18.1.06

சூரியன் – 7


அதனால் மனமுடைந்துப் போன நளினி மன்னிப்பு கேட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன அன்றிரவு முழுவதும் யோசித்து, யோசித்து ஒரு வழியாக எழுதி முடித்தாள்..

னால் அவள் நினைத்தது போல் கடிதமாக அல்ல ஒரு அழகிய கவிதையாகவே வந்திருந்தது..

அன்பரே,

கடிதம் ஒன்று
எழுத நினைத்தேன்
கவிதையானது
காகிதத்திற்கும்
எழுதுகோலுக்கும்
உள்ள காதலாலோ?

காதல் வசப்பட்டு
எழுதுகோல்
சிந்திய ரத்தத்தை
தாங்கிய காகிதத்தை
போலாவது
நீங்கள் தாங்கக்
கூடாதா.. என்னை
பொறுக்கக் கூடாதா?

எழுதுகோல் காகிதத்தை
சீண்டியது காதல்
என்றால் நான்
உங்களை
சீண்டியதோ?
**

இது யார்னு தெரியுதா?

வேணும்னே தெரியாத மாதிரி
ஒதுக்கினீங்கன்னா
இனி தொந்தரவு
பண்ணமாட்டேன்..

எழுதி முடித்துவிட்டு இது தேவையா என்று யோசித்தாள்.

‘எந்தா மோள அவிட செய்யின? லைட் கத்திக்கொண்டிருக்கிண்டல்லோ.. மணி எத்தராயின்னு அறியோ.. லைட்ட அனைச்சிட்டு கெடந்துறங்கு..’ என்ற தாயின் குரல் அருகிலிருந்து வர திடுக்கிட்டு தன் அறை வாயிலைப் பார்த்தாள்.

நல்ல வேளை. கதவு மூடியிருந்தது..

அவசர, அவசரமாக கடிதத்தை மடித்து தலைமாட்டில் கிடந்த கைப்பையில் வைத்து மூடினாள். எழுந்து சென்று கதவைத் திறந்தாள். எதிரே நின்ற தன் தாயைப் பார்த்து புன்னகையுடன்.. ‘ஒன்னுமில்லை.. புக் படிச்சிட்டிருந்தேன்.. இதோ படுத்துட்டேன். நீங்க போங்க.’ என்றாள்.

அவளுடைய பதிலில் திருப்தியடையாமல் அவளுடைய அறையை எட்டிப் பார்த்த தன் தாயின் தோள்களில் கை வைத்து விளையாட்டாய் அவளுடைய அறைக்கு தள்ளிக்கொண்டு சென்றாள். ‘அம்மே சுகாயிட்டு கெடந்துறங்கு..’

பிறகு தன் அறைக்குத் திரும்பி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் கிடந்து நாளைக்கு நடக்கப் போவதை நினைத்துப் பார்த்தாள். அவளையுமறியாமல் பயத்தில் உடல் நடுங்கியது. தலைமுதல் கால்வரை போர்த்திக் கொண்டு தூங்க முயற்சித்தாள்.

அப்படி துவங்கியதுதான் அவர்களுடைய காதல்.. எறும்பு ஊற, ஊற கல்லும் தேயும் என்பதுபோல் கல்லாய், இரும்பாய் இருந்த அவனுடயை இதயத்தை கரைத்து தன் வசப்படுத்த அவள் எத்தனைப் பாடுபட்டாள்?

எல்லாம் எதற்கு?

இதோ, ஒரே வீட்டில் அவன் ஒரு அறையிலும் அவள் ஒரு அறையிலும் படுத்துறங்கவா?

ஆமாம், கடந்த ஒரு வருடங்களாக அதுதான் நடக்கிறது..

நளினி யோசித்துப் பார்த்தாள். ஒருவேளை அவர்களுக்கிடையில் குழந்தை என்று ஒன்று இல்லாமல் போனதுதான் இவ்விரிசலுக்குக் காரணமோ..

எத்தனை கோயில், குளம் ஏறி இறங்கியிருப்பாள்? எத்தனை கடவுள்களை.. இயேசுவிலிருந்து.. குருவாயூரப்பன் வரை..!

இவர்கள் இருவருடைய கோப தாபங்களைப் புரிந்துக் கொள்ள முடியாமல் அவளுடைய பெற்றோர் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனதுதான் மிச்சம்.

‘நிங்கள் தம்மிலுள்ள பிரஸ்னம் எந்தாடி? ரெண்டு பேருக்கும் நல்லோனம் கிட்டின்லே.. பின்ன எந்தான? குட்டிகளில்லாததான பிரஸ்னமானெங்கில் ஏதெங்கிலும் நல்லதொரு டாக்டரிடத்து காணிக்காமாயிருந்தில்லே, மோளே..’

அவள் காணாத மருத்துவர்களா? ‘உங்க ரெண்டு பேருக்குமே எந்த ப்ராப்ளமுமில்லை.. பொறுமையா காத்திருக்கறதைத் தவிர வேறு வழியில்லை’, என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரையாயிருந்தது..

அப்புறமும் ஏன்?

இன்றுவரை புரியாத புதிராகவே இருந்தது நளினிக்கு..

‘நந்து.. நாம யாராவது ஒரு அனாதை குழந்தைய தத்தெடுத்தாலென்ன?’ என்று அவள் ஆரம்பித்தபோதெல்லாம் சீறி விழுந்தான் நந்து.

அப்போதெல்லாம் ‘என்ன மனுஷன் இவன்?’ என்று தோனும் அவளுக்கு. இவனையா ஓடி, ஓடி காதலிச்சோம்?

பேரப்பிள்ளைகளுக்காக காத்திருந்து, காத்திருந்து, மனமும் உடலும் சோர்ந்துபோய் ஒருவர் பின் ஒருவராய் அவளுடைய பெற்றோர் மரித்துப் போக.. அன்பு செய்ய யாருமில்லாமல் தனிமரமாகிப் போனாள் நளினி..

***

கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை சுண்டி எறிந்துவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று உடைகளை களைந்துவிட்டு குளித்தாள்.

பிறகு சமையலறைக்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் காலை அலுவலகம் செல்லும் முன்பு தயாரித்து வைத்திருந்த உணவை எடுத்து சூடாக்கி உணவு மேசையில் பரப்பிவைத்துவிட்டு நந்துவுக்காக காத்திருந்தாள்.

கால் மணி நேரமாகியும் அவன் வராததால் அவனுடைய அறைக் கதவைத் தட்டினாள். ‘ஞான் பின்னே கழிச்சோளாம். தான் கழிச்சிட்டு உறங்கிக்கோ..’ என்ற குரல் வந்தது..

அவனுடைய குரலிலிருந்தே தன்னுடன் கொண்டு வந்திருந்த மதுவை அவன் அருந்த ஆரம்பித்துவிட்டான் என்று தெரிந்தது.. போதை தலைக்கேறியதும் அவனாகவே வந்து உணவருந்துவான் என்று அவளுக்குத் தெரியும். இதுதானே கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகின்றது?

இனியும் காத்திருந்து பயனில்லை..

சமையலறைக்குத் திரும்பி மேசையில் பரப்பிவைத்திருந்த பாத்திரங்களைப் பார்த்தாள்..

தனியாய் அமர்ந்து சாப்பிடப் பிடிக்காமல் சமையலறை மற்றும் வரவேற்பறை விளக்குகளை அனைத்துவிட்டு சென்று தன் படுக்கையில் விழுந்தாள்.

அவளையுமறியாமல் குலுங்கி, குலுங்கி அழுதாள்..

அப்படியே உறங்கியும் போனாள்..

உறக்கம் கலைந்து எழுந்தபோது மணி விடியற் காலை மணி 3.00

நேற்று உறங்க சென்றபோது இருந்த மனநிலை இப்போதும் இருந்தது. கட்டில் தலைமாட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

How long can we go on like this?

எவ்வளவு இறங்கி வந்தாலும் வீம்பு பண்றாரே.. இதுக்கு என்னதான் முடிவு?

நீண்ட நேரம் யோசித்தும் ஒரு வழியும் தெரியாமல் எழுந்து அறையிலிருந்த ஸ்டடி மேசையிலமர்ந்து இழுப்பிலிருந்த தொலைப்பேசி எண்களைக் குறித்து வைக்கும் புத்தகத்தை வெறுமனே புரட்டினாள்.

சட்டென கண்ணில் பட்டது நந்துவின் தங்கையின் எண்!

நளினியே மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்தவள். இப்போது இரு அழகான குழந்தைகளுடன் கொச்சியிலேயே ஒரு சிறிய வீட்டில் தன் மாமனார், மாமியார், நாத்தனார் என்ற கூட்டு குடும்பத்தில் சந்தோஷமாய்..

நந்துவுக்கும் அவனுடைய தம்பி, தங்கைக்கும்தான் குணத்தில் எத்தனை வேறுபாடு!

நந்துவின் தம்பியும் அவளுடைய உதவியுடன் படித்து நல்ல வேலை கிடைத்து, அவனுடன் வேலைப் பார்த்த ஒருத்தியை திருமணம் செய்துக் கொண்டு மாலையும் கழுத்துமாய் வந்து நின்றபோது இவன் எப்படி குதித்தான்!

அப்போதும் நளினிதான் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தாள். இப்போது அவனும் சந்தோஷமாய் ஒரு குழந்தையுடன் இதே கொச்சியில்..

நளினி அவர்கள் இருவருடைய தொலைப்பேசி எண்களையும் ஒரு தனி காகிதத்தில் குறித்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் நாளை வீட்டிற்கு அழைத்து தனக்கும் நந்துவிற்கு இடையில் இருக்கும் விரிசலைக் குறித்து பேசுவது என்றும் அவர்கள் பேச்சையும் நந்து கேட்காத பட்சத்தில் சிறிதுகாலம் பிரிந்து வாழ்வதென்றும்.. அதுவும் சரி வரவில்லையென்றால்.....

என்ன செய்யலாம்? யோசித்து, யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை அவளுக்கு..



தொடரும்

2 comments:

G.Ragavan said...

ஆகா! பாவம் நளினி. பாவம் நந்து. அனுபவிக்க எல்லாம் இருந்தும் அனுபவிக்காம கஷ்டப் படுறாங்க. ஆண்டவன் அவங்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கட்டும். அதுனாலதான் காதிலிக்கும் போதும் கலியாணம் செய்யும் போதும் பொருத்தம் பாக்கனும்னு சொல்றது. நளினி கோட்டை விட்டுட்டா....பேசாம செகண்ட் அட்டெம்ட் எழுதலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

கவிதை எப்படிங்க இருக்கு?

கவிதையாவாவது தெரியுதா?