12.1.06

சூரியன் – 4

இடம்: மும்பை பாலி ஹில்ஸ் - ----- வங்கியின் உயர் அதிகாரிகளின் காலனி.

பதினைந்தாவது மாடியில் அமைந்திருந்த நான்கு படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்பு.

வாசற்கதவில் பொருத்தப்பட்ட பித்தளை தகடு எம்.ஆர் மாதவன் என்றது. கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் மாதவன்.

அவருடைய நடையிலிருந்த லேசான தள்ளாட்டம் 20'க்கு 30' என்ற அளவில் பரந்து கிடந்த வரவேற்பறையில் அழகுடன் அமைக்கப்பட்டிருந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து ஈவ்ஸ் வீக்லி சஞ்சிகையைப் படித்துக் கொண்டிருந்த அவருடைய மனைவி சரோஜா முகத்தில் எரிச்சலை வரவழைத்தது.

இன்னைக்கும் மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்திருக்கார் மனுஷன். சே.. உள்ள நுழைஞ்சதும் நாத்தம் இங்க அடிக்குது..

மாதவன் தன்னுடைய மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்ததும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். என்னடி நாத்தம் உன் rearranged மூக்க துளைக்கிதோ? இன்னைக்கி எனக்கு send off இருக்கு வாடின்னா என்னவோ பெருசா லேடீஸ் க்ளப் மீட்டிங்குன்னு டூப் விட்டுட்டு இங்க உக்காந்திருக்கியா? இரு வச்சிக்கறேன்.

வேண்டுமென்றே தன்னுடைய தடுமாற்றத்தை கூட்டிக்கொண்டு தட்டுத் தடுமாறி தான் வழக்கமாய் அமரும் இடத்தை விட்டு தன் மனைவியின் மிக அருகில் அமர்ந்து தன் காலனி வாரை அவிழ்க்க துவக்கினார்.

எரிச்சலுடன் தள்ளியமர்ந்த சரோஜா அவரைப் பார்த்து முறைத்தாள்.

‘என்னடி ரொம்பத்தான் முறைக்கிற? இன்னைக்கி Send off இருக்கு, வாடின்னா வரமுடியாதுன்னுட்டு இங்க வந்து உக்காந்திருக்கியா? இன்னைக்கி பார்ட்டியில அம்பானி பசங்கள்லருந்து டாப் ஆளுங்கள்லாம் வந்தாங்க தெரியுமா.. ஒனக்கு கொடுத்து வைக்கலே.. கார் டிக்கில அவங்க குடுத்த காம்ப்ளிமெண்ட்ஸ் எல்லாம் இருக்கு.. போய் பாரு.. உன் களுத்துல போட்டுக்கறதுக்கு ஒரு வைர நெக்லஸ்சும் இருக்கு.. போடி.. போய் எடுத்து களுத்துல போட்டுக்கிட்டு ஒன்னுக்கும் ஒதவாத திமிர் பிடிச்ச ஃப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட கொண்டு போயி exhibit பண்ணு..’

அவருடைய பேச்சிலிருந்தே அவர் தர்க்கம் செய்கின்ற எண்ணத்தோடுதான் வந்திருக்கிறார் என்பது சரோஜாவுக்கு புரிந்தது. சுவர்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நள்ளிரவு 12.00 மணி!

இன்னமும் சீனிவாசன், வத்ஸலா இருவரும் வீடு வரவில்லை. நல்ல அப்பா, நல்ல பிள்ளைகள்..

‘எனக்கு தூக்கம் வருது... நான் என் ரூமுக்கு போறேன்..’ என்றவாறு தான் படித்துக் கொண்டிருந்த பக்கத்தை மூலையில் மடித்து புத்தகத்தை மூடி டீப்பாய்க்கு அருகிலிருந்த புத்தக ஸ்டாண்டில் வைத்தாள். அவளுக்கு எல்லாமே எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். அந்த வரவேற்பரையை ஒரு முறை பார்த்தாலே தெரியும்.. எல்லாம் அவளுடைய ஏற்பாடுதான்.

‘உம் புள்ளைங்க யாரும் இன்னும் வரலை போலிருக்கு..’ என்ற தன் கணவனைப் பார்த்தாள். என்ன என்னைக்கில்லாம இன்னைக்கி பசங்க ஞாபகம் வந்திருக்கு.. ஆச்சரியம்தான்..

மாதவன் சோபாவில் சரிந்து உட்கார்ந்துக் கொண்டு தன் மனைவியைப் பார்த்த பார்வையில் ஏளனம் தெரிந்தது. சரோஜா ஒன்றும் பதில் பேசாமல் தன் அறைக்கு செல்ல திரும்பினாள்.

‘சரோ, ஐ வாண்ட் டு டாக் டு யூ.’

சரோஜா நின்றாள். நின்ற இடத்திலிருந்தே தன் கணவனை நோக்கி திரும்பாமல் பேசினாள், ‘நீங்கருக்கற இந்த நிலைமையில உங்க கிட்ட என்ன பேசறது? பேசினா வீண் வாக்குவாதம்தான் வளரும். நீங்க போயி குளிச்சிட்டு, ப்ரஷ் பண்ணிட்டு, மவுத் வாஷ்ல கார்கிள் பண்ணிட்டு வந்தீங்கன்னா பேசலாம். இல்லன்னா நாளைக்கு பார்த்துக்கலாம்.’

மாதவன் தன் மனைவியின் வாளிப்பான முதுகையே சிறிது நேரம் பார்த்தார். ‘இந்த வயசுலயும் பாக்கறதுக்கு எப்படி இருக்கா.. இந்த உடம்ப வச்சிக்கிட்டுதானடி இப்படி மினுக்கற.. ஓகே.. ஒகே நீ சொல்றபடியே செய்யறேன்.. இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தான் இந்த மும்பை.. அதுக்கப்புறம் சென்னை.. ஐ ஷ¤ட் ஸ்டார்ட் அ ஃப்ரெஷ் லைஃப்.. இந்த குடி, கூத்துன்னு ஒன்னுமில்லாம அடுத்த நாலு வருஷம் உருப்படியா செய்யணும். அதுக்கு குடும்பம் ஒன்னா, ஒரே எடத்துல இருக்கணும்.. That's most important.. அதுக்கு சரோ கிட்டயும் பிள்ளைங்க கிட்டயும் மனசு திறந்து பேசணும்..

‘சரி.. சரோ.. இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன்.. நீ இங்கயே உக்கார்.. பிள்ளைங்க ரெண்டு பேரும் வந்தா அவங்களையும் இருக்க சொல்லு.. I need to talk to all three of you..’

ஹாலில் ஒரு கோடியிலிருந்த வாஷ் ரூமிற்குள் நுழைந்த மாதவனைப் பார்த்தவாறே சமையலறைக்குள் நுழைந்த சரோஜா coffee makerஐ முடுக்கி நால்வருக்கும் காப்பி தயாரித்து.. சுவர் அலமாரியிலிருந்த பிஸ்கட் டப்பாவையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு திரும்பி உணவு மேசையிலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு அமர்ந்து தன் கணவனுக்காகக் காத்திருந்தாள்.

வாயிலில் கதவு திறக்கப் படும் ஓசையைக் கேட்டு வாயிலைப் பார்த்தாள். வத்ஸலா!

ஹாலில் நுழைந்ததும் தன் தாயையும் உணவு மேசையிலிருந்த coffe makerஐயும் பார்த்தவள் ஆச்சரியத்துடன், ‘ஹை மம்மி! என்னாச்சி.. காப்பியும் பிஸ்கட்டுமா.. யாருக்கு வெய்ட்டிங்?’ என்றவள் டீப்பாயின் அருகில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தன் தந்தையின் காலனிகளைப் பார்த்துவிட்டு, ‘டாடி வந்தாச்சா..?’ என்றாள்

சரோஜா, ஆமாம் என்று தலையசைத்தாள். ‘வத்ஸ்.. மேல போயிராத. இங்கேயே இரு.. டாடி வாஷ் ரூம்லதான் இருக்கார்.. வந்து ஏதோ பேசணுமாம். வா, உனக்கும் சேர்த்துதான் காப்பி போட்டிருக்கேன்.’

‘என்ன மம்மி.. என்ன விஷயம்? அதுவும் இந்த நடுராத்திரியில.. ஐம் டயர்ட்.. மம்மி.. காலைல பேசினா போறாதா?’

‘போறாதாம்.. நீ வந்து உக்கார்.. அப்புறம் அதுக்கு வேற கத்தினாலும் கத்துவார். ஐ திங்க் சென்னைக்கு போற விஷயமாத்தான் இருக்கும்..’

‘அப்படியா.. சரி.. நீங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்க?’

சரோஜா பதில் பேசாமல் திரும்பி வாஷ் அறையைப் பார்த்தாள். ‘ஐ ம் நாட் கோயிங்.’

வத்ஸலா வியப்புடன் தன் தாயைப் பார்த்தாள். ‘என்ன மம்மி சொல்றீங்க? இங்க எங்க இருப்பீங்க?’

சரோஜா தன் தோளைக் குலுக்கிக் கொண்டு தன் மகளைப் பார்த்தாள். ‘!I don’t know.. we will have to find a place. நமக்குன்னு ஒரு வீட்ட இதுவரைக்கும் நாம வாங்கவேயில்லையே வத்ஸ்.. இப்ப வாங்கிட்டா போச்சி..’

‘எங்க இங்கயா? No way. டாடி ஒத்துக்குவாங்கன்னு எனக்கு தோனலே.’

‘ஏன் எதுக்கு சொல்ற? நீயே வேணாம்னு சொல்லிருவ போலருக்கு?’ தன் தாயின் குரலிலிருந்த எரிச்சல் வத்ஸலாவுக்கு தெளிவாக புரிந்தது. இருந்தும் அதை பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்தாள். ‘மம்.. டாட்.. நாம எல்லாருமே சென்னையில் செட்டில் ஆயிரணும்னு டிசைட் பண்ணிருக்கார்னு நினைக்கிறேன். எனக்கும் அதுதான் சரின்னு படுது.. இந்த மும்பை ஒரு போர் மம்மி.. எப்ப பார்த்தாலும் பரபரன்னு.. I am fed up.. சென்னை நிச்சயமா இப்படி இருக்காது.. We can be more relaxed..’

வாஷ் அறைக் கதவு திறக்கப்படும் ஓசை கேட்கவே இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரை பார்த்தனர்.

மாதவன் நேரே தன் மனைவி அமர்ந்திருந்த உணவு மேசைக்கு சென்றமர்ந்தார். மேசையிலிருந்த காப்பியைக் கண்டதும் தன் மனைவியைப் பார்த்து, ‘தாங்க்ஸ்.. இப்ப எனக்கு இது தேவைதான்..’ என்றவர் திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘வத்ஸ்.. இங்க வந்து உக்காரேன்.. for a serious talk, this would be the ideal place. Come.’

வத்ஸலா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். பிறகு மறுமொழி பேசாமல் எழுந்து சென்று தன் தந்தைக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்தாள். ‘என்ன டாட். எனிதிங் சீரியஸ்?’

கோப்பையில் காப்பியை ஊற்றி உரிஞ்சியவாறே தன் எதிரே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார்.

பார்த்தா தாயும் மகளும் மாதிரியா இருக்கீங்க? கலைந்த தலையும், மேக்கப் இல்லாத முகமும், லிப்ஸ்டிக்கை வெறுத்த உதடுகளும்.. பெண்மையின் எந்த சுவடும் இல்லாத முப்பது வயதான மகள்... இப்படி ஒரு மகளுக்கு இப்படி ஒரு தாயா என.. 58 வயதை நாற்பது வயதுக்கும் கீழ் குறைத்துக் காட்ட பிரயத்தனப்படும் சரோஜா..

‘என்ன டாட்.. என்ன அப்படி பாக்கறீங்க?’ என்ற தன் மகளைப் பார்த்தார்.

‘என்ன.. எல்லாம் வழக்கம் போலத்தான். உன்னையும் உன் பொண்னனயும் பார்த்தா தாயும் மகளுமாதிரியா இருக்கீங்கம்பார்?’ என்ற சரோஜா தன் கணவனை கேலியுடன் பார்த்தள். ‘என்ன அதானே?’

மாதவன் கேலியுடன் தன் உதடுகளை வளைத்துவிட்டு, ‘எங்க உன் பையன காணோம்..’ என்றார் தன் மனைவியைப் பார்த்து..

‘வருவான்.. என்னைக்கி ஒரு மணிக்கு முன்னால வந்துருக்கான். நீங்க சொல்லுங்க.. நீங்க சொன்னத அவன் கிட்ட நான் காலைல சொல்லிக்கறேன். என்னைக்கி அவன் சொன்னதுக்கு நீங்க மதிப்பு குடுத்திருக்கீங்க.. சாதாரணமா நீங்க ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சாலே அது சண்டையில போயி முடியும்.. இப்ப கேக்கவே வேணாம்.. அவன் இப்ப இங்க இல்லாம இருக்கறதே மேல்.. என்ன வத்ஸ்?’

வத்ஸலா ஒன்றும் பேசாமல் தன் கையிலிருந்த காப்பியை உறிஞ்சினாள்.

மூவரும் சிறிது நேரம் அமைதியுடன் தங்களுடைய எண்ண ஓட்டத்தில் மூழ்கியிருக்க மாதவன் திடீரென்று, ‘இன்னும் அவன் அந்த பாப்பார பொண்ணோடதான் சுத்திக்கிட்டிருக்கானா?’ என்றார்.

சரோஜாவின் முகம் சட்டென்று சிவந்து போவதைப் பார்த்த வத்ஸலா.. ‘There he goes again.. இன்னைக்கி ஒன்னும் உருப்படியா ஆவப் போறதில்லை..’ என்று நினைத்தவாறு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 12.45!

‘ஏங்க நீங்க யாரு? ஒரு பேங்கோட சேர்மனாகப் போறவர்.. பேசறத பாரு? சரியான ஒரு தேர்ட் ரேட் பொறுக்கி மாதிரி..’ என்ற சீரினாள் சரோஜா. ‘ஏன் பிராமின்னு சொன்னா குறைஞ்சிருவீங்களோ..ஆமா அவ கூடத்தான் பழகிக்கிட்டிருக்கான்.. நீங்க சொல்றா மாதிரி சுத்திக்கிட்டில்ல.. ஏன் அவளுக்கென்ன? நல்லா படிச்ச பொண்ணு.. நல்ல எடத்துல வேல பாக்கறா.. பாக்கவும் அழகா, அம்சமா இருக்கா. நம்ம சீனிய மாதிரி பையனோட நீங்க சொன்னா மாதிரி அந்த பொண்ணு சுத்தறதுக்கு அவங்க வீட்லதான் கோபப்படணும். நீங்க இல்ல.. இதத்தான் சீரியசா பேசணும்னு நினைச்சீங்கன்னா.. நான் இல்ல.. என்ன விட்டுருங்க.. ஏய் வத்ஸ், உங்கப்பா என்ன சொல்ல வராற்னு நீயே கேட்டு வை.. காலைல சொல்லு.. நான் போறேன்..’

மாதவனின் பதிலுக்கு காத்திராமல் விருட்டென்று எழுந்து மாடிப்படிகளை நோக்கி சென்ற தன் தாயையே பார்த்துகொண்டிருந்த வத்ஸலா.. திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். ‘What is this dad? Why can’t you control your tongue? இப்ப பாருங்க.. நீங்க ஃபாமிலியா சென்னைப் போவலாங்கற ப்ளான் நிச்சயம் சக்சஸாப் போறதில்லை.. I am sorry dad.. Please go to sleep.. We will talk tomorrow..’

தன் பதிலுக்கு காத்திராமல் எழுந்து மாடிப்படியேறும் தன் மகளையே பார்த்தவாறு வெகு நேரம் அமர்ந்திருந்தார் மாதவன்.. சுவர்க்கடிகாரத்தின் டிக், டிக், ஒசையைத் தவிர ஹால் நிசப்தமாயிருந்தது..

வெகு நேரம் சிலையாய் அமர்ந்திருந்த மாதவன் மெல்ல எழுந்து சென்று குளிர்சாதன பெட்டியைத் திறந்து அதில் இருந்த பாதி மது பாட்டிலை எடுத்துக்கொண்டு உணவு மேசைக்கு திரும்பி...

தொடரும்..

2 comments:

G.Ragavan said...

மாதவனுக்கு வாய்க் கொழுப்பு எக்கச்சக்கந்தான். அதுலயும் தண்ணி வேற. இப்ப சரோஜாவும் போக மாட்டேங்குறா. சீனியும் போக விரும்பலை. அனேகமா மாதவனும் வத்சலாவும் சென்னைக்குப் போக வேண்டியதுதான். குடும்பம் பிரியப் போகுதோ! பாவம்!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

சேர்மன் லெவல்ல மது குடிப்பதெல்லாம் ரொம்பவும் சகஜம். குடி பழக்கம் இல்லாதது ஒரு குறையாவே கருதப்படும். அதுவும் மும்பை கார்ப்பரேட் சர்க்கிள்ல..

குடும்பம் பிரியுமான்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்.