5.4.06

சூரியன் 55

நாராயணசாமி திருப்தியுடன் புன்னகைத்தார். ‘குட்.. இத நீங்க புரிஞ்சுண்டாலே பாதி பிரச்சினை சால்வானா மாதிரிதான். எங்க வீட்டு மாமி ஞாயித்துக்கிழமையானா அவ அம்மா வீட்டுக்கு போயிருவா.. பத்து பத்தரைக்கு போனா திரும்பிவர சாயந்திரம் ஆயிரும். அவ இல்லன்னாத்தான் நம்மால நிம்மதியா டிஸ்கஸ் பண்ண முடியும். நீங்க பதினோரு மணிக்கு வந்துருங்க.. ஒரு ஒன்னவர்ல முடிச்சிரலாம். புறப்படறதுக்கு முன்னால ஃபோன்ல ஒரு டிங்க்கிள் குடுங்க.. நா வரேன்.’ என்றவாறு புறப்பட்டவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு குளியல¨றையை நோக்கி நடந்தான்.

ரவி சலூனிலிருந்து வீடு திரும்பி குளித்து முடித்தபோது மணி பதினொன்றைக் கடந்திருந்தது.

உடை மாற்றிக்கொண்டு கண்ணாடியின் முன் தன் பிம்பத்தைப் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றான். கடந்த ஆறு மாதங்களாய் மழிக்கப்படாதிருந்த தாடியையும் மீசையையும் எடுத்தவுடன் வயதில் ஒரு ஐந்து வருடங்கள் குறைந்ததுபோல் தோன்றியது. தோள்வரை தொங்கிய தலைமுடியை வெட்டியதும் அவனுடைய முகப்பொலிவை வெகுவாகக் கூட்டியிருந்தது. முகத்தில் ஒரு தெளிவும், மனதில் தன்னம்பிக்கையும் கூடியதுபோல் உணர்ந்தான் ரவி.

தன்னுடைய மனமாற்றத்துக்கு காரணமாயிருந்த நாராயணசாமிக்கு மனதுக்குள் நன்றி கூறினான். இவ்உருவ மாற்றம் தன்னுடைய வாழ்விலும் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று உறுதியாய் நம்பினான்.

வரவேற்பறையில் வைத்திருந்த தன்னுடைய செல் ஃபோன் ஒலிப்பதைக் கேட்ட ரவி பரபரப்புடன் சென்று பார்த்தான். நாராயணசாமிதான். ‘இதோ வந்துக்கிட்டே இருக்கேன் சார். ரெண்டே ரெண்டு நிமிஷம்.’

மறுமுனையிலிருந்து சிரிப்புச் சத்தம், ‘மிஸ்டர் ரவி எனக்கு பன்னிரண்டு மணிக்கு வேறொரு அப்பாயின்மெண்ட் இருக்கு. சீக்கிரம் வாங்கோ.’

‘யெஸ் சார்.’

செல் ஃபோனை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தலையை மீண்டும் ஒருமுறை ஒழுங்குப்படுத்திக்கொண்டு சோபாவில் கிடந்த கோப்பை கையில் எடுத்துக்கொண்டு வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு வெளியேறி அடுத்த குடியிருப்பின் முன் நின்று அழைப்புமணியை அழுத்த கதவு உடனே திறந்தது.

வாயெல்லாம் வெற்றிலைக் காவி படிந்த பற்கள் தெரிய சிரிப்புடன் நாராயணசாமி. உடை மாறி வக்கீல் கோலத்தில் இருந்தார். எங்காவது வெளியில் செல்கிறாரா என்ன என்று நினைத்தான் ரவி.

‘என்ன மிஸ்டர் ரவி, என் ட்ரெஸ்சைப் பாக்கறேளா? நான் இப்படித்தான், க்ளையண்ட்ஸ் கிட்ட கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்றச்சே வக்கீல் கோலத்துலதான் நிப்பேன். இல்லன்னா மூடு வராது. வாங்கோ..’

சரியான எக்ஸெண்ட்ரிக் கேசா இருப்பார் போலருக்கே என்ற நினைப்புடன் ரவி வீட்டினுள் நுழைந்து எங்கே அமர்வது என்ற தயக்கத்துடன் நின்று வீட்டு வரவேற்பறையை சுற்றி ஒரு முறை பார்த்தான்.

‘என்ன பாக்கறேள்? எல்லாம் நம்ம வீட்டுக்காரியோட கைவண்ணம். அவ ஒரு இண்டீரியர் டிசைனர்ங்கறது ஒங்களுக்குத் தெரியுமோ இல்லையோ, நேக்கு தெரியாது. ப்ரொஃபஷனலா ப்ராக்டீஸ் ஒன்னும் இல்லை. யாராச்சும் தெரிஞ்சவா, ஃப்ரெண்ட்ஸ் கேட்டா செஞ்சி கொடுப்பா. ஏன் உங்காத்து விசிட்டர்ஸ் ரூம் கூட அவளும் உங்காத்துக்காரியும் சேர்ந்து செஞ்சதுதான் தெரியுமோ? அதுசரி.. அதப்பத்தி உங்களாண்டை சொல்லி ஒரு புண்ணியமும் இல்லைன்னுட்டு ஒங்க மஞ்சுவே சொல்லியிருக்காளே.. ஒங்களுக்கு ஒங்க ப்ரொஃபஷந்தான் மொத பொஞ்சாதின்னு அவாட்ட சொல்லியிருக்கேளாமே.. நீங்க தப்பா நெனச்சுகிட்டாலும் பரவால்லை. நீங்க மொத பொண்டாட்டியையும் கோட்ட விட்டுட்டேள்.. ரெண்டாவதையும்.. சரி.. அத அப்புறம் பார்த்துப்போம். இப்போ.. வாங்கோ, இங்க ஒக்காந்தா ப்ரொஃபஷனலா டிஸ்கஸ் பண்ண முடியாது.. என்னோட ஆஃபீஸ் ரூமுக்கு போயிருவோம்.’

ரவி என்ன பதில் சொல்வதென தெரியாமல் சிறிது நேரம் நின்றுக்கொண்டிருந்தான். பிறகு, விடுவிடுவென வரவேற்பறையையொட்டியிருந்த தன்னுடைய அலுவலக அறைக்கு நடந்து சென்ற நாராயணசாமியை பின்தொடர்ந்தான்.

அலுவலக அறையும் விசாலமாக நேர்த்தியாக ஆனால் அதே சமயம் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். இவருடைய மனைவி உண்மையிலேயே ஒரு ரசிப்புத்தன்மை மிக்கவராயிருக்க வேண்டும் என்று நினைத்தான்.

‘ஒக்காருங்கோ மிஸ்டர் ரவி. மோர் சாப்பிடுவேளோன்னா? ஆத்துல யாரும் இல்லைன்னு சங்கோஜப்படாதீங்கோ. நம்ம ஆத்துக்காரி எல்லாத்தையும் ரெடி பண்ணிவச்சிட்டுத்தான் போவள். சித்தே இருங்கோ, கொண்டாந்துடறேன். நேக்கு அப்பொப்போ தாக சாந்தி பண்ணிக்கணும்.. அதாவது மோர்ல.. தப்பா நெனச்சிக்காதீங்கோ.. நா நீங்க செய்யற தாகசாந்தியைச் சொல்லலை..’ தான் அடித்த அறுவை ஜோக்கை தானே ரசித்து சிரித்தவாறு வரவேற்பறையின் மறுமுனையிலிருந்த சமையலறைக்குள் நுழைந்து அடுத்த நொடியே கையில் ஒரு கண்ணாடி குவளை மற்றும் இரு கண்ணாடி தம்ளர்களுடன் தன்னை நோக்கி வந்தவரை வியப்புடன் பார்த்தான் ரவி.

மனுஷன் பேச்சு போலவேதான் செய்கைகளும் இருக்கின்றன எத்தனை வேகம்? I hope that I am in the hands of the right person.

கையிலிருந்தவற்றை தன்னுடைய மேசைக்கு அருகில் இருந்த ஒரு குறுமேசையில் வைத்துவிட்டு அமர்ந்த நாராயணசாமி, ‘சங்கோஜப்படாம வேணுங்கறது ஒங்க கிளாஸ்ல ஊத்தி குடீச்சிக்கோங்கோ மிஸ்டர்.. சாரி.. இந்த மிஸ்டர் வேணாம்னு நினைக்கிறேன். கூப்டு கூப்டு என் நாக்கே சுளுக்கிரும் போலருக்கு. இனி வெறும் ரவியே போறும்னு நினைக்கிறேன். என்ன சொல்றேள்?’ என்றார் சிரிப்புடன்.

ரவி அவர் தொடர்ந்து அடித்த அறுவை ஜோக்குகளால் நொந்துபோய் அவரை பார்ப்பதை தவிர்த்து குறுமேசையிலிருந்த குவளையிலிருந்து ஒரு அரை தம்ளர் மோரை வார்த்து குடித்தான். உண்மையிலேயே மோர் கொத்தமல்லி, சரியளவு உப்பு, காரம் என காரசாரமாக இருக்கவே தன்னையுமறியாமல் புன்னகையுடன், ‘மோர் உண்மையிலேயே நல்லாருக்கு சார். ரொம்ப தாங்ஸ்.’

பதிலுக்கு சிரித்தவரை அதிர்ச்சியுடன் பார்த்தான். நாம் ஏதாவது கேலியாக பேசிவிட்டதாக நினைக்கிறாரோ?

‘அதென்ன ரவி உண்மையிலேயே நன்னாருக்குங்கறேள்? எங்காத்துக்காரி எத நன்னா இல்லாம செஞ்சிருக்காள்? ஒங்களுக்கும் சேர்த்துத்தான் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு போயிருக்கா. சாப்ட்டு பார்த்துட்டு சொல்லுங்கோ..’

ரவி உடனே பதற்றத்துடன், ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். நான் எப்பவும் போலவே..’

அவர் சிரிப்புடன் தடுத்தார்.. ‘என்ன ஹோட்டல்ல சாப்டுக்கறேங்கறேளா? நல்ல ஆளு சார் நீங்க. சும்மா ஓசியில ப்ராமணாள் வீட்டுச் சாப்பாட்டை போடறேங்கறேன். வேணாங்கறேளே. சரி இந்த சிக்கல்லாம் தீர்ந்ததுக்கப்புறம் மஞ்சு கையால ஒரு வா ஆக்கிப் போட்ருங்கோ. தம்பதி சமேதரா வந்து சாப்டுக்கறோம். என்ன பாக்கறேள்? என்னடா மஞ்சுதான் போய்ட்டாளேங்கறேளா? அட, நீங்க ஒன்னு ரவி. எங்க போய்டபோறா..? இத முடிச்சிட்டு ஒங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கலேன்னா என்ன உண்டு இல்லைன்னு ஆக்கிருவா எங்காத்துக்காரி. சரி.. அது அப்புறம். இப்ப நாம உங்க என்கவயரிய பத்தி பேசுவோம். சொல்லுங்கோ..’

அவர் பேசும் வேகத்தைப் பார்த்து தனக்கு மூச்சு வாங்குவதாக நினைத்தான் ரவி. இருப்பினும் தன் முன்னாலிருந்த கோப்பைத் திறந்து வைத்து மீண்டும் ஒருமுறை அதைப் பார்த்து தான் சொல்ல நினைத்ததை கோர்வையாய் கூறினான்.

அவன் பேசும்போது இடை இடையே சிறு சிறு விளக்கங்களைக் கேட்டு தன்னுடைய நீள்வடிவ பேடில் குறித்துக்கொண்ட நாராயணசாமி இறுதியில், ‘நா ஒன்னு வெளிப்படையா கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டேளே?’ என்றார்.

ரவி இல்லை சார் என்பதுபோல் தலையை அசைத்தான்.

‘’Tell me Ravi. Were you honest in all your dealings with your customers?’

அவருடைய கேள்வியின் நேரடி தாக்குதலால் சிறிது நேரம் நிலைகுலைந்துப் போன ரவியின் கண்களில் அவனையுமறியாமல் கண்ணீர் நிறைந்தது. அதை மறைக்க வரவேற்பறையின் நேரெதிர் முனையில் இருந்த பால்கணி வழியாக தெரிந்த வானத்தை பார்த்தான். What is wrong in his question? Have you not heard that  you should be honest with your physician and the lawyer?

ரவி சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவரை நேருக்கு நேர் பார்த்தான். “Yes I was and I am now.’

நாராயணசாமி உரத்த குரலில் சந்தோஷத்துடன் சிரித்தவாறு தன்னுடயை வலதுகரத்தை மேசைக்கு குறுக்கே அவனை நோக்கி நீட்டினார். ‘Yes that is what I wanted to hear from you. அதையும் என் கண்ண நேரா பார்த்து சொன்னேள் பாருங்கோ.. இது போறும். நீங்க உங்க வேலையில என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அதுக்கு பின்னாலருக்கற நியாயமான, எந்த உள்நோக்கமும் இல்லாத காரணத்த என்னால ஒங்க என்க்வயரி ஆஃபீசர் முன்னே ப்ரூஃப் பண்ண முடியும். தைரியமா இருங்கோ.’

அவருடைய குரலில் இருந்த உறுதி, மிகைப்படுத்தப்படாததாகவே அவனுக்கு தோன்றியது. முதல் முறையாக அவனுடைய முகத்தில் மலர்ந்த புன்னகையைப் பார்த்து ஆனந்தமடைந்தார் நாராயணசாமி.

‘Yes, now you are smiling. உங்களோட இந்த சந்தோஷத்த நிரந்தரமாக்க வேண்டியது என்னோட பொறுப்பு ரவி. இப்ப அடுத்தது. ஒங்க குடும்ப வாழ்க்கைய பத்தி.. அதுக்கு முன்னால ஒன்னு சொல்லிக்கறேன். நா இந்த வக்கீல் தொழிலோட மேரேஜ் கவுன்சலிங்கையும் ஒரு பொது சேவையா செய்யறேன் தெரியுமா ரவி?’

ரவி தெரியாது என்பதுபோல் தலையை அசைத்தான்.

நாராயணசாமி எழுந்து வரவேற்பறையை நோக்கி நடந்தார். ரவி என்ன செய்வதென தெரியாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்க பாதி தூரம் சென்ற நாராயணசாமி திரும்பி அவனைப் பார்த்தார். ‘வாங்கோ அஃபிஷியல் விஷயம் பேசியாச்சி. நீங்க எங்கிட்ட சொன்னத வச்சி நா ஒரு சப்மிஷன் ஒங்க என்க்வயரி ஆஃபீசருக்கு டிராஃப்ட் பண்ணி நாளைக்கு கொண்டுவரேன். நீங்க அத படிச்சி பார்த்து ஓக்கே பண்ணிட்டேள்னா நாளான்னைக்கி தபால்ல அனுப்பிரலாம். சோ.. தெட் இஷ்யூ ஈஸ் ஓவர். இனி பர்சனல். நாம இப்போ பேசப்போற விஷயத்துக்கு ஆஃபீஸ் ரூம் தேவையில்லை. வாங்கோ, இங்க வந்து சோபாவுல என் பக்கத்துல ஒக்காருங்கோ.’

ரவி தயக்கத்துடன் எழுந்து வரவேற்பறைக்குச் சென்றான்.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் ரவியின் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நாராயணசாமி. ‘Do you know one thing Ravi?’ என்றார் புன்னகையுடன்.

‘என்ன சார்?’

‘You look absolutely handsome.’

ரவி சட்டென்று அவருடைய வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல் சங்கடத்துடன் அவரைப் பார்த்தான்.

நாராயணசாமி அவனுடைய பார்வையிலிருந்த குழப்பத்தைப் பார்த்து உரக்க சிரித்தார். ‘No wonder. Manju misses you so much and wants to be back with you. அவளே எங்காத்துக்காரியண்ட நேத்து ராத்திரி நேர்ல சொல்லி அழுதத நா பார்த்தேன் ரவி.’

ரவி திகைப்புடன் என்ன பதில் சொல்வதென தெரியாமல் பார்த்தான். நேற்றிரவு மஞ்சு இங்கே வந்திருந்தாளா?

‘ஆமாம் ரவி. மஞ்சு நேத்து ராத்திரி வந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தா. நேக்கும் அவள பார்த்தா பாவமா இருந்திச்சி. அவ வேணும்னுட்டே ஒங்களுக்கு ஷாக் குடுக்கறதுக்காகத்தான் ஆத்த விட்டு வெளிய போயிருக்கா. அவா போனது வேற யார் வீட்டுக்குமில்லே.. அவளோட கூட பொறக்காத தம்பியா நெனச்சிக்கிட்டிருக்கற ஒரு பையனோட வீட்டுக்குத்தான். அந்த பையனுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கு ரவி. அந்த பையனும் அவன் பெஞ்சாதியும் மஞ்சுவோட பெஸ்ட் ஃப்ரண்ட்சாக்கும்.. நீங்க நெனக்கறா மாதிரி நிச்சயம் இல்லே... she desperately wants to come back. She would be a very good support in this hour of need. What do you say Ravi?’

ரவி என்ன பேசுவது, எப்படி பேசுவது என தெரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்க வாசலில் அழைப்பு மணி ஒலித்தது..

நாராயணசாமி எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே மஞ்சு, அவளுடன் ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண் மற்றும்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

Gangai innum vatrivida villai--this episode reminds me of the caption of an old tamil story

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி,

அது என்ன கதைங்க? யார் எழுதினது? கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்களேன்?