10.5.07

சூரியன் 199

மகளின் திருமண வேலைகள் நிமித்தம் கடந்த இருதினங்களாக விடுப்பிலிருந்த பாபு சுரேஷ் அன்று அலுவலகம் செல்ல தீர்மானித்து குளித்து முடித்ததும் உணவு மேசையில் சென்றமர்ந்தார்.

இதை எதிர்பாராத சுசீந்தரா, 'என்னங்க இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க.. நீங்க இன்னைக்கிம் லீவுன்னுல்ல நினைச்சேன்... ப்ரேக் ஃபாஸ்ட் ரெடியாகலையே?' என்றால் பதறியவாறு..

பாபு மேசையின் மீது கிடந்த செய்தித்தாளை புரட்டியவாறு, 'காப்பி மட்டும் குடு.. முடிஞ்சா ப்ரெட் டோஸ்ட் போடு... இல்லன்னா பரவால்லை..' என்றார். அவருடைய பார்வையில் முதல் பக்கத்திலிருந்த புகைப்படம் பட்டதும் புரட்ட இருந்தவர் மீண்டும் அதைப் பார்த்தார். அருகிலிருந்த தலைப்பும் அவரை திடுக்கிட வைத்தது.

அவருடைய மனைவி அவசர, அவசரமாக கொண்டு வைத்த காப்பியையும் மறந்து அதை படிப்பதில் தீவிரமானார். அதை படித்து முடித்ததும் அவருக்கிருந்த பசியும் பறந்துபோனது. செய்தித்தாளை மடித்து தன் கைப்பெட்டியில் வைத்துக்கொண்டு எழுந்து நின்றார். 'சுசீ நா கெளம்பறேன்... ஒரு அர்ஜெண்ட் வேலையிருக்கு.'

சமையலறையில் ரொட்டித் துண்டுகளில் 'பட்டரை' தடவிக்கொண்டு நின்ற சுசீந்தரா திடுக்கிட்டு என்னாச்சி இந்த மனுசனுக்கு இப்பத்தான் ப்ரெட் டோஸ்ட் கேட்டார் என்று நினைத்தவாறு ஹாலுக்குள் நுழைந்து தன் கணவனைப் பார்த்தாள். 'என்னங்க திடீர்னு...இப்பத்தான ப்ரெட் டோஸ்ட் கேட்டீங்க?'

சட்டென்று எரிச்சல் வர அதை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்... இதே இரண்டு நாளைக்கு முந்தைய பாபுவாக இருந்தால்...'சொன்னேன் அதுக்கென்ன இப்ப? ஆஃபீசுக்கு போறப்ப எதையாவது சொல்லி என் மூட கெடுக்காத' என்று எரிந்து விழுந்திருப்பார்....


'இல்ல சசி... ஒரு முக்கியமான வேலை... மறந்துட்டேன்... சாயந்தரம் வந்து சொல்றேன்.. இப்ப வரேன்.. ப்ரெட் டோஸ்ட ரம்யாவுக்கு குடு...வா வந்து கேட்ட மூடிக்கோ...' என்றவாறு கார் சாவியை வாசல் கதவின் உட்புற சட்டத்திலிருந்த கொக்கியிலிருந்து எடுத்துக் கொண்டு வாசற்கதவைத் திறந்தார்.

அங்கே...

போர்ட்டிக்கோவில் அப்போதுதான் வந்து நின்ற காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கிய காவல்துறை ஆய்வாளர் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார், தயங்கி நின்று திரும்பி தன் மனைவியைப் பார்த்தார். 'ரம்யா எங்க... அவள மேலயே இருக்கச் சொல்லு... நீயும் கிச்சன்லயே இரு... நா கூப்பிட்டதுக்கப்புறம் வந்தா போறும்..'

'எ....என்ன சொல்றீங்க... ஏன்?' என்றவாறு அவரை நோக்கி செல்ல முயன்ற சுசீயை தன்னுடைய கோபப் பார்வையால் தடுத்து நிறுத்திய பாபு சுரேஷ் வாசலை நோக்கி திரும்பி ஒரு செயற்கை புன்னகையுடன், 'யார பாக்கணும் சார்... I am Babu Suresh' என்றார்.

வாசலைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த காவல்துறை ஆய்வாளர் மணி வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டார். பிறகு பாபு சுரேஷை கூர்ந்து பார்த்தார். 'ஒங்களதான் பாக்க வந்தேன் சார்... If you don't mind.. .I would like to ask you some questions...'

பாபு சுரேஷ் சோபாவைக் காட்டினார். 'Of course... சொல்லுங்க... என்ன தெரியணும்?'

அவர் காட்டிய சோபாவில் அமர்ந்த ஆய்வாளர், 'ஒங்களுக்கு மிஸ்டர் முரளிய தெரியுமா?' என்றார் சட்டென்று... அடுத்த நொடியில் பாபு சுரேஷின் முகத்தில் தோன்றி மறைந்த கலவரத்தைக் குறித்துக்கொண்டார்.

பாபு சுரேஷ் சமாளித்துக்கொண்டு. 'தெரியும்.. எதுக்கு கேக்கீங்க?' என்றார்.

'அவருக்கும் ஒங்களுக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதும் இருக்கா?'

'தனிப்பட்ட விரோதம்னு இல்லை... ஆனா அவர் மேல வருத்தம் இருக்கறது உண்மைதான்..'

'ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?'

பாபு சுரேஷ் இத்தனை அமைதியாக பேசி பார்த்திராத சுசீந்தரா இதுவே பழைய பாபுவாக இருந்தால் என்று நினைத்தாள்...'சார் அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம்... அவன் ஒரு ரவுடி...' என்று முரளியைப் பற்றி தாறுமாறாக வாய்க்கு வந்தபடி பேசியிருப்பார்... ஆனால் அவருடைய மகள் ரம்யாவின் வீட்டிலிருந்து வெளியேறிய நாள் முதல் அவருடைய நடவடிக்கைகள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மாறியிருந்ததை அவளால் உணர முடிந்தது..

'போன சனிக்கிழமை பகல் அவரும் அவரோட யூனியன் மெம்பர்சுல சிலரும் வந்து என்னெ என் ரூம்லருந்து வெளிய வர முடியாம சுமார் ரெண்டு மணி நேரம் கேரோ பண்ணாங்க... அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்...' என்ற பாபு சுரேஷ் சற்று நிறுத்தி, 'சார் தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேக்கலாமா?'

ஆய்வாளர் புன்னகையுடன் பாபுவைப் பார்த்தார். 'எதுக்கு இந்த கேள்வின்னு கேக்கறீங்க? சரிதானே?'

ஆமாம் என்று தலையை அசைத்தார் பாபு.

ஆய்வாளர் எழுந்து நின்றார். பிறகு பாபுவின் முகத்தைப் பார்த்தவாறு, 'முரளிய இன்னைக்கி காலைல யாரோ ரெண்டு ரவுடிப் பசங்க...அடிச்சி போட்டுட்டாங்க... அவர் இப்ப ICU வுல இருக்கார்...' என்றார்... பிறகு பாபு எதிர்பாராத நேரத்தில் கோபத்துடன், 'நீங்க இன்னைக்கி காலைல எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?' என்றார் உரக்க..

அவருடைய உரத்த குரல் மாடியில் தன்னுடைய அறையிலிருந்த ரம்யாவை இழுக்க அவள் மாடியிலிருந்தவாறே பார்த்துவிட்டு படிகளில் இறங்கி ஓடிவந்தாள்.... 'என்னப்பா... எதுக்கு இவங்க நம்ம வீட்டுக்குள்ள வந்து சத்தம் போடறாங்க?' என்றவாறு தன்னை நோக்கி வந்த தன் மகளை நெருங்கி ஆதரவாய் தோளை தொட்டார் பாபு... 'Nothing Ramya... nothing serious... நீ கிச்சன்ல போயி அம்மா கூட இரு.... இவர அனுப்பிட்டு வந்து சொல்றேன்.'

அவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு சமையலறையை நோக்கி அவள் திரும்ப ஆய்வாளருடைய கேலி சிரிப்பு அவளை தடுத்து நிறுத்தியது...'அது அவ்வளவு ஈசி இல்ல சார்... ஒங்க மேல சந்தேகப் பட்டு முரளியே புகார் செஞ்சிருக்காரு... சொல்லப் போனா அவருடைய புகாரை வச்சே ஒங்கள கைது பண்ண முடியும்.... ஆனா..... நீங்க ஒரு ரெஸ்பான்சிபிள் பேங்க் ஆஃபீசர்ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் உங்கக் கிட்ட இப்படி பேசிக்கிட்டிருக்கேன்...'

ஆய்வாளரின் கேலிப் பேச்சு அவரை உசுப்பி விட்டாலும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டார் பாபு... கைது என்ற வார்த்தை ரம்யாவையும் சமையலறையில் நின்றிருந்த சுசீந்தராவையும் கலவரப்படுத்தியது...

அந்த நேரம் பார்த்து வாசலில் அழைப்பு மணி ஒலிக்க எல்லோருடைய கவனமும் வாசலை நோக்கி திரும்பியது... ஒருக்கழித்து மூடப்பட்டிருந்த கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தவரைப் பார்த்து பாபு சுரேஷ் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி, மகள் இருவரும் கலக்கமடைந்தனர். 'இந்த நேரம் பார்த்தா சம்மந்தி வரணும்?' என்று முனுமுனுத்தாள் சுசீந்தரா.

வந்தவர் ஹாலில் நின்றிருந்த காவல்துறை ஆய்வாளரையும் பாபுவையும் கலவரத்துடன் நின்றிருந்த ரம்யாவையும் பார்த்தார். 'என்ன சம்மந்தி என்ன நடக்குது இங்க? எதுக்கு போலீஸ் வந்திருக்கு.. நீங்க எல்லாரும் எதுக்கு என்னைய பாத்ததும் இப்படி திகைச்சிப் போய் நிக்கறீங்க?' என்றவருக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றார் பாபு..

****

சுந்தரலிங்கத்தின் அறையை அடைந்து உள்ளே நுழைந்ததும் அவர் முன்னாலிருந்த கடிதத்தை மும்முரமாக படித்துக் கொண்டிருக்கவே சற்று தயங்கி நின்றார்... 'You want me to come later Sir?' என்றார் தயக்கத்துடன்..

அவருடைய குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த சுந்தரலிங்கம், 'நோ, நோ.... நா உங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்... இது ஒங்களுக்கு எழுதுன கடிதம்தான்.. ஐ மீன் எச்.ஆர் டிப்பார்ட்மெண்டுக்கு...' என்றவாறு கடிதத்தில் ஒப்பிட்டு நீட்டினார்.

'எனக்கா? என்ன லெட்டர் சார்?' என்றவாறு அவர் நீட்டிய கடிதத்தை மேலோட்டமாக படித்தவர் அதிர்ச்சியுடன், 'என்ன சார்... எதுக்கு இப்ப திடீர்னு?' என்றார்.

சுந்தரலிங்கம் புன்னகையுடன், 'முதல்ல ஒக்காருங்க சொல்றேன்.' என்று அவர் அமரும்வரை காத்திருந்தார்.

'சொல்லுங்க சார்... இன்னைக்கி காலைல வந்த ப்ரெஸ் ரிப்போர்ட் ஒங்கள இந்த முடிவுக்கு தூண்டியிருந்தா அதுக்கு தேவையே இல்லைன்னு சொல்வேன்... எங்க எல்லாருக்கும் நீங்க அப்படி சொல்லியிருக்க மாட்டீங்கன்னு நல்லாவே தெரியும்... So if you feel that you should resign on that count... I would say... It is not necessary.'

சுந்தரலிங்கம் இல்லை என்று தலையை அசைத்தார். 'இல்ல ஃபிலிப்....அதுவும் ஒரு காரணம்தான்.. .ஒத்துக்கறேன்... ஆனா அது மட்டுமே காரணம் இல்லை... I have been thinking about this ever since Madhavan joined as Chairman... Right from the incident that took place at the airport and on that night at the hotel bar...' ஃபிலிப் சுந்தரம் அதிர்ந்துபோய் அமர்ந்திருக்க சுந்தரலிங்கம் எழுந்து அறையை ஒரு வலம் வந்தார். அவர் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தது ஃபிலிப்புக்கு புரிந்தது. ஆகவே அவராக பேசட்டும் என்று காத்திருந்தார்.

'என்னோட மனநிலையையும் நீங்க புரிஞ்சிக்கணும் ஃபிலிப்... மாதவனுக்கும் சேதுவுக்கு இடையிலருக்கற இந்த ஈகோ க்ளாஷ இனியும் என்னால பொறுத்துக்க முடியாதுன்னு நினைக்கேன்... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்கற கோல்ட் வார்ல நாம ஏன் பகடைக்காயா ஆவணும்னு நான் நினைக்கறேன்... அதுவுமில்லாம ஆறு மாசம் சேர்மன் சேர்ல ஒக்காந்துருந்துட்டு மறுபடியும் இன்னொரு சேர்மன் கிட்ட கைகட்டி பதில் சொல்ற லெவலுக்கு இறங்கணுமான்னும் யோசிக்கேன்... போறா கொறைக்கு இப்ப மாதவன் இல்லை... அங்க அவரோட சன் மேல போலீஸ் ஆக்ஷன்... அரெஸ்ட்... பெயில்னு... இப்பத்தைக்கி அவரால திரும்பி வரமுடியும்னு எனக்கு தோனலை.... அவர் இல்லாத நேரத்துல எப்படியும் அந்த சீட்ல ஒக்காந்துரணும்னு துடியா துடிக்கார் சேது... நேத்து ராத்திரி கூப்ட்டு நா அந்த சேர்ல ஒக்கார்றதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணணும்னு வேற ரிக்வஸ்ட் பண்றா மாதிரி ஒரு மிரட்டல்...'

ஃபிலிப் சுந்தரம் அப்படியா என்பதுபோல் அவரை வியப்புடன் பார்த்தார்... ஆனால் பதில் பேசவில்லை....

'ஒங்கக்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லணும்னு நினைக்கேன்...' என்றவாறு தன்னுடைய இருக்கைக்கு திரும்பிய சுந்தரலிங்கம் இவரிடம் சொல்வதா வேண்டாமா என்பதுபோல் தயங்குவதை கவனித்தார் ஃபிலிப்... ஆனால் தொடர்ந்து மவுனம் காத்தார்.

'போன சனிக்கிழமை நான் அந்த கொல்கொத்தா பிராஞ்ச் விஷயமா அவர் வீட்டுக்கு போயிருந்தேன்னு சொன்னேனே ஞாபகமிருக்கா?' என்றார் சுந்தரலிங்கம்.

'ஆமா சார்... சொன்னீங்க... ஏன் அதுல ஏதும் பிரச்சினையா?'

'இல்லை சார்... அதான் முடிஞ்சிதே... அதில்லை... நா சொல்ல வந்தது சேது அன்னைக்கி எங்கிட்ட சொன்ன ஒரு விஷயத்த பத்தி...'

'எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க...'

'சொல்லணும் சார்... அன்னைக்கி ராத்திரி அக்காடமியில நம்ம குன்னக்குடியோட கன்சர்ட்டுக்கு ஏற்பாடு பண்ணிருந்தேன்... சேது நல்லா குடிச்சிட்டு ஒளற ஆரம்பிச்சதால... நா சபாவுக்கு போணும்.. டைம் ஆயிருச்சின்னு சொன்னேன்.. அது ஒரு ஃபண்ட் ரெய்சிங் பங்க்ஷன்னுங்கறதையும் சொன்னேன்..'

'சரி...'

'அதுக்கு சேது எவ்வளவு ஃபண்ட்ஸ் எதிர்ப்பாக்கறீங்கன்னு கேட்டார்... நா பதில் சொல்லாம நின்னேன்.. அப்புறம் என்ன ஒரு பத்து லட்சம் இருக்குமான்னு கேட்டார்... நா குடிச்சிட்டு நிக்கறவர்கிட்ட என்னத்த பேசறதுன்னு இருந்தேன்... அந்த பணத்த நீங்க சீட்ல இருந்துக்கிட்டே சம்பாதிச்சிரலாமே சார்ன்னு சேது சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் என்ன பதில் பேசறதுன்னே தெரியல ஃபிலிப்... அன்னைக்கே தீர்மானம் பண்ணிட்டேன்... மாதவன் வந்து சார்ஜ் எடுத்ததும் அதிக நாள் இங்க இருக்கக் கூடாதுன்னு.... எனக்கென்னமோ அவர் எதையோ மனசுல வச்சிக்கிட்டுத்தான் அப்படி பேசியிருப்பாரோன்னு தோனுது... நா கஷ்டப்பட்டு தெய்வ காரியத்துக்கு பணத்த திரட்ட இந்த மனுசன் அத நான் வேற தகாத வழியில கலெக்ட் பண்ணதுன்னு பேச ஆரம்பிச்சா அப்புறம் என் கதி அதோகதிதான்.... அதான் போறும்னு தோனுது.... அத்தோட இன்னைக்கி காலைல இந்த ரிப்போர்ட்டும் வந்ததும்.... இதுக்கும் மேல காத்துக்கிட்டிருக்க வேண்டாம்னு எனக்கு மட்டுமில்லாம கனகாவுக்கும் தோனிருச்சி... அதான்... இன்னைக்கி காலைல வந்ததும் மொதல் வேலையா இத எழுதிட்டேன்.. இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல ஃபிலிப் .... நீங்களும் மாத்த முயற்சிக்காதீங்கன்னு கேட்டுக்கறேன்...'

அவர் பேசி முடித்து சில நிமிடங்கள் வரை இருவரும் ஒன்றும் பேச தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருக்க அறைக்கதவைத் திறந்துக்கொண்டு யாரோ நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு இருவரும் வாசலை நோக்கி திரும்பினர்... மத்திய ஆய்வு இலாக்காவின் தலைவர்... டிஜிஎம்... அவருடைய முகத்தில் அளவுக்கு மீறி தெரிந்த பதற்றத்தைப் பார்த்தா ஃபிலிப்... 'என்ன ராகவன் என்ன விஷயம்... ஏன் இப்படி ஓடிவரீங்க?'

'சார்... நம்ம ஈ.டிய போலீஸ் அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபீசுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காங்களாம் சார்... அவர் வீட்லருந்து நம்ம சுபோத்துக்கு ஃபோன் வந்திருக்கு....'

'என்னது... சேதுமாதவனையா? ஏன்... என்ன விஷயம்... யார் ஃபோன் பண்ணா... சுபோத் எங்க?' என்று சரமாரியாக இருவரும் மாறி, மாறி கேள்விகளைக் கேட்க, ' சுபோத் வெளியிலதான் நிக்கார் சார்... I will call him inside..' என்றவாறு ராகவன் வாசலை நோக்கி ஓடினார்.

தொடரும்...

நாளை சூரியன் நிறைவுபெறும்... தாற்காலிகமாக...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

இத்தனை நாள் பழகிய பாத்திரங்கள்...
சில வெளியேறும்;சில உள்ளே போகும்;சில வாழ்வு பெறும்...
இறுதிப் பகுதியை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்!

Meenapriya said...

என்ன இப்போ முடிக்க போறீங்களா... எல்லார பத்தியும் ஒரு முடிவு சொல்லாம முடிக்க விட்டுடுவோமா?