4.5.07

சூரியன் 197

சோமசுந்தரமும் அவருடைய ஒரே மகள் பூர்ணிமாவும் ஹாலுக்குள் நுழைய நாடார் புன்னகையுடன் தன் மகள் வயதொத்த பூர்ணிமாவைப் பார்த்து புன்னகைத்தார். 'வாங்கம்மா.. வர்ற வழியில என்னெ பத்தி டாக்டர் சொல்லாம இருந்துருக்க மாட்டாரே... நல்லபடியா சொன்னாரா... இல்லே...'

பூர்ணிமா தன் தந்தை வழியாக மட்டுமில்லாமல் ராசம்மாள் பிரசவத்திற்காக தங்களுடைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததிலிருந்தே சிலுவை மாணிக்கம் நாடாரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். தன் தந்தையைப் போலல்லாமல் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய சுய முயற்சியால் செல்வந்தரானவர் அவர் என்பதை கேள்விப்பட்டிருந்ததிலிருந்தே அவர் மீது ஒரு தனி மரியாதையும் அவளுக்கிருந்தது. அவருக்கும் தன் தந்தைக்குமிடையில் அதிகார போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது என்பதும் அவளுக்கு தெரிந்திருந்தது.

'இங்க பார் பூர்ணி.. நாடார் நம்மள மாதிரி படிச்ச குடும்பத்துலருந்து வந்தவர் இல்ல.... He is a self made man... That shows not only in the way he speaks but also in his dealings... His way of approaching a problem at times might irritate you... அப்பா இதுவரைக்கும் அவரெ டாலரேட் பண்ணிக்கிட்டிருக்கேன்னா அது அவர் கிட்டருக்கற பத்து பர்சண்ட் ஷேர் மட்டுமில்ல... He is a powerful person in his Nadar community which
has a sizable percentage of holdings in our Bank... அவங்கள பொருத்தவரைக்கும் நம்ம பேங்க் அவங்க கம்யூனிட்டியோட சிம்பல் மாதிரி... போர்ட்ல அவங்களோட ரெப் நம்ம நாடார்... Though none of the board members relishes his way of talking.. we have no other alternative... but to tolerate him... இது போறாதுன்னு போர்ட்ல கொஞ்சம் கொஞ்சமா அவரோட ஃப்ரெண்ட்ச கொண்டு வர ஆரம்பிச்சிருக்கார்... அப்படி போன வருசம் போர்ட்ல நுழைஞ்சவர்தான் இந்த செட்டியார்... சிட்டியிலருக்கற பெரிய பாத்திரக் கடையோட ஓனர்... நமக்கு ஈக்வலா இல்லன்னாலும் சிட்டியில அவரும் ஒரு பெரிய புள்ளின்னு சொல்லலாம்... நாடார மாதிரியே படிப்பு இல்லை... போர்ட்லயும் ஜாஸ்தி பேச மாட்டார்... நாடார் என்ன சொல்றார்னு பாத்து அதுக்கு ஏத்தா மாதிரி பேசுவார்... நம்ம ஃபேமிலிக்கப்புறம் இந்த ரெண்டு பேருக்கும்தான் சைசபிள் ஹோல்டிங்ஸ் இருக்கு..அதனால at no point should you antagonise them.' என்று வரும் வழியில் தன்னுடைய தந்தை கூறியது நினைவுக்கு வர புன்னகையுடன் நாடாரைப் பார்த்தார். 'சேச்சே தப்பா எதையும் சொல்லலை அங்கிள்...' என்று நிறுத்தி, 'நல்லதாவும் சொல்லலை' என்றாள் ஒரு விஷமப்
புன்னகையுடன்..

நாடார் உரக்க சிரித்தார். 'பரவால்லையே டாக்டர் நல்லாத்தான் ட்ரெய்னிங் குடுத்துருக்கார். சரிம்மா வாங்க... மொதல் தடவையா வந்துருக்கீங்க.. ஆனா டைம்தான் நல்லால்லை...' என்றவர் தயங்கி நின்ற தன் நண்பரைப் பார்த்தார். 'என்ன செட்டியாரே என்ன சைலண்டாருக்கீங்க...? இவங்கதான் டாக்டர் எடத்துல போர்ட்ல இனிமே... படிச்ச பொண்ணு... அதுவும் சின்ன வயசு.... நமக்கு தோன்ற மாதிரியே இவங்களுக்கு
தோனாதுய்யா.... நாம நெனச்சிருக்கறது நடக்கணும்னா இனி இவங்களும் ஒத்துக்கணுமே... ஒரு சலாம் போட்டு வைங்க... என்ன நான் சொல்றது?'

என்னதான் நீ டாக்டரோட பொண்ணாருந்தாலும் ஒனக்கு வயசு பத்தாதும்மா என்று மறைமுகமாக தன்னை எச்சரிப்பதாக உணர்ந்தாள் பூர்ணிமா.

இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஓரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்தாள். நீ நினக்கறததான் நானும் நினைக்கறேன்...கவலைப்படாதே... என்றவாறு அவரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள்.. I can manage him Dad... என்பதுபோல் அவருடைய கையைப் பிடித்து அழுத்தினாள்...

செட்டியார், 'வணக்கம்மா...' என்று அவளுக்கு வணக்கம் செலுத்த, 'என்ன அங்கிள்.. இந்த ஃபார்மாலிட்டியெல்லாம் வேணாமே... நா இன்னும் அஃபிஷியலா போர்ட்ல நுழையலையே... நீங்க ரெண்டு பேரும் மனசுவச்சாத்தான் அது நடக்கும்..' என்ற பூர்ணிமா, 'என்ன டாட்...' என்று தன் தந்தையை பார்த்தாள் புன்னகையுடன்...

'தோ பார்றா... புலிக்கி பொறந்தது பூனையாகுமாங்கறாப்பல..' என்று சிரித்தவாறு மீண்டும் மெத்தையில் அமர்ந்தார் நாடார்.

சோமசுந்தரமும் பூர்ணிமாவும் தயங்கியவாறு நிற்க, 'என்ன டாக்டரே... என்ன தயங்கறீங்க... இங்கன ஒக்காந்து பேசறதுதுதான நம்ம வழக்கம்? இது ஆஃபீசில்லையேய்யா....?' என்றவாறு இருவரையும் பார்த்தார் நாடார்.

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார். 'ச்சேச்சே அதெல்லாம் இல்லை அங்கிள்... I am comfortable... It's ok..' என்றவாறு அவள் மெத்தையில் அமர நாடார் வாய்விட்டு சிரித்தார். பூர்னிமா குழப்பத்துடன் தன் தந்தையை பார்த்தாள். அவர் தோள்களைக் குலுக்கியவாறு கேலியுடன், 'நாடாருக்கு இங்க்லீஷ்னா புடிக்காது பூர்ணி...'

நாடார் மேலும் உரக்க சிரித்தார். 'ச்சேச்சே எதுக்கு டாக்டர் மறைக்கறீங்க? நமக்கு தமிழ தவிர வேறெந்த மொளியும் புரியாதும்மா.. அதான் காரணம்.. தோ இருக்காரே நம்ம தோஸ்த்து... இவருக்கு புரியும்... ஆனா பேச வராது....' என்றவர் திரும்பி தன் நண்பரைப் பார்த்தார். 'என்ன செட்டியாரே... அதான் இன்னைக்கி ஹிந்து பேப்பர்ல படிச்சத சொன்னீங்களே... அத வச்சி சொல்றேன்.'

அவர் ஹிந்து பத்திரிகை என்றதுமே சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார். 'ஆமா நாடார்... நீங்க சொன்னது நல்லதாப்போச்சி.... நானும் படிச்சேன்.. அத படிச்சதுலருந்து பூர்ணிமாவும் ரொம்பவும் டென்ஷனாருக்கா... இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க..'

நாடாரின் முகம் சட்டென்று சீரியசானது..'இனி என்னத்தைய்யா ச்சொல்றது? அந்த லிங்கம் இப்படி ச்செய்வார்னு நா கனவுலயும் நெனக்கலையே... நீரு வேல செஞ்சி கிளிச்சது போறும்னு வீட்டுக்கு அனுப்பிற வேண்டியதுதான்.' என்றார் கோபத்துடன்.

சோமசுந்தரம் இடைமறித்தார். 'நாடார்... எனக்கென்னமோ சுந்தரலிங்கம் இப்படி பேசியிருப்பார்னு எனக்கு படலை... அதனால இத முழுசா விசாரிக்காம அவர் மேல ஆக்ஷன் எதையும் எடுக்க வேணாம்னு நினைக்கறேன்.. முதல்ல நாம இன்னைக்கி மாதவனுக்கு பதிலா யார போடலாம்னு முடிவு பண்ணுவோம்... இந்த ப்ரெஸ் மீட் விஷயத்த யார ஆக்டிங் சேர்மனா செலக்ட் பண்றமோ அவர்கிட்ட விட்டுருவோம்...'

நாடார் சோமசுந்தரத்தையும் அவருக்கருகில் அமர்ந்திருந்த பூர்ணிமாவையும் பார்த்தார். 'நீ என்னம்மா சொல்றே...?' என்றார் சட்டென்று..

அவருடைய கேள்வியை சிறிதும் எதிர்பாராமல் அமர்ந்திருந்த பூர்ணிமா திடுக்கிட்டு, 'என்னையா அங்கிள்?' என்றாள்... 'நா இன்னைக்கி சும்மா ஒரு அப்சர்வராத்தான் வந்தேன்..'

நாடார் குழப்பத்துடன் சோமசுந்தரத்தைப் பார்க்க பூர்ணிமாக உதடுகளைக் கடித்தவாறு, 'ஒரு... ஒரு பார்வையாளராத்தான் வந்தேன் அங்கிள்' என்றாள் ஒரு அசட்டு புன்னகையுடன்...

நாடார் சிரித்தார். 'இந்த காலத்து புள்ள... சுத்தமா தமிழ்ல பேசறது கஸ்டமாத்தான் இருக்கும்.. நம்ம ராசியும் இப்படித்தான்...' பிறகு சீரியசாக, 'இல்லம்மா நீங்களும் இப்பவே மெம்பர்னு நினைச்சிக்கிட்டு சொல்லுங்க... ஒங்கப்பா சொல்றாப்பல செஞ்சிருவமா?' என்றார்.

பூர்ணிமா ஒரு நிமிடம் யோசித்தாள். இதுதான் நாம் எடுக்கப்போகும் முதல் முடிவு.. இதில் குழப்பமிருக்கலாகாது. தன்னுடைய தந்தை சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தது அவளுக்கு... எந்த ஒரு சூழலிலும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழு அதனுடைய தினசரி நடவடிக்கைகளில் தலையிடலாகாது என்பதை பல மேனேஜ்மெண்ட் புத்தகங்களில் வாசித்திருக்கிறாள். தன்னுடைய மருத்துவமனையின் அன்றாட அலுவல்களிலும்
அவளோ அவளுடைய தந்தையோ ஒரு இயக்குனர் என்ற முறையில் தலையிட்டதில்லை... அததற்கு அதிகாரிகள் அமைத்திருந்த சிறு சிறு குழுக்களே அவற்றை மேற்பார்வையிடுவது வழக்கம்... அவர்களால் தீர்க்க முடியாத விஷயங்கள் மட்டுமே இயக்குனர் என்ற முறையில் அவளிடம் வரும்.. அப்போதும் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இயக்குனர் குழுவில் விவாதித்தே எந்த முடிவையும் எடுப்பது வழக்கம்... ஆகவே வங்கியின்
விஷயத்திலும் ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுப்பதைப்பற்றி வங்கியின் இயக்குனர் குழு முடிவெடுப்பது சரியல்ல என்ற ரீதியில் தன் தந்தை கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்தாள். 'அப்பா சொன்னதுக்காக சொல்லல அங்கிள்... ஆனா சுந்தரலிங்கம் சார் மேல ஆக்ஷன் எடுக்கற பொறுப்ப நாம எடுத்துக்க வேணாம்னுதான் தோனுது..'

'ச்சரியா சொன்னம்மா... நாந்தாம் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... கடன் குடுக்கறது பேங்கு... அத அடைக்கறதுல கொஞ்சம் முன்ன பின்ன ஆவத்தான் ச்செய்யும்.. அதுக்காக ஆள வச்சி அடிக்கறதுங்கறதல்லாம் சரிங்கறாப்பல பேசினதத்தான் என்னால தாங்கிக்க முடியலம்மா... அதான் சட்டுன்னு கோவம் வந்துருச்சி...' என்ற நாடார் சோமசுந்தரத்தைப் பார்த்தார். 'டாக்டரே... ஒம்ம பொண்ண நீரு போர்ட்ல போடலாம்னு சொன்னப்போ எனக்கு கொஞ்சம் தயக்கமாத்தான்யா இருந்திச்சி... சின்ன பொண்ணாச்சேன்னு யோசிச்சேன்... ஆனா ஏற்கனவே ஒங்க ஹாஸ்ப்பிடல் போர்ட்ல இருந்துருக்கில்ல...அதான் கரெக்டா சொல்லிருச்சி... ச்சரிய்யா... அப்படியே செஞ்சிருவம்.. இப்ப நாம வந்த வேலைய பாப்பம்... என்ன செட்டியாரே...?' அவர் முடிப்பதற்குள் தலையை பலமாக ஆட்டிய செட்டியாரைப் பார்த்து சிரித்தார் நாடார். 'நீர் வேறய்யா... நம்ம தோஸ்த்துங்கறதுக்காக சொல்றீரா..இல்ல...'

'இல்ல நாடார். டாக்டரோட டாட்டர் சொன்னதுலயும் நியாயம் இருக்கே...' தன் ஆங்கில புலமையை மறைமுகமாக காட்ட முயன்ற செட்டியாரைப் பார்த்து கண்ணடித்தார் நாடார்... 'டாக்டரோட டாட்டர்... அதாவது டாக்டரோட மகள்.. சரிதானய்யா... ஒமக்கும் இங்க்லீஷ் நல்லாவே வருதுய்யா...ஜமாய்ங்க..' என்றவாறு கூட்டத்தை சம்பிரதாயமாக துவக்கி வைத்து 'எனக்கென்னமோ சேதுமாதவன சேர்மன் சேர்ல ஒக்கார வச்சா
சரிவராதுன்னு தோனுதுய்யா...' என்று துவக்கி வைக்க விவாதம் சூடுபிடித்தது...

மருத்துவமனை இயக்குனர் குழுவிலிருந்த நகரத்தின் மிக உயர்ந்த படிப்பும் அந்தஸ்த்தும் கொண்ட அங்கத்தினர்களுடன் விவாதித்து பழகிப்போயிருந்த தன் தந்தை கதர் சட்டை வேட்டியுடன் மிக எளிமையான கோலத்திலிருந்த நாடார் மற்றும் செட்டியாருடன் அவர்களுடைய லெவலுக்கு இறங்கிவந்து விவாதிப்பதை ஒரு புன்னகையுடன் அமர்ந்து கேட்கலானாள் பூர்ணிமா...

************

No comments: