20.4.06

சூரியன் 62

காலையிலிருந்து வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாயிருந்த நளினி சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் சோஃபாவில் சரிந்து அமர்ந்து கண்களை மூடினாள்.

ஐந்து நிமிடம் அசையாமல் மனத்தை ஒருமுனைப் படுத்தி ஒருவகை தியானத்தில் ஆழ்ந்துப் போனாள். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பத்தை தான்  எதிர்பார்த்து காத்திருப்பதைப் போலவும் உணர்ந்தாள்.

ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெண்டுலம் கடிகாரத்தின் சிர்க், சிர்க் என்ற ஓசையைத் தவிர வீடு முழுவதும் அமைதியாய், நிசப்தமாய் அவளுடைய வேதனைகளுக்கு மருந்தாக.. மனதின் வேதனை கண்ணீராக மூடியிருந்த கண்களின் ஓரத்திலிருந்து வடிந்ததையும் பொருட்படுத்தாமல் சிலையாய் அமர்ந்திருந்தவளை எழுப்பியது அவளுடைய செல் ஃபோன் ஒலி.

‘சே எந்தா இது.. வெறத ஒரு சல்லியம் (தொல்லை)..’ என்ற முனுமுனுப்புடன் யாரென்று பார்த்தாள். நந்தகுமார்!

என்ன வேண்டும் இவனுக்கு? இனி அடுத்த வாரம்தான் என்று காலையில் சொன்னானே..?அவனுடைய தங்கை வருவதற்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கும். இந்த நேரத்தில் இவனுடன் பேசி மூட் அவுட் ஆகவா? எடுக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தாலும் அது தொடர்ந்து அடிக்கவே எடுத்து எரிச்சலுடன், ‘எந்தா நந்து?’ என்றாள்.

‘எந்தாடி ஏதோ நான் வேண்டாத்த சமயத்தே விளிச்சது போலே?’ என்ற பதிலுக்கு எரிச்சலுடன் வந்தது நந்துவின் குரல்.

சட்டென்று சுதாரித்துக்கொண்டு அமைதியாகப் பேசினாள் நளினி. ‘சரி.. போட்டே.. எந்தா விளிச்ச?’

‘நான் மெட்றாஸ் போறேன். நீயும் வரியான்னு கேக்கத்தான் கூப்டேன்..’

காலையில் அழைத்தபோது ஏதோ கொல்கொத்தாவில் பிரச்சினை நானும் மார்க்சிஸ்ட் பார்ட்டி சகாக்களும் மும்முரமாக டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்னு சொன்னார்! இப்ப என்ன திடீர்னு மெட்றாஸ் பயணம்? ‘எதுக்காம் இப்ப மெட்றாஸ் போறீங்க? அங்க போய் ஏதாச்சும் மறியல் பண்றதுக்கா?’

நந்து சிரித்தான். ‘சேச்சே.. நம்ம பல்லாவரம் மேனேசர் ஒனக்கு தெரியுமில்லே?’

‘பல்லாவரம் மேனேஜரா? யாரு? எனக்கு தெரியாது.’

நந்து சற்று எரிச்சலுடன், ‘எடி.. நாம கோயம்புத்தூர்ல இருந்தப்போ என் பிராஞ்சில என்னோட க்ளார்க்கா இருந்தாரே. ப்யூன் ப்ரோமோட்டி.. நம்ம பேச்ல நம்மளோட ஆபீசராக்கூட ஆனாரே..’

நளினிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. அப்போது அவரைப் பற்றித்தான் வங்கி முழுவதும் பேச்சாக இருந்தது. ஒரு கடை நிலை சிப்பந்தியாய் பணிக்கு சேர்ந்து சரியாக பத்தே வருடத்தில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர். அவருக்கு இப்ப என்ன?

‘அதே.. ஞாபகம் வந்திருச்சி. ஆமா அவருக்கு இப்ப என்ன?’

நந்துவின் குரலில் சட்டென்று ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்க தவறவில்லை அவள்.

‘அங்கோர்ட மோளானடி.. பதினைஞ்சி, பதினாறு வயசே உண்டாவுள்ளு.. இன்னு வெளுப்பிலெ (விடியற்காலையில்) மரிச்சி போயித்றெ.. கேட்டப்போ பயங்கர ஷாக்காயிப் போயி நளினி.. பாவம் ஆக் குட்டி பயங்கர மிடுக்கியாத்றெ..’

நளினிக்கும் முகம் தெரியாத குழந்தையானாலும் பதினைந்து வயதென்றதும் ‘ஐயோ.. மோளே..’ என்று தோன்றியது.

‘பட்சே (ஆனால்) ஃப்யூனரெல் எப்போழா?’

‘இன்னு வைந்நேரந்நானன்னா (மாலை) பறஞ்செ.. நமக்கு எத்தாம் பற்றில்லா (போய் சேர முடியாது)..’

‘அப்படியா? முடிஞ்சதுக்கப்புறம் போய் என்ன பண்றது?’

நந்துவின் குரலில் மீண்டும் எரிச்சல் எட்டிப் பார்த்தது. ‘இங்க பார் நளினி. அவர் என்னோட ஃப்ரெண்ட். நான் போறதா இருக்கேன். நீ வேணும்னா வா. க்ராஸ் கேள்வியெல்லாம் கேக்காத.’

நளினி யோசித்தாள். இரண்டு மூன்று நாட்கள் தன்னுடைய ஈகோவை கழற்றியெறிந்துவிட்டு அவனுடன் சேர்ந்து சென்று வந்தால் ஒரு வேளை இந்த மன முறிவுக்கு ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கலாமே. அவனுடன் போனால் என்ன?

‘சரி. ஞானும் வராம்.’ என்றாள்.

‘குட். நான் நம்ம ரெண்டு பேருக்கும் இங்கருந்தே நாளைக்கு அலெப்பில புக் பண்ணிடறேன். ஏசி கோச் கிடைக்காது. ஸ்லீப்பர்லத்தான் போவேண்டியிருக்கும். ஒனக்கு பரவாயில்லையா?’

நளினிக்கு சட்டென்று கோபம் வந்தது. ‘எதுக்கு அப்படி கேக்கறீங்க? உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கு மட்டும் இருக்காதா?’

நந்து கேலியுடன் சிரித்தான், ‘இல்லடி.. நீ சிஎம் கேடர் ஆச்சே.. அதான் கேட்டேன்.’

நளினி சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். ‘போதும் நந்து.. கேலி பண்ணாதீங்க. நீங்க எதுல பண்ணாலும் பரவாயில்லை. போர்டிங் எர்ணாக்குளம்னு பட்டும் போட்டு வாங்கிருங்க. நா இங்க உங்களோட ஜாய்ன் பண்ணிக்கறேன்.’

‘ஏய் வச்சிராத. அப்புறம் இன்னொரு விஷயம்.’

‘என்ன?’

‘நம்ம வந்தனா மேடம் இல்லே? அதான் நம்ம எச்.ஆர் ஹெட்..’

'ஆமாம்?’ நளினிக்கு வந்தனா மேடத்தின் மேல் ஒரு ஹீரோ வொர்ஷிப் இருந்தது. அவளுக்கு மட்டுமா? அந்த வங்கியிலிருந்த சகல பெண் ஊழியர்களுக்கும்தான்.

‘அவங்க சாவு வீட்டுக்கு போயிருந்ததுல ஷாக்காயி இப்ப ICUவிலாம். சீரியசா ஒன்னுமில்லையாம். அவங்களயும் பார்த்துட்டு வரலாம்.’

நளினிக்கு இப்பத்தாண்டா உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கே என்று நந்துவை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. இருந்தாலும் அவளுடைய மனதில் ஒரு கோடியில் நந்துவின் இந்த திடீர் நல்ல குணத்துக்கு ஏதோ ஒரு காரணம் இருப்பது போல் தோன்றியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் ‘சரி நந்து. நா ஒரு நாலு நாளைக்கு லீவ் போட்டுடறேன். உங்களுக்கு ஏதாச்சும் ட்ரெஸ் பேக் பண்ணணுமா?’ என்றாள்.

‘வேணாம். இங்க இருக்கு. நான் பாத்துக்கறேன்.’ என்று நந்து இணைப்பைத் துண்டிக்க.. இந்த பயணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவராதா என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனாள்.

********

‘மைதிலி நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே?’ என்ற தன்னுடைய குடும்ப மருத்துவர் ராஜகோபாலனை வியப்புடன் பார்த்தாள் மைதிலி.

‘என்ன அங்கிள்?’

‘இன்னைக்கி ஒன்ன பொண்ணு பாக்க வர்றதா ஒங்கப்பா காலைல சொன்னாரே. நீ என்னடான்னா இந்த பையன பார்த்துக்கிட்ட இங்கயே ஒக்காந்திருக்கே? யார் மைதிலி இந்த பையன்?’

மைதிலி சிறிது நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். பிறகு, ‘சீனி என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அங்கிள். இன்னும் சொல்லப் போனா அதுக்கும் மேல.. இன்னைக்கி காலைல அவன் தாதர்ல ரோட்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு கேட்டதும் என்னால தாங்க முடியாமத்தான் அப்பாவும் அம்மாவும் தடுத்தும் நான் ஓடிப்போனேன். நான் மட்டும் போயிருக்கலைன்னா என்னாயிருக்கும்னு இப்போ யோசிக்கறேன்.’ என்றாள்..

‘ஏன் அந்த பையனோட பேரண்ட்ஸ் யாரும் இங்க இல்லையா?’

‘இல்ல அங்கிள். அவா எல்லாம் இன்னைக்கித்தான் சென்னைக்கு புறப்பட்டு போறா.. அந்த நேரத்துல இவனோட ஃப்ராக்சர பத்தி சொல்லவேண்டாம்னு சீனி ஃபீல் பண்ணான். அதான் நான் இங்க கூட்டியாந்தேன்.’

‘சரிம்மா. நீ செஞ்சது நல்ல காரியம்தான். ஒத்துக்கறேன். அதான் இப்ப பெரிசா ஒன்னுமில்லேன்னு ஆயிருச்சே? நீ அந்த பையன டாக்சியில ஏத்தி விட்டுட்டு ஆத்துக்கு போலாம்தானே? நீ இன்னைக்கி இங்கதான் இருந்தேன்னு உங்கப்பாவுக்கு தெரியவந்தா அவர் என்னையும் தப்பா நினைக்க சான்ஸ் இருக்கில்லே? இன்னைக்கி சாயந்திரம் நீங்களும் உங்க மிசஸ்சோட வாங்க டாக்டர். எனக்குன்னு பெரிசா சொந்தம்னு சொல்லிக்க இங்க வேற யார் இருக்கான்னு என்னையும் கூப்டுருக்காரே..?’

மைதிலி எழுந்து நின்றாள். ‘ஓக்கே அங்கிள். நா இவன அழைச்சிண்டு போயி அவனோட ஆத்துல விட்டுட்டு சரியா அஞ்சு மணிக்கெல்லாம் நம்மாத்துல இருப்பேன். மாப்ளையாத்துலருந்து ஆறு மணிக்குத்தான் வரேன்னு சொல்லியிருக்கான்னு அம்மா காலைல சொன்னா. அதனால நீங்க ஒர்றி பண்ணிக்காதேள். நா இன்னைக்கி இங்க சீனியோட வந்த விஷயம் அப்பாவுக்கு தெரியறதுல நேக்கொன்னும் ஆட்சேபணையில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சீனியை நன்னாவே தெரியும். நா அவனை அழைச்சிண்டு போலாமா அங்கிள்? ப்ளாஸ்டர என்னைக்கி பிரிப்பேள்னு சொன்னேள்னா நானே அழைச்சிண்டு வரேன்.’

இனி இவளிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்று நினைத்த ராஜகோபாலன் எழுந்து அவளுடன் சீனிவாசன் இருந்த அறைக்குச் சென்று அவனுக்கு மருத்துவம் பார்த்த எலும்பு முறிவு மருத்தவரை கலந்தாலோசித்துவிட்டு, ‘மிஸ்டர் சீனிவாசன். அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்காவது கால அசைக்காம இருக்கறது நல்லது. ஹேர் லைன் ஃப்ராக்சர்தான்னாலும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கறதுதான் நல்லது. ஒரு வாரத்துக்கப்புறம் வீட்டுக்குள்ள லேசா நடக்கலாம். ரெண்டு வாரம் கழிச்சி வந்தீங்கன்னா ப்ளாஸ்டர பிரிச்சிரலாம்.’ என்றவாறு மைதிலியைப் பார்த்தார். ‘You can now take him home Mythili’

‘சீனி நீ இங்கயே இரு.. நா போய் டாக்சியை கூப்டுண்டு வரேன்.’ என்ற மைதிலி ராஜகோபாலனைப் பார்த்தாள். ‘அங்கிள் எவ்வளவு பே பண்ணணும்னு சொன்னேள்னா நா செக் குடுத்துடறேன். கேஷ் கொண்டு வரலை.’

ராஜகோபாலன் மெல்லியதொரு புன்னகையுடன், ‘ரிசப்ஷன் கவுண்டர்ல கேளு மைதிலி. முடிஞ்சா இன்னைக்கி குடு. இல்லைன்னா நாளைக்கானாலும் பரவால்லை.’ என்றார்.

‘இல்லே அங்கிள். செக்தானே, இன்னைக்கே குடுத்துட்டு போறேன்.’ என்று பதிலளித்துவிட்டு வாசலை நோக்கி விரைந்தாள்.

தொடரும்



4 comments:

G.Ragavan said...

கத தொடங்கும் போது என்னடா ஒவ்வொன்னும் ஒவ்வொரு நூல் மாதிரி ஒவ்வொரு பக்கமாப் போகுதேன்னு நெனச்சேன். இப்பத்தான் தெரியுது..ஒன்னோட ஒன்னு சிலந்தி வலை மாதிரி எப்பிடிப் பின்னிக்கிட்டு இருக்குன்னு......

siva gnanamji(#18100882083107547329) said...

ella character um manickavel veedu nokki nagarginrana....well..hotelier-cum-bank director mattum innum varavillai?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நான் என்னுடைய முன்னுரையில சொன்னா மாதிரி இது நம்முடைய கதாநாயகன் மாதவன சுத்தி ஒரு வங்கியில வேல பாக்கறவங்களோட கதை. ஒரு நிறுவனத்துலருக்கறவங்களுடைய அலுவலக மற்றும் தனி வாழ்க்கையில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகள், வேறுபாடுகள், சாதனைகள், தோல்விகள், அவலங்கள் எல்லாவற்றையும் கொண்டதுதான் இந்த தொடர். அதுமட்டுமா பிரச்சினைன்னு வரும்போது நம்முடைய உறவினர்களுக்கும் மேலாக நமக்கு உதவ வருபவர்கள் நம்முடன் பணிபுரிபவர்கள்தான் என்பது நான் என்னுடைய முப்பதாண்டுகால அலுவலக அனுபவத்தில் கண்ட உண்மை. நான் இக்கதையில் வரும் வந்தனாவைப்போல கொச்சியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எனக்கு நேரம் காலம் பார்க்காமல் உதவி புரிந்த என் நண்பர்களை மறக்கவே முடியாது ராகவன். அவர்கள் என் சகோதரர்களையும் விட மேலானவர்கள்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

hotelier-cum-bank director mattum innum varavillai? //

அவங்கெல்லாம் முதலாளிங்களாச்சே? தொழிலாளிங்களப் பத்தி அவங்களுக்கு என்ன கவலை? அதுமட்டுமா? அதிகாரிகள்லயே ரெண்டு பேருக்கு இந்த தகவலே சொல்லப்படலை பாருங்க.