12.4.06

சூரியன் 60

காவல் நிலையத்திலிருந்து தொலைப் பேசி வந்ததிலிருந்தே தன்னுடைய முதலாளியின் மனநிலை முற்றிலும் மாறிப்போயிருந்ததை உணர்ந்துக்கொண்ட திருநாவுக்கரசு அவர் இருந்த முதல் மாடி அறை இருந்த திசைக்கே செல்லாமல் சமையலறையிலேயே இருந்தான்.

அன்று மாலை கொச்சியிலிருந்து விமானம் மூலம் வரவிருந்த சேது மாதவனின் மனைவியை அழைத்து வருவதற்கு வேறு செல்ல வேண்டுமே இந்த மனுஷனிடம் எப்படி போய் சொல்வது? என்று நினைத்தவாறு விரல் நகத்தைக் கடித்துக்கொண்டு யோசித்தான் திரு.

அவனுக்கு உதவி செய்ய நினைத்தாற்போல் ஹாலிலிருந்த தொலைப் பேசி அலற ஓடிச் சென்று எடுத்தான். கொச்சியிலிருந்து மேடம்தான். ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவாறு மாடியைப் பார்த்தான்.

அவன் நினைத்தாற்போலவே மாடியிலிருந்த கைப்பிடி கிராதியைப் பிடித்தவாறு குனிந்து தன்னை நோக்கிய சேது மாதவனிடம் 'மேடம்' என்று வாயை அசைத்தான். 'நீயே பேசு என்று அவரிடமிருந்து சிக்னல் வரவே ஒலிவாங்கியை செவியில் வைத்து பேச வாய் திறக்கும் முன்பே எதிர்முனையில், ‘எடோ திரு.. நீயல்லே..? எந்தா ஃபோன் எடுத்ததும் சம்சாரிக்காஞே..?’ என்று எரிச்சலுடன் மேடம் கூவ தன்னிச்சையாக ஒலிவாங்கியை செவியிலிருந்து சற்றே தள்ளிப் பிடித்தான்.

‘மேடம், மாடியிலிருந்த ஐயாவை கூப்பிடலாம்னு பார்த்தேன்.’

‘எந்து ஐயா? ஃபோன் எடுத்து ஹலோன்னு பறஞ்சிட்டு அயாள்டத்து ச்சோய்ச்சா போறே..?’

மேடத்தின் குணம் அவனுக்கு நன்றாகத் தெரியும். சட்டென்று மன்னிப்பு கேட்டுவிட்டால் அமைதியாகி விடுவார். எதிர்த்து ஏதாவது சாக்குபோக்கு சொன்னால் அவ்வளவுதான்... ஆகவே, ‘சாரி மேடம். மன்னிச்சிருங்க.’ என்றான் உடனே..

அவன் எதிர்பார்த்திருந்ததுபோலவே எதிர்முனையில் குரல் சற்றே இரங்கி ஒலித்தது. ‘சரி அது போட்டே. ஏர்ப்போர்ட்டுக்கு நீ மட்டும் வந்தா போறும் சேது வராண்டா.’

ஐயையோ இதென்ன தலைவலி? ஐயாக்கிட்ட போயி உங்கள மேடம் வரவேணாம்னு சொல்லிட்டாங்கன்னு எப்படி சொல்றது? மேடம் கொச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு புறப்பட்டுச் சென்றபோது கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைத்துப் பார்த்தான் திரு. அதன் கோபம் மேடத்துக்கு இன்னமும் தீரலைப் போலருக்கு..

‘மேடம் நா எப்படி ஐயாக்கிட்ட போயி நீங்க வரவேண்டாம்னு சொல்றது..?’ என்றவாறு மாடியை மீண்டும் பார்த்தான்.

‘அதெந்தா? அயாள விளிக்கி. ஞான் பறஞ்சோளாம்.’

அதற்கு முன்பே சேது மாதவன் படிகளில் இறங்கி வருவது தெரியவே அவன் ஒன்றும் பதில் பேசாமல் தன்னருகில் வந்த மாதவனிடத்தில் ஒலிவாங்கியைக் கொடுத்தான்.

எடுத்த மாத்திரத்திலேயே, ‘எந்தாடி..?  தான் ஏது ஃப்ளைட்ல வருநேன்னு ஞான் விளிச்சி தன்னோடு ச்சோய்க்கணோ?’ என்று எரிச்சலுடன் பேசிய முதலாளியைப் பார்த்துவிட்டு சரிதான் அடுத்த வாக்குவாதம் தொடங்கிருச்சி என்று நினைத்தான்.

எதிர் முனையிலிருந்து என்ன பதில் வந்ததோ சேது மாதவன் கையிலிருந்த ஒலிவாங்கியை நெறித்துவிடுவதுபோல் பார்ப்பதைப் பார்த்தும் பார்க்காததுபோல் சமையலறையை நோக்கி நடந்தான்.

அவன் பதவிசாக ஹாலைவிட்டு ஒதுங்கி செல்வதைக் கவனித்த சேது மாதவனின் உதடுகளில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அதுதான் திரு.. சமயம் அறிந்து நடந்துக்கொள்வதில் அவனுக்கு நிகர் அவன் தான்.

எதிர் முனையில் எஜமானியம்மா பயங்கர மூடில் இருக்கிறார் என்பது அவனுக்கு தெரிந்திருக்கும். அதை சரி செய்ய முதலாளி இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துத்தான் அந்த நேரத்தில் தான் அருகில் இருப்பது சரியாயிருக்காது என்று நினைத்து அவன் விலகிச் சென்றது அவருக்கு புரிந்தது.

‘எந்தா மாயே..  தான் இதுவரை மறந்திட்டில்லே..? ஷெமிக்கிடி.. ஞான் எத்தற பிராவிஷம் மாப்பு ச்சோய்க்கணும்? ஷரி.. மீண்டும் ச்சோய்க்காம். மாப்பு, மாப்பு, மாப்பு. மதியோ..’ என்றார் ஒரு போலி மரியாதையுடன். ஆனால் மனதுக்குள், ‘எடி பட்டி (பெண் நாய்). எனிக்கும் சமயம் வருவல்லோ? அப்போ  திரிச்சி தராது விடில்லேடி.. ஈ சேது.. விடில்லா..’ என்று மனைவியைக் கறுவினார். இப்போது அவருக்கு அவருடைய மனைவியின் தயவு தேவையிருந்தது. அவளை வைத்து இன்று மாலை ஒரு கேம் களிக்க வேண்டும். அதனால்தான் மனமில்லாவிட்டாலும் இறங்கிப் போய் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்.

அவர் எதிர்பார்த்தது நடந்தது. ‘ஷரி.. ஷரி.. ஷெமிச்சிருக்கின்னு.. ஞான் அஞ்சரை ஃப்ளைட்ல வருவா.. சேட்டன் ஏர்ப்போர்ட்லேக்கி வருந்நுண்டா?’ என்று இறங்கி வந்தாள் அவருடைய மனைவி மாயா தேவி.

‘அங்ஙண எறங்கி வாடி மோளே.. எறங்கி வா..’ என்று மனதுக்குள் மீண்டும் கறுவிய சேது, ‘அதே.. வராம்.’ என்ற ஒலிவாங்கியில் கூறியவர் குரலை இறக்கி, ‘மாயே இன்னைக்கி நம்ம புது சேர்மன் பம்பாயிலிருந்து அவரோட ஃபேமிலியோட வரார். அயாள்டெ ஒய்ஃப் ஒனக்கு பரிச்சயம்தானே..?’ என்றார்.

‘யாரு அந்த மேனா மினுக்கிதான? பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால பார்த்தது..அவளுக்கு என்னெ மறந்திருக்கும்.. ஆனா எனிக்கி அவள நன்னாய்ட்டு ஓர்மயிண்டு.. என்னெ லேடீஸ் க்ளப்புல தோல்ப்பிச்சவளாச்சே அவளு.. எங்ஙனெ மறக்கான் கழியும்?’

சேதுவின் உதடுகளில் ஒரு குரூரப் புன்னகை தவழ்ந்தது. அன்றைய தினத்தை மறக்க முடியுமா? தி க்ரேட் மாயா தேவியே அவமானப்பட்டு நின்ற தினமாயிற்றே! அப்போது சேது மாதவனும், மாதவனும் துணைப் பொது மேலாளர் நிலையில் இருந்தவர்கள். சென்னையில் அடையாறு லேக் ஏரியாவில் ஒரே காலனியில் குடியிருந்தவர்கள். அலுவலகத்தில் சேதுவுக்கும் மாதவனுக்கும் போட்டியென்றால் குடியிருப்பிலிருந்த லேடீஸ் சங்கத்தில் அவருடைய மனைவிமார்கள் இருவருக்கும் இடையில் போட்டி..

இந்த இரு ஜோடிகளுக்குமிடையில் இருந்த போட்டியில் இறுதியில் வெற்றி பெற்றது மாதவன் - சரோஜா ஜோடிதான்.. அலுவலகத்திலும் மற்றும் குடியிருப்பிலும். மாதவன் அப்போது நடந்த பதவி உயர்வு நேர் காணலில் வெற்றி பெற்று டெபுடி பொது மேலாளரானார். லேடீஸ் க்ளப்பில் இரண்டே ஓட்டு வித்தியாசத்தில் சரோஜா மாதவன் தலைவர் பதவியைப் பிடித்தார்.

அலுவலகத்தில் தனக்கு கிடைத்த தோல்வியின் துக்கத்தை தன் மனைவிக்குக் கிடைத்த தோல்வியின் சந்தோஷத்தில் கரைத்தார் சேது.. அத்தனை ஒற்றுமை கணவன் மனைவியருக்கு இடையே!

அவரவர்கு ஏற்பட்ட தோல்விக்கு வஞ்சம் தீர்க்க நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில்தான் திடீரென்று தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வேறொரு வங்கியில் வைஸ் பிரசிடெண்டாக மும்பை சென்றார் மாதவன்.

பதினைந்து வருடங்கள்...

அன்று துணைப் பொது மேலாளராகவிருந்த சேது இன்று அதே வங்கியில் எம்.டி.. அதே வங்கிக்கு சேர்மனாக நாளை முதல் மாதவன்...

சேது- மாயா தேவி ஜோடிக்கு தங்களுடைய கசப்பான தோல்விகளுக்கு வஞ்சம் தீர்க்க இன்னமும் வலுவான காரணம் இருந்தது..

வஞ்சம் தீர்க்க அவர்கள் நடத்தவிருந்த திட்டத்தின் முதல் எப்பிசோடுதான் மாதவனை வரவேற்க கணவன் – மனைவி ஜோடியாய் போய் நிற்பதென தீர்மானித்தது..

‘ஷெரி மாயே.. சேர்மன் வரும்போ நம்மளு ரெண்டு பேரும் ரிசீவ் செய்யாம். தான் ஒரு காரியம் ச்செய்யி. உன்னோட ஃப்ளைட் சீக்கிரம் வந்நாலும் ஏர்போர்ட் லவுஞ்சிலே வெய்ட் ச்செய்யி. ஞான் வந்நதும் வெளியில வந்நா மதி.. ஞான் வந்திட்டு தண்டெ செல்லுல விளிக்காம்.’  என்று இணைப்பைத் துண்டிக்க முயன்றார்.

‘ஏய்.. வைக்கான் வரட்டே..’ என்ற மனைவியின் குரலைக் கேட்டு நிதானித்து, ‘எந்தா மாயே?’ என்றார்.

‘பாக்கி எக்ஸ்சிக்யூடிவ்சா.. அவரு வருன்னில்லே?’

‘யாரு  ரெண்டு சுந்தரன் மாரா?’ என்றார் கேலியுடன். அவர் குறிப்பிட்டது பிலிப் சுந்தரம் மற்றும் சுந்தரலிங்கம். சேதுவும், மாயாவும் அவர்கள் இருவரையும் கேலியுடன் இவ்வாறு அழைப்பதுதான் வழக்கம். சுந்தரன் என்றால் மலையாளத்தில் அழகன் என்று பொருள். அவர்களுடைய நகைச்சுவை உணர்வை பாராட்டி இருவரும் உரக்க சிரித்தனர்.

‘அதே..’ என்றார் மாயா தேவி..

‘நான் கூப்டாத்தானே..?’ என்றவாறு மீண்டும் சிரித்தார் சேது.

சமையலறையிலிருந்து ‘நல்ல ஜோடிங்கடா நீங்க ரெண்டு பேரும்.. விஷப் பாம்புங்க..’ என்று முனுமுனுத்தான் திருநாவுக்கரசு..

*******

பிலிப் சுந்தரம் தன்னுடைய நண்பர் சுந்தரலிங்கத்தின் வீட்டையடைந்ததும் காரை சாலையில் நிறுத்திவிட்டு நண்பரை செல் ஃபோனில் அழைத்தார். அனாவசியமாக வீட்டுக்குள் நுழைந்து நேரத்தை வீணாக்க வேண்டாமே என்ற நினைப்பில். தூரத்தில் தெரு முனையில் அவருடைய காரியதரிசியின் வாகனம் வருவது தெரிந்தது.

‘என்ன பிலிப், எங்க இருக்கீங்க?’ என்ற மறுமுனையிலிருந்து குரல் வர, ‘இங்கதான் சார் உங்க வீட்டுக்கு முன்னால நிக்கறேன்.’ என்றார்.

‘நான் வர்ற வழியிலதான் இருக்கேன். அப்போல்லோ வரைக்கும் போயிருந்தேன்.’

பிலிப் திகைப்புடன், ‘அப்போல்லோவா, என்ன சார்? யாருக்காவது ஒடம்பு சரியில்லையா?’ என்றார்.

‘ஆமாம் பிலிப். நம்ம வந்தனாவுக்குத்தான்.’

‘வந்தனாவுக்கா? என்னாச்சி சார். ஏதாச்சும் சீரியசாவா?’

‘இல்லை, இல்லை. பிரஷர்தான் ஜாஸ்தியாயிருச்சின்னு நினைக்கிறேன். இன்னமும் ஐ.சி.யூவுலதான் வச்சிருக்காங்க. ட்வெண்டி ஃபோர் ஹவர் கழிச்சி பாக்கலாம்னு சொல்லிட்டார் டாக்டர். நமக்கு தெரிஞ்சவர்தான். ஒன்னும் பிரச்சினையிருக்காது. ஈ.சி.ஜி நார்மலாத்தான் இருக்குன்னு சொன்னார். அதான் ஒடனே திரும்பி வந்துட்டேன். ராத்திரி ஒருதரம் போய் பாக்கணும்.’

‘எப்படியாச்சி சார்? கூட யாரும் இருந்தாங்களா?’

‘இல்லை பிலிப். நான் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க மேல வீட்ல போய் ஒக்காருங்க. நான் வீட்டுக்கு வர்றதுக்கு இன்னும் பத்து பதினைஞ்சி நிமிஷம் ஆகும்னு நினைக்கிறேன். நா வந்ததும் தாம்பரத்துக்கு போலாம்.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனை தான் அணிந்திருந்த சஃபாரி சூட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி தன்னருகில் வந்து நின்ற தன்னுடைய காரியதரிசியின் காரை நெருங்கினார்.

அதிலிருந்து முதலில் இறங்கிய ஓட்டுனர் அவரைக் கண்டு சல்யூட் அடிக்க, ‘ஏகாம்பரம். நீங்க ஒன்னு பண்ணுங்க. என்னோட கார வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு சுந்தரம் சார் கார் பக்கத்துலயே பார்க் பண்ணிருங்க. நானும் அவரும் தாம்பரம் வரை போணும். ஆஃபீஸ் கார்லயே போயிரலாம்.’ என்றார். பிறகு தன்னுடைய காரியதரிசியை பார்த்தார், ‘ராஜி, நீங்களும் தாம்பரம் வரைக்கும் வந்துட்டு போங்க. ஏன்னா எனக்கு மாணிக்கத்தோட வீடு சரியா தெரியாது. அங்கருந்து நீங்க ஒரு வண்டி பிடிச்சிக்கிட்டு வீட்டுக்கு போயிரலாம்.'

அவருடைய காரியதரிசி சரியென்று தலையை அசைக்க இருவரும் குடியிருப்புக்குள் நுழைந்து சுந்தரலிங்கத்தின் குடியிருப்பு இருந்த ஏழாவது மாடிக்கு சென்றனர்..

தொடரும்..


2 comments:

G.Ragavan said...

ரொம்பப் போயிருச்சுன்னு நெனைக்கிறேன். வேலைப்பளுவுல ஒழுங்காப் பாக்கலை. நல்லா விறுவிறுப்பாப் போகுது...

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி ராகவன்.