29.4.06

சூரியன் 66

உடை மாற்றிக்கொண்டு படியிறங்கி வரவேற்பறைக்கு வந்த சேது மாதவன் வீட்டினுள் திரும்பி, ‘எடோ திரு. எந்தா செய்ன? ரெடியாயோ?’ என்று இரைந்தார்.

வீட்டினுள் இருந்து ஓடி வந்த திருநாவுக்கரசு, ‘சார் நானும் உங்களோட வரணுமா? சொல்லவேயில்லையே சார்.’ என்றான்.

சேது மாதவனுக்கு எரிச்சலாக வந்தது. ஒரு வேளை நாமதான் இவங்கிட்ட சொல்லவே இல்லையோ. இவன் இருக்கற கோலத்த பார்த்தா இவன் கிளம்பறதுக்குள்ள லேட்டாயிருமோ? சரி.. நாம மட்டும் போலாம்.

‘எடோ தானும் வரணும்னு நான் கொறச்செ மும்பு பறஞ்சில்லே..?’ என்றார் எரிச்சலுடன்.

‘இல்ல சார். சொல்லியிருந்தா இந்த கோலத்துல நிப்பனா? நான் மேடத்தோட ரூம க்ளீன் பண்ணி ரெடி பண்ணிக்கிட்டிருந்தேன் சார். இன்னம் கொஞ்சம் வேலையிருக்கு. நீங்க மட்டும் போங்க சார். கார தொடச்சி ரெடியா வச்சிருக்கேன். இன்னைக்கி சண்டே இல்லையா டிரைவரும் இல்லை.’

சேது மாதவன் அதையும் மறந்துபோயிருந்தார். அலுவலக டிரைவரை வரச் சொல்ல வேண்டும் என்று காலையில் நினைத்தார். எல்லாம் இந்த முட்டாள் சுரேஷால் வந்த வினை. அதிகாலையிலேயே ‘என் பொண்ண காணோம் சார்’னு கூப்டு எல்லா காரியத்தையும் கன்ஃப்யூஸ் பண்ணி விட்டுட்டான். இப்ப என்ன பண்றது? பேசாம  நாமளே வண்டிய எடுத்துக்கிட்டு போவேண்டியதுதான்.

‘சரிடோ.. நீ வீட்ட க்ளீன் பண்ணிட்டு என் ரூம்லருந்து ரெண்டு பாட்டில எடுத்து கூலர்ல வை. அப்புறம் ஒரு ரெண்டு மூனு பேர் சாப்பிடறா மாதிரி சமையல் பண்ணி வை. வெஜ், நான் வெஜ் ரெண்டும் வேணும். ஏழு ஏழரைக்குள்ள ரெடி பண்ணிரு. வீட்ல எல்லாம் இருக்கில்லே?’

திருநாவுக்கரசு திரு திரு என விழித்தான். என்னாச்சி சாருக்கு? இதையெல்லாம் காலையிலயே சொல்ல வேணாமா? மேடம் வந்ததுக்கப்புறம் எல்லாத்தையும் வாங்கிக்கிரலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தா இப்படி திடீர்னு குண்ட போடறாரு.

‘எந்தாடோ.. நீ முளிக்கிற முளிய பார்த்தா வீட்ல ஒன்னும் இல்லேன்னு தோனுது.’

ஆமா சார் என்பதுபோல் தலையைச் சொறிந்தான் திரு.

‘சரி.. தான் தாஜ் இல்லேங்கில் ச்சோழாவ்ல போய் அவசியமுள்ளதொக்க வாங்ச்சோ.. கேட்டோ.. பைசா உண்ட்டிலே..?’

திரு பிரகாசமானான். ‘இருக்குது சார். நீங்க போய்ட்டு வாங்க. நா எல்லாத்தையும் வாங்கி வச்சிடறேன்.’ என்றான் இந்த அளவுக்கு சார் விட்டாரே என்ற நினைப்பில்.

‘சரி. நான் ஏர்போர்ட்லருந்து சேர்மனோட ஹோட்டலுக்கு போய் அங்கருந்து கிளம்பறப்ப கூப்டறேன். நீ போய்ட்டு வேகம் வா..’ என்றவாறு வாசலை நோக்கி சென்றவர் நின்று , ‘எடோ யாராவது எனக்கு ஃபோன் பண்ணா ஏர்போர்ட்டுக்கு போயிருக்கேன்னு சொல்லிராத.. முக்கியமா நேத்தைக்கு வந்திருந்தாரே சுந்தரலிங்கம் அவர்கிட்ட. வேற யாராச்சும் ஃபோன் பண்ணா யாருன்னு கேட்டுட்டு என் செல்லுக்கு ஃபோன் பண்ணு. என்ன?’ என்றார்.

திருநாவுக்கரசு, ‘சரி சார்.’ என்றான் யோவ் இரு உனக்கு வேட்டு வைக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்தவாறு.

கையில் கார் சாவியுடன் சேது மாதவன் வெளியேறி வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு செல்ல திருநாவுக்கரசு உடனே ஹாலில் இருந்த தொலைப்பேசியில் சுந்தரலிங்கத்தை அழைத்தான். அவர் மேல் அவனுக்கு ஏற்கனவே அபிரிதமான மதிப்பு இருந்தது. அவரை ஒதுக்கிவிட்டு புது சேர்மனை வரவேற்க சேதுமாதவன் செல்கிறார் என்பதை அவன் ஊகித்திருந்தான்.

மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும் சேது மாதவன் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற விஷயத்தை கடகடவென ஒப்பித்து முடித்து இணைப்பைத் துண்டித்ததும்தான் அவனுக்கு நிம்மதியாயிருந்தது.

ஊர விட்டு ஊர் வந்து பண்ணாத ஃப்ராடெல்லாம் பண்ணி எங்க ஊர்ஆளுங்களையே கவுக்க பாக்கறியா என்று தன்னுடைய முதலாளியை நினைத்துக் கறுவிக்கொண்டே சேதுமாதவன் கூறியிருந்த பொருட்களை வாங்க தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வேலையாயிருந்த வேலையாட்களிடம் கூறிக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான் திருநாவுக்கரசு..

*******

‘யார் சார் ஃபோன்ல? பேசி முடிச்சிட்டு நீங்களே சிரிச்சிக்கிறீங்க?’ என்ற பிலிப் சுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

‘நம்ம சேதுவோட சர்வெண்ட் திருநாவுக்கரசு.’

‘என்னவாம்?’

‘வேறென்ன? நம்ம சேது ஏர்போர்ட்டுக்கு இப்பத்தான் கிளம்பிப் போறாராம். நான் ஃபோன் பண்ணா அவர் ஏர்போர்டுக்கு போயிருக்கார்னு சொல்ல வேண்டாம்னு சொன்னாராம். எப்படி இருக்கு பாருங்க? அப்படியாபட்ட ஆளுக்கு இந்த மாதிரி சர்வெண்ட்..’

பிலிப் ஒன்றும் பேசாமல் சாலையைப் பார்த்தார். அவர்கள் இருவரும் சுந்தரலிங்கத்தின் வீட்டில் குளித்துவிட்டு திரும்பி விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அனாவசியமாக சேது மாதவனுடன் மோதுவதில் அவருக்கு விருப்பமில்லை.

திரும்பி தன்னுடைய நண்பரைப் பார்த்தார். ‘சார் அவர் ஏர்போர்ட்ல வச்சி அனாவசியமா உங்ககிட்ட ஏதாச்சும் பேசினாலும் நீங்க அத பொருட்படுத்தக்ககூடாது. புது சேர்மன் முன்னால அன்ப்ளெசண்ட் சீன் க்ரியேட் பண்ணவேண்டாம்னு பாக்கறேன்.’

சுந்தரலிங்கம் வியப்புடன் அவரைப் பார்த்தார். ‘என்ன பிலிப், என்னபத்தி உங்களுக்கு தெரியாதா? அதுவுமில்லாம நம்ம ரெண்டு பேருக்குத்தான் சேர்மன் புதுசு. சேதுவுக்கில்லை. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில முன்னாலயே ஏதோ பிரச்சினை இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான சேர்மன் அவரோட ஃப்ளைட் டீடெய்ல்ச யாருக்குமே சொல்ல வேணாம்னு அவரோட பழைய பி.ஏ கிட்ட சொல்லியிருக்கார். சேதுவுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை.’

பிலிப் சிரித்தார். ‘நீங்க வேற சார். நீங்க சேர்மனோட பழைய பி.ஏ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டா மாதிரி அவர் நம்ம பேங்கோட சேர்மன் செக்கரியேட்டுல கேட்டிருக்க மாட்டாரா?’

சுந்தரலிங்கம் அதானே எனக்கு ஏன் இது தெரியாம போயிருச்சி என்று நினைத்தவாறு மவுனத்துடன் தலையை அசைத்தார்.

அவர்களுடைய வாகனம் விமான நிலைய வாசலை நெருங்கவும் மாதவனின் மும்பை விமானம் வந்தடைந்த அறிவிப்பு விமான நிலைய ஒலிபெருக்கியில் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கிய இருவரும் பரபரப்புடன் நுழைவு சீட்டைப் பெற்றுக்கொண்டு நுழைந்ததும் அவர்களுடைய பார்வையில் பட்டது சேது மாதவனும் அவருடைய மனைவியும் தான்.

********

‘இங்க பார் சீனி. நான் சொல்றத கேளு. நான் எங்காத்துக்கு போய்ட்டு வர வரைக்கும் க்ளினிக்ல இரு. நான் ராத்திரி எந்நேரமானாலும் திருப்பி உங்க ஆத்துல ஒன்ன கொண்டு விட்டுட்டுத்தான் போவேன். அடம்புடிக்காம நா சொல்றா மாதிரி செய். இல்லன்னா இனி ஒன்ன பாக்க வரவே மாட்டேன். என்ன சொல்றே?’

சீனிவாசன் அப்போதும் இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்திருந்தான்.

‘நீ இப்ப வரப்போறியா இல்லையா?’ என்று கோபத்துடன் இரைந்த மைதிலியை தலைநிமிர்ந்து பாராமல், ‘இல்ல மைதிலி நீ உங்க வீட்டுக்கு போ. சிவகாமி மாமி இன்னும் ஒரு அரை மணியில வந்திருவாங்க. என்ன பத்தி கவலைப்படாம நீ போ.. உங்க வீட்ல அப்புறம் என்னைய திட்டிக்கிட்டு இருப்பாங்க. மாமி வர்ற வரைக்கும் குர்க்கா இருக்கான் இல்ல? அவன் பார்த்துப்பான். ’ என்றான்.

மைதிலி விடுவதாய் இல்லை. அவளும் அவனருகில் சென்று புல்தரையில் அமர்ந்தாள். மாதவன் வீட்டு தோட்டத்தில் அவளுக்கு மிகவும் பிடித்தது மெத்தென்ற புல்தரைதான். ஆனால் அதுவும் அவளுக்கு இன்று முள்ளாய் குத்தியது. சீனிவாசன் இருந்த நிலையில் அவனைத் தனியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. வாசலில் நின்ற குர்க்காவால் எந்த பயனும் இல்லையென்று அவள் நினைத்தாள்.

சீனிவாசன் சலிப்புடன் தன் அருகில் அமர்ந்த மைதிலியைப் பார்த்தான். ‘Hey.. What happened? Are you not going?’

இல்லை என்று தலையை அசைத்தாள் மைதிலி. ‘நீ வர்றதானா போலாம். இல்லன்னா வேணாம். ஆனா ஒன்னு. நீ தாமசிக்கற ஒவ்வொரு நொடியும் அம்மாவும் அப்பாவும் அங்க டென்ஷனாயிட்டே இருப்பா, புரிஞ்சிக்கோ. மாப்பிள்ளையாத்துல வந்துட்டு திரும்பி போற சூழ்நிலை வந்துது.. அப்புறம் நாம ரெண்டு பேரும் சந்திச்சிக்கவே முடியாத சூழ்நிலை வந்தாலும் வந்துரும் சொல்லிட்டேன்.’

‘Now tell me. What should I do to prevent such a situation?’

மைதிலி குறும்புடன் அவனை திரும்பி பார்த்தாள். ‘பேசாம நா சொல்றத கேளு. புறப்பட்டு வா. நா வந்த டாக்சி இன்னும் வெளியதான் நிக்கிது. கிளம்பு.’

சீனிவாசன் சலித்தவாறே எழுந்து நிற்க முயன்று முடியாமல் கீழே விழப்போனான். மைதிலி சட்டென்று கைகளை நீட்டி அவனை அண¨த்துக்கொள்ள சீனிவாசன் அவளுடைய கைகளை உதறிவிட்டான். அவள் மீண்டும் அவனுடைய கைகளைப் பிடித்து தன் தோளில் சுற்றிப்போட்டுக்கொண்டு வாலை நோக்கி உதடுகளில் விரலை வைத்து விசில் அடிக்க வாயிலில் நின்ற குர்க்கா திரும்பிபார்த்தான்.

‘ஓ டாக்சிக்கோ அந்தர் பேஜ்னா’ என்று இருந்த இடத்திலிருந்தே மைதிலி இரைய குர்க்கா வாயில் கேட்டைத் திறந்து சாலையில் நின்ற டாக்சி ஓட்டுனருக்கு உள்ளே போ என்று சைகைக் காட்டினான்.

அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு டாக்சி  அடுத்த அரைமணியில்  செம்பூரில் இருந்த ராஜகோபாலன் மருத்துவமனை வாசலில் நின்றது. அதில் இருந்து சீனிவாசனை மெள்ள இறக்கி அவனுடைய இடுப்பை தன்னுடைய வலக்கரத்தால் வளைத்து  அணைத்தவாறே மைதிலி அழைத்துச் செல்ல அவ்வழியே கடந்து சென்ற ஒரு மாருதி எஸ்டீம் வாகனத்தில் இருந்த ஒரு குடும்பம் வாகனத்தை நிறுத்திவிட்டு  அவர்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தது.

‘ஏன்னா இது நாம பாக்கப்போற பொண்ணாட்டம் இல்லை? என்னன்னா இது கண்றாவி?’ என்றாள் மாப்பிள்ளையின் தாய்!


தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

mythili yin nalla manadhirku ippadi oru sodhanai thevaiya
ippa ava characetrai vaithu kodharap poranga

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

மைதிலியின் மனது தங்கம்தான். ஆனா அவளுக்கு அம்மா அப்பாவும் வேணும்.. தன்னுடைய காதலும் (காதலா நட்பா?அதுலயும் குழப்பம்) வேணுங்கறா மாதிரி ஒரு கன்ஃப்யூஸ்டாருக்காளே..

அதுக்கு இந்த் shock treatment தேவைதான்.