7.4.06

சூரியன் 57

பங்கு பேரவைக் கூட்டம் முடிந்தவுடனே வெளியே வந்த பிலிப் சுந்தரம் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து தன்னுடைய நண்பர் சுந்தரலிங்கத்தை அழைப்பதில் முனைந்தார்.

ஆனால் செல் ஃபோனில் வரிசையாக ஒரே எண் மீண்டும், மீண்டும் வந்திருக்கவே அது யார் என்று பார்த்தார். அவருக்கு பரிச்சயமில்லாத எண்ணாக இருந்ததால் சற்று நேரம் யோசித்துவிட்டு சரி யாராக இருக்கும் பார்க்கலாம் என்று டயல் செய்தார்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘Philip Sundaram speaking, who is this?’ என்றார்.

‘சார். நான் ஜோன்னு நம்ம பல்லாவரம் ப்ராஞ்ச் அசிஸ்டெண்ட் மேனேஜர் பேசறேன் சார்.’

யார் இவர்? என்னை எதுக்கு கூப்பிடுகிறார் என்று நினைத்தாலும் பொறுமையுடன், ‘என்ன மிஸ்டர் ஜோ சொல்லுங்க?’ என்றார்.

‘சார், எங்க மேனேஜர் மாணிக்க வேல் சாரோட டாட்டர் கமலின்னு பேரு. இன்னைக்கி காலைல எதிர்பாராத விதமா இறந்துட்டாங்க. சார் சொல்லிதான் உங்களுக்கு காலைலருந்து ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன்.’

பிலிப் சுந்தரத்துக்கு தன் காதுகளையே நம்பமுடியாமல், ‘Mister Joe, are you sure?’ என்றார். ‘I just can’t believe this. I spoke to him only a few days back. Was she ill?’

‘நேற்றைக்கி ராத்திரி தலைய வலிக்குதுன்னு சொன்னாங்களாம் சார். அவரோட அண்ணன் சந்தோஷ் தலைவலிக்கு மாத்திரைய குடுத்துட்டு படுக்கவச்சிருக்கார். காலைல எழுந்து பார்த்தப்போ கமலி பாத்ரூம்ல ரத்த வெள்ளத்துல கிடந்திருக்காங்க. ப்ரெய்ன் ஹெம்மரேஜ்னு டயக்னைஸ் பண்ணியிருக்காங்க சார். சாயந்திரம் அஞ்சு மணிக்கு தாம்பரம் லெவல் க்ராசிங்க்கு பக்கத்துலருக்கற சர்ச்சில மாஸ்சும் பக்கத்துலேயே இருக்கற செமட்றில பரியலும் இருக்கும்னு சொல்ல சொன்னார் சார்.’

பிலிப் சுந்தரம், ‘Thank you Joe. I’ll be there.’  என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு காரை நோக்கி நடந்தார். கண்காணாத ஊரிலிருந்த தன்னுடைய வளர்ப்பு மகளை நினைத்துக்கொண்டார். மாணிக்க வேலை அவருக்கு அவ்வளவாக பரிச்சயமிருக்கவில்லை. ஆனால் அவர் சென்னை கிளை ஒன்றிற்கு மாற்றலாகி வந்தப்பிறகு அவருடைய கிளையின் Extension Counter ஒன்றின் திறப்புவிழாவுக்கு அவர் தலைமை தாங்க சென்றதிலிருந்து அவரை தெரிந்திருந்தது. அவரை முதல் சந்திப்பிலேயே கவர்ந்த மிகச் சிலருள் மாணிக்க வேலுவும் ஒருவர்.

அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது அவருடைய அறிவுத்திறமையிலும் பணிவிலும் கவரப்பட்ட அவர் தன்னுடைய அலுவலகத்திற்கு திரும்பியதும் தன்னுடைய எச்ஆர். தலைவர் வந்தனாவை அழைத்து அவரைப் பற்றி கேட்டறிந்தபோது மாணிக்க வேலின் ஒரு விசிறியாகவே மாறிவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பு வெறும் கடைநிலை ஊழியராக பணிக்கு சேர்ந்த ஒருவரால் தன்னுடைய சுயமுயற்சியால் Chief Manager பதவியை எட்டிப் பிடிக்க முடியுமா என்று வியந்துபோனார் அவர்.

அன்றிலிருந்து அவருடைய செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கலானார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள விரும்பி அவருடன் அடிக்கடி தொலைப்பேசியில் பேசி அவரை ஊக்குவிப்பதில் குறியாயிருந்தார்.

சுமார் ஆறுமாத தொலைப்பேசி சம்பாஷனைகளுக்குப் பிறகு அவருடைய வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஒரேயொரு முறை அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். அந்த சந்திப்பிலேயே அவருடைய ஒரே மகள் கமலியின் அழகாலும், புத்திக்கூர்மையாலும் அவருக்கிருந்த இசைஞானத்தாலும் கவரப்பட்டவர் அவர்.

அந்த சிறுமியைப் பற்றி ஒருமுறை வந்தனாவிடம் பேசியபோது, ‘சார் அவ என் பொண்ணு மாதிரி சார். அப்படியொரு புத்திசாலி குழந்தையை நான் பார்த்ததே இல்லை.’ என்று வந்தனா உணர்ச்சிவசப்பட்டு கூறவே அவளை அடிக்கடி நினைத்துக் கொள்வார்.

அந்தப் பெண்ணா? பதினைந்து வயது இருக்குமா?  What a waste precious life? காரிலிருந்தவாறே தன் கண்ணெதிரே தெரிந்த தேவாலய முகப்பைப் பார்த்தார். What is the meaning of this loss God? Why should this happen? Please God.. Let her soul reach your presence peacefully..

உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் காரின் ஸ்டிரிங்கைப் பிடித்துக்கொண்டு தலைகுனிந்திருந்தவர் சட்டென்று நினைவுக்கு வர தன்னுடைய காரியதரிசி ராஜியை அழைத்தார்.

எதிர்முனையிலிருந்து பதற்றத்துடன், ‘குட்மார்னிங் சார். உங்களுக்கு நம்ம...’ குரல் வரவும் அவர் புரிந்துக்கொண்டு, ‘ஆமாம் ராஜி. நான் இப்பத்தான் கேள்விப்பட்டேன். என் சார்பிலயும் நம்ம சுந்தரம் சார் சார்பிலயும் நீங்க ரீத்துக்கு ஏற்பாடு பண்ணணும். நான் இப்ப சுந்தரம் சார் வீட்டுக்குத்தான் போறேன். நீங்க ரீத் ரெடியானதும் ஆஃபீஸ் வாட்ச் மேனுக்கு ஃபோன் பண்ணி நம்ம ஆஃபீஸ் கார்ல ஒன்ன எடுத்துக்கிட்டு உங்கள வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ண சொல்லிருங்க. இன்னும் சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ள சுந்தரம் சார் வீட்டுக்கு வந்திருங்க. சரியா?’ என்றார்.

‘யெஸ் சார். ஐ வில் பி தேர் சார்.’

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய சக அதிகாரி சுந்தரலிங்கத்தை அழைத்தார்.

எதிர்முனையில் அவருடைய மனைவி எடுக்க, ‘மேடம், சுந்தரம் சார் இல்லையா?’ என்றார்.

‘யார், பிலிப்பா பேசறீங்க? நம்ம பல்லாவரம் சீஃப் மேனேஜர் டாட்டர் இறந்துட்டாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’

‘ஆமாம் மேடம். நா அது விஷயமாத்தான் சார கூப்டேன். அவர் இல்லையா?’

‘இருக்கார். அந்த செய்தி வந்ததும் இதோ வரேன்னுட்டு பக்கத்துல போயிருக்கார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவார்னு நினைக்கிறேன். உங்க ஃபோன் வந்தா உங்கள இங்க வந்துரச்சொன்னார்.’

பிலிப் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி 3.00. இப்போது கிளம்பினால்தான் தாம்பரம் போய் சேர சரியாயிருக்கும். வீட்டுக்கு போகாமல் கோவிலில் வைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஏர்போர்ட்டுக்கு போய்விடலாம்.

‘இதோ இன்னும் அரை மணி நேரத்துல வந்திடறேன் மேடம். சார் இருந்தா நம்ம சேர்மன் வர்ற ஃப்ளைட் விபரம் ஏதாச்சும் தெரிஞ்சிதான்னு கேக்கலாம்னு பார்த்தேன்.’

'ஆமாம். மறந்தே போய்ட்டேன். அந்த சேது மாதவன் ஒன்னும் சொல்லலை. இவர் நேரே உங்க சேர்மனோட அவர் வேலை செஞ்சிட்டிருந்த பேங்க்ல பி.ஏ.வா இருந்த லேடியோட நம்பர கண்டுபிடிச்சி போன் பண்ணார். அவர் 6.55 ஃப்ளைட்ல வராறாம். ப்யூனரலுக்கு போய்ட்டு திரும்பி வந்து குளிச்சிட்டு போலாம்னார். சாவு வீட்லருந்து அப்படியே போனா நல்லாருக்காதே.’

அந்த நேரத்திலும் பிலிப்புக்கு அவரையுமறியாமல் இந்த மூடத்தனத்தை நினைத்து லேசானதொரு புன்னகை மலர்ந்தது. ‘சரி மேடம். நா வீட்டுக்கு போய்ட்டு உடனே வர்றேன். சார் வந்தா சொல்லுங்க.’

இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை முடுக்கி அருகிலிருந்த தன் வீட்டை நோக்கி செலுத்தினார்.

*****

மாதவன் தன்னுடைய இரண்டு பெட்டிகள், ஒரு கைப்பெட்டி ஆகியவற்றை எடுத்து தன்னுடைய அறைக்கு வெளியே வைத்துவிட்டு ஹாலுக்குள் நுழையவும் தொலைப்பேசி அடிக்கவும் சரியாக இருந்தது. விரைந்துச் சென்று எடுத்து, ‘ஹலோ’ என்றார்.

‘சார் நான் சித்ரா பேசறேன். மெட்றாஸ்லருந்து மிஸ்டர் சுந்தரலிங்கம்னு ஒருத்தர் லைன்ல இருக்கார். நீங்க வர்ற ஃப்ளைட் டீடெய்ல்ஸ் கேக்கறார். கொடுக்கவா?’

மாதவன் சற்று யோசித்தார். சுந்தரம்தான் இப்போதைய ஆக்டிங் சேர்மன் என்பது அவருக்குத் தெரியும். இருமுறை தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். ‘யெஸ் குடுங்க. He is the acting Chairman of the Bank. என்னோட செல்ஃபோன் நம்பரையும் அவர்கிட்ட குடுத்திருங்க. தேவைப்பட்டா கூப்ட சொல்லுங்க.’ என்றார்.

‘ஓ அப்படியா சார். ஒக்கே சார். ஆல் தி பெஸ்ட்.’

இணைப்பு துண்டிக்கப் பட்ட ஒலிவாங்கியை அதன் இருக்கையில் வைத்துவிட்டு மாடியைப் பார்த்தார். வத்ஸ்லாவின் அறைக்கதவு திறந்து கிடப்பது தெரிந்தது. சரோஜாவின் அறைக்கதவு மூடியிருந்தது.

மாதவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி 3.10. இன்னும் அரை மணிக்குள் புறப்பட்டால்தான் நேரத்திற்கு ஏர்போர்ட் போய் சேர முடியும். ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் மும்பை போக்குவரத்து நெரிசலை எதிர்பார்த்து சற்று முன்னரே சென்றால்தான் சரியாய் இருக்கும் என்று நினைத்தார்.

இன்னும் அவருடைய அலுவலக வாகனமும் வந்து சேரவில்லை. சித்ராவிடமே கூறியிருக்கலாம். மறந்து போனது.

மீண்டும் மாடியைப் பார்த்தார். படிகளில் வத்ஸ்லா ஒரு கைப்பையுடன் இறங்கிவருவதைப் பார்த்தார். ‘என்ன வத்ஸ்.. ஹேண்ட் பேக் மட்டும்தானா?’ என்றார் கேலியுடன்.

வத்ஸலா போலியாக முறைத்தாள். ‘என்னப்பா நக்கலா? எல்லாம் ரூமுக்குள்ள இருக்கு. நம்ம முத்துச்சாமி எங்க? காலைலருந்தே காணோம்? அவனும் ஞாயித்துக்கிழமையானா சிவகாமி மாமி மாதிரி ஏதாவது ஆசிரமத்துக்கு போறானா என்ன?’

மாதவன் சிரித்தார். ‘அவனுக்கு யார் இருக்கா போறதுக்கு? இங்கதான் பக்கத்துல அனுப்பியிருக்கேன். 555 சிகரெட் அங்க கிடைக்குமோ என்னவோ. அதான் ரெண்டு பேக் வாங்கிட்டு வாடான்னு அனுப்பிச்சிருக்கேன்.’

வத்ஸலா உதட்டைச் சுழித்தாள். ‘ஆமா. ரொம்ப முக்கியம்.’

மாதவன் சிரிப்புடன் தன் மகளைப் பார்த்தார். ‘ஆமாடா. நீ உன் ஹேண்ட் பேக் எடுத்துக்காம என்னைக்காச்சும் வெளிய தைரியமா போயிருக்கியா? மணிக்கொருதரம் லிப்ஸ்டிக் சரியாருக்கா, பொட்டு சரியாருக்கான்னு பாக்கறதில்லையா? அது மாதிரித்தான் இதுவும்.’

வத்ஸலா அவரை நோக்கி கையை ஓங்கினாள்.

‘ஏய், ஏய்.. என்ன அப்பாவும் பொண்ணும் இங்கயே சண்டைய ஆரம்பிச்சிட்டீங்களா?’ என்றவாறு மாடிப்படிகளில் இறங்கி வந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து ‘வாவ்’ என்றார் மாதவன்.

‘அம்மா யூ லுக் க்ரேட். சேர்மனோட ஒய்ஃபா, கொக்கா? அப்பா.. நீங்க இந்த டீ சர்ட்லருந்து மாறிடுங்க. கொஞ்சம் கூட சூட்டாவலை..’ என்ற தன் மகளையும் தன் மனைவியையும் மாறி, மாறி பார்த்தார். அசப்புல பார்த்தா இவ நம்ம பொண்ணவிட  வயசுல கொறைஞ்சவளா தெரியறாளே என்று நினைத்தார்.

வாசலில் வந்து நின்ற வாகனத்தின் சப்தம் அவருடைய நினைவுகளைக் கலைக்க வாசலைப் பார்த்த மாதவன், ‘Hey, our Car has come. Are you both ready? முத்துச்சாமி வந்தவுடனே கெளம்பிற வேண்டியதுதான்.’ என்றார் மாதவன்.

தொடரும்

No comments: