17.4.07

சூரியன் 192

சாதாரணமாக ஃபிலிப் சுந்தரம் அலுவலகம் செல்லும் வழியில்தான் அன்றைய தினத்தாள்களை வாசிப்பது வழக்கம்.

அவருடைய வாகன ஓட்டுனர் அவருடைய இல்லத்திற்கு வரும்போது அன்றைய ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில தினத்தாள்களை கொண்டு வந்துவிடவேண்டும் என்பது ஏற்பாடு. அவருடைய இல்லத்திலிருந்து அலுவலகம் சென்று சேர அரை மணிக்கும் கூடுதல் ஆகும் என்பதால் இரண்டு தினத்தாள்களிலுமுள்ள தலைப்புச் செய்திகளை படித்து முடிக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

அன்றும் அப்படித்தான். வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே செய்தித்தாள்களை புரட்டத் துவங்கினார். ஆனால் முதல் பக்கத்திலேயே வெளியாகியிருந்த மாதவனுடைய புகைப்படத்துடனான முந்தைய தின பேட்டியின் செய்தி அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.

ஆவலுடன் அதை படிக்கத் துவங்கிய சுந்தரம் அதை படித்து முடித்ததும் மேற்கொண்டு மற்ற செய்திகளை படிக்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

How can he do this? Of all the people CGM? என்று மாய்ந்துபோனார். உடனே தன்னுடைய செல்ஃபேசியை எடுத்து டயல் செய்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'மிஸ்டர் சுபோத் நம்ம பிஆரோ ஆஃபீசுக்கு வந்துட்டாரான்னு பாருங்க. வந்திருந்தா இன்னும் அரை மணியில நேத்து மீட்டுல நம்ம சிஜிஎம் குடுத்த ரெஸ்பான்சோட நோட்ச என் கேபினுக்கு கொண்டு வரச்சொல்லுங்க. It should not be shown to anybody else without my clearance, is that clear?' என்றார்.

பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

இது நிச்சயம் சுந்தரலிங்கம் சாரோட ஸ்டேண்ட்மெண்டாருக்காது. I think our ED has played his game again. அவருக்கு தன்னையும் சுந்தரலிங்கத்தையும் அடுத்த பதவி உயர்வு போட்டியிலிருந்து, முக்கியமாக சேர்மன் பதவிக்கான போட்டியிலிருந்து, எப்படியாவது விலக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது தெரிந்துதானிருந்தது. அவர்களிருவருக்குமே அந்த பதவியில் ஆர்வம் இல்லை என்பதை சேதுவுக்கும் தெரியும் என்பதை பல சமயங்களில் அவர் உணர்ந்திருக்கிறார். இருந்தும் தொடர்ந்து சேது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரையும் சுந்தரலிங்கத்தையும் சிக்கலில் சிக்கவைப்பதில் முயன்றுவருவதை ஃபிலிப் நன்றாக அறிந்துவைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுந்தரலிங்கம் அதை உணரவில்லை.

முந்தைய தினம் மாதவன் புறப்பட்டுச் சென்றதுமே தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் சேது முனைந்துவிடுவார் என்பது உணர்ந்திருந்தார் என்றாலும் அவர் அதை அத்தனை பகிரங்கமாக செயல்படுத்த துணிவார் என்று நினைத்திருக்கவில்லை. அவரை மாதவன் தனக்கு சார்பாக பத்திரிகை நிரூபர் கூட்டத்தில் பேச அனுமதித்திருந்தார் என்பதுதான் அவரை உசுப்பி விட்டிருக்க வேண்டும். எங்கே தன்னிச்சையாக அவரை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்தால் பிரச்சினையாகிவிடுமோ என்ற அச்சத்தில் சுந்தரலிங்கத்தையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய தினம் அலுவலகத்தில் நடந்த ஒருசில நிகழ்வுகள் காரணமாக சுந்தரலிங்கத்துக்கும் தன் மீது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது சேதுவின் சதித்திட்டத்திற்கு வசதியாகப் போனது.

அவருடைய சிந்தனைகளைக் கலைப்பதுபோல் செல்பேசி ஒலிக்க அதை எடுத்துப் பேச மனமில்லாமல் யாரென்று பார்த்தார். நாடார்! அவர் இருந்த மனநிலையில் பேசாமலிருப்பதே உத்தமம் என்ற நினைப்பில் வாகன ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடி வழியாக தன்னைக் கவனிப்பதை உணர்ந்தும் பதிலளிக்காமல் பத்திரிகையில் கண்களை ஓடவிட்டார். செய்தித்தாளில் வெளியாகியுள்ளதைப் பற்றித்தான் நாடார் தன்னிடம் விளக்கம் கேட்க முனைந்திருப்பார் என்று நினைத்தார். அத்துடன் அவர் அந்த கூட்டத்திலேயே பங்குகொள்ளவில்லை என்பது நாடாருக்கு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம். 'அவன் சொன்னா நீரு எறங்கி போயிருவீராக்கும்?' என்று அவரையே சாடினாலும் வியப்பதற்கில்லை.

முந்தைய தினம் நடந்த பத்திரிகை கூட்டத்தைப் போன்று எந்த ஒரு முக்கிய கூட்டத்திலும் நடப்பவைகளை அப்படியே சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவென்றே ஒரு சுருக்கெழுத்தாளர் நியமிக்கப்பட்டிருப்பார். கூட்டத்தில் பேசப்படுபவற்றை ஒன்றுவிடாமல் குறிப்பெடுத்து பிறகு அதை கணினியில் ஏற்றி ஒரு நிரந்தர மென் கோப்பாக மாற்றி அதை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் அடுத்த நாளே சமர்ப்பித்துவிடவேண்டும் என்பது நியதி. அந்த சுருக்கெழுத்தாளர் எச்.ஆர். மற்றும் போர்ட் (Board) அலுவல்களுக்கு பொறுப்பான ஃபிலிப் சுந்தரத்தின இலாக்காவில் பணியாற்றுபவர் என்பதால் அந்த மென் கோப்பை அவர் சரிபார்த்தபிறகே மற்ற அதிகாரிகளுக்கு, வங்கி முதல்வரையும் சேர்த்து, வழங்கப்படும். ஆனால் அன்றைய செய்தித்தாளில் வெளியாகியிருந்த விஷயம் நிச்சயமாக உண்மையில் கூட்டத்தில் நடந்ததற்கு முரண்பட்டது என்பதால் சேது மாதவன் அந்த குறிப்புகளையே மாற்ற முயன்றாலும் வியப்பில்லை என்பதால்தான் சுபோத்தை அழைத்து அதை அவருடைய அனுமதியில்லாமல் யாருக்கும் அதை யாருக்கும் காட்டக் கூடாத என உத்தரவிட்டார்.

அவருடைய வாகனம் அலுவலகத்திற்குள் நுழைவதை உணர்ந்த ஃபிலிப் அன்றைய தினம் முந்தைய தினத்தைவிடவும் சிக்கலாக இருக்கப் போகிறது என்று நினைத்தவாறு இறங்கி தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

********

நந்தக்குமார் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகத்திலிருந்து சற்று தொலைவிலிருந்தே அங்கி குழுமியிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டான். உடனே அங்கேயே ஆட்டோவிலிருந்து இறங்கி கால்நடையாக அலுவலகத்தை நெருங்கினான்.

கூட்டத்தின் விளிம்பிலிருந்த ஒருவரை எங்கோ பார்த்த நினைவு. அவரை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 'என்ன சார் என்ன ஆச்சி? எதுக்கு கூட்டமா நிக்கிறீங்க?'

அவர் வியப்புடன் அவனை திரும்பிப் பார்த்தார். 'என்ன நந்தக்குமார் சார் ஒங்களுக்கு விஷயம் தெரியாதா?'

'ஏன் என்ன ஆச்சி?'

'இன்னைக்கி காலைல நம்ம முரளி சார ஆஃபீஸ் வர்ற வழியில யாரோ ரெண்டு மூனு ரவுடிப் பசங்க சவுக்கு கம்பால அடிக்க வந்திருக்காங்க சார். முரளி ஸ்கூட்டர நிறுத்தாம தப்பிக்க முயற்சி பண்ணிருக்கார். இருந்தாலும் தலையில பலமா அடிபட்டுருக்கு. எப்படியோ சமாளிச்சி ஸ்கூட்டர ஓட்டிக்கிட்டு பக்கத்துலருக்கற ஆஸ்பத்திரிக்கி போயி அட்மிட் ஆய்ட்டார். அது தெரியவந்து சிட்டி பிராஞ்ச் ஸ்டாஃபெல்லாம் ஒரே டென்ஷனாய்ட்டாங்க.. நேரா இங்க வந்துட்டாங்க... வாசகன் சார் ஹாஸ்பிட்டல் போயிருக்கார். அவர் வந்தாத்தான் மேக்கொண்டு என்ன செய்யறதுன்னு டிசைட் பண்ணுவாங்க..'

நந்தக்குமார் அதிரிச்சியில் உறைந்துப்போனான். முந்தைய தினம் சேதுமாதவன் தன்னை அடித்து மிரட்ட அடியாட்களை ஏவிவிட்டிருந்தார் என்று முரளி தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் ஏவிவிட்டவனே தன்னுடைய ஊரைச் சார்ந்தவன் என்பதால் அவன் அதை செயல்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவன் கூறியதை வைத்தே சேதுமாதவனை மடக்கப் போவதாகவும் முரளி கூறினானே பிறகெப்படி இது நடந்தது?

இப்போது என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்த நந்தக்குமார் கூட்டத்தினர் கோபத்துடன் வங்கி நிர்வாகத்திற்கெதிராக கோஷமிடுவதை கவனித்தான். இக்கூட்டம் பொறுமையிழந்து வன்முறையில் ஈடுபட நேர்ந்தால் நிச்சயம் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தவனாய் அங்கிருந்து புறப்பட்டான். அதற்கு முன்பு முரளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு எப்படி செல்வதென்று அவனிடம் தகவலளித்தவரிடமே கேட்டு தெரிந்துக்கொண்டான். 'ஆனா சார்.. நீங்க இப்ப போனாலும் பாக்க முடியாதுன்னு நினைக்கேன்... அநேகமா அவர் ஐ.சி.யூவுலோ இல்ல ஆப்பரேஷன் தியேட்டர்லயோதான் இருப்பார் போலருக்கு... வாசகன் ஃபோன் பண்ணி சொன்னதுலருந்து சொல்றேன்..'

இருந்தும் சென்றுதான் பார்போமே என்ற நினைவுடன் எதற்கும் நளினியிடம் தெரிவித்துவிட்டு செல்வோம் என்று நினைத்தவனாய் வந்தனாவின் வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தான். ஆனால் நளினி அவன் கூறியதை கேட்டும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சம்பந்தமில்லாமல் சிரிப்பதை கேட்டவன் சினந்து, 'ஏய் என்ன நீ? நா சீரியசான விஷயம் சொல்றேன் சிரிக்கிறே? என்னதான் அவன ஒனக்கு புடிக்கலன்னாலும் இப்படியா?' என்றான்.

'மேடம் பக்கத்துல உண்டு...' என்று நளினி பதிலுக்கு கிசுகிசுக்க கோபம் தணிந்து, 'அப்படியா சாரி... நான் போய் பாத்துட்டு வந்துடறேன்...' என்றான்.

'ஏய்.. வைக்கேண்டா..' என்ற நளினி அதே கிசுகிசு குரலில்.. 'பல்லாவரத்துலருந்து ஜோ விளிச்சிண்டாயிருந்து... நந்துவெ விளிக்காம் பறஞ்சு' என்றாள்...'நம்பர் உண்டுல்லே... வேகம் விளிக்கி...'

'சரி' என்றவாறு இணைப்பைத் துண்டித்த நந்து அடுத்து ஜோவை அழைத்தான்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'என்ன மிஸ்டர் ஜோ.. கூப்டீங்களா?' என்றான்.

ஜோ அவசர, மளமளவென்று முந்தைய தினம் நடந்தவைகளை தெரிவித்துவிட்டு அன்று மாலையே இறுதிச் சடங்கு நடக்கவிருப்பதாகவும் இதை முரளியிடம் தெரிவிக்க முயன்று தோற்றுப்போனதாகவும் கூறினான். 'ஒங்களுக்கு ஒருவேளை தெரியுமான்னு தெரியுமான்னுதான் கூப்ட்டேன்.. வாசகனும் செல்ஃபோன எடுக்க மாட்டேங்கறார்.'

முரளி தாக்கப்பட்டதை சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி தடுமாறிய நந்தக்குமார் பிறகு சொல்லிவிடுவதான் நல்லதென தீர்மானித்தான்.

'அப்படியா? I am sorry to hear that Mr.Nandhu.. ஆனா என்னால இப்ப வரமுடியாது.. நீங்க போய் பாத்துட்டு வாங்க.. நான் நாளைக்கி போய் பாத்துக்கறேன்.. இங்க சாருக்கு வேற யாரும் உதவிக்கு இல்லை... I hope he will recover fast... வச்சிடறேன்.' என்றவாறு ஜோ இணைப்பைத் துண்டிக்க நந்தக்குமார் வழியில் சென்ற ஒரு ஆட்டோவை கையசைத்து ஏறி மருத்துவமனை விலாசத்தை கூற ஆட்டோ வட்டமடித்து வந்த வழியிலேயே விரைந்தது.

தொடரும்..

No comments: