பாஸ்கரின் அறை - ஒரேயொரு மேசை விளைக்கைத் தவிர அறை இருளில் மூழ்கியிருக்கிறது...
துண்டிக்கப்பட்ட செல்ஃபோன் திரையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்...
Tight closeup - முகத்தில் சோகத்தின் ரேகை......
மேசை மீதிருந்த விமான பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு எழுந்து படுக்கை மீதிருந்த பயணப் பையை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறுகிறான்...
........
நளினியின் வரவேற்பறை
நளினி தன்னுடைய செல்ல நாயுடன் சோபாவில் அமர்ந்திருக்கிறாள். மல்லிகா சமையலறையில் இருப்பது தெரிகிறது.
உணவு மேசையில் வைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் சிணுங்குகிறது.
மல்லிகா - நீ அப்படியே இரு.. நா பாத்துக்கறேன்... அதே ஆளா இருந்தா உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன்...
நளினி - (புன்னகையுடன்) அக்கா அது ஒன் செல்ஃபோன்...
மல்லிகா சமையலறையிலிருந்து வந்து மேசை மீதிருந்த தன் கைப்பையை திறந்து தன்னுடைய செல்ஃபோனை எடுக்கிறாள்.. தன்னுடைய அண்டை வீட்டு தோழியின் எண்ணைப் பார்க்கிறாள்.
மல்லிகா - என்ன ரேணு... எதுக்கு கூப்டறே... பசங்க ஏதாச்சும்.... இடைவெளி (பதற்றத்துடன்) என்னது, எப்போ? ஐயையோ... இதோ இப்பவே வறேன்... (செல்ஃபோனை துண்டித்துவிட்டு ஓடிப்போய் ஸ்டவ்வை அணைக்கிறாள்...
நளினி - என்னக்கா... என்ன விஷயம்... பசங்க ஏதாச்சும் பண்ணிக்கிட்டாங்களா?
மல்லிகா - (இவளிடம் சொல்வதா வேண்டாமா என தயங்குகிறாள். பிறகு வேண்டாம் என முடிவு செய்கிறாள்) ஆமாடா... சின்னது சொன்ன பேச்ச கேக்காம தகராறு பண்றாளாம்... நீ அப்செட் ஆகாத ரேணு எப்பவுமே இப்படித்தான் சின்னதுக்கெல்லாம் டென்ஷனாயிருவா... ஒனக்கு ராத்திரிக்கி வேண்டியத சமைச்சி வச்சிருக்கேன்.... நா போயி கூப்பிடறேன்.... வரேன்... (கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை துடைத்தவாறே வாசலை நோக்கி ஓடுகிறாள்.)
.......
காவல் நிலையம் - ஆய்வாளர் முன்னிலையில் பதற்றத்துடன் மல்லிகாவும் அவளுடைய தோழி ரேணுகாவும்..
ஆய்வாளர் - இங்க பாருங்கம்மா - டென்ஷனாகாம சொல்ல வந்தத தெளிவா சொல்லுங்க... அப்பத்தான் எங்களாச ஆக்ஷன் எடுக்க முடியும்.. உங்க டாட்டர்ஸ கூட்டிக்கிட்டு போனது ஒங்க ஹஸ்பெண்ட் அத எப்படி கடத்தல்னு சொல்றீங்க?
மல்லிகா தன் கையிலிருந்த கோப்பை அவரிடம் நீட்டுகிறாள் - சார் இது நா என் ஹஸ்பெண்ட டைவோர்ஸ் செய்தப்ப கோர்ட் குடுத்த ஆர்டர். இதுப்படி அவர் வாரத்துக்கு ஒருநாள்தான் குழந்தைகள பாக்க முடியும். அதுவும் நா இருக்கறப்ப என் வீட்டுக்கு வந்து... தேவைப்பட்டா வெளியில கூட்டிக்கிட்டு போகலாம்... என் பெர்மிஷனோட.... அது கூட காலையில ஒன்பது மணியிலருந்து சாயந்தரம் ஆறு மணி வரைக்கும்தான் அவர் என் டாட்டர்ஸ சந்திக்கலாம்...பேசலாம்... ஆனா இன்னைக்கி அவர் நா வீட்ல இல்லாத நேரத்துல என் பெர்மிஷன் இல்லாம கூட்டிக்கிட்டு போயிருக்கார்.
ஆய்வாளர் - மல்லிகாவின் கோப்பிலிருந்த நீதிமன்ற உத்தரவை வாசிக்கிறார். சரி மேடம்.. நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக்குடுத்துட்டு போங்க... நா விசாரிக்கிறேன்..
மல்லிகா - சாரி சார். நீங்க இப்பவே ரெண்டு கான்ஸ்டபிள்ச என்னோட அனுப்புங்க அவரோட வீடு வரைக்கும் போய் பார்த்தா எல்லாம் தெரிஞ்சிரும்..
ஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா எங்களுக்கு வேற வேலையே இல்லையா? நாந்தான் விசாரிக்கிறேன்னு சொல்றேனில்ல?
மல்லிகா - சார்... என் மூத்த பொண்ணுக்கு வயசு 13... வயசுக்கு வந்த பொண்ணு... சின்னதுக்கு ஒன்பது வயசு... ராத்திரி நேரத்துல ஒரு ஆள் வீட்டுக்கு வந்து கடத்திக்கிட்டு போயிருக்கார்னு சொல்றேன்.. நீங்க சாவகாசமா விசாரிக்கிறேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? ஒடனே நீங்க ஆக்ஷன் எடுக்கலைன்னா நா வந்த ஆட்டோவுலயே கமிஷனர் ஆஃபீசுக்கு போவேன்... அப்புறம் ஒங்க இஷ்டம்...
ஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா மிரட்டறீங்களா?
மல்லிகா - இல்ல சார்... உண்மையத்தான் சொல்றேன்... என் பொண்ணுங்க இந்த ராத்திரி நேரத்துல எங்க இருக்காங்களோன்னு நா தவிக்கிற தவிப்பு எனக்குத்தான சார் தெரியும்.... இதுவே ஒங்க பிள்ளைங்களாருந்தா....
ஆய்வாளர் - சரிம்மா... சரி... ஒங்க டென்ஷன் எனக்கு தெரியாம இல்ல.... இருங்க... (தன் உதவி ஆய்வாளரைப் பார்க்கிறார்) சார்.. ரெண்டு கான்ஸ்டபிள்ச கூட்டிக்கிட்டு இவங்களோட போய்ட்டு வாங்க சார்... அந்தாள் அங்க இருந்தா இங்க கூட்டிக்கிட்டு வாங்க...
.........
காவல்துறையினரின் ஜீப் ஒரு சந்தில் நுழைகிறது...
மல்லிகா - இங்க தான்... இதான் அவரோட வீடு...
வாகனம் நின்றவுடன் மல்லிகா இறங்கி வாசலை நோக்கி ஓடுகிறாள். உள்ளேயிருந்து தன்னுடைய மகள்களின் குரலைக் கேட்டதும் திரும்பி தன்னுடன் வந்த உதவி ஆய்வாளரை நோக்கி ஓடுகிறாள்.
மல்லிகா - சார்.. என் டாட்டர்ஸ் இங்கதான் இருக்காங்க சார்.. உள்ள குரல் கேக்குது..
ஆய்வாளர் - சரிம்மா... நீங்க ஜீப்ல போய் ஒக்காருங்க... நாங்க பாத்துக்கறோம்... (தன் காவலர்களிடம்) யோவ் உள்ள போய் அந்தாள இழுத்துக்கிட்டு வாங்கய்யா...
காவலர்கள் இருவரும் வீட்டினுள்ளே ஓடுகின்றனர்...
........
பாஸ்கரின் வாகனம் விமான நிலைய வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கரும் அவருடன் ஒருவரும் இறங்கி நிற்கின்றனர்...
பாஸ்கர் - (தன் நண்பரிடம் ) நாளைக்கி ஈவ்னிங் திரும்பிருவேன்... நீங்க வரணும்னு இல்லை.. டிரவைர மட்டும் அனுப்புங்க.... இடைவெளி - அப்புறம் ஒரு பெர்சனல் ஹெல்ப்...
நண்பர் - சொல்லுங்க சார்...
பாஸ்கர் தன் பர்சிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அவரிடம் நீட்டுகிறான்.... இதுலருக்கற அட்றசுக்கு ஒரு சின்ன பொக்கே வாங்கி அனுப்பிருங்க....
நண்பர் - உங்க பேர மென்ஷன் பண்லாமா சார்...
பாஸ்கர் - ஒரு நொடி தயங்குகிறான்... வேணாம்... A friend..னு மட்டும் மென்ஷன் பண்ணிருங்க போறும்....
நண்பர் - சரி சார்... safe journey Sir... பை...
நண்பர் கிளம்பி செல்ல பாஸ்கர் கைப்பையுடன் விமான நிலையத்திற்குள் நுழைகிறான்...
.........
காவல் நிலையம்...
ஆய்வாளரின் மேசையை சுற்றி மல்லிகா, அவளுடைய குழந்தைகள் இருவர், மல்லிகாவின் தோழி ரேணுகா, மல்லிகாவின் முன்னாள் கணவர் ஆகியோர்...
ஆய்வாளர் - மிஸ்டர்... உங்க டாட்டர்ஸ் முகத்த பார்த்து உங்க மேல ஆக்ஷன் ஏதும் எடுக்காம விடறேன்... உங்க டாட்டர்ச மீட் பண்றதுக்கு கோர்ட் என்ன டைரக்ஷன்ஸ் குடுத்துருக்கோ அதும்படித்தான் நீங்க நடந்துக்கணும்... இல்லன்னா கம்ப்டெம்ட் ஆஃப் கோர்ட்டுன்னு உங்க மேல ரிப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்...
கணவர் - (கோபத்துடன்) சார்... விஷயம் தெரியாம பேசாதீங்க... எங்க மதர் ஊர்லருந்து வந்து பேரப்பிள்ளைங்கள பாக்கணும்னு சொன்னாங்க... இவள கூப்ட்டா இவ வீட்ல போன் அடிச்சிக்கிட்டே இருக்கு... வீட்டுக்கு வந்து பாத்தா பிள்ளைங்க ரெண்டும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு இந்தம்மா எங்கயோ ஊர் சுத்த போயிருந்தாங்க... பிள்ளைங்கள உங்க பாட்டி வந்துருக்காங்க வறீங்களாம்மான்னு கேட்டேன்.. சரிப்பான்னு வந்துருச்சுங்க.... இது ஒரு குத்தமா சார்... இவதான் ஏதோ கம்ப்ளெய்ண்ட் குடுத்தான்னா நீங்களும் வீடு வரைக்கும் வந்து அசிங்கம் பண்ணிட்டீங்களே சார்...
ஆய்வாளர் - என்னம்மா ஒங்கப்பா சொல்றது சரிதானா? நீங்களா விரும்பித்தான் போனீங்களா?
சிறுவர்கள் இருவரும் பயத்துடன் பதில் பேசாமல் தன் தாயைப் பார்க்கின்றனர்...
கணவர் - பாத்தீங்களா சார்... பதில் பேசாம நிக்கறதுலருந்தே தெரியல.... எங்க அம்மா திட்ட போறாங்களோன்னு பயப்படறத பாருங்க... கோர்ட் என்னடான்னா அம்மாவாலத்தான் பிள்ளைங்கள பாத்துக்க முடியும்னு சொல்லுது... இவ பாத்துக்கற லட்சணத்த பார்த்தீங்களே...எங்க போயி ஊர் சுத்திக்கிட்டிருந்தான்னு கேளுங்க சார்...
ஆய்வாளர் - இங்க பாருங்க சார்... அது எங்க வேலையில்லை... நீங்க இனிமே கோர்ட் ஆர்டர மீறாதீங்க.... அவ்வளவுதான் சொல்ல முடியும்... பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு போங்கம்மா...
.......
தொடரும்...
No comments:
Post a Comment