ல... நா பக்கத்துலருக்கற பார்க்ல வெய்ட் பண்றேன்.
அவனுடைய பதிலுக்கு காத்திராமல் மல்லிகா செல்ல பாஸ்கர் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தவாறு சற்று நேரம் நின்றுவிட்டு கதவை மூடிக்கொண்டு திரும்புகிறான். உடைமாற்றிக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்புகிறான்.
........
முன்பகல் - பூங்கா - பாஸ்கரும் மல்லிகாவும் புல்தரையில் அமர்ந்திருக்கிறார்கள் - சற்று தள்ளி நீலா விளையாடிக்கொண்டிருக்கிறாள் - பூங்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இளம் ஜோடிகளைத் தவிர யாரும் இல்லை.
இருவரும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள் -
பாஸ்கர் - நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. ஆனா ஏன்னுதான் தெரியல..
மல்லிகா - உண்மையிலயே தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?
பாஸ்கர் - ஓரளவுக்கு புரியுது. ஆனா நீங்க இந்த அளவுக்கு கோபப்படறாப்பல நா என்ன தப்பு செஞ்சேன்னுதான் புரியல.
மல்லிகா - நீங்க யாருங்க நளினிக்கு ட்ரீட்மெண்ட் பாக்கறதுக்கு? ஒரு வார பழக்கத்துல அவ மேல அவ்வளவு என்ன அக்கறை?
பாஸ்கர் - (சிரிக்கிறான்) ஓ! இதுதான் உங்க கோபத்துக்கு காரணமா?
மல்லிகா - இது சிரிக்கிற விஷயமில்ல மிஸ்டர் பாஸ்கர். பி சீரியஸ்.
பாஸ்கர் - I am sorry. நா உங்கள ஒன்னு கேக்கலாமா?
மல்லிகா - முதல்ல நா கேட்ட கேள்விக்கி பதில் சொல்லுங்க. நளினி உங்கள எனக்கு ட்ரீட்மெண்ட் வேணும்னு கேட்டாளா?
பாஸ்கர் - இல்ல. ஆக்சுவலா நாந்தான் அவங்க கேஸ் ஃபைல கேட்டேன்.
மல்லிகா - அதான் ஏன்னு கேக்கேன்?
பாஸ்கர் - நளினி மேல இருக்கற அக்கறையினாலன்னு வச்சிக்குங்களேன். நிச்சயமா அனுதாபம் இல்லை.
மல்லிகா - அப்படியென்ன அவ மேல அக்கறை? அதுவும் ஒரு வார பழக்கத்துல.
பாஸ்கர் சற்று நேரம் எப்படி இவளிடம் சொல்வதென தெரியாமல் சற்று தள்ளி விளையாடிக்கொண்டிருந்த நீலாவையே பார்க்கிறான்.
பாஸ்கர் - நளினிய ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பாக்கறேன். அவங்க கூட பழக ஆரம்பிச்சி ஒரு வாரம்தான் ஆயிருக்குங்கறது உண்மைதான் . ஆனா ஏனோ அவங்கள மீட் பண்ணதுல இருந்து எனக்கு மனசுல ஒரு சந்தோஷம்.... நா சென்னைக்கி வந்தப்ப இருந்த மனநிலையில
இப்படியொரு நட்பு கிடைச்சது.... என் பெர்சனல் லைஃபுல கிடைச்ச தோல்வி, அவமானம் இதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் ரெண்டு
வார லீவ்ல வந்தேன். முதல் நாள் காலைல நளினிய ஸ்கேட்டிங் ரிங்க்ல பாத்தப்போ அவங்களோட ஸ்கேட்டிங் ஸ்டைலதான் பாக்க முடிஞ்சது. அப்போ அவங்களுக்கு பார்வை இல்லேங்கறத புரிஞ்சிக்கில. அதுக்கப்புறம் ஹோட்டல் பார்லர்ல வச்சி சந்திச்சப்போ....
அவங்களோட கை என் உடம்ப மட்டுமில்ல மனசையும் சேர்த்து மசாஸ் பண்ணி அதுல இருக்கற ரணத்தோட வேதனைய கொஞ்சம் ..... அதுக்கப்புறம் அவங்கள பார்வையில்லாத குழந்தைகளோட ரிசார்ட்ல வச்சி பாத்தது... அவங்களோட நல்ல மனச புரிஞ்சிக்க வச்சிது...
இதெல்லாம்தான் அவங்ககிட்ட என்னெ attract பண்ணுச்சின்னு நினைக்கிறேன் - அதான் அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு ஏதாச்சும் செய்ய முடியுமான்னு....- மல்லிகாவை திரும்பி பார்கிறான் - இதுதாங்க காரணம்.
அவனுடைய குரலில் இருந்த வேதனை மல்லிகாவை பதில் பேச விடாமல் தடுக்க சற்று நேரம் அங்கே பறவைகளின் ஒலியைத்தவிர ஒரு ஆழ்ந்த அமைதி........
மல்லிகா - என்னெ மன்னிச்சிருங்க பாஸ்கர் நாந்தான் அவசரப்பட்டு உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டேனோன்னு....
பாஸ்கர் புன்னகையுடன் அவளைப் பார்க்கிறான் - பரவால்லை மல்லிகா..
மல்லிகா - நளினிக்கி மறுபடியும் பார்வை கிடைக்கும்னா எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆனா மூனு வயசுல அவளுக்கு பார்வை போயி நாங்க பாக்காத டாக்டர் இல்ல, செய்யாத மருத்துவம் இல்ல. அந்த பிஞ்சு வயசுல ஒவ்வொரு டாக்டரும் வைத்தியம் பாக்கறேன்னு சொல்லி கண்ண போட்டு நோன்டி, நோன்டி அவள படுத்துன பாட்ட நேர்ல பாத்து சகிக்க முடியாம எங்க ரெண்டு பேரையும் அம்போன்னு விட்டுட்டு ஒரு கோழை மாதிரி ஓடிப்போய்ட்டார் எங்க அப்பா. நளினி பொறந்த உடனேயே எங்க அம்மா இறந்துபோனதால ஏற்கனவே அவ ஒரு துக்கிரின்னு சொல்லிக்கிட்டிருப்பார். அத்தோட அவளுக்கு இனி பார்வை திரும்ப சான்சே இல்லேன்னதும் அவரால தாங்கிக்க முடியல.... போனவர் போனவர்தான்... ஏறக்குறைய இருபது வருசம்... எனக்கு அப்ப பதினெட்டு வயசு.. அன்னையிலருந்து இன்னைக்கி வரைக்கும் அவளுக்கு ஒரு சிஸ்டரா, ஒரு அம்மாவா, ஒரு நல்ல ஃப்ரெண்டா... அவதான் எனக்கு எல்லாமே - அதனாலதான் அவகிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணார்ங்கற ஒரே காரணத்துக்காக என் ஹஸ்பெண்டையும் டைவர்ஸ் பண்ணேன் - என் பொண்ணுங்க கூட அவளுக்கப்புறந்தான் - நா வேற அவ வேறன்னு என்னால பிரிச்சி பாக்க முடியல பாஸ்கர் - ஏற்கனவே ஃப்ரெண்ட்ஷிப்புன்னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து அவள
புண்படுத்திட்டு போனதுலருந்து அவள கொஞ்ச நாளா அந்த பார்லரையே மூட வச்சேன் - இப்பத்தான் ஆறு மாசமா தொடர்ந்து அங்க போய்ட்டு வந்துக்கிட்டிருக்கா - மறுபடியும் அதே மாதிரி ஏதாச்சும் நடந்துறக்கூடாதுங்கற ஆதங்கத்துலதான் உங்கக்கிட்ட கோபப்பட்டேன்...
பாஸ்கர் - I fully understand - இருபது வருசத்துக்கும் மேல ஒரு தங்கைக்காக ஒங்க சந்தோஷத்தையே சாக்ரிஃபைஸ் செஞ்சி.... You are really great Mallika - உங்க தங்கை மேல நீங்க வச்சிருக்கற பாசத்துக்கு முன்னால என்னோட ஃப்ரெண்ட்ஷிப் ஒன்னுமில்ல - ஆனா ஒன்னு
மட்டும் சொல்றேன் - என்னால எந்த ஒரு சூழ்நிலையிலயும் நளினிக்கி எந்த ஆபத்தும் வராது... I can promise you that.
மல்லிகா அவனை புன்னகையுடன் பார்க்கிறாள் - அது போறும் பாஸ்கர் - எழுந்து நிற்கிறாள் - ஏய் நீலா விளையாடுனது போறும். வா போலாம்.
பாஸ்கரும் எழுந்து நிற்கிறான் - நீலா அங்கிள் என்று அழைத்தவாறு அவனை நோக்கி ஓடி வந்து அவனுடைய கால்களை கட்டிக்கொள்கிறாள்.
மல்லிகா புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்க்கிறாள் - அது என்னதான் செஞ்சீங்களோ தெரியல பாஸ்கர் இவ கூட எப்பவுமே ஒங்க பாடம்தான்.
பாஸ்கர் - அப்படியா நீலா? இந்த அங்கிள புடிக்குமா..
நீலா கைகளை விரித்து - ஆமா இவ்ளோ புடிக்கும்.
மல்லிகா - சரி, சரி... வா டைம் ஆவுது... அக்காவுக்கு லஞ்ச் கொண்டு போக வேணாமா?
நீலா - பை அங்கிள்... அப்புறம் மீட் பண்லாம்...
மல்லிகாவும் பாஸ்கரும் இணைந்து நடக்க நீலா குதித்தவாறு வாசலை நோக்கி நடக்கிறாள்.
மல்லிகா - நளினியோட ஃபைல யார்கிட்ட காட்ட போறீங்க?
பாஸ்கர் - சங்கர் நேத்ராலயால இருக்கற டாக்டர் ஒருத்தர் இந்த மாதிரி கேஸ்ல நிறைய சக்சஸ் பண்ணிருக்கார்னு கேள்விபட்டேன்.
மல்லிகா வியப்புடன் - அங்கயா? அங்க அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கறதே ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்களே - ரொம்ப காஸ்ட்லியா கூட இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
பாஸ்கர் புன்னகையுடன் அவளை பார்க்கிறான் - இருக்கலாம். ஆனா அந்த ஹாஸ்பிடலோட ரீசெண்ட் Expansionக்கு எங்க பேங்க்லதான் கடன் வாங்கியிருக்காங்க. எங்க பேங்கோட ஒரு extension counter கூட அந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கு. அதனால எங்க சர்க்கிள் ஆஃபீஸ் மூலமா அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கறதுல கஷ்டம் ஒன்னும் இருக்காதுன்னு என் ஃப்ரெண்ட் சொல்லியிருக்கார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.
இருவரும் பூங்கா வாசலை நெருங்கியதும் மல்லிகா அவனிடமிருந்து விடைபெற்று செல்ல அவர்கள் இருவரையும் பார்த்தவாறு பாஸ்கர் நிற்கிறான்
தொடரும்....
No comments:
Post a Comment