9.7.09

அப்பான்னா யாரு?

இது ஒரு உண்மை சம்பவம். எனக்கு தெரிந்த குடும்பத்தில் நடந்த நிகழ்வு. பெயர்களை மட்டும் மாற்றியிருக்கிறேன்...




ராமசாமி அடுக்களையை ஒழித்து பாத்திரங்களை சிங்க்கில் போட்டார். பாலில் உரை ஊற்றி ஹாட்பேக்கில் வைத்து மூடினார். 'குளிர் காலத்துல ஹாட்பேக்ல உரை ஊத்துன பால வைச்சி மூடி வைச்சா தயிர் நல்லா உரைஞசி கெட்டியா இருக்கும்.' மனைவி குரல் காதில் ஒலித்தது. ஹூம்.. என்ற ஒரு பெருமூச்சுடன் விளக்குகளை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பத்து மணி செய்திக்காக தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தார். தலைப்புச் செய்தியை மட்டும் பார்த்துவிட்டு படுப்பது வழக்கம். 'இன்னும் ஒரு நிமிசத்துல போட்டுருவான். ரிமோட்ட இந்த குட்டி எங்க தூக்கி போட்டுச்சோ தெரியலையே...'



ஹால் விளக்கை போடாமல் கையிலிருந்த செல்ஃபோன் வெளிச்சத்தில் சோபாவை துழாவினார். காணவில்லை. மெள்ள எழுந்து தன்னுடைய மகள் கமிலியின் படுக்கையறையை ஒட்டியிருந்த பேத்தி மஞ்சுவின் அறைக்குள் நுழைந்தார். மஞ்சுவுக்கு விளையாட எத்தனை பொம்மைகள் இருந்தாலும் சுட்டி டி.விதான் உலகமே. அதை மட்டும் மாற்ற விட மாட்டாள். அவளுக்கு போகத்தான் தாத்தா, அம்மா எல்லாருக்கும். ஆகவே டிவி ரிமோட் எப்போதும் அவள் கையில்தான்...



கட்டில் காலியாக இருந்தது. அருகில் தரையில் வேலைக்கார சிறுமியின் மீது காலை போட்டுக்கொண்டு உறங்கிப்போயிருந்த பேத்தியை தூக்கி கட்டிலில் கிடத்தினார். கட்டில் தலைமாட்டில் கிடந்த ரிமோட்டை எடுத்துக்கொண்டு ஓசைபடாமல் நடந்து அறையை விட்டு வெளியேறினார்.



தலைப்பு செய்தி முடிந்து போயிருந்தது. இனி அரை மணி நேரம் உட்கார்ந்திருக்கணும்... திரையில் அன்று மாலை நடந்த சாலை விப்பத்தைப் பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. எந்த விவஸ்தையுமில்லாமல் விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் குற்றியிராக கிடப்பவர்களை காண்பிப்பதில் அப்படி என்னதான் கிக்கோ இந்த டிவி நிரூபர்களுக்கு... போறாததுக்கு பாதிக்கப்பட்டவர்களிடமே 'இது எப்படி நடந்துதுன்னு சொல்ல முடியுமான்னு' ஒரு கேள்வி... விவஸ்தை கெட்ட ஜன்மங்க...



இப்படியொரு விபத்தில்தான் அவளுடைய மனைவியும் மருமகனும் இறந்தார்கள்... மூனு வருசம்...



'புடிச்சாலும் புளியங்கொம்பாத்தான் புடிச்சிட்டீங்க ராமசாமி யூ.எஸ்.ல வேலை.... கைநிறைய சம்பளம். மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினன்னு எந்த பிடுங்கலும் இல்லை உங்க பொண்ணுக்கு..'



திருமணமாகி முதல் வருடத்திலேயே அழகாய் ஒரு பெண்குழந்தை. அதற்கு ஒரு வயது முடிந்தபோது 'ஒரு வாரம் லீவுல வந்துட்டு போயிரும்மா.. காது குத்தி மொட்டை போட்டுரலாம்.. ஆடம்பரம் இல்லாம குருவாயூர் கோயில்ல வச்சிக்கலாம்.' மருமகன் பரமசாது. மறுபேச்சில்லாமல் புறப்பட்டு வந்தார், மனைவி குழந்தையுடன்.. குருவாயூர் கோவிலில் மொட்டையடித்து, காது குத்திவிட்டு நேர்த்தி கடனை செலுத்திவிட்டு சந்தோஷமாய் திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் எமனாய் வந்தது அந்த தண்ணி லாரி... வாகன ஓட்டி மருமகனும், அவருக்கருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவருடைய மனைவியும் அதே இடத்தில் பிணமானார்கள்.. விபத்துக்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் அவர் 'கொஞ்சம் கண்ண மூடிக்கிறேன்.. நீ கொஞ்சம் முன்னால் வந்து உக்காரேன்.' என்று பின் சீட்டிலிருந்த தன் மனைவியை முன் சீட்டிற்கு வரச்சொல்லியிருந்தார். முன் சீட்டில் அமர்ந்து உறங்கினால் மருமகனுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்ற எண்ணம்...

அதுவே இருவருக்கும் எமனாய் போனது...



பின்சீட்டில் இருந்த ராமசாமி, மகள் கமலி, மற்றும் ஒரு வயதுக்குழந்தை மஞ்சுவும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அதன் பிறகு கமலி மட்டும் யூ.எஸ். சென்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சென்னை திரும்பினாள். மருமகனின் அமெரிக்க நிறுவனம் தாராளமாய் அள்ளிக்கொடுத்த காம்பன்சேஷன் ஒரு வசதியான வாழ்க்கையை கொடுத்தது. கமலிக்கும் சென்னையிலேயே வேலையும் அமைந்தது. பேத்தியை கவனிக்க சரியான ஆள் கிடைக்காமல் போகவே ராமசாமி தன்னுடைய வங்கி வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். 'மிஞ்சிப் போனா இன்னும் அஞ்சி வருசம்தானப்பா.. இந்த நேரத்துல ஒங்கள ஊர விட்டு மாத்திட்டா நானும் மஞ்சும் என்ன பண்றது.. பேசாம வி.ஆர் ரிக்வெஸ்ட் குடுத்துருங்களேன்...' ஓய்வு பெறும்போது அவர் பெற்றுக்கொண்டிருந்த ஊதியத்தில் ஐம்பது விழுக்காடு ஓயுவூதியமாக வந்தது. அதிலேயே குடும்பத்தின் மொத்த செலவையும் அவர் பார்த்துக்கொண்டார். 'ஒன் சாலரி பாங்க்லயே இருக்கட்டும்மா.. என் காலத்துக்கப்புறம் அதான் ஒனக்கு செக்யூரிட்டி..'



'இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கயேன் கமலி' அவர் எத்தனை முறை கெஞ்சியும் கமலியின் மனசு மாறவே இல்லை...'பாஸ்கரோட வாழ்ந்த ஒரு வருச வாழ்க்கையே எனக்கு போறும்பா... அவர் இருந்த எடத்துல என்னால வேற யாரையும் கற்பனையில கூட பாக்க முடியல... என்னை இப்படியே விட்டுருங்கோ ப்ளீஸ்....'



இரண்டு வருடங்கள்... மஞ்சுவின் சுட்டித்தனம் அதிகமாகிப்போக ராமசாமியால் அவளை சமாளிக்க முடியவில்லை. 'இவள பாத்துக்க ஒரு சின்ன பொண்ணு வீட்டோட கிடைச்சா பரவால்லை...' ஊரிலிருந்த தன் நண்பரிடம் சொல்லி ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்த இப்போதெல்லாம் மஞ்சுவுக்கு அந்த பெண்தான் எல்லாமே...



இன்னும் நாலஞ்சு மாசமானா பேபி க்ளாஸ்... அப்புறம் பிரச்சினை இல்லை...



மீண்டும் தலைப்புச் செய்திகள்...



நண்பகல் செய்தியில் சொன்ன அதே செய்திகள்தான்...



டி.வியை அணைத்துவிட்டு செல்ஃபோன் வெளிச்சத்திலேயே மாடிப் படியை நோக்கி நடந்தார்.



***



'இன்னைக்கித்தாம்ப்பா இண்டர்வியூ... நீங்களும் வறீங்க இல்ல?'



'நா இல்லாமையா? எவ்வளவு ப்ரிப்பேர் செஞ்சிருக்கேன்?'



'ஒங்களையா இண்டர்வியூ பண்ணப் போறாங்க.. ஒங்க பேத்தியைத்தான?' கமலியின் உதடுகள் கேலியுடன் வளைந்தன.



'மஞ்சுவை ப்ரிப்பேர் பண்ணதத்தான் சொல்றேன். நா கூட இருந்தாத்தான அவ மறந்துட்டாலும் ப்ராம்ப்ட் பண்ண வசதியாருக்கும்!'



கமலி சிரித்தாள். 'சரி வாங்க. ஆனா ஒன்னு, எச்.எம் உங்கள உள்ள விடறது டவுட்டுதான்.'



'அத நா பாத்துக்கறேன்.'



ஆனால் எச்.எம் பிடிவாதமாக அவரை உள்ளே விட மறுத்துவிட்டாள். 'பேரண்ட்ஸ் மட்டுந்தான் அலவுட் சார்.' என்று வாசலிலேயே அவரை தடுத்துவிட்டாள்.



'இல்ல மேடம்.. நா அவ தாத்தாதான்.. கமலி என் டாட்டர்.'



எச்.எம் சிடுசிடுத்தாள். 'ஏன் அவ அப்பா எங்க? அட்மிஷன் இண்டர்வியூக்கு கூட வர முடியாதுன்னா, I am sorry.. I can't interview your daughter'



கமலி பரிதாபமாக அவளை பார்த்தாள். 'My husband is no more madam. அதனாலதான் அப்பாவ கூட்டிக்கிட்டு வந்தேன்.'



எச்.எம்மின் முகம் சட்டென்று வாடிப்போனது. கல்லுக்குள்ளும் ஈரம் என்பார்களே... உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து மஞ்சுவை அணைத்துக்கொண்டாள். 'I am really sorry Kamali... I didn't know.. இந்த வயசுல அப்பா இல்லாம இருக்கறதுன்னா என்னன்னு அனுபவபூர்வமா உணர்ந்தவ நான்... There is no need for a formal interview...' குனிந்து மஞ்சுவின் கன்னங்களைப் பற்றினாள் 'You are admitted Manju..'



'மேடத்துக்கு தாங்ஸ் சொல்லு மஞ்சு' என்றவாறு அறைக்குள் நுழைந்து அமர்ந்துக்கொண்டார் ராமசாமி.



மஞ்சு சட்டென்று, 'தாத்தா அப்பான்னா என்ன?' என்றாள்....



'நாந்தாண்டா ஒன் அப்பா...' என்றார் ராமசாமி...



எச்.எம்மின் முகம் மீண்டும் மாறியது. 'Mr.Ramasamy please don't mislead the child.'



'நீ என் தாத்தா... நீ சொல்லும்மா அப்பான்னா யாரு?'



'Ms. Kamalee Don't mistake me...but ... இந்த குழந்தைக்கு அப்பான்னா யாரு, அப்பா ஏன் இப்ப இல்லை... இதையெல்லாம் சொல்லித் தராம ஸ்கூலுக்கு அனுப்பினீங்கன்னா மத்த பிள்ளைங்களோட அப்பா கூட வரும்போது நமக்கு மட்டும் ஏன் அப்பா இல்லைங்கற எண்ணம் மனசுல வந்துரும். அப்புறம் அதுவே தாழ்வு மனப்பான்மையா மாறி... It can affect her whole life...'



'I understand Madam.... but....' கமலியின் குரல் நடுங்க மேலே தொடர முடியாமல் தன் தந்தையை பார்த்தாள்.



ராமசாமி தான் எச்.எம் அறைக்குள்ளேயே வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்தார்...



'அப்பான்னா யாரு? எப்படி சொல்லி இந்த குழந்தைக்கு புரிய வைக்கிறது?'



உங்கள்ல யாருக்காச்சும் முடியுமா?



******

No comments: