25.4.07

சூரியன் 193

தனபால்சாமிக்கும் அலுவலகம் செல்லும் வழியில் அன்றைய தினத்தாள்களை படிக்கும் வழக்கமிருந்தது. ஆகவே மறக்காமல் தினமும் வீட்டிற்கு வரும் பத்திரிகைகளை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம்.

அன்று காலையில் புவனா தன்னிடம் காட்டிய பக்கத்திலேயே மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை எடுத்ததுமே அவர் கண்ணில் பட்டது --------------- வங்கியின் முந்தைய தின பத்திரிகை நிரூபர் கூட்டத்தைப் பற்றிய செய்தி!

அதில் வெளியாகியிருந்த புகைப்படத்தை பார்த்ததுடன் நிரூபர் கூட்டத்தைப் பற்றி பிரசுரமாகியிருந்த செய்தியையும் மேலோட்டமாக படித்தவர் அதில் வங்கியின் உயர் அதிகாரியொருவர் கூறியிருந்ததைப் படித்ததும் கோபமடைந்தார். அவரையுமறியாமல் அருகிலேயே பிரசுரமாகியிருந்த புகைப்படத்திலிருந்த சேதுமாதவனின் உருவத்தின் மீது அவருடைய பார்வை பதிந்தது. அவரருகில் அமர்ந்திருந்த மற்றொரு அதிகாரி யாராயிருக்கும் என்று கீழே அளிக்கப்பட்டிருந்த பெயரை வாசித்தார். சுந்தரலிங்கம்!

எங்கோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என்று ஒரு நொடி சிந்தித்தார். அட! இவரா? மீண்டும் ஒருமுறை முகத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். இவர் போன சனிக்கிழமை ம்யூசிக் அக்காடமி ஹால்ல நடந்த கச்சேரிய நடத்துன கன்வீனர் இல்ல?

ஆம். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் தனபால்சாமி. அவரா இப்படியொரு பொறுப்பில்லாத பேட்டியை கொடுத்திருக்க முடியும்? தர்மசிந்தனை, ஆன்மீக உணர்வு உள்ள இவரைப் போன்ற ஒருவரால் எப்படி வங்கியில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்த தாமதிப்பவர்களை அடித்து மிரட்டுவதில் தவறில்லை என்று பகிரங்கமாக கூற முடிகிறது? எங்கோ பிசிரடிக்குதே என்று நினைத்தவாறு அருகில் ஒரு லேசான விஷமப்புன்னகையுடன் அமர்ந்திருந்த சேதுமாதவனின் உருவத்தைப் பார்த்தார். I think he is the culprit.. ஒன்னு இவர் சொன்னத அந்த சுந்தரலிங்கம் சொன்னதா போடச் சொல்லியிருக்கணும்.. இல்லன்னா அவர் ஏற்கனவே ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்த டெக்ஸ்ட இந்த மனுசன் வேற வழியில்லாம வாசிச்சிருக்கணும்... Yes that's possible... என்று நினைத்தவர் அலுவலகம் சென்றடைந்ததும் சேதுமாதவனின் வீட்டில் ரெய்ட் நடத்த நினைத்திருந்ததை முடுக்கிவிடவேண்டும் என்று குறித்துக்கொண்டு மற்ற செய்திகளை வாசிப்பதில் மூழ்கிப்போனார்.

*****

சிலுவை மாணிக்கம் நாடார் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் வீடு அமைந்திருந்த சாலையை அடைந்த ஏழுமலையும் அவனுடைய கூட்டாளிகளும் கலைந்து சாதாரண வழிபோக்கர்களைப் போன்று நிதானமாக நடந்து அவருடைய வீட்டை நெருங்கி நோட்டம் விட்டனர். நாடாருடைய வாகனம் போர்ட்டிக்கோவில் நிற்பது தெரிந்தது.

'என்னண்ண? அவரு உள்ளதான் இருக்கார் போலருக்கு? அந்த அய்யா இவரு சரியா எட்டு மணிக்கெல்லாம் பொறப்பட்டுருவாருன்னு சொன்னாரே?' என்ற கூட்டாளி ஒருவனை முறைத்துப் பார்த்தான் ஏழுமலை.

'எலேய்... ஒன்னெ தனியா போய் பார்னு சொன்னா எம் பின்னாலயே வந்துக்கிட்டிருக்கியா? ஏன் எட்டு மணிக்கு மேல காத்துக்கிட்டிருக்க மாட்டியளோ... போல அங்கிட்டு... போய் எதிர்வாடையில நில்லு... நா அங்கன நிக்கேன்... யாராச்சும் வீட்டுக்குள்ளாற இருந்து வந்தா...'

அவன் கூறி முடிப்பதற்குள், 'என்னண்ணே ஒங்களுக்கு சிக்னல் குடுக்கவா?' என்றவனை முறைத்தான். 'எலேய்.. சிக்னலா... நீயே காமிச்சி குடுத்துருவ போலருக்கே... சும்மா கைய தலைக்கு மேல ஒசத்தி நெட்டி முறிக்கறாப்பல செய்யி... நா புரிஞ்சிக்குவேன்.. என்ன வெளங்குதா?'

'சரிண்ணே..'

'என்னத்த வெளங்குச்சோ.. போ...' என்று சலித்தவாறு ஏழுமலை வீட்டைக் கடந்து தெருக்கோடி வரை சென்றுவிட்டு மீண்டும் வந்த வழியே நடந்தான்.. அவன் வீட்டை நெருங்கவும் மெக்கானிக் போன்ற ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. அவரை, 'வாங்கண்ணே... ' என்றவாறு கேட்டைத் திறந்தவனைப் பார்த்ததும் ஏழுமலை சடாரென்று திரும்பி வந்த பாதையிலேயே நடந்தான். 'அட இவன் எங்க இங்க? நம்மள இவன் அடையாளம் கண்டுக்குவானே? இப்ப என்ன ச்செய்ய?' மதுரையில் அவன் வசித்த பகுதியில் மந்திரச்சாமியை பார்த்த நினைவு வந்தது. தனக்கு அவனை அடையாளம் தெரியும்போது அவனுக்கும் என்னை அடையாளம் தெரியாதா என்ன? ரத்தினவேலய்யாவ கூப்பிடலாம்னா அந்தய்யா கூப்டாதேன்னு வேற சொல்லிப்போட்டாரே...

ஏழுமலை அன்று காலையில் தாம்பரம் வந்திறங்கியதும் அழைத்த தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருந்த துண்டுச்சீட்டை தன் பாக்கெட்டிலிருந்த எடுத்துப் பார்த்தான். கூப்ட்டுபாத்தா என்ன? ஏசினா ஏசிட்டு போட்டும்... பெறவு ஏண்டா சொல்லலைன்னு கேட்டா? கையில் சீட்டுடன் சுற்றிலும் பார்த்தான். சாலைக்கு குறுக்கே ஒரு பொது தொலைபேசி கூண்டு தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து கூண்டுக்குள் புகுந்தான்.

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது.. யாராச்சும் எடுங்களேன்யா... என்று முனுமுனுத்தவாறு காத்திருந்தான்... இரண்டு, மூன்று என நிமிடங்கள் கடந்தனவே தவிர யாரும் எடுப்பாரில்லை. சலிப்புடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு வெளியேறி நடைபாதையில் நின்றவாறு யோசிக்கலானான்.. பிறகு ஒரு முடிவுடன் தன் சகாக்களுள் ஒருவனை நெருங்கி, 'எலேய் நம்ம பயலுவள கூப்ட்டுக்கிட்டு வா... நா அந்தாக்ல இருக்கற பார்க்ல இருக்கேன்.. ஒரு முக்கியமான வில்லங்கம்லே.. வெரசா வந்து சேருங்க.. சேந்து வராதீங்க.. தனித்தனியா வாங்க..' என்ற கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் தெருக் கோடியிலிருந்த பூங்காவை நோக்கி விடுவிடுவென நடந்தான்..

******

'என்னண்ணே... ஏதாச்சும் ஒப்பேறுமா?' என்ற மந்திரசாமியை எரிச்சலுடன் பார்த்தான் கார் மெக்கானிக்.

'எலேய் என்ன கிண்டலடிக்கிறீகளாக்கும்...எத்தன வருசமால்ல இந்த வண்டிய ஓட்டுற பெட்ரோல் போடறத தவிர வேற ஏதாச்சும் தெரியுமால்ல? ஒன்னையும் டிரைவர்னு வச்சிருக்காங்க பார் அய்யாவ சொல்லணும்.. இதுல கேலி வேற..' என்றவாறு பானட்டைத் திறந்து கவிழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூடிவிட்டு நிமிர்ந்தான். 'அடேய் மந்திரச்சாமி... பெருசா ஒன்னுமில்லன்னு நினைக்கேன்... கூலண்ட்தான் கொஞ்சம் கம்மியாருக்கு.. வாங்கிட்டு வந்து ஊத்திட்டு ஸ்டார்ட் பண்ணி பாப்பம்.

'என்னண்ணே சொல்றீய.. இங்கன பக்கத்துல கூலண்ட் கிடைக்காதே...' என்று அலறினான் மந்திரசாமி. 'அக்கா வக்கீலாஃபீஸ் வரைக்கும் போகணும்னு ரெடியாயி நிக்காவளே...'

'அதுக்கு நான் என்னச் செய்ய... நான் ஒர்க் ஷாப்புக்கு ஃபோன் போட்டு சொல்லத்தானல்ல முடியும்.. அங்கருந்து ஒரு பயல கொண்டுவரச் சொல்வோம்.. பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துருவான்... வா வந்து போன காமி.' என்றவாறு மெக்கானிக் வாசலை நோக்கி நடக்க மந்திரசாமி பதறியவாறு தடுத்து நிறுத்தினான். 'அண்ணே இங்கிட்டு வாங்க பின் வாசல் கூடி போவம்... முன் வாசல் வழியா போனா அக்கா வையும்..'

மெக்கானிக் சிரித்தவாறு மந்திரசாமியை தொடர்ந்து பின்வாசலை நோக்கி நகர்ந்தான்.

********

'எலேய்... புதுசா ஒரு வில்லங்கம்லே.. அதனால நா இப்ப சொல்றத கவனமா கேளுங்க' என்றவாறு துவங்கி தன்னுடைய திட்டத்தை விளக்கினான் ஏழுமலை..

அவன் முடிக்கும்வரை காத்திருந்த நால்வர் அடங்கிய அவனுடைய கூட்டாளி கூட்டம் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டது.

'என்னலேய்.. பிசாச கண்டாமாதிரி முளிக்கீங்க? முடியுமா, முடியாதா?'

'அதுக்கில்லண்ணே.. நீங்க இல்லாம எப்படி...? இதுவரைக்கும் நாங்க தனியா செஞ்சதில்லையேண்ணேன்.. அதான்..'

'எலேய்... தடிப்பயலுவளா இதுக்கா ஒங்கள இவ்வளவு வருசமா கூட வச்சிருக்கேன்... என்னைய அந்த பய பாத்துட்டான்னா வேற வெனையே வேணாம்லே... பெறவு ஊருக்கு போய் ச்சேந்தாப்பலதான்..' என்று எரிந்து விழுந்தான் ஏழுமலை அக்கம்பக்கம் பார்த்தவாறு. நல்லவேளையாக அந்த காலை நேரத்தில் பூங்கா ஓரிருவரைத் தவிர வெறிச்சோடி கிடந்தது.

ஒரு சில நிமிட ஆலோசனைக்குப் பிறகு கூட்டாளிக் கும்பலுள் ஒருவன், 'சரிண்ணே.. முடிச்சிருவோம்... நீங்க இங்கனயே இருங்க.. முடிச்சிட்டு வந்துட்டு பேசிக்குவம்... நீங்க சொன்ன அடையாளத்த வச்சிக்கிட்டு மொகத்த பாத்துக்கிட்டுருக்க முடியாதுல்லண்ணே அதான்.....'

'சரிண்ணே.. அந்த அய்யாவோட வேற யாராச்சும் இருந்தா என்னண்ணே ச்செய்ய? அப்புறம் அந்த டிரைவர் பய... அவன் எங்கள்ல யாராச்சும் ஒருத்தன அடையாளம் பாத்து சொல்லிருவானே.. அதுக்கென்னச் செய்ய?' என்றான் வேறொருவன்.

அவன் கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்தாலும் ஏழுமலை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எரிச்சலுடன் அவனைப் பார்த்தான். 'எலேய்.. இதயெல்லாமா சொல்லிக்கிட்டிருப்பாக... அவன் கார விட்டுட்டு ஓடிட்டா விட்டுருங்க.. இல்லையா அவனையும் போட்டுருங்க..' என்றவன், 'எலேய்.. உள்காயம் மட்டுந்தான்.. சாகடிச்சிராதீங்கலே... அந்தய்யா மட்டுந்தான் இருப்பாகன்னுதான் கேள்வி... கூட யாராச்சும் இருந்தா என்ன செய்யன்னு யோசிச்சி எதுக்குலே மண்டையிடி... பொம்பளையாருந்தா விட்டுருங்க.. மத்தபடி யாராருந்தாலும்.. அந்தய்யாவுக்கு நேர்ந்ததுதான்... என்னச் செய்ய... அது அந்தாளோட தலையெழுத்துன்னு நினைச்சிக்கிர வேண்டியதுதான்...'

கூட்டாளிக் கும்பல் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புல்தரையில் வைத்திருந்த சாக்கு பைகளை தோள்களில் சுமந்தவாறு வெளியேறியது.. அவர்கள் வெளியேறி சில நிமடங்கள் கழித்து ஏழுமலை சிந்தனையுடன் மீண்டும் ஒருமுறை தொலைபேசி கூண்டை நோக்கி நடந்தான்.

தொடர்ந்தான்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

வணக்கமுங்கோவ்......
அய்யா இ.பி.கோ 40 ஆலோசனைக்கூட்டத்த ரொம்ப ஜோரா கொண்டுபோறீக!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சிவா,

இ.பி.கோ 40 ஆலோசனைக்கூட்டத்த ரொம்ப ஜோரா கொண்டுபோறீக!//

அப்படியா? நன்றி:)

siva gnanamji(#18100882083107547329) said...

sivagnanamji யில் siva மட்டுமே பதிவில் வருவது ஏன்?

டிபிஆர்.ஜோசப் said...

sivagnanamji யில் siva மட்டுமே பதிவில் வருவது ஏன்? //

தெரியலையே.. நானும் இது வேற யாரோன்னுல்ல நினைச்சேன்:)

நீங்க எப்படி ஒங்க பெயர குடுக்கறீங்களோ அப்படித்தான வரும்?

உங்க ப்ரொஃபைல க்ளிக் பண்ணாலும் NOT FOUNDனு வருதே..