29.7.09

முதல் பார்வையில் 6

ரிசார்ட் - அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகிய வடிவில் நட்சத்திர விடுதி, நீச்சல் குளம், உணவு விடுதி, தூரத்தே தெரிந்த கடற்கரை.

பாஸ்கர் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி சுற்றிலும் பார்க்கிறான். சற்று தொலைவில் நீச்சல் குளமும் சற்று முன் வந்து சேர்ந்த குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கிறது. குழந்தைகள் அனைவரும் நீச்சல் உடையில் - எட்டு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடுவது தெரிகிறது. அவர்களுக்கு நடுவில் நளினியும் நீச்சல் உடையில் - நீச்சல் குளத்தை சுற்றி அமைந்திருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் சில குழந்தைகள் அமர்ந்து குளத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தைகளை ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்துவதும் தெரிகிறது -

பாஸ்கர் காரிலிருந்து இறங்கி தயக்கத்துடன் அவர்களை நோக்கி நகர்கிறான் - குளத்தின் நுழைவாயிலில் காவலாளி ஒருவனால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.

காவல் - மன்னிக்கணும் சார், அவங்க பூல வெக்கேட் பண்றவரைக்கும் யாரையும் அலவ் பண்ண முடியாது.

பாஸ்கர் - ஏன், இது பொது ரிசார்ட்தானே?

காவல் - ஆமா சார்... ஆனா அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஸ்விம்மிங் பூல ப்ளைண்ட் ஸ்கூல் சில்ரனுக்குன்னு புக் பண்ணியிருக்காங்க.. நீங்க வேணும்னா அதுக்கப்புறம் பூல யூஸ் பண்ணிக்கலாம்..

பாஸ்கர் - (புன்னகையுடன்) அப்படியா? சரி...

திரும்பி உணவகத்தை நோக்கி நடக்கிறான்.

....

பகல் நேரம் - உணவகம் ஒரு சிலரைத் தவிர வெறிச்சோடிக் கிடக்கிறது - பாஸ்கர் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறான்.  - அவன் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் நீச்சல் குளம் தெரிகிறது - குழந்தைகள் ஒவ்வொருவராக குளத்திலிருந்து வெளியேறி நிற்கின்றனர் - அனைவரும் வெளியேறியதும் வரிசையாக தோளில் கைபோட்ட வண்ணம் சற்று தள்ளி அமைந்திருந்த குளியலறைக்கு செல்வது தெரிகிறது -

சர்வர் - சார் வேற ஏதாச்சும் வேணுமா?

பாஸ்கர் - வேணாம்ப்பா - பில்ல கொண்டா.

சர்வர் திரும்பி செல்கிறான். பாஸ்கரின் பார்வை மீண்டும் வெளியில் - குளத்திலிருந்து வெளியேறி நளினி சிமெண்ட் பெஞ்ச்சுகளில் ஒன்றில் அமர்வது தெரிகிறது - பாஸ்கர் எழுந்து சர்வர் சென்ற திசையை நோக்குகிறான் - அவன் பில்லுடன் வந்ததும் பில்லுக்கு சற்று மேலேயே தொகையை அவனுடைய டிரேயில் வைத்துவிட்டு 'மீதிய நீயே வச்சுக்கப்பா' என்றவாறே வெளியேறுகிறான்.

...........

குழந்தைகள் ஒவ்வொருவராக அணிவகுத்து அவர்கள் வந்த வேனை நோக்கி செல்கின்றனர் - பாஸ்கர் தன்னுடைய காரின் அருகில் நிற்கிறான் - நளினியின் டிரைவர் பாஸ்கரைப் பார்க்கிறான் - புன்னகைக்கிறான் - திரும்பி அருகில் நின்ற நளினியிடம் ஏதோ சொல்கிறான்.

நளினி பாஸ்கர் நின்றிருந்த திசையில் பார்த்து புன்னகை செய்கிறாள் - என்ன மிஸ்டர் பாஸ்கர் எங்களையே ஃபாலோ பண்றீங்க போலருக்கு?

பாஸ்கர் - புன்னகையுடன் அவளை நெருங்கி - நோ, நோ, சும்மா - டைம் பாஸ் பண்லாம்னு வந்தேன் - உங்க வேன் நிக்கறத பார்த்தேன் - கொஞ்ச நேரம் ஸ்விம் பண்ணா என்னன்னு தோனிச்சி - ஒரு மணி நேரத்துக்கு நீங்க ப்ளாக் பண்ணிட்டீங்க.

நளினி கலகலவென சிரிக்கிறாள் - ப்ளாக் பண்ணிட்டேனா - நானா? How can I afford?

பாஸ்கர் - (புன்னகையுடன்) செக்யூரிட்டி கார்ட் அப்படித்தான் சொன்னான்

நளினி - இல்லை. என்னோட காலேஜ் மேட் ஒருத்தி இங்க சீனியர் எக்ஸ்க்யூட்டிவா இருக்கா அவளோட தயவுலதான் மாசத்துல ஒரு நாள் குழந்தைகள இங்க கூட்டிக்கிட்டு வரோம். I only act as a coordinator. இந்த குழந்தைங்க எல்லாருமே பார்வை இழந்தவங்க.. அத்தோட யாருமே இல்லாத அனாதைங்களும் கூட..

பாஸ்கர் - அப்படியா?  You are doing a great job Miss Nalini despite being a....(தன்னுடைய தவறை உணர்ந்து நிறுத்திக்கொள்கிறான்.)

(நளினி கலகலவென சிரிக்கிறாள்) ஏன் நிறுத்திட்டீங்க? Despite being a blind myself... அதானே... அதுமட்டுமில்லாம நானும் ஏறக்குறைய ஒரு அனாதை மாதிரிதானே.. அக்கா இருக்கா.. இப்போதைக்கி....

(பாஸ்கர் அவளை நெருங்கி அவளுடைய கரங்களை பற்றுகிறான்...) I am extremely sorry Miss Nalini.... I didn't mean it... என்னெ மன்னிச்சிருங்க... ப்ளீஸ்...

(நளினி மெள்ள தன்னுடைய கரங்களை விடுவித்துக்கொண்டு சிரிக்கிறாள்) - You are excused Mr.Basker... நா உங்கள தப்பாவே நினைக்கலை, போறுமா?

(பிறகு திரும்பி தன்னுடைய வேனை நோக்கி நகர்கிறாள்) - மாணிக்கம் எல்லாரும் ஏறியாச்சா... போலாமா?

டிரைவர் - ஆமாம்மா - நீங்க ஏறிக்கிட்டா புறப்படலாம்...

நளினியின் கரங்களைப் பற்றி முன் இருக்கையில் அமர்த்திவிட்டு ஓட்டுனர் வேனை சுற்றிக்கொண்டு தன் இருக்கைக்கு செல்கிறார்

பாஸ்கர் அவனை நெருங்கி - எங்க, சிட்டிக்குத்தானே?

டிரைவர் - ஆமா சார் - குழந்தைகள அவங்க ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிட்டு மசாஜ் செண்டருக்கு போயிருவோம்...

வேன் நகர்கிறது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த நளினி பாஸ்கர் இருந்த திசையை நோக்கி கையை அசைக்கிறாள். 'பை மிஸ்டர் பாஸ்கர் அப்புறம் பார்க்கலாம் - அவளுடன் சேர்ந்து குழந்தைகள் அனைவரும் கோரசாக டாட்டா சொல்லி கைகளை அசைக்கின்றனர்.

பாஸ்கர் வேன் சென்று மறைவதை பார்த்தவாறு நிற்கிறான்.

........


மசாஜ் பார்லர் - பாஸ்கரும் நளினியும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர்.

நளினி - நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க மிஸ்டர் பாஸ்கர். பச்சாதாபத்தால ஏற்படற எந்த ரிலேஷன்ஷிப்பும் நிலைச்சி நிக்காதுன்னு நா நினைக்கறேன் - அதுவுமில்லாம நீங்க என்னெ ரெண்டு, மூனு தரம் பார்த்திருப்பீங்களா?

பாஸ்கர் - பச்சாதாபங்கற வார்த்தை கொஞ்சம் ஹார்ஷா படுது... நா அப்படி நினைக்கவே இல்லை...

நளினி - பின்னே?

பாஸ்கர் - எனக்கு ஏன்னு சரியா சொல்ல தெரியல... I don't know why....

(நளினி மெலிதாய் புன்னகைக்கிறாள்.. அதில் உள்ள சோகம் பாஸ்கரை வருத்தம் கொள்ள செய்கிறது. அவளுடைய இருக்கையை நெருங்கி அவளுடைய கரத்தை பற்ற முயல்கிறான். நளினி விலக்கிக்கொள்கிறாள்...)

நளினி - I am sorry... but I will have to ask you to.....

பாஸ்கர் - Leave?

(நளினி ஆமாம் என்று தலையை அசைக்க பாஸ்கர் மெள்ள எழுந்து நின்று மசாஜ் மேசையில் கிடந்த தன்னுடைய டவலை எடுத்துக்கொள்கிறான்.)

பாஸ்கர் - உன்னை... சாரி... உங்களை ..

நளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள் - நீங்க என்னெ ஒரு நல்ல நண்பியா நினைச்சா நளினின்னே கூப்பிடலாம்... We will continue to be good friends... After all நீங்க இன்னும் ரெண்டு வாரத்துக்குத்தானே இங்க இருக்கப் போறீங்க...

பாஸ்கர் - தாங்க்ஸ் நளினி... பை...

(நளினி தன் வலது கரத்தை நீட்டுகிறாள்) ஆல் தி பெஸ்ட்...

(இதை பாஸ்கர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுடைய முகத்தில் தெரிந்த வியப்பு காட்டுகிறது. சமாளித்துக்கொண்டு நளினியின் கரங்களை ஆதரவாய் பற்றிக்கொள்கிறான்..). தாங்ஸ் நளினி...பை..

நளினி - பை... சீ யூ...

பாஸ்கர் -( புன்னகையுடன்) எப்போ?

(நளினி கலகலவென சிரிக்கிறாள் )- பயங்கரமான ஆள் நீங்க மிஸ்டர் பாஸ்கர்...

பாஸ்கர் - நோ மிஸ்டர்... எனக்கு நீங்க வெறும் நளினின்னா நானும் உங்களுக்கு வெறும் பாஸ்கர்.. என் கேள்விக்கி பதில் சொல்லலை...

நளினி - என்ன கேள்வி?

பாஸ்கர் - எப்போ மறுபடியும் பார்க்கலாம்னு...

நளினி மீண்டும் சோகமாகிறாள்... I don't know - May be after a few days...

பாஸ்கர் - தாங்ஸ்... பை..

நளினி பதிலளிக்காமல் அறைக்குள் திரும்ப...பாஸ்கர் அரை மனதுடன் விடை பெறுகிறான்....

தொடரும்..

No comments: