9.5.07

சூரியன் 198

சேதுமாதவன் தினமும் இரவில் க்ளப்பில் தன் சிநேகிதர்களுடன் சீட்டாடுவதும் மூச்சு முட்ட குடிப்பதும் வாடிக்கையென்றாலும் அடுத்த நாள் காலையில் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு எழுந்துவிடுவார். ஆனால் அதற்குப் பிறகு அன்று நாள் முழுவதும் எந்த அதிகாரி அல்லது எந்த ஊழியருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆராய்வதிலேயே ஆழ்ந்துவிடுவார்.

வங்கியில் முதல்வருக்கு அடுத்தவர் என்ற பதவி அவருக்கு பல சலுகைகளை அவருக்கு அளித்திருந்தது. அதில் ஒன்று அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதது. வீட்டிலிருந்தவாறே அலுவலக கோப்புகளை பார்க்கிறேன் என்ற பெயரில் பல நாட்கள் பகலுணவுக்கு பிறகே அலுவலகம் செல்வார். அவர் எந்த நேரத்தில் அலுவலகத்திலிருப்பார் என்பது அவருக்கு அடுத்தபடியாக இருந்த சிஜிஎம்களான சுந்தரலிங்கத்திற்கும் ஃபிலிப் சுந்தரத்திற்குமே தெரியாது. அவருடைய மனைவி மாயா கேட்கும்போதெல்லாம், 'ஆ ரெண்டு சுந்தரன்மாரும் உண்டுல்லே... அவரு நோக்கிக்கோளும் என்பார் கேலியுடன். மலையாளத்தில் சுந்தரன்மார் என்றால் அழகானவர்கள் என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அவர் அதற்கு நேர்மறையான அர்த்தத்தில் அதாவது இரண்டு கோமாளிகள் என்று பொருள்பட கூறுகிறார் என்பது மாயாவுக்கு மட்டுமல்ல அவருடைய அந்தரங்க வேலையாள் திருநாவுக்கரசுக்கும் தெரியும்... மாயா தலையடித்துக்கொள்வாள்... திருவோ சமயம் பாத்து ஒன்னெ போட்டுக்கொடுக்காம போகமாட்டான்லே இந்த திரு என்று மனதுக்குள் கறுவுவான்.. அவன் வேலை செய்தது சேதுமாதவனிடம்தான் என்றாலும் அவரை எந்த நேரத்திலும் காட்டிக்கொடுக்க தயாராயிருந்தான்.

அன்றும் அப்படித்தான். காலையில் எழுந்ததுமே முந்தைய தினம் நடந்த நிரூபர்கள் கூட்டத்தில் அவர் கூறியவற்றை சுந்தரலிங்கம் கூறியதாக அவர் ஏற்பாடு செய்திருந்தபடி பத்திரிகைகளில் வர அதை அனுபவித்து படித்துவிட்டு சுந்தரலிங்கத்தின் நிலையை குறித்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இன்னையோட முடிஞ்சது ஒன் ச்சாப்ட்டர்... பத்து லட்சம் தரேன் போயிருடான்னு சொன்னப்பவே போயிருந்தா இந்த நிலமை வந்துருக்காதுல்லே... வேணும்டா ஒனக்கு... சோ.. ஒரு லைன் க்ளியர்... அடுத்தது அந்த ஃபிலிப்தான்... ஆனா லிங்கத்த மாதிரி அத்தன ஈசியா இவனெ கழட்டி விட முடியாது.. யோசிக்கணும்.. இன்னும் நல்லா யோசிக்கணும்.. சோமசுந்தரத்துக்கு பதிலா அந்த நாடார் போர்ட்லருந்து போயிருந்தா இவன் கதையையும் முடிச்சிருக்கலாம்... அதுக்கு ஒரு வழிய கண்டுபிடிச்சிட்டா நம்ம வேல ஈசியாயிரும்....

அத்தோட அந்த முரளியோட கதையையும் இன்னைக்கே முடிச்சிரணும்... ராஸ்கல் சோமசுந்தரத்துக்கு யோசிக்கறதுக்குக் கூட டைம் இல்லாம திடீர்னு போர்ட்லருந்து ரிசைன் பண்றதுக்கு அந்த ஃபேக்ஸ்தான காரணம்? அதுமட்டும் வராம இருந்துருந்தா எப்படியாவது அவர் அடுத்த நாள் பேப்பர்ல வராம தடுத்திருப்பாரே... அதுக்கப்புறம் அடுத்த போர்ட் மீட்டிங் வரைக்கும் டைம் கிடைச்சிருக்குமே... அவனெ கைய கால ஒடச்சி கொஞ்ச நாளைக்கு வீட்டுலயோ முடக்கி போட்டாத்தான் புத்தி வரும்... ஆனா நாம மாட்டிக்கக் கூடாது... நாம சொன்னா மாதிரியே அந்த பத்மநாபன் போலீசுக்கு போன் போட்டுருப்பான்... என்று நினைத்த சோமசுந்தரம் சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்தார். இந்நேரம் வேலைய முடிச்சிருக்கணுமே... ஏன் இன்னமும் நமக்கு போன் பண்ணாம இருக்கான்? அவனோட கால் வந்தாத்தான ஆஃபீசுக்கு கிளம்ப முடியும்?

வாசலில் அழைப்பு மணி ஒலிப்பது கேட்டது... மாடியிலிருந்தவாறே கீழே திருநாவுக்கரசு வாசல் கதவை நோக்கி விரைவதைப் பார்த்தார். ஒருவேள பத்மநாபன் நேராவே வந்துட்டானோ? அதுவும் நல்லதுக்குத்தான்... நாடார் விஷயத்துலயும் ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கலாமே... என்று நினைத்தவாறு எழுந்து நிற்க கீழே வாசற்கதவு திறக்கப்பட்டு திருவை பின்னுக்கு தள்ளிவிட்டு திபுதிபுவென்று உள்ளே நுழைந்த நால்வரடங்கிய காவலர் குழுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றார்.... அவர்கள் நடுவே கைகளில் விலங்குடன் பத்மநாபன்!

*******

மைதிலி மருத்துவமனையைச் சென்றடைந்தபோது இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சீனியின் அறையை எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று மலைத்துப் போனாள்.

மருத்துவமனையின் வரவேற்பறையே ஒரு பெரிய கால்பந்தாட்ட மைதான அளவில் இருந்தது. அறை முழுவதும் ஒரு பெரிய திரையரங்கின் நேர்த்தியில் அழகுபடுத்தப்பட்டிருந்ததையும் அங்கு நிறைந்திருந்த மேல்தட்டு மனிதர்களையும் கண்டு மிரண்டுபோனாள்.

நல்லவேளையாக அவள் அறைக்குள் நுழைந்ததும் வாசலருகே கவலையுடன் நின்றிருந்த வத்ஸலாவை பார்த்துவிட்டாள். அவளும் மைதிலியைப் பார்த்ததும் ஓடிவந்து அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டாள். 'ரொம்ப தாங்ஸ் மைதிலி... நீ மட்டும் வரலைன்னா நா என்ன செஞ்சிருப்பேன்னு தெரியலை.. முதல் மாடியிலருக்கற ICUல அம்மாவ வச்சிருக்கு. இன்னமும் அம்மா கான்சியசுக்கு வரல. அப்பா அங்கதான் இருக்கார். அப்பாவோட பேங்க் டைரக்டர் ஒருத்தருக்கு சென்னையில பெரிய ஹாஸ்ப்பிடல் இருக்காம். அங்கருந்து ரெண்டு சீனியர் டாக்டர்ஸ் வந்துருக்காங்க. நா நீ வருவேன்னு சொல்லிட்டு கீழ வந்தேன்.. சீனி எட்டாவது மாடியில இருக்கான். He is ok now... இந்தா அவன் ரூமோட விசிட்டர்ஸ் பாஸ்... இத வச்சிக்கிட்டாத்தான் அந்த ஃப்ளோருக்குள்ளயே விடுவாங்க... நீ நேரா அங்க போய் அவன் கூட பேசிக்கிட்டுரு... நேத்து ராத்திரி பெட்ல கொண்டு வந்து போட்டதுலருந்து ஒன் பேர சொல்லித்தான் புலம்பிக்கிட்டே இருக்கான். அப்புறம் டாக்டர் அவனுக்கு செடேட்டிவ் இஞ்சக்ஷன் குடுக்க வேண்டியதா போச்சி... இப்பவும் அநேகமா தூங்கிக்கிட்டுத்தான் இருப்பான். அவனா முழிக்கறவரைக்கும் அவன எழுப்பிராத. நா அம்மாவ ரூமுக்கு போறேன்...' என்றவள் மைதிலியின் கரங்களை விட்டுவிட்டு லிஃப்ட்டை நோக்கி விரைந்தாள்.. பிறகு சட்டென்று நின்று மைதிலியிடம் திரும்பி வந்தாள். 'மைதிலி சீனிக்கு அம்மாவோட விஷயம் இதுவரைக்கும் தெரியாது. நீயும் சொல்லிராத... அப்பா எப்ப தேவைப்படுதோ அப்ப சொல்லிக்கலாம்னு சொல்லிட்டார்... He is so attached to Amma... அவங்களுக்கு ஸ்ட்ரோக்குன்னு சொன்னா அதுக்கு நாந்தானே காரியம்னு அப்செட்டாயிருவான்... அதனால be careful... you should tactfully handle him...' என்றவள்... 'நீ இங்க வந்துருக்கறது ஒங்க வீட்ல தெரியுமா மைதிலி?' என்றாள் மிருதுவாக.

மைதிலி சோகத்துடன் தலையை அசைத்தாள். 'இல்ல வத்ஸ்... But that's not going to make much difference now... I'll tell them when I feel like telling them... You needn't worry about that... But.....'

'என்ன மைதிலி என்ன தயங்கறே.. சொல்லேன்...'

'ஒங்க அப்பாவ நினைச்சித்தான்.....'

வத்ஸலா மைதிலியின் கரத்தைப் பற்றி ஆறுதலாக அழுத்தினாள். 'நீ பார்த்த அப்பா இல்ல மைதிலி இப்பருக்கற அப்பா... போன ஒரு வாரத்துல அப்பா ரொம்பவே மாறிப்போய்ட்டார்... அவர் சொல்லித்தான் நான் ஒன்னையே வரவச்சேன்... அதனால Don't worry about him...' என்றவள், 'எனக்கு நேரமாச்சு மைதிலி... நீயே சீனியோட ரூமுக்கு போயிருவ இல்ல... இந்த பாஸ்ல ஒன் பேரதான் எழுதியிருக்கேன். யாராச்சும் கேட்டா ஃபேமிலின்னு சொல்லிரு... என்ன... நா அப்புறமா ஒன் செல்லுல கூப்பிடறேன்..'

ஓட்டமும் நடையுமாக லிஃப்ட்டை நோக்கி விரைந்தவளைப் பார்த்தவாறே நின்றிருந்த மைதிலி மெள்ள தான் செல்ல வேண்டிய லிஃப்ட்டை தேடிப் பிடித்து எட்டாவது அறையை அடைந்தாள். நல்லவேளையாக சீனியின் அறைக்குள் நுழையும் வரை அவளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முன்னெச்சரியைக வத்ஸ்லா கொடுத்த விசிட்டர்ஸ் பாசை தன்னுடைய சூரிதாரில் குத்தியிருந்ததும் வசதியாக இருந்தது.

இரண்டு கை மணிக்கட்டுகளிலும் பாண்டேஜுடன் கட்டிலில் கிடந்த சீனிவாசனைக் கண்டதும் கண்கள் இரண்டும் கலங்கி பார்வையை மறைக்க இதுக்கு முக்கிய காரணகர்த்தா தாந்தானே என்று நினைத்து கலங்கி நின்றாள் மைதிலி....

இவன ஜுஹூ பேச்சில பாத்து பேசி ஒரு வாரம் இருக்குமா? அன்னைக்கி ஆரம்பிச்ச இந்த வாக்குவாதம் இங்க கொண்டு போயி விட்டுருக்கு... ஒரே வாரம்... ஏழு நாள்.... என்னல்லாம் நடந்திருச்சி.... இந்த அளவுக்கு வந்ததுக்கப்புறம் என்னால இனியும் இவன் இல்லாத ஒரு வாழ்க்கையை செலக்ட் பண்ண முடியுமா? நா எடுக்கற எந்த டிசிஷனும் இவனையும் இவன் குடும்பத்தையும் அஃபெக்ட் பண்ணுமே... சரோஜா ஆண்டி மேல உயிரையே வச்சிருந்த சீனியால அவங்க இந்த நிலைக்கு ஆனானதுக்கு இவளும் ஒரு காரணம்தானே நினைப்பானோ... அதுவே அவனுக்கு நம்ம மேல ஒரு வெறுப்ப உண்டாக்கிருமோ.... பகவானே... அத மட்டும் என்னால தாங்கிக்கிற முடியாதுப்பா....

வாசற்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு கலங்கி நின்ற கண்களை துப்பட்டாவால் துடைத்தவாறு திரும்பினாள்... அழகிய புன்னகையுடன் நர்ஸ்... நிச்சயம் மராத்தி இல்லை.... மலையாளியாருக்குமோ... இன்னைக்கி எல்லா ஹாஸ்ப்பிட்டல்லயும் இவங்கதானே.... என்றவாறு மைதிலியும் சிரமப்பட்டு புன்னகைத்தாள்.. 'Are you related to him?' என்ற நர்சின் பேச்சில் தொனித்த மலையாள வாடை தான் நினைத்தது சரிதான் என்று அவளை நினைக்க வைத்தது.... 'Yes she is my Fiancee' என்ற குரல் கேட்டு அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையைப் பார்த்தாள் மைதிலி. 'Is it? Congrats!' என்றவாறு நர்ஸ் படுக்கையை நெருங்க... புன்னகையுடன் அவளை நோக்கி வா என்று கையசைத்த சீனியை இது தேவையா என்பதுபோல் ஆயாசத்துடன் பார்த்தாள் மைதிலி...

*********

ராசம்மாள் உடைமாற்றிக்கொண்டு தன்னுடைய முதல் மாடி அறையிலிருந்து கீழே ஹாலுக்கு வந்தாள். அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டது. அவளுடைய உதடுகள் புன்னகையில் விரிந்தன. அம்மாவுக்கு கிச்சன்ல பாத்திரங்களோட போராடலன்னா தூக்கம் வராது. எத்தன சொன்னாலும் ஒரு வேலைக்காரிய வச்சிக்க மனசு வராது. நம்ம வேலைய நாமதான் பாக்கணும் ராசிம்மா.. இன்னைக்கி பணம், காசு வந்துருக்கலாம்... அதுக்காக கால் மேல கால் போட்டுக்கிட்டு ஒக்காந்துருக்க முடியுமா என்ன? ஆடி ஓடி வேல செஞ்சாத்தான் ராத்திரி படுத்ததும் தூக்கம் வரும்... அம்மாவ மாத்தவே முடியாது... 'அம்மா நா வக்கீல் அங்கிள பாத்துட்டு அப்படியே கடைக்கி போயிருவேன்... ஒங்க பேரனுக்கு நீங்க இருந்தாத்தான் போறுமே.. நா சாயந்தரம் வர்றதுக்கு லேட்டானாலும் ஆகும்... அப்பா டாக்டர் அங்கிள பாத்துட்டு கடைக்கி வந்துருவாய்ங்க..' என்றவள் வாசலைப் பார்த்தாள். மந்திரச்சாமி காருடன் போரடிக்கொண்டிருப்பது தெரிந்தது... கூலண்ட் வந்திருக்கும் போல.... சரி வரட்டும் என்று நினைத்தவாறு சோபாவில் அமர்ந்தாள்...

இன்னைக்கி எப்படியும் வக்கீல் அங்கிள பாத்து பேர மாத்தற விஷயத்த ஃபைனல் செஞ்சிரனும்.. அப்புறம் அந்த சேட்டுக்கிட்டருந்து வாங்கன ஷேர் டிரான்ஸ்ஃபர் விஷயம். அதையும் பேசி முடிச்சிரணும். தாயும் மகளும்னாலும் வாயும் வயிரும் வேறதான? அப்பா கம்பெனிக்கு ஒரே வாரிசு நாமதான்னாலும் நமக்கு வரவேண்டிய பங்குகளுக்கு நாமளே பணத்த திரட்டறதுதான் நல்லது. இந்த வீடு நம்ம பேர்லதான இருக்கு? வேணும்னா இத பேங்குல மார்ட்கேஜ் பண்ணி பொரட்டுவோம்... அந்த ஷேர் ப்ரைஸ்ல (price) பாதியவாவது நம்ம பணமாருக்கணும்.. அப்பத்தான் நாமளும் ஒரு ஷேர் ஹோல்டர்ங்கற ஒரு நெனப்பு, ஒரு இன்வால்வ்மெண்ட் வரும்... இதுக்கு அப்பா என்ன சொன்னாலும் கேக்கக்கூடாது... we should stand on our own legs...

ராசேந்திரனுக்கு சரியான பதிலடி குடுக்கணும்னா இப்ப இருக்கற கணவன் - மனைவிங்கற பந்தத்த அறுத்துரனும். இன்னைக்கி அங்கிளோட ஒக்காந்து எந்நேரமானாலும் டைவர்ஸ் பேப்பர்ச ஃபைல் பண்ண வச்சிரணும். பேர மாத்தறமோ இல்லையோ இந்த தேவையில்லாத பந்தத்திலருந்து விடுதலை வாங்கிரணும்.

'ராசிக்கா... வண்டி ரெடி.'

நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த ராசம்மாள் தன் எதிரில் இருந்த மந்திரச்சாமியைப் பார்த்தாள். 'போலாம்...' என்றவாறு கைப்பையையும் தன் கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் திருமண பதிவு சான்றிதழ் அடங்கிய கோப்பையும் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்...

'அக்கா நம்ம கட மேனேசர் அய்யா வந்துருக்காக... அய்யாவ தேடிக்கிட்டு வந்தாங்களாம்...'

ராசம்மாள் வியப்புடன் வாசலில் நின்றிருந்த ஹோட்டல் நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் மேலாளரைப் பார்த்தார். 'என்ன அங்கிள் ஏதாச்சும் அர்ஜண்ட் விஷயமா? அப்பா மதியத்துக்கு மேலத்தான வருவாக....'

'ரெண்டு மூனு செக்குல கையெழுத்து வாங்கணுமா... ராத்திரியே வாங்கிரணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்... அய்யாவும் நீங்களும் வெரசா பொறப்பட்டுட்டதால வாங்க முடியல... இன்னைக்கி கொடுத்துரணும்... அதான் கையெழுத்த வாங்கிட்டு போயிரலாம்னு.....'

'நா கையெழுத்து போட்டா போறுமா? எனக்கு பவர் இருக்கா?'

மேலாளர் தலையைச் சொறிந்தார். 'எனக்கு தெரிஞ்சி ஒங்களுக்கு பவர் இல்லம்மா.... அப்படியே இருந்தாலும் ஒங்க கையெழுத்த பேங்க்ல இதுவரைக்கும் குடுக்கல....அதன் யோசிக்கேன்.. '

'அதனாலென்ன? செக்க கையெழுத்துப் போட்டுக்குடுத்தா இன்னைக்கே போட்டுரப் போறாங்க?' என்றவாறு ராசம்மாள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இப்பவே மணி பத்துக்கு மேல... இனியும் லேட்டான்னா வக்கீல் அங்கிள புடிக்க முடியாது.... 'சரி அங்கிள் நீங்களும் கார்லயே வாங்க... போற வழியில பேசிக்குவோம்...' அவருடைய பதிலுக்கு காத்திராமல் ராசம்மாள் போர்ட்டிக்கோவில் நின்றிருந்த காரின் பின் கதவைத் திறந்துக்கொண்டு அமர்ந்தாள்.. மந்திரண்ணே... போற வழியில அங்கிள எறக்கிறணும்... வண்டிய எடுங்க... டைம் ஆச்சி..'

மேலாளர் அதிர்ச்சியுடன் தயங்கி நிற்பதைப் பார்த்தாள். 'என்ன அங்கிள் வாங்க... ஏறுங்க..'

'இல்லம்மா... அய்யாவுக்கு தெரிஞ்சா....'

ராசம்மாள் சிரித்தாள்... 'தெரிஞ்சாத்தானே... வாங்க..'

மேனேஜர் அப்போதும் தயக்கத்துடன் மந்திரச்சாமியைப் பார்த்தார்... இவன் சொல்லிருவானே என்பதுபோ... மந்திரச்சாமி இதில் எனக்கு சம்மதமில்லை என்பதுபோல் நேரே சாலையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்....

பிறகு முன்சீட்டில் மந்திரசாமிக்கு அருகில் அமர்வதற்காக முன் கதவைத் திறக்க முயன்ற மேலாளரை ராசம்மாள் 'இங்க ஒக்காருங்க அங்கிள்' வற்புறுத்தி பின் சீட்டில் தனக்கருகில் அமரச் செய்தாள்... 'அப்பத்தானே பேசறதுக்கு சவுகரியம்..'

மந்திரச்சாமி வாகனத்தை முடுக்கியதிலிருந்தே அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. 'பரவால்லையே நானே கொஞ்சம் வேகமா போங்கன்னு சொல்ல இருந்தேன்...... டைம் ஆயிருச்சின்னே... இன்னும் பதினஞ்சி நிமிசத்துக்குள்ள நாம அங்கருக்கணும்... பாத்துக்குருங்க... போற வழியில அங்கிள எறக்கிறணும்...'

ஏற்கனவே மேலாளரை பின்சீட்டில் அமர்த்தியதில் கடுப்பிலிருந்த மந்திரச்சாமி ஆக்சிலரேட்டரில் தன்னுடைய கோபத்தைக் காட்ட வண்டி சீறிக்கொண்டு காம்பவுண்ட் வாசலை விட்டு வெளியேறி சாலையில் இறங்கி வேகம் பிடித்தது... சற்று நேரத்தில் காத்திருந்த ஆபத்தை உணராமல்...

தொடரும்...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

அடப் பாவமே......!

ஒண்ணுமறியாத கமலி........
இப்போ மானேஜரா ?

TBR. JOSPEH said...

வாங்க ஜி!

ஒண்ணுமறியாத கமலி........
இப்போ மானேஜரா ? //

என்ன பண்றது? அதத்தான் விதிங்கறது...