10.4.06

சூரியன் 58

பாபு சுரேஷின் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே போனது.

விடியற்காலையில் வந்து ரம்யாவின் போட்டோவை பெற்றுக்கொண்டு சென்ற ளிடமிருந்து பிறகு ஃபோன் ஏதும் வராததால் படு டென்ஷனாகிப் போனார் பாபு.

சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். பகல் இரண்டு மணி. காலையிலிருந்து அவரும் அவருடைய மனைவியும் ஒன்றும் சாப்பிடவில்லை.

அவருடைய கோபத்தின் விளைவை ஏற்கனவே பல சமயங்களில் சந்தித்திருந்த அவருடைய மனைவி சுசீந்தரா அன்று காலையிலிருந்தே பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தாள். எதற்கு கோபத்தின் உச்சியில் இருக்கும் கணவன் முன் சென்று நின்று அவதிப்படவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம். என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் முருகா என்று பூஜை அறையில் கண்ணீர்விட்டு அழுதாலாவது தன்னுடைய மகளை தன்னிடம் கொண்டு சேர்க்க மாட்டாரா என்ற ஆதங்கம் ஒருபுறம்.

கையில் செல் ஃபோனுடன் ஹாலின் குறுக்கும் நெடுக்குமாய் கோபத்துடன் நடந்துக்கொண்டிருந்த முதலாளியிடம் நெருங்கி, ‘ஐயா ஒரு வா காப்பியாவது குடிங்கய்யா. நீங்க ஒன்னும் சாப்பிடலேன்னதும் அம்மாவும் காலைலருந்து பழியா பட்டினி கிடக்கறாங்கய்யா.’ என்று சற்று முன் கூறிய தங்களில் வயதில் மூத்த வேலையாளுக்கு நேர்ந்த கதியை நினைத்து அவர் வீட்டில் வேலைக்கு இருந்த எவரும் அவர் முன் மீண்டும் போய் நிற்க துணிவில்லாமல் சமையலறைக்குள் இருந்தவாறே அவரை கவனித்தனர்.

கையிலிருந்த செல் ஃபோன் சிணுங்கவே யாரென்று பார்த்தார் பாபு. அவருக்கு முன் பின் பரிச்சயமில்லாத அதுவும் லேண்ட் லைன் எண்ணைக் கண்டவர் தயக்கத்துடன், ‘யெஸ்?’ என்றார்.

‘சார் நான் தனபால் சாமி எஸ்.பி பேசறேன்.’

எதிர் முனையிலிருந்து வந்த அதிகாரத்துடனான கம்பீரமான குரலை அவருக்கு எங்கோ கேட்டிருந்ததுபோல் தோன்றினாலும் சட்டென்று நினைவுக்கு வராமல், ‘யெஸ் சொல்லுங்க சார். நாந்தான் பாபு சுரேஷ் பேசறேன்.’ என்றார்.

எதிர் முனையில் சிரிப்பு சப்தம். ‘என்ன மிஸ்டர் பாபு என்னைத் தெரியலையா? நான் உங்க பொண் ரம்யாவோட ஃப்ரெண்ட் புவனாவோட ஃபாதர். ரெண்டு மூனுதரம் மீட் பண்ணியிருக்கோம். உங்கக் கிட்ட கடைசியா பேசி ரொம்ப நாளாச்சி. அதான் மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் ஒரு முக்கியமான விஷயமா உங்கக்கிட்ட பேசலாம்னுதான் கூப்டேன். Are you free?’

இது நிச்சயம் ரம்யா விஷயம்தான். கடைசியில போலீஸ்ல போய் மாட்டிக்கிட்டாளா? கர்மம். மானத்த வாங்கறதுக்குன்னே பொண்ணா பொறந்து வந்திருக்கு.

‘சொல்லுங்க சார், என்ன விஷயம்?’

‘உங்க டாட்டர் எங்கயும் போகலை. நேத்து சாயந்திரத்திலருந்து என் வீட்லதான் இருக்கா. நான் வெளியூர் போய்ட்டு இன்னைக்கி காலைலதான் வந்தேன். சோ, டென்ஷனாகாம இருங்க. இன்னும் அரைமணி நேரத்துல உங்க டாட்டர கூட்டிக்கிட்டு அங்க வரேன். நீங்க ரம்யா வந்ததும் ஏதாவது எமோஷனலா பேசிறக்கூடாதுன்னுதான் நா இப்ப ஃபோன் பண்றேன். அவளோட அம்மாக்கிட்டயும் விஷயத்த சொல்லிருங்க. Please relax. I’ll be there in another half an hour. Bye.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே ஒரிரண்டு வினாடிகள் பார்த்துக்கொண்டிருந்த பாபு சுரேஷ் அதை சோபாவில் கோபத்துடன் வீசியெறிந்துவிட்டு பூஜையறையை நோக்கி நடந்தார்.

பூஜையறையில் கண்களை மூடியவாறு முருகா, முருகா என்று பிரார்த்திக்கொண்டிருந்தவள் வேகமாக நெருங்கிய காலடியோசைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து திரும்பி வாசலைப் பார்த்தாள்.

அவளுடைய கணவர் கோபத்தில் கண்கள் சிவக்க நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். ‘என்னங்க?’ என்றாள் நடுங்கும் குரலில்.

‘ஒம் பொண்ணு என்ன செஞ்சு வச்சிருக்கா தெரியுமா?’

அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. ரம்யா எங்கருக்கான்னாச்சும் தெரிஞ்சுதே. முட்டாள் தனமாக  தன்னுடைய மகள் ஒன்றும் செய்திருக்கமாட்டாள் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரியும். தன்னைப் போல அத்தனை கோழையல்ல அவள் என்பதையும் அவள் அறிந்துதான் வைத்திருந்தாள்.

‘என்னங்க? ரம்யா எங்க இருக்கா? அத முதல்ல சொல்லுங்க?’

‘அவ அந்த எஸ்.பி இருக்காரே.. அதான் அந்த தனபால் சாமி. அவர் வீட்லதான் நேத்துலருந்து இருந்திருக்கா.’

சுசீந்தரா பூஜையறையிலிருந்த தெய்வங்களின் படங்களை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எழுந்தாள். ‘வயித்துல பால வார்த்தீங்க சாமி. எம்பொண்ணு வந்ததும் அவளையும் கூட்டிக்கிட்டு வந்து நான் சொன்னா மாதிரி நூத்தியோரு தேங்காய இன்னைக்கே ஒடச்சிடறேன் புள்ளையாரப்பா.’

பாபுவுக்கு அவருடைய மனைவியின் இந்த செயல் அதீத கோபத்தை ஊட்ட எட்டி அவருடைய தலைமுடியைப் பிடித்து உலுக்கினார். ‘ஏண்டி பைத்தியமே. நா இங்க அவ பண்ணியிருக்கற காரியத்துல அவமானப்பட்டு நிக்கறேன். நீ தேங்காய ஒடச்சி சாமி கும்பிடப் போறியா?’

சமையலறைக்குள் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த வேலையாட்களில் வயதில் பெரியவர் ஓடிச்சென்று, ‘ஐயா வேணாம்யா. அம்மாவ ஒன்னும் பண்ணிராதீங்கய்யா.’ என்றவாறு அவருடைய காலில் விழ இதை எதிர்பார்க்காத பாபு தன் மனைவியின் தலையிலிருந்த கையை விலக்கிக்கொண்டு பின்வாங்கினார். ‘என்ன ராமாசாமி இது? எழுந்திருங்க. ஒங்கக் கிட்ட எத்தன தரம் சொல்லியிருக்கேன்? எங்க விஷயத்துல தலையிடாதீங்கன்னு. போங்க தள்ளி.’

‘ஐயா இல்லைய்யா. உங்களுக்கு இந்த அளவு கோபம் ஆகாதுய்யா.. பாப்பா கல்யாணத்த வேற வச்சிக்கிட்டு ஒங்களுக்கு ஒடம்புக்கு ஏதாச்சும் ஆயிரக்கூடாதுன்னுதான்யா ஓடியாந்த்தேன். பாப்பா தப்பா ஒன்னும் செஞ்சிருக்காதுய்யா.’ என்று கண்ணீருடன் தன் முன்னால் நின்ற வேலையாளை சில விநாடிகள் பார்த்த பாபு தன்னுடைய தவறை உணர்ந்து விலகிப் போய் சோபாவில் அமர்ந்தார்.

‘நீங்க போங்கண்ணே. இவரு கோபப்படுறது ஒன்னும் புதுசில்லையே. நீங்க போய் ரம்யாவுக்கு புடிச்சத சமைச்சி வைங்க. எம்பொண்ணு எங்கருக்கான்னு தெரிஞ்சிருச்சி. நானே போயி கூட்டியாறேன். நீங்க போய் வேலைய பாருங்க.’ என்றவாறு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்த தன்னுடைய மனைவியைப் பார்த்தார்.

‘நீ போவேணாம். அவரே ரம்யாவ கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணியில வராராம். இப்பத்தான் ஃபோன் பண்ணார். நீ முதல்ல போயி குளிச்சிட்டு சேலைய மாத்து.’ என்றார்.

அவருடைய குரலில் சட்டென்று ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த சுசீந்தரா நின்ற இடத்திலேயே நின்று திரும்பி அவரைப் பார்த்தாள்.

பிறகு, ‘சரிங்க. என்ன சொல்லிட்டு நீங்க மட்டும் அப்படியே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?’ என்றாள்.

பாபு வியப்புடன் அவளைப் பார்த்தார். என்ன ஜென்மம் இவள்? நான் எத்தனைக் கோபப்பட்டு மிருகமாக நடந்துக்கொண்டாலும் இவளால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அடுத்த நிமிடமே சகஜ நிலைக்கு மாறிவிட முடிகிறது? இந்த இருபத்தி மூன்று ஆண்டுகளில் இவளை நான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தியிருக்கிறேன்?

ஒரு நாள், இருப்பத்தி நாலு மணி நேரமாவது, என்னிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்திருப்பாளா? எத்தனை ராத்திரிகளில் அவளை அடித்து அவமானப்படுத்தியிருப்போம். அடுத்த நாள் காலையிலேயே ஒன்றும் நடவாததுபோல், ‘என்னங்க இன்னைக்கி மதியத்துக்கு என்ன  பண்ணட்டும்?’ என்று வந்து நிற்பாளே. அவளுடைய இந்த அடிமைக் குணத்தினால் தானோ என்னவோ நானும் இவளிடம் அத்துமீறி நடந்துக்கொண்டிருக்கிறேன் போலும்.

ரம்யா வளர்ந்த பிறகு அவர் காதுபடவே, ‘ஏம்மா நீ இப்படி இருக்கே? நீ அவர்கிட்ட மழுங்கி, மழுங்கி போறதுனாலத்தான் அவர் மேல, மேல போறாரு. நீ மட்டும் ஒரு தடவை, ஒரேயொரு தடவை அவர் அடிக்க வர்றப்போ அவர் கைய எட்டிப் பிடிச்சி இந்த அடிக்கற வேலையெல்லாம் இனிமே வச்சிக்காதீங்கன்னு சொல்லிப் பாரேன். மனுஷன் அப்படியே அடங்கிப் போயிருவாரு.’ என்பாள்.

ஆனால் அப்போதும், ‘சீ கழுத. இதுக்குப் பேருதாண்டி தாம்பத்தியம். புருஷன் பொஞ்சாதின்னா இப்படி அடிச்சிக்கறதும் புடிச்சிக்கறதும் இருக்கத்தான் செய்யும். ஏன் எம்மேலயும் தப்பு இருக்குல்லே? ஒன்ன மாதிரி பதவிசா ஒரு காரியமும் எனக்கு பண்ண வரலையேடி. அவருக்கு ஈக்வலா இருக்கற ஆஃபீசர்ங்களோட பெஞ்சாதீங்கல்லாம் ஸ்டைலா நுனி நாக்குல இங்கீலீஷ்ல பேசிக்கிட்டிருக்கறா மாதிரி தன் பெஞ்சாதியும் இல்லையேங்கற ஒரு தாழ்வு மனப்பான்மைதாண்டி ஒங்கப்பாவுக்கு கோபமா என் மேல வெடிக்குது.’ என்பதைக் கேட்டிருக்கிறார்.

அப்போதெல்லாம் ரம்யா இல்லாத நேரத்தில், ‘ஏண்டி ஒனக்கு என்ன கொழுப்புருந்தா தப்பையெல்லாம் ஒம்பேர்ல வச்சிக்கிட்டு எனக்கு தாழ்வு மனப்பான்மைம்பே?’ என்று அவளை அடிக்க மீண்டும் கை ஓங்குவார்.

‘என்னங்க என்ன நீங்க, என்ன சொல்லிட்டு நீங்க அப்படியே ஒக்காந்திட்டிருக்கீங்க? போய் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் போட்டுக்கிட்டு வாங்க. அந்த மனுஷன் கண்ணுதான் ஒங்களுக்குத் தெரியுமே. நீங்க இருக்கற கோலத்துல ரம்யா வீட்ட விட்டு போனதுக்கு ஏதும் பெருசா விஷயமிருக்கு போலருக்குன்னு அவர் பாட்டுக்கு நெனச்சிக்கிரப் போறாரு. போலீஸ் புத்தி.. எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டே இருக்கும்.’ என்ற தன்னுடைய மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தார் பாபு சுரேஷ்.

இடுப்பில் கைவைத்துக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து அவருக்கு சிரிப்பதா அழுவதா என தெரியாமல் விழித்தார். பிறகு எழுந்து அவளை நெருங்கி அவளுடைய தலையில் லேசாக ஒரு குட்டு வைத்தார். ‘ஏய் லூசு. நீ என்னைய சொல்றீயா? ஒம் மூஞ்ச போயி கண்ணாடியில பாரு. நான் குளிச்சி முடிக்க அஞ்சி நிமிஷம் கூட ஆவாது. நீ மொதல்ல போயி குளி.’ என்றவாறு அவளைக் கடந்து மாடியிலிருந்த தன்னுடைய படுக்கையறைக்கு படியேறலானார்.

‘என்னங்க?’ என்ற தன்னுடைய மனைவியின் குரல் பின்னாலிருந்த கேட்கவே, ‘இப்ப என்ன?’ என்று சற்றே எரிச்சலுடன் திரும்பி பார்த்தார்.

‘ரம்யா வந்ததும் தயவு செஞ்சி கோபப்படாம பேசுங்க. அவங்க முன்னால நீங்க எதையாச்சும் சொல்லப் போயி மறுபடியும் அவ முறுக்கிக்கப் போறா?’

பாபு சுரேஷின் முகத்தில் அவரையுமறியாமல் ஒரு புன்னகைப் படர, ‘இல்ல.. மாட்டேன். நீ போய் குளி.’ என்றார்.

சுசீந்தராவுக்கு கணவரின் அந்த புன்னகையே போறும் என்றிருந்தது. மனுஷன் இனிமேலாவது திருந்தினா சரிதான் என்று மனதுக்குள் நினைத்தவாறு சமையலறையை நோக்கி ஓடினாள்.

‘ராமசாமின்னே. ரம்யா அவளோட ஃப்ரெண்ட் வீட்லதான் நேத்திலேருந்து இருந்திருக்கா. அதான் அந்த எஸ்.பியோட பொண்ணு இருக்காளே புவனா, அவ வீட்ல. இன்னும் அரைமணி நேரத்துல இங்க அவரும் ரம்யாவோட வராராம். சூடா காப்பியும் கூட முடிஞ்சா ஏதாச்சும் டிபனும் பண்ணி வைங்க. நா குளிச்சிட்டு வந்துடறேன்.’ என்றவாறு தன்னுடைய அறையை நோக்கி ஓடிய எஜமானியைக் கண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி தன் சகாக்களைப் பார்த்தார் அந்த வீட்டில் கடந்த இருபதாண்டு காலமாய் வேலைபார்த்த சமையற்கார ராமசாமி.

தொடரும்..

No comments: