19.8.09

முதல் பார்வையில் 12

12
இரவு - நளினியின் வீடு.

மல்லிகா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அவளைப் பிந்தொடர்ந்து நளினி மற்றும் ராஜி, நீலா ஆகியோர் நுழைகின்றனர்.

மல்லிகா - ராஜி, நீலா ரெண்டு பேரும் போய் படுங்க. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். ஆறு மணிக்கு வந்து எழுப்புவேன் ஒடனே எழுந்திருச்சிரணும், சொல்லிட்டேன்.

ராஜி - சரிம்மா... சித்தி அந்த அங்கிள எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு ....

மல்லிகா - கோபத்துடன் ராஜியைப் பார்த்து முறைக்கிறாள் - ஏய்... ஒன்னெ யாரும் கேட்டாங்களா? நீலாவ கூட்டிக்கிட்டு ஒங்க ரூமுக்கு போ....

ராஜி - சாரிம்மா.... குட்நைட் சித்தி.. ஏய் நீலா இங்கேயே தூங்கிறாத வா நம்ம ரூமுக்கு போலாம் (தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நீலாவின் தோள் மீது கைவைத்து தள்ளிக்கொண்டு செல்கிறாள்)

நளினி சோபாவில் அமர்கிறாள்.

மல்லிகா ஹால் விளக்கை தவிர மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு மாடியில் இருந்த தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளை நோக்கி நகர்கிறாள்.

நளினி - என்னக்கா கோபமா?

மல்லிகா - எதுக்கு?

நளினி - பின்னே எதுக்கு ராஜி மேல எரிஞ்சி விழுந்தே?

மல்லிகா பதிலளிக்காமல் மாடிப்படியை நோக்கி செல்கிறாள்.

நளினி - கோபமாத்தான் இருக்கே... அதான் பதில் சொல்லாம போற..

மல்லிகா திரும்பி தன் தங்கையை பார்க்கிறாள்.- நாம போன மாதிரியே திரும்பி வந்துருக்கலாம்லே... எதுக்கு பாஸ்கர ட்ராப் பண்ணச் சொன்னே...

நளினி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்...

மல்லிகா - நா சொல்றேன்.. பாஸ்கருக்கு இந்த வீட்ட காட்டணும்... அதானே....

நளினி - என்னக்கா நீ... நா சாதாரணமா செஞ்சதுக்கு நீ என்னென்னமோ கற்பனை செய்யிறே...

மல்லிகா - இல்ல நளினி, நா ஒத்துக்கமாட்டேன்... நீ பாஸ்கர் வர்றதுக்கு முன்னாலயே நம்ம டிரைவர போகச் சொல்லிட்டே.. சரிதானே?

நளினி - ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்கிறாள்...

மல்லிகா வேதனையுடன் புன்னகை செய்கிறாள்.... திரும்பி வந்து சோபாவில் அமர்கிறாள்..

மல்லிகா - எதுக்கு நளினி... அப்படியென்ன பாஸ்கர்கிட்ட ஸ்பெஷலா... போன தடவை ஏற்பட்ட கசப்பான எக்ஸ்பீரியன்சுலருந்து நீ மீண்டு வர்றதுக்கே ஆறு மாசத்துக்கு மேல ஆச்சே... இப்ப எதுக்கு மறுபடியும்?

நளினி மல்லிகாவின் தோள்மீது சாய்கிறாள் - தெரியல... சத்தியமா தெரியலக்கா.... ஏனோ இந்த பாழாப்போன மனசு மறுபடியும் கிடந்து அடிச்சிக்குது... பாஸ்கர் எப்படி இருப்பார்னு கூட எனக்கு தெரியல.. ஆனா அவரோட அந்த குரல்.... ரொம்ப நாள் பழகுனாப்பல.... இன்னைக்கி கூட அவர் ராஜி, நீலா கூட எவ்வளவு ஜாலியா, அன்னியோன்யமா... ஒரு நல்ல அப்பா மாதிரி.... அத்தான் கூட அப்படியொரு பாசத்தோட பிள்ளைங்கக் கிட்ட பேசி நா கேட்டதில்ல... நீ என்ன சொல்ற?

மல்லிகாவும் அவள் கூறியதில் இருந்த உண்மை புரிகிறது. இருந்தும் மவுனமாக அமர்ந்திருக்கிறாள்...

நளினி - என்னக்கா பதிலயே காணம்?

மல்லிகா - எனக்கு பயமாருக்கு...

நளினி - யார பத்தி?

மல்லிகா - தெரியாத மாதிரி நடிக்காத நளினி - ஒன்னெ பத்தித்தான்...

நளினி - சிரிக்கிறாள்...

மல்லிகா கோபத்துடன்- எதுக்கு சிரிச்சே?

நளினி - நீ ஆக்சுவலா பயப்படறது... எங்க ராஜியையும் நீலாவையும் பாஸ்கர் கவர் பண்ணிருவாரோன்னு... அப்படித்தானே...

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்... குட்நைட் நளினி... போய் படு...

நளினி - சிரிக்கிறாள் - நீ கோபப்படுறதுலருந்தே நான் சொன்னது சரிதான்னு தோனுது....

மல்லிகா தன்னைவிட்டு அகல்வதைப் புரிந்த நளினி எழுந்து அவளுடைய தோள்களை பற்றுகிறாள்.

நளினி - அக்கா... கோபப்படாத... பாஸ்கர ஒனக்கும் புடிச்சிருக்கு.. ஆனா ஒத்துக்க மாட்டேங்கறே... எங்க உங்கிட்டருந்து என்னெ பிரிச்சிருவாரோன்னு பயப்படறே... இல்லக்கா.... ஒன்னோட எடத்த யாராலயும் புடிச்சிற முடியாது.... என்னெ ஒரு தாய் மாதிரி இருந்து பாத்துக்கிட்டவக்கா நீ... பாஸ்கர ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பாக்கறேன்... எந்த ஒரு சூழ்நிலையிலயும் அந்த எல்லைய விட்டு தாண்டாம பாத்துக்குவேன்.... என்னெ நம்பு...

மல்லிகாவின் கண்களின் துளிர்ந்து நின்ற கண்ணீர் வழிந்து நளினியின் கரங்களில் பட்டு சிதறுகிறது... நளினியை இறுக அணைத்துக்கொள்கிறாள்....

மல்லிகா - நீ சொல்றது சரிதாண்டி... பாஸ்கர் மேல எனக்கு லேசா பொறாமைதான்... வந்து ஒக்கார்ந்த அரைமணி நேரத்துலயே இந்த ரெண்டு குட்டிகளையும் வளைச்சி போட்டுட்டானே....எல்லாரையும் எடுத்தெறிஞ்சி பேசற இந்த நீலா குட்டி கூட அந்தாள் மேல சாஞ்சி, சாஞ்சி.. ஏதோ ரொம்ப நாள் பழகுனாப்பல.... ஒங்க மூனு பேரையும் யார்கிட்டயும் இழந்துறக்கூடாதுங்கற பயம்... இப்ப கொஞ்சம் ஜாஸ்தியாவே.....

நளினி - யாரும் யாரையும் இழக்கப் போறதில்லைக்கா.... பகிர்ந்துக்கப் போறோம்... அவ்வளவுதான்... நீ கவலைப்படாம போய் தூங்கு...

மல்லிகா - சரி பார்ப்போம். காலையில எழுந்து நானே பூட்ட்க்கிட்டு போறேன். நீ எழுந்து வரவேணாம்... ப்ரேக்ஃபாஸ்ட் எதுவும் செஞ்சி வைக்கவா?

நளினி - வேணாம்.. எப்பவும்போல நானே செஞ்சிக்கறேன்... குட்நைட்...

மல்லிகா படியேறி மாடிக்கு செல்ல நளினி சோபாவில் அமர்ந்து கேசட் ப்ளேயரை ரிமோட்டால் ஆன் செய்கிறாள்...

அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் I am falling for you அறையை நிறப்ப கண்களை மூடி சோபா மீது சாய்கிறாள்...

I don’t know but
I think I maybe
Fallin’ for you
Dropping so quickly
Maybe I should
Keep this to myself
Waiting ’til I
Know you better
I am trying
Not to tell you
But I want to
I’m scared of what you’ll say
So I’m hiding what I’m feeling
But I’m tired of
Holding this inside my head

......

இரவு - பாஸ்கரின் அறை -

பாஸ்கர் அறைக்குள் நுழைந்து பெட்டியை கட்டிலில் வீசிவிட்டு அமர்கிறான். முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது... . செல்ஃபோன் ஒலிக்கிறது. எடுத்து பார்க்கிறான்.. அவனுடைய வங்கி சர்க்கிள் மேலாளரின் எண்... இவருக்கு என்ன வேணும் இப்போ... என்று முனுமுனுத்தவாறு - சொல்லுங்க மோகன்... ஏதாச்சும் அர்ஜண்டா?

எதிர்முனையிலிருந்து பேசுபவரின் உரத்த குரல் பாஸ்கரின் முகத்தை சுளிக்க வைக்கிறது.. செல்ஃபோனை சற்று தள்ளி பிடிக்கிறான்... செல்ஃபோன் வழியாக குரல் அறையை நிரப்புகிறது..- சாரி பாஸ்கர்... I was out of station... அதான் நீங்க சென்னைக்கி வந்ததும் கூப்ட முடியல..

பாஸ்கர் - பரவால்லை... சொல்லுங்க..

மோகன் - ஒரு சின்ன விஷயம்... அதான் கூப்ட்டேன்... கொஞ்சம் டெலிகெட்டான விஷயமும் கூட... நேர்ல போய் சொல்லுங்கன்னு சேர்மன் சொன்னார்.... இப்பவே வரலாமான்னு கேக்கத்தான் கூப்ட்டேன்...

பாஸ்கர் வியப்புடன் செல்ஃபோனை பார்க்கிறான் - மறுபடியும் பிரச்சினையா? என்று முனுமுனுக்கிறான்... - You are always welcome Mohan....ஆனா அதுக்கு அவசியமே இல்லை... சும்மா சொல்லுங்க...

மோகன் - Don't mistake me Mohan... - நாளைக்கு ஐ.டி. கமிட்டி மெம்பர்ஸ் இங்க வராங்களாம்... அதனால...

பாஸ்கர் - இங்கயா? ஏன்?

மோகன் - Frankly சேர்மனுக்கே ஏன்னு தெரியலையாம்.... They want to occupy the guest house...

பாஸ்கர் - எரிச்சலுடன் - என்ன புதுசா? This is supposed to be executives' guest house no?

மோகன் - அதான் நானும் சேர்மன்கிட்ட சொன்னேன்... I think this was suggested by our GM Operations...

பாஸ்கர் - (முனுமுனுக்கிறான்) ராஸ்கல்... எல்லாம் அந்தாள் வேலைதானா? So you want me to vacate?

மோகன் - ஆமா பாஸ்கர்.... But Chairman has asked me to make alternative arrangements for your stay...

பாஸ்கர் - கோபத்துடன் - No need... நானே பாத்துக்கறேன்...

மோகன் - அவசரமாக - இல்ல பாஸ்கர்... Don't do that.... கோடம்பாக்கத்துல நம்ம பேங்க் ஃப்ளாட் ரெண்டு ரெண்டு மாசமா யாருக்கும் அலாட்டாகாம இருக்கு... New flats - fully furnished - எல்லா வசதியும் இருக்கு - அதுல ஒன்னுல ஒங்கள அக்காமடேட் பண்ண சேர்மன் சொல்லிட்டார் - நா ஏற்பாடும் பண்ணிட்டேன் - காலையில ஒரு எட்டு மணி போல நானே வரேன் - I will take you there. என்ன சொல்றீங்க?

பாஸ்கர் - சலிப்புடன் - எதுக்கு மோகன்? I was asked to extend my leave, you know that, no?

மோகன் - அதுவும் தெரியும், அதுக்கு பின்னால யார், யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியும்... but our sympathies are with you Bhaskar - all our executives are with you except you know who!

பாஸ்கர் - தாங்ஸ் மோகன்... நேத்தைக்கி மும்பையிலருந்து திரும்புறப்போ எதுக்கு இன்னும் கண்டினியூ பண்றது... பேசாம ரிசைன் பண்ணா என்னான்னு கூட யோசிச்சேன்... பேசாம இங்கயே ஏதாச்சும் ஓப்பனிங் இருக்கான்னு பாக்கலாம்னு கூட தோனிச்சி... என் டாட்டருக்காகத்தான் பாக்கறேன்...

மோகன் - don't do that Bhaskar... அதத்தான அந்தாளும் எதிர்பாக்கறான்... You should not fall in to his trap...

பாஸ்கர் - ஓக்கே... மோகன்... இப்பத்தான் ஏர்போர்ட்லருந்து வந்தேன்... I am dead tired...காலையில பாக்கலாம்...

இணைப்பைத் துண்டித்துவிட்டு உடை மாற்றி குளித்து படுக்கையில் விழுகிறான்... அன்று மாலை நளினியை சந்தித்தது நிழலாய் கண் முன் விரிகிறது....

........

தொடரும்...

No comments: