31.7.09

இக்கரைக்கு அக்கரை ..... (சிறுகதை)

விடிந்தது தெரிந்தும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையிலேயே படுத்துக் கிடந்தாள் மேகலா. 'இன்னும் எத்தன நாளைக்கி இந்த சீரழிவு? நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் மாமி நம்மள புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்களே... இவர் கிட்டா சொன்னா என்னால ஒன்னும் செய்ய முடியாது... நீதான் அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு சொல்லிடறார்... ஏன், ஏன் நா மட்டுந்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா? எந்த ஊர் நியாயம் இது?'

சங்கர்  பாத்ரூமீலிருந்து வருவது தெரிந்தும் தெரியாததுபோல் கண்களை மூடிக்கொண்டாள்...

முகத்தை துடைத்தவாறே அறைக்குள் நுழைந்த சங்கர் உறங்குவதைப் போல் நடித்த தன் மனைவியைப் பார்த்தான். லேசான புன்னகை அவனுடைய உதடுகளில் தவழ்ந்தது.. 'பாவம்... கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருக்கட்டும்...காப்பிய போட்டுட்டு எழுப்புவோம்...'

சமையலறைக்குள் நுழைந்து அடுத்த சில நிமிடங்களில் காப்பியை கலக்கி இரு டபராக்களுடன் படுக்கையறைக்குள் அவன் நுழைய அப்போதுதான் கண்விழித்தவள்போல் மேகலா எழுந்து அமர்ந்தாள். 'என்னங்க நீங்களே போட்டுட்டீங்க? என்னெ எழுப்ப வேண்டியதுதான? மாமி மட்டும் இந்த காட்சிய பாத்துருக்கணும்... இன்னைக்கி முழுசும் மண்டையிடிதான்..'

சங்கர் புன்னகையுடன் ஒரு டபராவை அவளிடம் நீட்டினான். 'அம்மாதான் இன்னைக்கி இல்லையே.. இந்தா இந்த காப்பிய குடி..'

மேகலா ஒரு அசட்டு புன்னகையுடன் காப்பி டபராவை வாங்கி குடித்தாள். 'சூப்பரா இருக்குங்க... இனி டெய்லி நீங்களே....'

'போட்டுருங்கன்னு சொல்றே... இன்னைக்கி காப்பி, நாளைக்கி காப்பியோட டிபன்... அப்புறம் லஞ்ச், ராத்திரி டிபன்னு எல்லாத்தையும் நானே செஞ்சிட்டு ஆஃபீஸ் போறேன்... நீ ராணி மாதிரி...'

'சேச்சே... காலையில பெட் காப்பி சாப்பிட்டு பழக்கம், எங்க வீட்ல....அதான் சொன்னேன்...'

சங்கர் பதில் பேசாமல் காப்பியை குடிக்க அறையில் சில நிமிடங்கள் மவுனம்....

'சங்கர்.. நா ஒன்னு சொன்னா கேப்பீங்களா?'

'ம்ம்ம்ம்... சொல்லு...'

'இப்படியே எத்தனை நாளைக்கித்தாங்க...'

சங்கர் அனுதாபத்துடன் அவளைப் பார்த்தான்...

'நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்... அதேபோல அதுக்கு நா என்ன பதில் சொல்லப் போறேன்னு ஒனக்கு தெரியும்... எதுக்கு மேகலா அதையே பேசிக்கிட்டு...'

'நா இந்த ரெண்டு மாசமா... நீங்க சொன்ன மாதிரியெல்லாம் இருந்து பார்த்துட்டேங்க...'

'ஆனா, அம்மாதான் ஒன்னெ புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க...'

மேகலா வியப்புடன் அவனைப் பார்த்தாள். 'அது ஒங்களுக்கே தெரியுதில்ல? அப்புறம் என்ன?'

சங்கர் காப்பி டபராவுடன் எழுந்து நின்றான். 'சரி...இதுக்கு என்ன முடிவுன்னு நீ நினைக்கறே? தனியா போயிரணும்... அதானே?'

மேகலாவும் எழுந்து தன் கையிலிருந்த காலி தம்ளர், டபராவுடன் கிச்சனை நோக்கி நடந்தாள். சங்கர் அவளைத் தொடர்ந்து கிச்சனுக்குள் நுழைந்து தன்னுடைய காலி தம்ளரை சிங்கில் போட்டுவிட்டு கைகளை கழுவியவாறு அவளைப் பார்க்கிறான். 'என்ன பதில காணோம்...'

'நா என்ன சொன்னாலும் நீங்க கேக்கப் போறதில்லை... ஒங்களுக்கு அம்மாதான் எல்லாம்... ஆனா என் ஃபீலிங்ச...' மேலே பேச முடியாமல் முகம் கவிழ்ந்து கிச்சன் மேடையில் சாய்ந்து நின்ற மேகலாவையே பார்த்தவாறு நின்றான் சங்கர்...

அவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன..

சங்கருடைய தந்தை இறந்தபோது அவனுக்கு ஐந்தோ, ஆறோ வயது... நினைவு தெரிந்த நாளிலிருந்தே அம்மாவைத் தவிர அவனுக்கு வேறு யாரும் இருக்கவில்லை...

எப்போதாவது வந்து போகும் உறவினர்களைத் தவிர....

அதனால்தானோ என்னவோ அவனுடைய தாய்க்கு 'என்னுடைய மகன் எனக்கு மட்டுந்தான்' என்கிற ஒருவித பொசசிவ்னஸ்...  அவனுக்கு திருமண வயது வந்தும் கூட எங்கே தன்னுடைய மகன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற அச்சத்தில் திருமண பேச்சே எடுக்காமல் இருந்தாள் 'என்ன பார்வதி... புள்ளைக்கி கல்யாணம் பண்ணி வைக்கணுங்கற எண்ணமே இல்ல போலருக்கு... அவனுக்கு முப்பது வயசாயிருசே...' என்று அக்கம்பக்கத்தில் கேட்க ஆரம்பித்தபோதுதான் அரை மனதுடன் அவனுடைய ஜாதகத்தோடு தன்னுடைய ஜாதகத்தையும் தெரிந்த தரகரிடம் கொடுத்தாள் பார்வதி... 'என் புள்ள ஜாதகத்தோட பொருந்துனா போறாது... என்னோட ஜாதகத்துக்கும் பொருந்துனாப்பல இருக்கணும்.. சொல்லிட்டேன்... காலாகாலத்துக்கும் வீட்டோடவே இருக்கறாப்பல பேசி முடிச்சிருங்க...  என்ன வெளங்குதா?'

அப்படியெல்லாம் பார்த்து முடித்த பெண்தான் மேகலா. பெண் பார்க்க சென்றபோது முதல் பார்வையிலேயே அவனுக்கு பிடித்துப்போனது. ஏனோ தெரியவில்லை பார்வதிக்கு அவளை அவ்வளவாக பிடிக்கவில்லை.

'ஒரே பொண்ணாமேடா...  பிடிவாதம் புடிச்ச பொண்ணா தெரியுதே...'

அவள் அப்படிச் சொன்னதும் பெண்ணை தனக்கு பிடித்திருந்தது என்பதை கூட சொல்லாமல் நிறுத்திக்கொண்டான் சங்கர். ஆனால் அவனுக்கு அவள்தான் என்பது விதி போலிருந்தது. ஒரு வாரம் காத்திருந்த தரகர் வீடு தேடி வந்தார். 'அவங்க சொன்னதுக்கு மேலயே செய்யறேன்னு சொல்றாங்க மாமி. பொண்ணு வேலைய கூட விட்டுருச்சாம். வீட்டோட இருக்கணும்னு நீங்க சொன்னேளாமே... நீங்க தைரியமா சரின்னு சொல்லுங்கோ..'

அரை மனதுடந்தான் பார்வதி சம்மதித்தாள்.

ஆரம்பத்தில் மேகலாவின் சமையல் பக்குவம், சிக்கனம் எல்லாம் அவளுக்கு பிடித்துத்தானிருந்தது... ஆனால் சங்கருக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதை  வந்த ஒரு வாரத்திலேயே புரிந்துக்கொண்டு அவனுடைய அனைத்து தேவைகளையும்  அவளே கவனித்துக்கொண்டதுதான் பார்வதிக்கு பிடிக்காமல் போனது.

அதை கவனித்த சங்கர்  'இங்க பார் மேகலா... நீ எனக்கு புடிச்சத செய்யறத விட அம்மாவுக்கு எது புடிக்கும்னு கேட்டு சமைச்சி வை...' என்றான் ஒரு நாள்.

'ஏன்... நீங்கதான் எனக்கு முக்கியம்.' என்றாள் மேகலா சட்டென்று சற்று உரத்த குரலில். மாமியாரில் காதில் அது விழட்டுமே என்பதை போலிருந்தது அவளுடைய குரல்..

அன்றிலிருந்து துவங்கியதுதான் இந்த மூன்று மாத யுத்தம்.  மேகலா எது செய்தாலும், சொன்னாலும் குற்றம் என பார்வதியும் 'மாமிக்கு நான் என்ன செஞ்சாலும், சொன்னாலும் குத்தாமாவே படுதுங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?' என மேகலாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்ட செய்வறியாமல் திணறினான் சங்கர்.

'வீட்டுக்கு வீடு வாசற்படிங்கறது மாதிரிதாண்டா இதுவும்... நீ தலையிட்டு உன் வைஃபுக்கு சப்போர்ட்டா பேசாம இருந்தா எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிரும். அம்மாவுக்கு தெரியாம வைஃப சப்போர்ட் பண்ணு, வைஃபுக்கு தெரியாம அம்மாவ சப்போர்ட் பண்ணு... இந்த மாதிரி ஜக்லிங் வேலையத்தான்  நாங்கள்ளாம் செஞ்சிக்கிட்டிருக்கோம்.' அலுவலக நண்பர்களின் அறிவுரை கேட்பதற்கு என்னவோ மிக எளிதாக பட்டது ஆனால் நடைமுறையில்...

அடுக்களையை விட்டால் ஹால், படுக்கையறை என இரண்டே அறைகளைக் கொண்ட வீட்டில் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருக்கு எப்படி சப்போர்ட் பண்ணுவது?

அதற்கு விடையாக வந்ததுதான் அடுத்த வீட்டு மாமி குடும்பத்து வெளியூர் திருமணம்.

'எனக்கு ஆஃபீஸ்ல லீவு கிடைக்கலைம்மா...  நீங்களும் மேகலாவும் போய்ட்டு வாங்க...' பார்வதிக்கு மேகலாவை அழைத்து செல்வதில் விருப்பமிருக்காது என்று தெரிந்தேதான் அப்படிச் சொன்னான். அவன் நினைத்தது போலவே அம்மாவும் சொன்னாள். 'அவ எதுக்குடா.. அங்கயும் வந்து எதையாவது ஏடாகூடமா சொல்வா... நா மட்டும் அவங்க கூடவே போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன்.. அவள வீட்டோட இருக்கச் சொல்லு... அவ கூப்ட்டா இவ கூப்ட்டான்னு வீட்ட தொறந்து போட்டுட்டு போயிரப்போறா.'

.........

'என்னங்க யோசனை?'

'எ... என்ன கேட்டே?'

மேகலா சிரித்தாள். 'சரியா போச்சு... என்ன ஏதாச்சும் ஃப்ளாஷ் பேக்கா...'

சங்கர் பதிலளிக்காமல் 'இன்னைக்கி சாயந்தரம் ரெடியா இரு எங்கயாச்சும் போகலாம்..'

மேகலா வியப்புடன் அவனை பார்த்தாள். திருமணமாகி இந்த் மூன்று மாத காலத்தில் மறு வீடு என்ற பெயரில் தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்த அந்த ஒரு வார காலத்தை விட்டால் எங்கேயும் இருவரும் சேர்ந்து சென்றதில்லை... கோவில்களைத் தவிர.. மாமியார் சகிதம்..

'எங்கயாச்சும்னா?  கோவில விட்டா எங்க கூப்ட்டுக்கிட்டு போயிருக்கீங்க?'

'கோவிலுக்கு இல்லை...'

'அப்ப சினிமாவுக்கு?'

சங்கர் அவளைப் பார்த்து புன்னகைத்தான்...'சரி... நீயே எந்த படத்துக்கு போகணும்னு டிசைட் பண்ணி வை... இப்ப சமையலைப் பார் நா ஆஃபீசுக்கு சீக்கிரம் போனாத்தான் சீக்கிரம் வர முடியும்...'

மேகலா பரபரவென்று சமையலை முடித்து அவனை அனுப்பிவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்..

......

'ஏய் மேகலா... என்ன இது அதிசயம்... உங்க மாமிக்கு எப்படி டிமிக்கி குடுத்தே'

மேகலாவைக் கண்டதுமே அவளுடைய மூன்று மாத தோழி ரேவதி ஓடிவந்து வரவேற்றாள்.

மேகலா கலகலவென சிரித்தாள். 'மாமி ஊருக்கு போயிருக்காங்க. அதான் உன்னெ பாத்துட்டு ஒரு விஷயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்...'

ரேவதி வியப்புடன் பார்த்தாள். 'எங்கிட்டயா? எதப் பத்தி?'

'வேறென்னத்த கேக்கப் போறேன்... எப்படி உன் ஹஸ்பெண்ட தனிக் குடித்தனத்துக்கு சம்மதிக்க வச்சேன்னுதான்....'

ரேவதியின் முகம் சட்டென்று களையிழந்துப்போனதை பார்த்தாள் மேகலா.. 'என்னடி சட்டுன்னு டல்லாய்ட்டே... என்ன விஷயம்?'

ரேவதி சலித்துக்கொண்டாள்... 'எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சைதாண்டி..'

'ஏன் என்னாச்சி...'

'அங்க மாமி, மாமனார் தொல்லைன்னு நினைச்சித்தான் இவர நச்சரிச்சி தனியா வந்தோம்... ஆனா இப்ப இவரே ஒரு தொல்லையாய் போய்ட்டார்டி...'

'என்னடி சொல்றே?'

'ஆமாடி.. அங்க அப்பாவுக்கு பயந்து ஆஃபீச விட்டதும் டைமுக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்த மனுஷன் இப்ப எத்தனை மணிக்கி வரார் தெரியுமா?'

'சொல்லு..'

'நடுராத்திரி..'

'ஐயையோ... அது வரைக்கும் நீ தனியாவா இருக்கே?'

'ஆமாடி .. அது மட்டுமில்லாம அவர் வர்ற வரைக்கும் முளிச்சிருந்து, கதவ திறந்து, அந்த நேரத்துலயும் சாப்பாடு சூடாருக்கணும்.. இல்லன்னா தாம், தூம்னு குதிப்பார். இது போறாதுன்னு புதுசா ஒரு தலைவலி...'

'என்னது?'

'கொஞ்ச நாளா.. குடிச்சிட்டு வரார்டி...'

மேகலா அதிர்ச்சியுடன் தன் சிநேகிதியைப் பார்த்தாள். 'என்னடி சொல்றே... மாதவன் சாரா?'

இந்த மாதவனைத்தான் உதாரணமாக காட்டி சங்கரிடம் மல்லுக்கு நிற்பாள் மேகலா... அப்போதெல்லாம் 'அவனைப் பத்தி உனக்கு தெரியாது மேகலா... அவனெ மாதிரியெல்லாம் நா இருக்கணும்னு நினைக்காதே... அவ்வளவுதான் சொல்வேன்.' என்றது நினைவுக்கு வர... இதுதான் விஷயமா? என்று நினைத்தாள்.

'என் பெர்சனல் விஷயத்துல நீங்க தலையிட தேவையில்லைன்னு மூஞ்சில அடிச்சா மாதிரி மாமனார், மாமியார்கிட்ட சொல்லிட்டு வந்த எனக்கு இப்ப அவரோட நடவடிக்கைய பத்தி போய் அவங்கக்கிட்ட சொல்லக் கூட முடியாம....  இப்பல்லாம் வீட்டு செலவுக்குக் கூட பணமில்லாம...நா படற வேதனை வெளியில யாருக்கும் தெரியாதுடி...' மேலே தொடர முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுத ரேவதி முகத்தை துடைத்துக்கொண்டு அவளைப் பார்த்தாள்... 'இந்த லட்சணத்துல தனிக்குடித்தனம் போறது எப்படின்னு என்னெ கேக்க வந்திருக்கே. வேணாம்டி... வீட்டுல பெரியவங்கன்னு யாராச்சும் இருந்தாத்தான் இந்த் ஆம்பிளைங்க ஒழுங்கா இருப்பாங்க... இன்னைக்கி குடின்னு ஆரம்பிச்சிருக்கற இவரு நாளைக்கி வேற எதத்தான் செய்ய மாட்டார்? பேசாம வெக்கத்த விட்டு மாமனார், மாமியார் கால்லயே போய் விழுந்துரலாம்னு கூட யோசிக்கிறேன்...'

தனிக்குடித்தனத்துல இப்படியெல்லாம் பிரச்சினை வருமா... நம்ம சங்கர் இப்படியெல்லாம் மாறமாட்டார் என்றாலும் எதற்கு இந்த விஷப் பரீட்சை என்று நினைத்தவாறு கிளம்பினாள் மேகலா...

ஊரிலிருந்து வந்த சில நாட்களில் மருமகளின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர்ந்த பார்வதி 'நா இல்லாத நேரத்துல என்னத்தடா சொல்லி அவ மனச மாத்துனே.. ஆள் அப்படியே மாறிப் போயிருக்கா?'  என்றாள் தன் மகனிடம். 'அதாம்மா எனக்கும் தெரியல...' என்றான் சங்கர்.

*******

No comments: