3.4.06

சூரியன் 53

அன்று காலை கண்விழித்ததும் தன்னுடைய கிளை வாடிக்கையாளர் ஒருவர் வழியாக கமலி இறந்துவிட்டாள் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியால் வாயடைத்துப் போனான் ஜோ. உடனே மாணிக்க வேலின் வீட்டிற்கு தொலைப்பேசி செய்து உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை அவனால் அந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தடுமாறிப்போனான்.

ஜோ என்ற ஜோசப்ராஜ் பல்லாவரம் கிளைக்கு மாற்றலானபோது விருப்பமில்லாமல்தான் சென்றான். போயும் போயும் ஒரு பியூனா வேலைக்குச் சேர்ந்த ஆளோட கீழ வேலை செய்யறதா என்று நினைத்தான். இருப்பினும் பலமுறை முயன்றும் கிடைக்காத தன்னுடைய சொந்த ஊரான சென்னைக்கே மாற்றல் கிடைத்ததே என்றே ஒரே காரணத்துக்காக அதை மறுக்க மனமில்லாமல் மாற்றலுக்கு ஒத்துக்கொண்டான்.

பணிக்கு சேருவதற்குச் சென்ற முதல்நாள் அன்று மாணிக்க வேலைப் பற்றி அவன் நினைத்திருந்ததை உறுதிப்படுத்தும்விதமாகத்தான் அவரும் நடந்துக்கொண்டார். ‘என்னைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நீங்க கேள்விப்பட்டது என்னவாயிருந்தாலும், உங்களுக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லாட்டாலும் இங்க நாந்தான் சி.எம். அதனால நீங்க இங்க இருக்கறவரைக்கும் எனக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கணும்னு நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.’ என்று அவர் கூறியதும் ஜோ என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல், ‘ஐ நோ தட் சார்.’ என்று மட்டும் கூறிவிட்டு தன்னுடைய இருக்கைக்குச் சென்றான்.

வெறும் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலைக்கு சேர்ந்து தன்னுடைய சுயமுயற்சியால் பட்டப்படிப்பை முடித்தவருக்கு இயல்பாகவே இருந்த தாழ்வுமனப்பான்மைதான் அவரை அப்படி பேசவைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் நாளடைவில் மாணிக்க வேலின் அபார ஞாபகசக்தியும் அவருடைய நேர்மையும், அயரா உழைப்பும் அவனை வெகுவாய் கவர்ந்தன.

அவருக்கு முந்தைய மேலாளர் செய்துவைத்திருந்த குளறுபடிகளைக்கூட மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தானே முயன்று அவற்றை சரியாக்கிய அவருடைய குணம் அவர்மேல் ஒரு தனி மதிப்பையும் ஏற்படுத்தியது. அவர் வாடிக்கையாளர்களிடம் காட்டிய பணிவு, தனக்குக் கீழ் பணியாற்றிய குமாஸ்தா மற்றும் தன்னைப்போன்ற அதிகாரிகளிடம் காட்டிய பரிவு, அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலும் காட்டிய அக்கறை.. ஏன் அவனுடைய ஒரே மகளுக்கு போலியோவின் ஆரம்பக்கால அறிகுறிகள் தெரிந்ததுமே தனக்கு நெருங்கிய மருத்துவ நண்பர் ஒருவரிடம் அழைத்துச்சென்று தன்னுடைய இளைய சகோதரர் போன்றவர் இவர் என்று தன்னை அறிமுகப்படுத்தியது.. அதிலிருந்து இன்றுவரை அவளைப்பற்றி விசாரிப்பது.. இவையெல்லாம் அவர்மேல் ஒரு ஹீரோ ஒர்ஷிப்பையே ஜோவுக்கு ஏற்படுத்தியது..

அவருடன் பணிபுரிந்த கடந்த இரண்டு வருடங்களில் வங்கி அலுவலில் அதுவரை அவன் அறிந்திராத பலவிஷயங்களையும் மாணிக்க வேலிடமிருந்து படித்துக்கொள்ள முடிந்ததில் அவனுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

‘நான் ஒரு கடைநிலை ஊழியனா இருந்து மேலே வந்தவங்கற ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்குள்ள இருந்ததுங்கறது உண்மைதான். அந்த மனப்பான்மையை போக்கணுங்கற எண்ணம்தான் என்னை மேல மேல ஊக்குவிச்சிக்கிட்டே இருந்தது. சி.ஏ.ஐ.ஐ.பி பரீட்சையோட ரெண்டு பார்ட்டையுமே ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணவன் நான்னு உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ. ஆனா நேரடியா ப்ரொபேஷனரி ஆஃபீசர்ஸா வந்தவங்களால சாதிக்க முடியாததக்கூட என்னால சாதிக்க முடிஞ்சதுக்கு என்னோட இந்த தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். I just wanted to prove that I am more capable than the other officers who joined directly as officers in our Bank.. That thought only kept me driving ahead in my career.’ என்று அவர் ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு கூறியது அவனுக்கு நினைவிருந்தது.

அவர் பிறப்பால் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்றும் கத்தோலிக்க மதத்திலிருந்த சில நல்ல அம்சங்களால் கவரப்பட்டு ஒரு கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அதன் நிமித்தம் அவரும் தேவாலயங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

அவரும் ஜோவும் ஞாயிறுதோறும் ஒரே தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு செல்வது வழக்கம். ஆகவே அவரையும் அவருடைய மனைவி மற்றும் இரு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. ஞாயிறுதோறும் தேவாலயத்தில் நடந்த ஆங்கில திருப்பலியில் கீ போர்ட் வாசித்த இளம் பெண்ணின் திறமையில் மயங்கியிருந்த ஜோ அவள் தன்னுடைய மேலாளரின் மகள் என்று அறிய வந்தபோது சந்தோஷத்தில், ‘சார் இந்த பொண்ணு உங்க மகங்கறது தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷமாயிருக்கு சார். She plays the keyboard like a child prodigy.’ என்றான்.

அவருடன் பணிபுரிந்த இவ்விரண்டு வருடங்களில் இரண்டு, மூன்று முறை அவருடைய வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் தன்னுடனும் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் பாசத்துடன் எந்தவித பந்தாவுமில்லாமல் பழகிய கமலியை அவர்கள் எல்லோருக்குமே மிகவும் பிடித்துப்போயிருந்தது.


தன்னுடைய வாகனத்தின் பின்னாலிருந்து தொடர்ந்து எழுந்த லாரியின் ஹார்ன் ஒலி பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த அவனை திடுக்கிட வைத்தது. கடந்தமுறை தாம்பரத்திற்கு வந்ததிலிருந்து இரண்டு மூன்று பெரிய கட்டடங்கள் எழுந்திருந்ததால் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அவன் வாகனத்தை மெதுவே செலுத்திக்கொண்டிருந்ததால் போக்குவரத்து தடைபட்டிருந்ததை உணர்ந்த ஜோ வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்க அவனைக் கடந்து சென்ற லாரி ஓட்டுனர் அவனை வசைபாடிவிட்டுச் சென்றான்.

சாலையோரம் இருந்த கடையொன்றில் விசாரிக்கலாம் என்று அவன் நினைத்திருந்த நேரத்தில் சவ ஊர்தி ஒன்று அவனைக் கடந்து சென்று அடுத்திருந்த சந்தில் நுழையவே ஓடிச்சென்று வாகனத்திலமர்ந்து அதை தொடர்ந்தான். அவ்வாகனத்தின் பின்னாலேயே செல்ல மாணிக்கவேலின் வீடு தெரிந்தது. ஆனால் வீட்டின் முன்னே அபாய விளக்கு எரிய நின்றுக்கொண்டிருந்த அப்போல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி அவனுடைய குழப்பத்தை அதிகரித்தது.

வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அவன் வீட்டை நோக்கி ஓடிச் செல்லவும் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு கதவை அடைக்கவும் சரியாக இருந்தது. வாகனத்திற்கு அருகில் பதற்றத்துடன் நின்றிருந்த மாணிக்க வேல் தன்னை நோக்கி ஓடிவந்த ஜோவைப் பார்த்ததும், ‘சந்தோஷ் நம்ம ஜோ வந்திட்டாரு. நீ இறங்கிக்கோ. அவர் மேடத்தோட போட்டும்.’ என்பது அவனுடைய செவிகளில் விழ பதற்றத்துடன், ‘சார் யாருக்கு என்னாச்சி?’ என்றான்.

மாணிக்க வேல் கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன், ‘ஜோ.. இப்ப எதுவும் சொல்றதுக்கு டைம் இல்லை. உள்ளே வந்தனா மேடம் அன்கான்ஷியசா இருக்காங்க. நீங்க ஆம்புலன்ஸ்ல போங்க. போய்ட்டு எனக்கு விபரத்தை ஃபோன்ல சொல்லுங்க. ஏறுங்க சீக்கிரம்.’ என்று அவசரப்படுத்தவே அவன் தாவி ஏறி முன் இருக்கையில் அமர ஆம்புலன்ஸ் அபாய ஒலியை முடுக்கி கிளம்பி பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுத்தது.

*********

ஆம்புலன்ஸ் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்த மாணிக்க வேல் பின்னாலேயே வந்து நின்ற சவ ஊர்தியைப் பார்த்துவிட்டு, ‘சந்தோஷ் காஃபின் வந்திருச்சிப்பா. நீ ஆக வேண்டியத பாரு. துணைக்கு உன் ஆல்டர்பாய் ஃப்ரெண்ட்ஸ கூப்டுக்கோ. கமலிய சிஸ்டர்ஸ் குளிப்பாட்டி முடிச்சிருப்பாங்க. அவளோட லாஸ்ட் பர்த்டேவுக்கு எடுத்த ட்ரெஸ்ஸ எடுத்துக் குடு. உடுத்தி முடிச்சதும் பெட்டியில வச்சிரணும். நீ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுப்பா. அப்பாவுக்கு நிறைய ஃபோன் கால்ஸ் பண்ண வேண்டியிருக்கு.’ என்றார்.

‘டாட்.. அம்மா..’ என்று தயங்கி நின்றான் சந்தோஷ்.

‘அம்மா தற்போதைக்கு ஒன்னும் பிரச்சினை பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். மேடம் திடீர்னு மயங்கி விழுந்ததே அவளுக்கு ஷாக்கிங்கா இருந்திருக்கும். அதுவுமில்லாம மதரும் அவ கூடவே இருக்கறதுனால பேசாம இருப்பா. நீ அவளப்பத்தி கவலைப் படாம ஆகவேண்டியத பாரு. சின்ன சித்தப்பாவும் அவன் பெஞ்சாதியும் இன்னும் அஞ்சு பத்து நிமிஷத்துல வந்திருவாங்கன்னு நினைக்கிறேன்.’

‘சரிப்பா’ என்று சவ ஊர்தியிலிருந்த பணியாட்களின் உதவியுடன் சந்தோஷ் பெட்டியை இறக்கி வீட்டினுள் கொண்டு செல்லவும் ‘ஐயோ என் பொண்ண வைக்கறதுக்கு பெட்டிய கொண்டு வந்திட்டியேடா..’ என்று குரலெடுத்து அழுத தன்னுடைய மனைவியை சட்டை செய்யாமல் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டு மேசையில் கிடந்த செல் ஃபோனை எடுத்து டயல் செய்யத் துவங்கினார்.

*******

‘நீங்க பேஷண்டுக்கு யாருங்க?’ என்ற மருத்துவரைப் பார்த்தான் ஜோ.

‘டாக்டர், நான் மேடத்தோட பேங்க்ல ஒர்க் பண்றேன். மேடம் எங்க ஜி.எம்.’ என்றான்.

‘ரிலேட்டிவ்ஸ் யாரும் வரலையா?’

‘இல்ல டாக்டர். என்னோட மேனேஜரோட டாட்டர் கமலின்னு இன்னைக்கி மார்னிங் ப்ரெய்ன் ஹெம்மரேஜ் ஆயி திடீர்னு இறந்துட்டாங்க. மேடம் அவங்கள பார்க்க வந்த எடத்துல அதிர்ச்சியில அன்கான்ஷியசாயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். மேடத்தோட ரிலேட்டிவ்ஸ் யாரும் சென்னையில இல்ல. ஏன் டாக்டர் ஏதாவது சீரியசா?’

மருத்துவர் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். 'பல்ஸ் ரொம்பவும் வீக்கா இருக்கு. ஹைப்பர் டென்ஷன் வேற. காலையிலருந்து ஒன்னும் சாப்டுருக்கமாட்டாங்க போலருக்கு. அதான் ஃபெய்ண்டாயிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஐ.சி.யூவுல அப்சர்வேஷனுக்கு வச்சிருக்கோம். We will have to watch her for one or two hours. Then we will dicide about the next course of action.’

‘இப்ப ஏதாவது ரெமிட் பண்ணனுமா டாக்டர்?’ என்ற ஜோவைப் பார்த்து புன்னகைத்தார் மருத்துவர். ‘நீங்க ரிசப்ஷன்ல பேஷண்டோட பேர சொன்னீங்கன்னா they will tell you.’

‘ஒக்கே டாக்டர்.’ என்றவாறு நகர முயன்ற ஜோவை மருத்துவரின் குரல் தடுத்து நிறுத்தியது. ‘யெஸ் டாக்டர்?’ என்று அவரைப் பார்த்த்தான்.

‘இவங்களோட மெடிக்கல் ஹிஸ்டரி, ஐ மீன் பழைய ரிப்போர்ட்ஸ் கிடைச்சா பரவாயில்லை. அவங்க இப்ப என்ன மெடிசின்ஸ் சாப்டறாங்கன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்.’

ஜோவுக்கு சட்டென்று நினைவுக்கு வர, ‘ஒன்னு பண்றேன். மேடத்தோட பி. ஏ. வீட்டுக்கு ஃபோன் பண்ணி அவங்கள வரச்சொல்றேன் டாக்டர். She might know her medical history.’ என்றான்.

‘Yes.. please do that.’ என்றவாறு மருத்துவர் ஐ.சி.யூ வார்டை நோக்கி செல்ல ஜோ தன்னுடைய செல் ஃபோனை டயல் செய்தவாறு ரிசப்ஷனை நோக்கி நடந்தான்.

தொடரும்..

2 comments:

G.Ragavan said...

வந்தனாவுக்கு என்னாச்சு....அந்தம்மாவும் மயக்கமா! அடக்கடவுளே...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

அதான் சீரியசா ஒன்னுமில்லேன்னு டாக்டர் சொல்லிட்டாரே..