13.1.06

சூரியன் - 5

இடம்: ரவிபுரம்,எர்ணாகுளம், கேரளா

அடுக்கு மாடி கட்டிட குடியிருப்பில் நான்காவது மாடி. இரண்டு படுக்கையறை, ஹால் + டைனிங் , சமையலறை, ஒரு சிறிய சிட் அவுட் என  கச்சிதமான குடியிருப்பு.

பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைய முடியாமல் வாசற்கதவுக்கு வெளியே மொட்டை மாடிக்கு செல்லும் படியில் கடந்த ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த நந்தகுமார் பொறுமையிழந்து தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி 8.00!

எர்ணாகுளத்திலிருந்து எழுபது கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஆலப்புழா கிளையில் மேலாளராக பணிபுரிந்துக்கொண்டிருந்த நந்தகுமார் வார இறுதி நாட்களில் மட்டுமே எர்ணாகுளம் வந்து போவது வழக்கம்.

நந்தகுமார் பணிபுரிந்த அதே வங்கியின் எர்ணாகுளம் மத்திய  கிளையில் முதன்மை மேலாளராக (Chief Manager) பணி புரிந்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மனைவி நளினி.

வீட்டின் சாவிகள் இரண்டில் ஒன்று எப்போதும் அவனிடம் இருக்கும். இன்று எடுக்க மறந்துவிட்டதன் விளைவு இதோ வீட்டுக்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக காத்திருக்க வேண்டிய நிலை..

அவன் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஏழு மணிக்கு முன்பு வந்துவிடுவான் என்று நளினிக்கு நன்றாகத் தெரியும்.

சனிக்கிழமைகளில் வங்கி அரை நாள்தான். அப்படியே வேலையிருந்தாலும் மாலை ஐந்து மணிக்காவது கிளம்பி வந்திருக்கலாம். அல்லது நான் வந்துவிட்டேனா என்றாவது அவனுடைய கைத்தொலைப்பேசிக்கு அழைத்து கேட்டிருக்கலாம் என்று நினைத்தான்.

கடந்த வருடம் அவனை முந்திக்கொண்டு கிடைத்த முதன்மை மேலாளர் பதவி உயர்வுதான் அவளிடம் ஏற்பட்ட இந்த அலட்சியப் போக்குக்கு காரணம்..

நாமாவது வந்தவுடனே அவளை அழைத்திருக்கலாம். விருப்பமில்லை. கணவன் மனைவிக்குள் இந்த ஈகோ தேவைதானா என்று இப்போது நினைத்துப் பார்த்தான். உனக்காக நான் எனக்காக நீ என்று இருவரும் எத்தனை அன்னியோன்யமாய் இருந்தோம்!

நந்தகுமாரும் நளினியும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் பயிற்சி அதிகாரிகளாக சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே கிளையில் பணிக்காக சேர்ந்தபோது ஒரே நேரத்தில் பணிக்கு சேர்ந்தவர்கள் என்ற முறையில் இருவரும் நட்புடன் பழகினார்கள்.

நளினியின் இயற்கையழகும் அவளுடைய அபிரிதமான அறிவுத்திறனும் அவனை ஈர்த்தன. இருபத்தி முன்று வயதில் இத்தனை திறமையா என வியந்துப் போனான் அவன்.

ஆண் என்ற கர்வம் பிடித்தவன் நந்தகுமார். தன் தந்தை அவனுடைய தாயாரிடத்தில் அனுபவித்த அவமானங்களைப் பார்த்து பார்த்து பெண்ணினத்தையே வெறுத்தவன் அவன். ஆனால் ஏதோ வகையில் அவனைக் கவர்ந்திழுத்து தன்னையே இழக்க செய்தவள் நளினி.

மலையாளப் பெண்களுக்கே உரித்தான சிகப்பு நிறம், நிலா போன்ற வட்ட முகம், அழகிய அடர்த்திய இமைகளுடன் கூடிய கண்கள், நீஈஈஈண்ட கூந்தல்.. அத்துடன் மலையாள பெண்களிடத்தில் அவன் அதுவரை கண்டிராத அபிரிதமான அறிவுத்திறன்.. நந்தகுமார் அவளுடன் பழகிய மூன்றே மாதங்களுக்குள் அவன் சுதாரித்துக்கொள்வதற்கு முன் அவளிடம் தன்னையே இழந்து போனான்.

அவன் நாயர் வகுப்பைச் சார்ந்தவன். அவளோ கிறீஸ்துவப் பெண். அவர்களிருவரும் திருமணம் செய்துக் கொள்ள இரு குடும்பத்தாரும் சம்மதிக்கப் போவதில்லை என இருவருக்குமே தெரிந்திருந்தது.

நந்தகுமாரின் மாத வருமானத்தையே நம்பி இருந்த குடும்பம் அவனுடையது. அப்பா பணி ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆகியிருந்தது. அரசு உத்தியோகம்.. பென்ஷனைத் தவிர பெரிதாய் ஒன்றும் இல்லை.. குடியிருக்க சொந்தமாய் ஒரு பழைய வீடு என்பதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாய் ஒன்றுமில்லை.. வாழ்ந்த காலத்தில் தன் கணவனுடைய நேர்மையை கையாலாகாத்தனம் என எள்ளி நகையாடி சித்திரவதை செய்வதையே தன் முழு நேர தொழிலாக கொண்டிருந்த அவனுடைய தாய் இறந்து ஆறு மாதமே ஆகியிருந்தது.

தாயின் மரணம் அவனுக்கு எந்த வித வருத்தத்தையும் தராதது மட்டுமல்ல. ஒருவித நிம்மதியையே அளித்தது என்று நினைத்தான். அவனுக்கு கீழே ஒரு தங்கை, ஒரு தம்பி என்று நால்வர் அடங்கிய  குடும்பத்தில் இப்போது சண்டை, சச்சரவு, அழுகை, ஆர்ப்பாட்டம் ஒன்றுமில்லாமல் அமைதியாய் சந்தோசமாய் ....

இளையவர்கள் இருவரும் கல்லூரியில்.. தங்கை இறுதியாண்டு, தம்பி இரண்டாம் ஆண்டு.. இருவரும் படித்து முடிக்க இன்னும் இரண்டே வருடங்கள்.. அதற்கு பிறகு தங்கையின் திருமணம்.. தங்கையின் திருமணம் முடியும் வரை காதல் கத்திரிக்காய் என்று அகப்பட்டுக் கொண்டு அவதிப்படக் கூடாதென்று பணிக்கு சேரும் முன்பே தீர்மானித்திருந்தான். அதாவது நளினியை பார்க்கும் வரை.

நளினியோ நடுத்தரத்துக்கும் சற்று உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவள். அதுவமல்லாமல் அவளுடைய தந்தை காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தார் என்று கேள்விப் பட்டபோது அவன் தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினான். ஆனால் நளினி அதற்கெல்லாம் சற்றும் கவலைப் படாமல், ‘இங்க பார் நந்து.. எங்கப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர்.. He knows that I am a major and I can do what I want. அம்மாவும் கவர்ன்மெண்ட்ல ஒரு சீனியர் ஆஃபீசர்.. எனக்கு சின்ன வயசுலருந்தே சுயமா சிந்திக்கவும், முடிவெடுக்கவும் உரிமைய கொடுத்தவங்க.. '

'இந்த கலப்புத் திருமணம் அதுவும் மதம் மாறி செய்ய வேண்டிய திருமணமாச்சேன்னு ஒருவேளை யோசிச்சாலும் அவங்கள கன்வின்ஸ் பண்ண வேண்டியது என் பொறுப்பு.. அத எண்ட ஜோலியா.. நந்து விஷமிக்கேண்டா.. உங்க அப்பாவும் கவர்மெண்ட்டுலருந்து ரிட்டையர் ஆனவர். அவருக்கும் கலப்புத் திருமணங்கறது ஒன்னும் புதுசா தெரியாது. அவரை சாட்டிஸ்ஃபை பண்றதுக்காக நான் உங்க மதத்துக்கு  மாறவும் தயார் நந்து. என்னோட மெர்சிங்கற பேர மாத்தி வச்சிக்க பேரும் செலக்ட் பண்ணியாச்சி தெரியுமா? நளினி. எங்ஙன இண்டு?’ என்றவளை வியப்புடன் பார்த்தான்.

எதையும் ஆழ யோசிக்காமல் முடிவெடுப்பவள் அவள் என்று அவனுக்கு தெரிந்திருந்ததால் தன்னால் இத்தனை உறுதியாக இருக்க முடியுமா என்று அஞ்சினான். அவளுக்கென்ன? ஒரே மகள். வீட்டை முறித்துக்கொண்டு வெளியேறிவிடவும் முடியும்..ஆனால் எனக்கு? வீட்டிலிருந்த கடமைகளை உதறிவிட்டு வருவது முறையாகுமா? அதற்கும் அவளிடம் பதில் இருந்தது!

‘நந்து.. பேடிக்கேண்டா.. நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை.. நான்மட்டும்தான்  எங்க வீட்டை விட்டு வரவேண்டியிருக்கும். உங்கப்பா சம்மதிச்சா நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம். இல்லன்ன இருக்கவே இருக்கு ரிஜிஸ்டர் மாரேஜ். ஆனா ஒன்னு நந்து.. நீ உன் தங்கையோட கல்யாணம் முடிஞ்சி உன் தம்பி ஒரு நல்ல வேலைக்கு போற வரைக்கும் நீ உன் சம்பளத்த உன் வீட்ல கொடுத்திரலாம். என்ன? சரியா? அத்தோட உன் தங்கையோட கல்யாணத்தையும் நாம ரெண்டு பேருமே நடத்தி வைக்கலாம். நமக்கு ஒரு கொழந்தை பொறந்துட்டா  உங்கப்பா ஓடி வந்துருவார்.. நீ வேணாப் பாரு.’

என்றபோது அவளை அப்படியே வாரி அணைத்து நன்றி சொன்னான். அவள் அப்படியே செய்யவும் செய்தாள்

அவள் எதிர்பார்த்தபடி அவளுடைய வீட்டில் எதிர்ப்பு வந்தது. ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் சம்மதித்து நந்துவின் வீட்டிற்கு வந்து பேசினர். ஆனால் அப்பா பிடிவாதமாய் முடியவே முடியாது என்றார். ‘என் ரெண்டு பிள்ளைகளையும் பாத்துக்க எனக்கு தெரியும்டா.. உனக்கு அவ தான் முக்கியம்னா நீ போயிரு.. நீ என் பிள்ளையே இல்லைன்னு தலைய முழுகிடறேன்.’

நந்துவின் தங்கையும், தம்பியும் அவன் பக்கம். நளினையை கண்ட மாத்திரத்திலேயே இருவருக்கும் பிடித்துப் போனது. அவர்களுடைய பதிவுத் திருமணத்திற்கு வந்த இருவரும் அவர்களுடனே வந்துவிட தயாராயிருந்தனர். நளினி அவர்களை சமாதானப் படுத்தி அவர்களுடைய தந்தையுடனேயே தங்க வைத்தாள்.

அவர்களுடைய திருமணம் முடிந்தவுடனே ஒரே கிளையில் கணவனும் மனைவியும் பணிபுரியலாகாது என்ற வங்கியின் நிபந்தனைப் படி நந்துவுக்கு அருகிலிருந்த டவுனுக்கு மாற்றலானது.
தினமும் போய் வரும் தூரம்தான் என்றாலும் அதிகாலையில் எழுந்து சென்றால் இரவு அவன் வீடு திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும்.

நளினி தனித்து இருந்த நேரங்களில் மேலே படிக்கவாரம்பித்தாள். அவளுக்கிருந்த அதீத திறமை வங்கி ஊழியர்கள் மட்டுமே எழுதக்கூடிய CAIIB தேர்வில் இரண்டு பாகங்களிலும் முதல் முயற்சியிலேயே எல்லா பாடங்களிலும் சிறந்த மதிப்பென்களைப் பெற்று இந்தியாவிலேயே மூன்றாவது ஸ்தானத்தைப் பிடித்து சாதனைப் படைக்க முடிந்தது. CAIIB இரண்டு பாகங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் அவளுடைய அடிப்படை ஊதியத்தில் மூன்று நிலைகள் (Stages) கூட நந்துவை விட அதிக ஊதியம் ஈட்டலானாள்.

நந்துவுக்கு அது முதலில் பெருமையாயிருந்தாலும் அவளுடைய சம்பள சீட்டைப் பார்க்கும் போதெல்லாம் லேசான பொறாமை வெளிப்பட ஆரம்பித்தது.

நந்து மாற்றலாகிப் போன கிளையில்தான் வங்கி அதிகாரிகளின் சங்க காரியதரிசி துணை மேலாளராக இருந்தார். நந்துவும் அவரும் தினமும் சிறிது தூரம் வரை ஒரே பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். மெள்ள மெள்ள கம்யூனிச சித்தாத்தங்களை நந்துவின் மனதில் துவி அவனையும் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வைத்தார் அவர். நளினி மும்முரமாய் CAIIB க்கு தயார் செய்துக் கொண்டிருந்த நேரத்தில் நந்து சங்கம், சங்கம் என்று அலைந்து இரண்டு ஆண்டுகளில் சங்க பேரவைத் துணைத்தலைவரானான். அதனாலேயே என்னவோ அதே ஆண்டு நடந்த பணி உயர்வு தேர்வில் நளினி வங்கியிலேயே அகில இந்திய அளவில் முதல் ரேங்கைப் பிடிக்க நந்து தோற்றுப் போனான்.

நளினி பதவி உயர்வு பெற்று வங்கியின் கோட்டயம் கிளைக்கு துணை மேலாளராக செல்ல நந்து அக்கவுண்டண்ட் பதவியிலேயே தங்கிப் போனான். அடுத்த இரண்டாண்டுகளில் நந்து தொழிற்சங்க தலைவராக நிர்வாகத்தினரின் அதிருப்தி அதிகாரிகளின் லிஸ்டில் அவனும் ஒருவனானான்.  நளினி அடுத்த நிலைக்கு (மேலாளர்) பதவி உயர்வு பெற நந்துவின் பதவி உயர்வு மீண்டும் தள்ளிப் போனது..

இப்போது அவர்கள் இருந்த வீடும் நளினி வங்கிக் கடன் பெற்று வாங்கியதுதான்.

‘எந்தா இது.. எப்ப வந்தீங்க? உங்க சாவி என்னாச்சி?’

நினைவுகள் கலைந்து நிமிர்ந்து பார்த்தான் நந்து. எதிரில் நின்றவளைப் பார்க்க பிடிக்காமல், ‘முதல்ல கதவைத் திற.’ என்று எரிந்து விழுந்தான்.

சில விநாடிகள் அவனையே பார்த்த நளினி அவனுடைய கோபத்தை உணர்ந்தவளாய் ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்தாள். அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்த நந்து நேரே தன் அறைக்குள் சென்று கதவை அடித்து மூடிக்கொள்ள.. மூடிய கதவையே பார்த்தவாறு நின்றாள் நளினி..

தொடரும்



2 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒரு அத்தியாயத்திலேயே நந்து நளினி இடையே நடக்கும் ஈகோ போரை தெளிவாகச் சொல்லிவிட்டீர்களே. கதை அருமையாகப் போகுது.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க இ.கொத்தனார்,

நன்றி.