3.8.09

பாசமில்லாத பணம் எதுக்கு? (சிறுகதை)

'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.'



எப்போதும் போலவே வாசற்கதவு திறந்துதானிருந்தது.



கண்களை மூடியவாறு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த விசாலாட்சி சிரமப்பட்டு எழுந்து வாசலைப் பார்த்தாள். மாதம் ஒருமுறை வரும் ஏகாம்பரம், அந்த ஏரியா போஸ்ட்மேன்.



'என்னடாப்பா, மறுபடியும் செக் வந்துருக்கா?' விசாலாட்சியின் குரலில் ஒருவித சலிப்பு தொனிப்பதை ஏகாம்பரம் உணராமல் இல்லை. 'பிரிச்சி பாரேன், இந்த தடவையாவது ஏதாச்சும் கடுதாசி வச்சிருக்கானான்னு பாரு.'



ஒவ்வொரு மாதமும் கேட்கும் அதே சலிப்பு. ஏகாம்பரத்திற்கே சலிப்பு தோன்றியது. கையில் இருந்த உறையைப் பிரித்து வாயை ஊதி பார்த்தான். ஊஹும்.. கடிதம் ஏதும் தென்படவில்லை. பெருமூச்சுடன் காசோலையை உருவி ஒருமுறை பார்த்துவிட்டு விசாலாட்சியை பார்த்தான். 'இந்த தடவை பத்தாயிரத்துக்கு வந்துருக்கும்மா.'



'கடுதாசி எதுவும் இல்லையா?' விசாலாட்சிக்கு அப்படி ஏதும் இருக்காது என்று தெரியும். இருந்தும் ஆற்றாமை....



'இல்லம்மா...' இதே பதிலை மாதா மாதம் சொல்லி அவனுக்கே அலுத்துவிட்டது. பரிதாபமாய் எதிரில் நின்றவளைப் பார்த்தான். அவனால் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது. 'போற வழியில பேங்குல போட்டுட்டு போயிரட்டுமா?'



விசாலாட்சி அலுப்புடன் திரும்பி நடந்தாள். 'வேற என்னச் செய்ய? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எடுத்ததே இன்னும் இருக்கே. இரு பாஸ் புஸ்தகத்த கொண்டு வாரன்.'



ஏகாம்பரம் வாசல் திண்ணையில் அமர்ந்து காத்திருந்தான்.



அவன் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் விசாலாட்சி அம்மாளை பழக்கம். ஆறு மாதம் முன்பு வரை மாதம் ஒருமுறை அவளுடைய மகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய காசோலையை கொண்டு சென்று கொடுப்பதுடன் அவர்கள் இருவருடைய பரஸ்பர பரிச்சயம் நின்று போயிருந்தது.



சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மாதம் விசாலாட்சியின் மகன் அனுப்பியிருந்த காசோலை உறையுடன் விசாலாட்சியின் வீட்டு வாசலில் நின்று 'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.' என்று குரல் எழுப்பினான்.



சாதாரணமாக ஒரு சில நிமிடங்களிலேயே, 'என்னடாப்பா சுந்தரத்துக்கிட்டருந்து கடுதாசி வந்துருக்கா?' என்றவாறு வாசலுக்கு வந்துவிடும் விசாலாட்சி அன்று ஐந்து நிமிட நேரத்திற்கும் மேலாக காணாததால் ஏகாம்பரம் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.



பழைய காலத்து பாணியில் வீடு விசாலமாக இருந்தது. வாசலில் இருமருங்கிலும் இருந்த நீள் வடிவ திண்ணையைக் கடந்தால் பத்தடி நீள வராந்தாவிற்குப் பிறகு மீண்டும் ஒரு விசாலமான வாசல். பர்மா டீக்கில் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த கதவுகளை திறப்பதற்கு ஏகாம்பரம் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. கதவுகளை மூடிவிட்டால் உள்ளிருந்து பெருங்குரல் எடுத்து அழைத்தாலும் சாலையில் கேட்காது என்று நினைத்தான்.



கதவைத் திறந்தால் நீஈஈஈண்ட வாணம் பார்த்த முற்றம். முற்றத்தைச் சுற்றி மூன்று பக்கங்களில் 'ப' வடிவத்தில் அமைந்திருந்த வீடு எவ்வித சலனமுமில்லாமல், மனித அரவமே இல்லாமல்... 'அம்மா... அம்மா...' என்றான் ஏகாம்பரம் சற்று உரத்த குரலில்.



பதிலில்லை.



அவனையுமறியாமல் கலவரமடைந்தான். 'ஒடம்பு கிடம்பு சரியில்லையோ....' என்ற முனுமுனுப்புடன் முற்றத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான்.

வாணம் பார்த்த முற்றத்தை ஆக்கிரமித்திருந்த சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய மனமில்லாததுபோல்..... வீட்டை இருள் கவ்வியிருந்தது. கண்களை இடுக்கியவாறு ஹாலின் கோடியிலிருந்த அறையை பார்த்தான். கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. சற்று நெருங்கியதும் அறைக்குள் மின்விசிறி சுற்றும் ஓசை தெளிவாக கேட்டது. 'இங்கதான் இருக்கணும்' என்று நினைத்தவாறு கதவை திறந்துக்கொண்டு எட்டிப் பார்த்தான். கட்டிலில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. அவனுக்கு தெரிந்தவரை அந்த வீட்டில் விசாலாட்சியைத் தவிர வேரு யாரும் இருக்கவில்லை.



கிட்டே நெருங்கி பார்த்தால் மட்டுமே அடையாளம் தெரியும் அளவுக்கு இருட்டு... சுவர்களில் துழாவி மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்தான். பளிச்சென்ற குழலொலியில் கட்டிலில் கிடந்தது விசாலட்சி அம்மாள்தான் என்பது தெரிந்தது. நெருங்கி மூக்கு நுனியில் வைத்துப் பார்த்தான்.. சீரான மூச்சு வந்துக்கொண்டிருந்ததை உணர்ந்து சமாதானமடைந்தான். ஆனால் நினைவிழந்து கிடப்பது நன்றாகவே தெரிந்தது.



அப்படியே திரும்பி வாசலுக்கு வந்து இருமருங்கிலும் பார்த்தான். தெருக்கோடியில் ரிக்ஷா ஒன்று நிற்பது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் சென்று விசாரித்தான். 'யார்யா அந்த துபாய் அம்மாவா?' விசாலாட்சியை அந்த தெருவிலுள்ள அனைவருக்குமே அப்படித்தான் தெரிந்திருந்தது.

'ஆமாய்யா.. வெரசா வா... டவுண்ல அந்தம்மா போற டாக்டரய்யா வீடு ஒனக்கு தெரியுமா?'



'ஏன் தெரியாது? நீங்க போங்க.. ஒரு நொடியில வந்து நிக்கேன்...'



இருவருமாக அப்படியே தூக்கி ரிக்ஷாவில் வைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். 'நல்லவேளைய்யா.. இரத்த அழுத்தம் ஜாஸ்தியாயிருக்கு. அதான் மயக்கம் போட்டு விழுந்துருக்காங்க... இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தா கோமா ஸ்டேஜுக்கே போயிருப்பாங்க.'



ஒரு வாரம். குணமாகி வீடு திரும்பும் வரை ஏகாம்பரமும் அவனுடைய வீட்டாரும்தான் பார்த் துக்கொண்டனர்.



'நீ மாத்திரம் அன்னைக்கி வரலைன்னா என் கதி என்னடா ஆயிருக்கும்? ஹூம்... கண்காணா தேசத்துலருந்து மாசா மாசம் கைச்செலவுக்கு பணம் அனுப்புனா போறும்னா அவன் நெனைக்கான்... ஆனா அவன் அனுப்புற பணத்த செலவழிக்க இந்த அம்மா இருக்கணுமேங்கற நெனப்பு அவனுக்கு இல்ல.. ஊர வுட்டு போயி வருசம் அஞ்சாவுது... இதோ வரேன், அதோ வரேன்னுட்டு.. இந்த அம்மா உயிரோட இருக்கறப்ப வந்தா உண்டு.... இல்லன்னா....'



'என்ன பெரிம்மா நீங்க... அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது... நம்ம தம்பி வந்துரும்.. நீங்க உயிரோட இருக்கறப்பவே... என்ன தபாலய்யா நீங்களே சொல்லுங்க...' ரிக்ஷா பெருசு சொல்வதும் சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தான் ஏகாம்பரம்.



அன்றிலிருந்து ஏகாம்பரம்தான் விசாலாட்சிக்கு எல்லாம்.



துபாயிலிருந்த மகனிடமிருந்து மாதா மாதம் வரும் காசோலையை வங்கியில் செலுத்துவது, விசாலாட்சிக்கு தேவையான தொகையை வங்கியிலிருந்து அவ்வப்போது எடுத்து வருவது, வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை, மருந்து வாங்குவது என ஏகாம்பரத்தை ஏவாத வேலையே இல்லை எனலாம்.



'இந்தாடா... இந்த புஸ்தகத்துல வரவு வச்சி கொண்டாந்துரு...'



ஏகாம்பரம் திடுக்கிட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டான். 'சரிம்மா சாயந்தரம் வர்ற வழியில ஏதாச்சும் வாங்கி வரணுமா?'



விசாலாட்சி பதில் பேசாமல் ஒரு வறட்டு புன்னகையுடன் திண்ணையில் ஏறி அமர்ந்தாள். 'டேய் நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே?'



ஏகாம்பரம் வியப்புடன் அவளைப் பார்த்தான். 'என்னம்மா ஏதோ பீடிகை போடறீங்க? என்ன கேக்க போறீங்க?'



'அந்த பொஸ்தகத்துல எவ்வளவு இருக்குன்னு போட்டுருக்கு?'



ஏகாம்பரம் வங்கி பாஸ் புத்தகத்தை புரட்டி பார்த்தான். 'ரெண்டு லட்சத்து சொச்சம் இருக்கும்மா?'



'இப்பிடியே மாசா, மாசம் அஞ்சாயிரம் எடுத்தேன்னு வச்சுக்க இன்னும் எத்தன மாசத்துக்கு வரும்?'



'நாப்பது மாசம்.. எதுக்கு கேக்கீங்க?'



விசாலாட்சி கண்களை இடுக்கிக்கொண்டு கணக்கு போட்டாள். 'அதாவது இன்னும் மூனு வருசம்...'



'நாலு மாசம் கூட... அது சரி.. எதுக்கும்மா இந்த கணக்கு?'



'சொல்றேன்....இன்னைக்கி வந்துதே அந்த கவர்ல எம்புள்ள விலாசம் இருக்கா பாரு.'



ஏகாம்பரம் உறையின் பின்புறத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தான். 'இருக்கும்மா.'



'சரி... அவனுக்கு ஒரு கடுதாசி எழுதணும்... நீ வர்ற வழியில அவனுக்கு அனுப்புறாப்பல ஒரு கவர் வாங்கிக்கிட்டு வா..'



ஏகாம்பரம் குழுப்பத்துடன் விசாலாட்சியின் முகத்தைப் பார்த்தான். அவள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு தெரிந்தது.. அது என்ன என்பதை கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் திண்ணையிலிருந்து இறங்கி நின்றான். 'சரிம்மா.. அப்படியே செஞ்சிடறேன்...' என்றவாறு தெருவில் இறங்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிச் செல்ல தெருக்கோடியில் அவன் சென்று மறையும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள் விசாலாட்சி...



மூனு வருசம்.... அவன் அனுப்பிக்கிட்டிருக்கற காச நா வாங்கி, வாங்கி வச்சிக்கிட்டேருந்தா அவனுக்கும் இங்க வரணும்னே தோனாது... புள்ளையே நம்மள வேணாம்னு இருக்கறப்ப அவன் அனுப்பற காசு மட்டும் நமக்கெதுக்கு? பெத்து வளத்ததுக்கு கூலியா? போறும்டா.... நீ அனுப்புன காசு போறும்.. ஒனக்கு அம்மா வேணும்னா உடனே பொறப்பட்டு வா.. இல்லையா, நீயும் வேணாம் ஒன் காசும் வேணாம்னு எழுதி போட்டுறணும்...



ஏகாம்பரம் ஒத்துக்கமாட்டான்... ஆனா பிடிவாதமா எழுத வைக்கணும்... இல்லையா, நீ இந்த வீட்டு பக்கமே வராதேன்னு சொல்லிறணும்... புள்ளையே இல்லேன்னு ஆனப்புறம்......



****************

2 comments:

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். அந்தப் பிள்ளை தொலைபேசியிலாவது பேசி இருக்கலாம்.

TBR. JOSPEH said...

வாங்க வல்லிசிம்ஹன்,

அந்தப் பிள்ளை தொலைபேசியிலாவது பேசி இருக்கலாம்.//

இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. நான் கிளை மேலாளராக பணியாற்றியபோது ஒரு முதியவருடைய மரணசடங்கிற்கு செல்ல நேர்ந்தது. அவர் இறந்தபோது அவருடன் யாரும் இருக்கவில்லை. அவருடைய ஒரே மகன் கல்ஃபில் இருந்தார். அவருடைய படுக்கையறையில் பிரிக்கப்படாமல் நான்கைந்து உறைகள் இருந்தன. அதில் ஒவ்வொன்றிலும் ரூ.10000/- கான வங்கி டிராஃப்டுகள் இருந்தனவாம். எல்லாம் அவருடைய மகன் அனுப்பியது... எத்தனை வெறுப்பிருந்தால் அவர் அவற்றை பயன்படுத்தாமலே போட்டு வைத்திருப்பார்...

நம்மில் பலரும் அப்படித்தான். பெற்றோருக்கு அவர்களுடைய முதிய வயதில் ஆறுதல் தருவது பணம் அல்ல, பாசம்தான் என்பதை மறந்துபோய்விட்டோம்..