26.1.06

சூரியன் 13

வீட்டுக்குள் நுழைந்ததும் மாணிக்கவேல் தன் தந்தையை நேரே அவருடைய படுக்கையறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தார்.

‘கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருங்கப்பா. நான் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக்கிட்டு வரேன். அது போதுமா, இல்ல ரசம் சோறு சாப்டுறீங்களா?’

ஆறுமுகச்சாமி தன் மகனைப் பார்த்தார். ‘வேணாம்ப்பா.. ஒன்னும் வேணாம். வயிற ஒருவேளை காயப் போட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். நீ போய் சாப்ட்டு படு..’

வேலுவுக்கு தந்தையின் தயக்கத்திற்குப் பின்னால் இருந்த வேதனை புரிந்தது.. எங்கே இதுக்கும் ராணி ஏதாவது தகராறு செய்வாளோ என்று அப்பா நினைக்கிறாரோ என்று நினைத்தார். ‘இல்லப்பா.. நீங்க டயாபெடிக் வேற.  வெறும் வயித்தோட படுத்தா நடுராத்திரியில ஷ¤கர் லெவல் குறைஞ்சாலும் குறைஞ்சிரும். ராத்திரில மட்டும் சாப்டாம படுக்காதீங்கன்னு டாக்டர் சொன்னத மறந்துட்டீங்களா? இருங்க, ஹார்லிக்ஸ் கொண்டு வரேன். ராணிய பத்தி கவலைப் படாதீங்க. அவ என்னைக்கிதான் சலிச்சுக்காம இருந்திருக்கா?’

வேல் நேரே சமையலறைக்குச் சென்று சுவர் அலமாரியிலிருந்த ஹார்லிக்சை எடுத்துக் கொண்டு மின்சார கூஜாவில் குடிநீர் நிரப்பி சுவிட்சை ஆன் செய்துவிட்டு காத்திருந்தார். அப்பாவுக்கு இரவில் ஃப்ளாஸ்க் நிறைய சுடுநீர் நிரப்பி வைத்து விட்டுத்தான் அவர் உறங்க செல்வார். எந்த வேலையிருந்தாலும் அதை மட்டும் மறக்கவே மாட்டார்.

உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்த ராணி தன் கணவனை எரிச்சலுடன் பார்த்தாள். ‘ஏங்க, வந்ததும் வராததுமா உங்கப்பாவுக்கு வேண்டியத மட்டும் பார்த்தா போறுமா? நாங்கல்லாம் என்னத்த சாப்பிடறது? வர்ற வழியிலேயே சாப்டுட்டு வந்திருக்கலாமில்ல?  கார எடுத்துக்கிட்டு ஸ்டேஷனுக்கு அந்த பக்கம் இருக்கற ஓட்டல்ல ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க. பசிய வயித்த கிள்ளுது.’

வேல் திரும்பிப் பார்க்காமல் பதிலளித்தார். ‘இரு.. அப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்துட்டு போறேன். அவர் குடிச்சிட்டு படுக்கட்டும். பாவம், அவருக்கு இன்னும் மூச்சு வாங்கிக்கிட்டே இருக்கு..’

ராணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் கணவரை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள். ‘ஏங்க, ஒரு ராத்திரி வெறு வயித்தோட படுத்தா செத்தா போயிடுவார்? இங்க பிள்ளைங்க பசியால துடிக்கிது.. சாவப் போற ஆளுக்குதான் இப்ப ரொம்ப முக்கியம்.’

எங்கிருந்து கோபம் வந்ததோ..  மூர்க்கத்தனமான கோபத்துடன் சரேலென திரும்பி தன் மனைவியை நெருங்கினார். ‘ஏண்டி, என்ன சொன்னே? சாகப் போற ஆளா? ஏன் நீ சாகவே மாட்டியா? என்ன பேச்சுடி பேசறே? ஒரு கிறீஸ்துவ பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அண்ணிங்க ரெண்டு பேர மாதிரி பஜாரியா இருக்க மாட்டேன்னுதானடி உன்ன தேடிப் பிடிச்சி கட்டிக்கிட்டேன்... கிறீஸ்துவ குடும்பங்கள்ல வளர்ற பொண்ணுங்க பொறுமையா, அன்பா இருப்பாங்கன்னு நினைச்சேனே என்ன செறுப்பால அடிக்கணும்.. இரு, வந்து பேசிக்கிறேன்.’

இருவருடைய வாக்குவாதத்தையும் தன் அறையிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த ஆறுமுகச்சாமி வேதனையுடன் கதவை அடைத்து தாளிட்டுக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தார்.

வேல் பலமுறை கதவைத் தட்டியும் திறக்காமல் வெறுமனே படுத்திருந்தார்.

ஒரு கையில் ஹார்லிக்சும் இன்னொரு கையில் ஃப்ளாஸ்க்குமாக நின்றிருந்த வேல் தன் முதுகை யாரோ ஆதரவுடன் தொடுவதை உணர்ந்து திரும்பினார்.

கமலி!

‘இங்க என் கிட்ட குடுங்கப்பா. நான் தாத்தாவுக்கு குடுத்துக்கறேன். நீங்க போய் துணி மாத்திட்டு குளிங்க போங்க.’

வேல் தன் மகளின் தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்தார். தன்னிடமிருந்தவற்றை அவளிடம் கொடுத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

‘ஏங்க.. எங்க போறீங்க? நான் சொன்னது என்னாச்சி? பசிக்கிதுங்க..’ சமையலறையிலிருந்தே கூவிய தன் மனைவியை வெறுப்புடன் பார்த்தார்.

‘ஏம்மா அப்பாவ தொந்தரவு பண்றே? உனக்கென்ன வேணும், சொல்லு. நான் பைக்கை எடுத்துக்கிட்டு போய் வாங்கிக்கிட்டு வரேன்.’ என்று தன் தாயைப் பார்த்து சொன்ன சந்தோஷ் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதைப் பொருட்படுத்தாமல் ‘நீங்க போய் குளிங்கப்பா. நான் போய்ட்டு வரேன். உங்களுக்கு என்ன வேணும்ப்பா?’

வேல் ஆயாசத்துடன் தன் மகனைப் பார்த்தார். ‘உங்க ரெண்டு பேருக்கும் அப்பாவுக்காகவுந்தாண்டா உங்கம்மாவ பொறுத்துக்கறேன்.’ என்று தனக்குள் கூறிக்கொண்டார். ‘எனக்கு ஒன்னும் வேணாம் சந்தோஷ். உங்கம்மாதான் பசிக்கிதுங்கறா.. அவளுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் வேண்டியத வாங்கிட்டு வா. அப்பா பர்ஸ் டேபிள் மேலதான் இருக்கு. வேணுங்கறத எடுத்துக்கிட்டு போ..’

உடை மாற்றி குளியலறைக்குள் நுழைந்து ஷவரைத் திறந்துக் கொண்டு குளிர்ந்த நீரினடியில் நின்றார். அவரையுமறியாமல் கண்கள் கலங்கி குளிநீரோடு கலந்து வழிந்தோடியது..

அவருடைய அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு அவர் பார்த்ததே இல்லை..

‘புருஷன், பொஞ்சாதி, மூனு பசங்க இருக்கறீங்கன்னுதான் பேரு.. ஒரு சத்தம், மூச்சையே காணோம்.. ஏம்மா, நீங்க  குடும்பந்தான் நடத்தறீங்களா? எங்கூட்ல என்னடான்னா எப்ப பாத்தாலும் குடிச்சுப்புட்டு வந்து இந்த ஆம்பளைங்க பண்ற கூத்தும் எங்கூட்டு பசங்க அடிக்கற கொம்மாளமும்... உங்கூட்டு ஆம்பள இப்பிடின்னா உங்கூட்டு புள்ளங்களும் கம்முன்னு இருக்குதுங்களேடிம்மா.. எதுனாங்காச்சியும் சொக்குப் பொடி கிடி போட்டு வச்சிருக்கியா? அப்படி எதுனாச்சும் இருந்தா எங்களுக்கும் குடேன்..’ என்று அடுத்த வீட்டு பாட்டி புலம்புவதை அவர் பலமுறைக் கேட்டிருக்கிறார்..

அப்படி வளர்ந்தவர்கள் அவரும் அவருடைய சகோதரர்களும். அப்பா ஒருமுறை கூட அவரையோ அல்லது ‘சரியான வாலு பய டெய்லர் உன் கடைசி புள்ள. மூத்தது நாலும் என்னா ஜைலண்டா இருக்குது? அதெல்லாத்தையும் இது தூக்கி சாப்ட்றும் போலக்குதே..’ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சதா குற்றம் சொல்லும் அவனுடைய கடைக்குட்டி தம்பி பாபுவையும் கூட அப்பா அடித்ததே இல்லை.. அம்மாவோ அதற்கு மேல். பார்வையால் கூட அவர்களை அதட்டியதில்லை..

அம்மா யாரையும் அதிர்ந்து பேசி அவர் பார்த்ததே இல்லை. அப்பாவுக்காவது எப்பொழுதாவது கோபம் வரும். அம்மா எப்போதுமே சிரித்த முகத்துடன் இருந்துதான் பார்த்திருக்கிறார்..

அப்பா சில நாட்களில், ‘கடையில காசே வரலடி.. நீயுந்தான் பாத்தியே.. என்னை என்ன பண்ண சொல்றே?’ என்று வெறும் கையுடன் வந்து நின்றபோதும் அம்மா எதையாவது செய்து, ‘நீங்க சாப்டு படுங்கடா.. அம்மா அப்புறம் சாப்டுக்கறேன்.’ என்று பானையிலிருந்ததை வழித்து அவருக்கும் அவருடைய தம்பிகள் இருவருக்கும் கொடுத்துவிட்டு எழுந்து போய்விடுவாள். அவருக்கு மூத்தவர்கள் இருவரும் போர்டிங் பள்ளியில் படித்ததால் அவர்கள் வறுமையிலிருந்து தப்பித்தார்கள்.

அப்போதெல்லாம் அவருக்கு அம்மாவும் அப்பாவும் பட்டினியாய்தான் இருந்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கவில்லை..

பட்டினியாய் கிடந்தாலும் அம்மாவின் முகத்தில் சோர்வையோ, அலுப்பையோ, கோபத்தையோ அவர் கண்டதே இல்லை.. அதேபோல், அப்பா எப்போதாவது கோபப்பட்டு சப்தம் போட்டாலும் அம்மா ஒரு சிறு புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவாள்.

அவர்கள் இருந்தது பத்து பதினைந்து குடித்தனங்கள் இருந்த ஒரு பெரிய காம்பவுண்ட்..

ஒவ்வொரு வீட்டிலுமிருந்து ஆக்ரோஷமாக சண்டை இடும் சப்தம் கேட்கும். அம்மாவும் அப்பாவும் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார்.

அப்படி குடும்பம் நடத்திய அம்மாவும் அப்பாவும் பிள்ளைகள் வளர்ந்தப் பிறகு வீட்டுக்கு வந்த மருமகள்களிடம் அனுபவித்த வேதனைகள்...

இப்போதும் அப்பா தன் மனைவியிடம் படும் தொல்லைகள், அவச் சொற்கள்...

கண்களில் குளிர்ந்த நீர் பட இரண்டும் ஜிவ் என்று எரிந்தன. கண்களை ஷவரை நோக்கி திருப்பினார். ஊசி போல் குத்திய நீர் அவருடைய மன வேதனையை சற்றே தணித்தது.

ஷவரை  நிறுத்துவிட்டு டவலை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே வந்தார். படுக்கையின் மேல் கிடந்த லுங்கியை எடுத்து உடுத்திக் கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்தார்..

சந்தோஷ் கேட்டைத் திறந்துக் கொண்டு நுழையும் சப்தம் கேட்டும் அறையிலிருந்து வெளியே செல்லாமல் அமர்ந்திருந்தார்.

இனியும் வெளியே சென்று தன் மனைவியை பார்க்க பிடிக்காமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தார்..

தலைக்குமேலிருந்த மின் விசிறியின் ஓசையைத் தவிர அறை நிசப்தமாயிருந்தது..

கண்களை மூடிக்கொண்டு உறக்கம் வராமல் அப்படியே படுத்திருந்தார்..

அப்பா..

உள்ளத்தால் எத்தனை மிருதுவானவர்! அவருக்கா இப்படி?

அம்மா போனதுமே.. மனம் ஒடிந்து போய் ‘நானும் போயிர்றேண்டா.. நான் போயிர்றேண்டா..’ என்று அவர் அரற்றியது இப்போதும் கண் முன்னே நிற்க கண்களை இறுக மூடிக்கொண்டு அந்த காட்சியை அழிக்க முயன்று தோற்றுப் போனார்...

எப்போது என்றே தெரியாமல் அப்படியே உறங்கிப் போனார் விடிந்ததும் ஏற்படப் போகும் பெறும் இழப்பை  உணராதவராய்..

தொடரும்..




No comments: