19.1.06
சூரியன் - 8
மாணிக்கம் நாடாரின் சொகுசு கார் அந்த பிரம்மாண்ட பங்களாவில் நுழைந்த போது காரில் இருந்த ரேடியம் டிஜிட்டல் கடிகாரத்தில் இரவு மணி 11.00ஐ கடந்திருந்தது.
ஆனால், சென்னை-மகாபலிபுரம் சாலையில் அடர்ந்து வளர்ந்திருந்த சவுக்கு மர தோப்பிற்குள்ளே இருந்த அந்த பிரம்மாண்ட மாளிகையின் எல்லா விளக்குகளும் எரிய ஜகஜ்ஜோதியாக காட்சியளித்தது.
சிலுவை மாணிக்கம் நாடார் நுழை வாசலில் நின்று வரவேற்ற டாக்டர் சோமசுந்தரத்தின் மருத்துவமனை மேலாளரைப் பொருட்படுத்தாமல் தனக்குள் தன் தலைவிதியை நினைத்து முனகியவாறே உள்ளே நுழைந்தார்.
‘வாங்க நாட்டார்.’ என்ற மதுவின் ஆதிக்கத்தில் ‘நாட்டார்’ என்று அழுத்தி அழைத்த ரஜ்ஜத் கபூரைப் பார்த்து முறைத்தார்.
‘யோவ் சேட்டு, என்ன நக்கலா? ஒரு ரெண்டு ரவுண்டு அடிக்கறதுக்குள்ளவே ஒளர ஆரம்பிச்சிருவியே.. வயித்தெரிச்சல கெளறாத.. அப்புறம் வாங்கி கட்டிக்குவே..’
‘ஓ க்யா போல்த்தா ஹை..’ என்ற ரஜ்ஜத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை..
நாடார் நேரே ஹாலின் கோடியிலிருந்த குளியலறை கம் டாய்லெட்டில் நுழைந்து முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டு வேலையாள் ஓடிவந்து நீட்டிய வாசமுடன் கூடிய உயர் ரக பூத்துவாலையில் முகத்தைத் துடைத்து அடைத்திருந்த தன் மூக்கை சிந்தி வேலையாளிடம் நீட்டினார். அருவறுப்புடன் வாங்கி அருகிலிருந்த அழுக்குக் கூடையில் வீசியவனை கண்டும் காணாததுபோல் ஹாலுக்குள் மீண்டும் நுழைந்து தன் கண் முன்னே விரிந்த காட்சியை நிதானமாகப் பார்த்தார்.
கிட்டப்பார்வை கோளாறுடைய நாடாருக்கு ஹாலின் மறுபக்கத்திலிருந்தவர்களின் முகங்களைக் கூட சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நீஈஈஈள அகலத்துடன் இருந்தது அந்த வரவேற்பறை!
சுவருக்கு சுவர் அடைத்துக்கொண்டு கணுக்கால் வரை புதையுறும் அளவுக்கு கனமான காஷ்மீர் கார்ப்பெட்.. சுவரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட Wallpaper, நான்கு சுவர்களிலும் ஐந்தடிக்கு ஒன்றெனவும், கூரையில் பத்தடிக்கு ஒன்றெனவும் பொருத்துப்பட்டிருந்த அலங்கார விளக்குகள், சினிமா அரங்குகளைப் போன்ற இண்டீரியர்.. சுமார் ஐம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவான அலங்கார இருக்கைகள்..
‘படுபாவிப் பய.. நோயோட வர வியாதிக்காரங்கள கொள்ளையடிச்சே கட்டியிருக்கான் பாரு.. ஒன் சமாதி இருக்குமாடா இதுமாதிரி?’ என்று மனதுக்குள் கறுவியவாறே சென்று சிவசுப்பிரமணி செட்டியாரின் பக்கத்தில் கிடந்த அலங்கார திவானில் அமர்ந்து திண்டில் சாய்ந்துக் கொண்டு, ‘கர்த்தரே’ என்றவாறு இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டு அறையை சுற்றி அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார்.
ராஜகோபாலன் நாயரைத் தவிர போர்டில் இருந்த எல்லா முக்கிய நபர்களும் இருந்தனர். டாக்டரைத் தவிர எல்லோரும் இரண்டு, மூன்று ரவுண்டுகளை முடித்திருப்பார்கள் போல் தெரிந்தது.
திரும்பி, தன் அருகில் வெறும் பழரசத்துடன் அமர்ந்திருந்த செட்டியாரைப் பார்த்தார். எழுந்து இரண்டு கால்களையும் மடித்துக் கொண்டு அமர்ந்தார். ‘என்ன செட்டியார, இங்க எதுக்கு கூடியிருக்கோம்கறதயே மறந்துட்டு தண்ணியடிச்சிக்கிட்டிருக்கான்க?’
சிவசுப்பிரமணி செட்டியார் ஒரு மர்ம புன்னகையுடன் மும்முரமாய் மது அருந்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தார். ‘நாடாரே, இவனுங்களுக்கு தண்ணியடிச்சாத்தான் பேச்சே வரும். நீங்க சும்மா ஆரம்பிங்க..’ என்றார்.
‘நீங்க சொல்றதும் சரிதான். இல்லன்னா விடிய விடிய இங்கயே ஒக்காந்திருக்க வேண்டியதுதான். டாக்டர எங்க காணோம்?’ என்ற சிலுவை மாணிக்கம் நாடார் ஹாலை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்து ‘டாக்டர்’ என்று உரக்க குரல் கொடுத்தார்.
‘தோ வந்துட்டேன் நாடார். ஒரு நிமிஷம்’ என்ற குரல் வந்த திசையை நோக்கினார். தூரத்தில் டாக்டர் சோமசுந்தரம் முதுகைக் காட்டிக் கொண்டு தொலைப் பேசியில் பேசுவது தெரிந்தது.
‘என்னத்த அவ்வளவு ரகசியாம பேசறான்?’ என்ற யோசனையுடன் அவரை நோக்கி மெள்ள நடக்க.. சோமசுந்தரம் தொலைப்பேசியை வைத்துவிட்டு திரும்பினார். தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த நாடார் தயங்கி நிற்பதைப் பார்த்தார். ‘சரியான சந்தேகப்பிராணி.’
‘என்ன நாடார், ஃபோன்ல யாருன்னு பார்த்தீங்களா? நம்ம சேர்மன் மாதவன்தான். நாளைக்கு ஈவ்னிங் ஃப்ளைட்ல வராறாம். ஹோட்டலுக்கு வர்ரீங்களான்னு கேட்டார். யோசிச்சி சொல்றேன்னேன்.’ என்ற டாக்டரையே மேலும் சந்தேகத்துடன் பார்த்தார் நாடார்.
‘என்ன வேணுமாம் அந்த ஆளுக்கு?’
சோமசுந்தரம் அலட்சியத்துடன் சிரித்தார். ‘அவர் கிடக்கறாரு.. நீங்க வாங்க. நாம பேச வந்தத பேசுவோம்.’ என்றவாறு நாடாருடைய தோளில் கை வைத்து அழைத்துக் கொண்டு வரவேற்பறையை நோக்கி நடந்தார்.
வரவேற்பறையை அடைந்ததும் தன் இரு கரங்களையும் தட்டி, ‘ஃப்ரெண்ட்ஸ்.. shall we start the meeting?’ என்றார்.
‘டாக்டர்.. தமிழ்ல பேசுவோம். உங்க மேனேஜர வேணும்னா இங்கிலீஷ்ல மினிட்ஸ் எழுதச் சொல்லுங்களேன்.’ என்ற நாடாரைப் பார்த்தார்.
‘வேண்டாம் நாடார். நானே எழுதிடறேன். நாம பேசற விஷயம் ரொம்ப சீக்ரெட்டாயிருக்கணும். இந்த விஷயத்துல யாரையும் நம்பக் கூடாது. என் மேனேஜர நா நீங்க வந்தவுடனே அனுப்பிட்டேன். வீட்ல நம்மளத் தவிர வேற யாருமில்ல. தைரியமா பேசலாம்.’
ஹாலில் இருந்த எல்லோரும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து வரவேற்பறையையொட்டி இருந்த தங்களுடைய வழக்கமாக கூடும் அறைக்குள் சென்று அமர்ந்தனர்.
சோமசுந்தரம் அறைக்கதவைச் சாத்திவிட்டு மேசையின் தலைப் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து தன்னுடைய லாப்டாப் கணினியைத் திறந்து அதில் குறித்து வைத்திருந்ததைப் ஒருமுறை பார்த்துவிட்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு
‘ஃப்ரெண்ட்ஸ்.. நம்ம மீட்டிங்க ஆரம்பிக்கிறோம்.’ என்று சம்பிரதாயமாக துவக்கி வைத்தார்.
உடனே நாடார், ‘எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்.’ மறுத்து பேச முயன்ற ரஜ்ஜத் கபூரை பேச விடாமல் கையை உயர்த்தி தடுத்தார். ‘கபூர் சாப்.. டாக்டர் சார் உங்களுக்கு நான் என்ன பேசறேன்னு சொல்வார். பொறுமையா இருங்க. என்ன டாக்டர்?’
சோமசுந்தரம் மெல்லிய புன்னகையுடன், ‘கரெக்ட் நாடார்.. நீங்க மேல பேசுங்க.’ என்று கூறிவிட்டு, ‘I will brief you after he completes. OK?’ என்றார் கபூரைப் பார்த்து. அவரும் ‘ஒகே’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்ட நாடார் மேலே தொடர்ந்தார்.
‘நாம ரெக்கமெண்ட் பண்ணதுக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி அந்த ஆள ஒரேயடியா நாலு வருஷத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் பண்ணியிருக்கு ரிசர்வ் பேங்க். நாம இப்ப என்ன பண்ணணும்னு முடிவு பண்ணணும். அதுதான் இன்னைக்கிருக்கற ஒரே அஜெண்டா.’
நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். ‘நாம இப்ப ஒன்னும் எதிர்த்து சொல்லாம இருந்தா இதே பழக்கமா போயிரும். அத்தோட மாதவனும் நம்மள அவ்வளவா மதிக்காம போனாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல. என்ன சொல்றீங்க? செட்டியார், நீங்க சொல்லுங்க..’
செட்டியார் தயக்கத்துடன் சோமசுந்தரத்தைப் பார்த்தார். அவர் போர்டில் நுழைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. ‘நம்மளவிட சீனியரெல்லாம் இருக்கறப்போ நாம ஏதாவது பேசப் போயி தப்பா நினைச்சிக்க போறார் டாக்டர்’ என்று நினைத்தார்.
சோமசுந்தரம் நீங்க பேசுங்க பரவாயிலை என்பது போல் அவரைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு நாடார் சொன்னதை தன்னுடைய லாப்டாப்பில் சிரமத்துடன் ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டார்.
செட்டியார் சங்கடத்துடன் மீதமிருந்த எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு பேசினார். ‘நம்ம நாடார் சொல்றதுதான் நானும் சொல்றேன். ரிசர்வ் பேங்க எதிர்த்து நாம ஒன்னும் செய்ய முடியாதுன்னாலும் போர்ட் மெம்பர்ஸ் சார்பா ஒரு அப்ஜெக்ஷன் லெட்டராவது அவங்களுக்கு அனுப்பணும். அவ்வளவுதான்.’
சோமசுந்தரம் அவர்களிருவரும் பேசியதை சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கூடியிருந்த எல்லோரும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தனர்.
சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். ‘நாடார், அதுக்கு முன்னால நான் ஒன்னு கேக்கறேன். ஏன் நமக்கு லாஸ்ட் மினிட்ல இந்த விஷயம் தெரிய வருது? நம்ம எம்.டி., சி.ஜி.எம் எல்லாம் என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க? அவங்க யாருக்குமே ரிசர்வ் பேங்க்ல கனெக்ஷன் ஒன்னுமில்லையா? ஏன் கேக்கறேன்னா முன்னாலயே தெரிஞ்சிருந்தா ஆர்டர்ஸ் அங்கருந்து டெஸ்பாட்ச் ஆகறதுக்குள்ளயே ஏதாச்சும் செஞ்சிருக்கலாமில்லே..’
நாடார் சலிப்புடன், ‘ஆமா டாக்டர் அதுதான் எனக்கும் கோபம். கார்ல வர்ற வழியில் அந்த சுந்தரத்த ஒரு பிடி பிடிச்சிட்டுதான் வந்தேன். ஒன்னும் தெரியாம முளிக்கிறார்.. என்ன பண்ண சொல்றீங்க? சும்மா ஏ.ஜி.எம்மா கும்மியடிச்சிக்கிட்டிருந்தவன புடிச்சி ரெண்டு வருஷத்துல சி.ஜி.எம் ஆக்குனதுதான் மிச்சம்.. நம்ம எம்.டி என்னடான்னா கீழ இருக்கற ஆளுங்கக் கிட்ட சண்டை போடறதுக்கே நேரம் சரியாயிருக்கு. பேசாம எல்லாத்தையும் போங்கடான்னு வீட்டுக்கனுபிச்சிட்டு சின்ன பசங்கள ப்ரொமேட் பண்ணிரலாமான்னு கூட தோனுது. குறைஞ்ச பட்சம் நாம சொல்றயாவது கேட்டு செய்வானுங்கல்லே.. என்ன சொல்றீங்க செட்டியார்?’ என்றார்..
சோமசுந்தரம் புன்னகையுடன் அவர் கூறியதை ஆங்கிலத்தில் குத்து மதிப்பாய் மொழிபெயர்க்க ரஜ்ஜத் உரக்க சிரித்தார். ‘சுந்தர் ஐடியா டாக்டர் சாப்.’
‘யார்யா அந்த சுந்தர்.. டாக்டர், கபூர் என்ன சொல்றான்?’ என்றார்.
டாக்டர் சிரிப்பையடக்கிக் கொண்டு ‘இல்லை’ என்பதுபோல் தலையைசைத்தார். ‘இல்ல நாடார். நீங்க சொன்ன ஐடியா ரொம்ப நல்லாருக்குங்கறார். சுந்தர்னா ஹிந்தியில நல்லாருக்குன்னு அர்த்தம்.’
‘நாசமா போச்சு.’
ரஜ்ஜத் தொடர்ந்து சோமசுந்தரத்திடம். ‘Doctor I am told that Mr.Sundaram had gone to RBI two weeks back on their instructions?’
‘Is it? I did not know that?’ என்ற சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். இவனுக்கு தெரியாமயா சுந்தரம் போயிருப்பார். இந்தாளு தெரிஞ்சும் தெரியாதமாதிரி டிராமா போடறானா? 'என்ன நாடார்? கபூர் சொல்றது விளங்குதா?' என்றார்
தொடரும்..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சுந்தர் ஐடியா....ஹா ஹா ஹா சூப்பர் காமெடிங்க....
இது page-3 படம் பாக்குற மாதிரி இருக்கு சார். பெரிய லெவல்ல நடக்குறது கொஞ்சம் விசித்திரந்தான் இல்ல.
நீங்க அரசாங்க லெவல்ல சொல்றீங்க....இங்க பிரைவேட் கம்பெனிகள்ளயும் சில அரசியல் வியாதிங்க உக்காந்து கிட்டு இருக்கு. அதுகளும் இப்பிடித்தான் செய்யுது.
நீங்க அரசாங்க லெவல்ல சொல்றீங்க....இங்க பிரைவேட் கம்பெனிகள்ளயும் சில அரசியல் வியாதிங்க உக்காந்து கிட்டு இருக்கு. அதுகளும் இப்பிடித்தான் செய்யுது. //
அரசாங்கமோ, தனியாரோ... இந்தியாவில எல்லாம் ஒன்னுதான்..
நல்லா படு ஸ்பீடா கொண்டு போய்க்கிட்டு இருக்கீங்க.. சுந்தரத்துக்கு
அனேகமாக கல்தாதானா ??
வாங்க சோ.பையன்,
சுந்தரத்துக்கு
அனேகமாக கல்தாதானா//
ஏன்? அதெல்லாம் கோபத்துல நாடார் சொன்னதுதானே..
அவர் அப்படித்தான் மத்தவங்க முன்னால பாவ்லா பண்ணுவார்..
Post a Comment