27.4.07

சூரியன் 195

சமையலறையிலிருந்து காப்பி கோப்பையுடன் வந்த நளினியைப் பார்த்தாள் வந்தனா...

காலையிலிருந்தே அவள் ஏதோ பதற்றத்துடன் காணப்படுவது தெரிந்தது. ஆனால் என்ன என்றுதான் விளங்கவில்லை...

காப்பிக் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நகர முயன்றவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள்.. 'என்ன நளினி என்ன விஷயம்? ஏன் ஏதோ டென்ஷனோட இருக்கா மாதிரி.... நந்து ஏதாச்சும் சொன்னாரா? எங்க அவர் காலைலருந்தே காணம்?'

நளினி அவளுடைய முகத்தை நேரடியாக பார்க்காமல் அணைந்துக்கிடந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தவாறு நின்றாள். 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மேடம்.. நார்மலாத்தான் இருக்கேன்... டிரான்ஸ்ஃபர் கிடைக்குமோ கிடைக்காதோங்கற கவலை லேசா இருக்கு... வேற ஒன்னுமில்லை...'

'அதான் மாணிக்கம் சரின்னு சொல்லிட்டாரில்ல... அப்புறம் என்ன? எல்லாம் சரியாயிரும்... இன்னைக்கி எப்படியும் டாக்டர கன்வின்ஸ் பண்ணிரணும்... இந்த மாதிரி அரை வயித்து சாப்பாடெல்லாம் சாப்ட்டுக்கிட்டிருந்தா மண்டேலருந்து ஆஃபீசுக்கு எப்படி போறது? என்னதான் ஃபிலிப்கிட்ட சொல்லிட்டோம்னாலும் நா அங்க இருந்தாத்தான ஆர்டர ஒடனே போட முடியும்...? அதனால இன்னைக்கி எப்படியும் ஹாஸ்ப்பிடலுக்கு போய்ட்டு வந்துரணும்... அதனாலதான் கேக்கேன் நந்தக்குமர் எங்க.. அவரும் கூட வந்தா நல்லாருக்குமே...'

நளினி திரும்பி அவளைப் பார்த்தாள். மூன்று நாட்களாக சரியான உணவு இல்லாததாலோ என்னவோ மெலிந்து சோர்ந்துபோயிருந்த அவளுடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது நளினிக்கு... அந்த களையிழந்த முகத்தை பார்க்கவே சகிக்கவில்லை... டீக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஹை ஹீல் செருப்புல மிடுக்கா நடக்கற மேடமா இது? அதுவும் மூனே நாள்ல... அடையாளமே தெரியாம...

'என்ன நளினி பதில் சொல்லாம என்னையே பாக்கே... ஆளே அடையாளம் தெரியாம மாறிப்போய்ட்டனோ?'

'ச்சேச்சே அப்படியெல்லாம் இல்ல மேடம்... கொஞ்சம் டயர்டா இருக்கீங்க.. நீங்க சொன்னா மாதிரி சரியான சாப்பாடு இல்லாததுதான் காரணம்...' என்று சமாளித்த நளினி தொடர்ந்து, 'நந்து முரளிய பாத்துட்டு வரேன்னு போயிருக்கார் மேடம்... அவர் இல்லன்னாலும் பரவால்லை... நம்ம கால் டாக்சிய கூப்ட்டுகலாம்... நீங்க காப்பிய குடிங்க மேடம்.. நீங்க குளிக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்... குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா போய்ட்டு வந்துரலாம்...' என்றவாறு குளியலறையை நோக்கி நகர, 'நளினி இந்த டிவிய ஆன் பண்ணிட்டு போயேன்... மூனு நாளா ந்யூசும் கேக்கல... பேப்பரும் படிக்கலயா... பைத்தியம் புடிச்சா மாதிரி இருக்கு...' என்றாள் வந்தனா...

நளினி திடுக்கிட்டு தொலைக்காட்சி பெட்டியையும் வந்தனாவையும் பார்த்தாள். 'வேணாம் மேடம்... டாக்டர கன்சல்ட் பண்ணிட்டு பாத்துக்கலாம்... அப்புறம் அதுல ஏதாவது வேண்டாத நியூஸ் சொல்ல.. நீங்க டென்ஷனாயிருவீங்க... நீங்க காப்பிய குடிச்சிட்டு குளிங்க... ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணதும் சாப்ட்டு கெளம்பலாம்... டாக்டர் சரின்னு சொல்லிட்டா சாயந்தரம் பாத்துக்கலாமே...'

விட்டால் போதும் என்பதுபோல் ஓடுகிறாளே... என்னாயிற்று இவளுக்கு என்ற சிந்தனையுடன் அன்றைய செய்தித்தாளாவது கிடக்கிறதா என்று டீப்பாயைப் பார்த்தாள்... சாதாரணமாக ஒரு வாரத்து செய்தித்தாள்கள் ஞாயிற்றுக்கிழமை வரை டீப்பாயிலேயே கிடக்கும்... ஞாயிற்றுக்கிழமை பகலுணவுக்குப் பிறகு அவ்வார செய்தித்தாள்களை ஒன்றுவிடாமல் படித்துமுடித்து ஷெல்ஃபில் எடுத்து வைப்பது வழக்கம்... ஆனால் பேப்பர் வாங்குவதையே நளினி நிறுத்திவிட்டாள் போலிருக்கிறது... இப்படியொருத்தி சகோதரியா வந்திருந்தா... ஹூம்... இவளும் கூடப் பொறந்திருந்தா இப்படி இருக்க மாட்டாளோ என்னமோ....

*******
நாடார் சோமசுந்தரத்தின் பங்களாவைச் சென்றடைந்தபோது அவரைத் தவிர யாரும் வந்திருக்கவில்லை...

வாசலிலிருந்த பிரம்மாண்டமான இரும்பு கேட்டைத் திறந்துவிட்ட குர்க்கா நாடாரைக் கண்டதும் சலாமடித்தான்...

'சலாமெல்லாம் பலமாத்தான் இருக்கு.... ஒங்க அய்யா இன்னும் வரலையாக்கும்?' என்றார் நாடார் புன்னகையுடன்..

'இப்போ வந்துருவார் சாப்... ஆப் அந்தர் ஜாக்கே பைட்டியே.... மேனேஜர் சாப் ஹை அந்தர்...' என்றான் அவருக்கு விளங்காத மொழியில்...

நாடார் உரக்கச் சிரித்தவாறு அவரை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்த மேலாளரைப் பார்த்தார். 'என்னய்யா... இந்தாளுக்கு தமிழ ஒரு வாத்தியார வச்சி சொல்லித்தரப்படாதா? இப்படி போட்டு கொல்றான்..?'

மேலாளர் சிரித்தார்... 'இவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தா நமக்கே அது மறந்துரும் சார்.. நீங்க வாங்க... வர்ற வழியில டாக்டர் வண்டி ஏதோ மக்கார் பண்ணிருச்சி போலருக்கு... இங்கருந்த வண்டிகள்ல ஒன்னெ அனுப்பியிருக்கேன்... செட்டியார் இப்பத்தான் போன் பண்ணார்... இன்னும் அஞ்சி நிமிசத்துல வந்துருவேன்னு சொன்னார்... நீங்க உள்ள வந்து ஒக்காருங்கய்யா...'

'சரி போங்க... நீங்களாச்சும் இருக்கீங்களே... இல்லன்னா நாம் பாட்டுக்கு திரும்பிப் போயிருப்பேன்.. வாசல்லருக்கற குர்க்காக்கிட்ட என்னத்த கேக்கறது... அவன் ஆத்தா ஜாத்தாம்பான்.. நான் அச்சா கிச்சான்னு சொல்லிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...'

அந்த காலைநேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழையாதபடி இருட்டடிப்பு செய்துக்கொண்டிருந்தன சவுக்கு மரங்கள்.... 'ஜில்லுன்னு ஏசி போட்டா மாதிரி இருக்குய்யா... பேசாம ஒரு துண்ட விரிச்சி படுத்துரலாம் போலருக்கு... நிம்மதியா தூங்கி எத்தன நாளாச்சிது....'

ஹூம்.. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது சரியாத்தான் இருக்கு.... தோளுக்கு மீது வளர்ந்து நின்ற இரு பெண்களை எப்படித்தான் கரையேற்றப் போகிறேனோ என்று நினைத்தவாறு ஆறு மாதங்களுக்கும் மேலாக உரக்கமிழந்து தவித்துக் கொண்டிருந்த மேலாளர் கோடி, கோடியா பணமிருக்கறவங்களும் நம்மளப் போலத்தான் போலருக்கு என்று நினைத்தவாறு முன்னே நடந்தார்...

அவர் வரவேற்பறை என்ற பெயரில் நாற்பதடிக்கு குறையாத நீளத்திலிருந்த அந்த அறையில் ஆங்காங்கே கிடந்த சோபாக்களில் அமராமல் அறையின் ஒரு மூலையில் கிடந்த மெத்தைகளில் ஒன்றில் அமர்ந்து அருகில் கிடந்த உருட்டை தலையணைகளில் ஒன்றில் சாய்ந்தார்...

விர்ரென்ற மெல்லிய ஓசையுடன் இயங்கிய குளிர்சாதன பெட்டியின் ஓசையைத் தவிர முழு அமைதியுடன் இருந்த அந்த சூழலில் தன்னை மறந்து கண்கள் சொருக... 'என்ன நாடார்... குட்டித் தூக்கமா?' என்ற உரத்த சிரிப்பொலியினூடே கேட்ட குரல் சத்தத்தை நோக்கி திரும்பினார்...

வாயெல்லாம் பல்லாக சிவசுப்பிரமணிய செட்டியார்.... அரசியல்வாதியைப் போன்ற வெள்ளைவெளேர் வேட்டி சட்டையில்...

'வாய்யா செட்டியாரே... வந்து ஒக்கார்... நம்மள வரச்சொல்லிட்டு இந்த டாக்டர காணம் பாத்தீகளா?'

'அவருக்கென்னய்யா.. நம்மள மாதிரியா? எத்தனை பேர அருக்கணுமோ... தைக்கணுமோ... அதயல்லாம் முடிச்சிட்டுத்தான வருவாரு?'

நாடார் ஒரு போலி பதற்றத்துடன் செட்டியாரைப் பார்த்தார்... 'என்னய்யா காலங்கார்த்தால பயங்கரமா யோசிக்கறீரு... அவர்தான் ரிட்டையராயி மக கைல ஆஸ்ப்பிட்டல குடுத்தாச்சே... அப்புறம் எதுக்கு இந்த வேலையெல்லாம்.. இப்ப அவரோட முழு நேர வேலையா யார கவுக்கலாங்கறதுதானே... என்ன சொல்லுதீரு...' என்றவாறு உரக்கச் சிரிக்க செட்டியாரும் சேர்ந்துக்கொள்ள அந்த அறையின் அமைதியே கலைந்துப் போனது...

வாசலில் நின்றிருந்த சோமசுந்தரத்தின் மேலாளர் கேட்டும் கேட்காததுபோல் வாசலை நோக்கி திரும்ப தொலைவில் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு, 'டாக்டரய்யா வந்துட்டார்யா..' என்றார் முன்னெச்சரிக்கையாக.. எங்கே இவர்கள் இருவரும் சோமசுந்தரம் வருவது தெரியாமல் அவரை கேலி செய்வதை தொடர்ந்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு..

************

தனபால்சாமியுடன் பேசிவிட்டு செல்பேசியை அணைத்து கையில் பிடித்தவாறே சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைப் பார்த்தார். 'இதே லேபரர் கூட்டம்னா தடியடி செஞ்சி கலைச்சிரலாம்... இவங்கள பாத்தா நல்ல படிச்ச ஆளுங்களாட்டம் தெரியுதே சார்.. என்ன பண்ணப் போறீங்க?' என்றாவாறு அருகிலிருந்த ஏரியா எஸ்.ஐயை பார்த்தார்.

அவரும் அதே யோசனையுடன் கூட்டத்தைப் பார்த்தார். 'பெரிசா கலாட்டா ஏதும் பண்ணாலும் ஏதாச்சும் ஆக்ஷன் எடுக்கலாம்.. எல்லாரும் அமைதியா ஒக்காந்துருக்கானுங்க... அதான் யோசனையாருக்கு.... யாராச்சும் லீடர் மாதிரி இருக்கானான்னு பாக்கலாம் வாங்க..' என்றவாறு முன்னே நடந்தவரை பிந்தொடர்ந்தார்..

அவர்களிருவரும் கூட்டத்தை நெருங்கவும் அதிலிருந்து ஒரு சிறிய கூட்டம் எழுந்து அவர்களை நெருங்கியது. அவர்களை தடுக்க முயன்ற காவலர்களை, 'அவங்கள வரவிடுங்க...' என்றார் ஏரியா எஸ்.ஐ.. 'என்ன சார் விஷயம் சொல்லுங்க.. படிச்சவங்களாருக்கீங்க.. இப்படி காலைல நேரத்துல டிராஃபிக்க ப்ளாக் பண்றீங்களே.. எதாருந்தாலும் பேசி தீர்த்துக்கலாங்க.. அவங்கள மொதல்ல ரோட்டுலருந்து விலகச் சொல்லுங்க..' என்றார்.

அவர்களை நோக்கி வந்த கூட்டத்திலிருந்தவர்களுள் ஒருவர் தொழிற்சங்க துணை செயலாளர். 'சொல்றோம் சார்... அதுக்கு முன்னால இதுக்கு காரணமாருந்தவர் பேர்ல ஆக்ஷன் எடுக்கறோம்னு சொல்லுங்க...' என்றார் முறைப்புடன்..

தனபால்சாமியின் உதவியாளர் தன் நண்பரைப் பார்த்தார். அவர், 'யார்னு சொல்லுங்க... ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அதவிட்டுட்டு வொர்க்கர்ஸ் மாதிரி மறியல்ல எறங்குனா எப்படி சார். 'என்றார்..

அவர் சொல்வதில் நியாயம் இருந்ததுபோல் தன் சகாக்களைப் பார்த்தார் சங்க துணை செயலாளர். 'சார் இது எமோஷனலா நம்ம சங்கத்து ஆளுங்க எடுத்த முடிவு... எங்களுக்கு எங்க ஈ.டி மேலதான் சந்தேகம். அவருக்கும் எங்க தலைவருக்கும் இடையில இருக்கற பெர்சனல் விரோதத்த மனசுல வச்சுக்கிட்டு இந்த காரியத்த செஞ்சிருக்கார். எங்க பேங்க் சேர்மன் இல்லாத இந்த நேரத்துல இவங்களுக்கு தங்களோட வருத்தத்த தெரிவிச்சிக்க வேற வழி தெரியல... அதான் மறியல்ல இறங்கிட்டாங்க.. நீங்க வந்து ஆக்ஷன் எடுக்கறோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா.. ஒடனே கலைஞ்சி போயிருவாங்க.. அதுக்கு நா க்யாரண்டி..'

'என்ன சார்.. சொல்லிருவோமே... டிராஃபிக் ஜாம் ஜாஸ்தியாகறதுக்குள்ள முடிச்சிருவோம் சார்.. இல்லன்னா மேடத்துக்கிட்ட பதில் சொல்ல முடியாது.' என்றவாறு ஏரியா எஸ்.ஐ. தனபால்சாமியின் உதவியாளரைப் பார்க்க அவரும் தலையை அசைத்தார். பிறகு சற்று முன் பேசிய சங்கத் தலைவரைப் பார்த்தார். 'சார்.. ஒங்க ஈ.டியோட பேர் என்னன்னு சொன்னீங்க?'

'சேதுமாதவன் சார்... கேரளாக்காரர்.. ஈ.டின்னதும் பயந்துராதீங்க... அடிபட்டுருக்கறது எங்க செக்கரட்டரி... தயவு செஞ்சி ஆக்ஷன் எடுக்கறேன்னு சொல்லிட்டு பின்வாங்கிராதீங்க...'

சேதுமாதவன் என்ற பெயரைக் கேட்டதுமே... 'சார் நீங்க போய் பேசுங்க.. நான் எஸ்.பிக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிட்டு வந்துடறேன்.. அப்புறம் என்னெ கேக்காம எதுக்குய்யா ப்ராமிஸ் பண்றீங்கன்னு கத்துவார்...' என்றவாறு தன் செல்பேசியை எடுத்துக்கொண்டு ஜீப்பை நோக்கி நகர்ந்தார் எஸ்.பி தனபால்சாமியின் உதவியாளர்.

தொடரும்...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

வலை இறுகுகின்றது;
நரியும் சாமான்யப் பட்டதில்லையே...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நரியும் சாமான்யப் பட்டதில்லையே... //

கரெக்டா சொன்னீங்க...பார்ப்போம் என்ன பண்றாருன்னு...