சூரியன் 6
சில விநாடிகள் அவனையே பார்த்த நளினி அவனுடைய கோபத்தை உணர்ந்தவளாய் ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்தாள். அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்த நந்து நேரே தன் அறைக்குள் சென்று கதவை அடித்து மூடிக்கொள்ள.. மூடிய கதவையே பார்த்தவாறு நின்றாள் நளினி..
‘இயாள்ட பிரஸ்ணம் எந்தான..’ என்றது அவளுடைய மனது..
கடந்த ஆறு மாதங்களாகவே நந்துவின் போக்கில் பெருத்த மாற்றம் தெரிந்தது அவளுக்கு..
அவள் என்னதான் குனிந்து போனாலும் குட்டுவதிலேயே குறியாய் இருந்தவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தாள்..
இன்றைக்கு அவளுடைய வேலைகளை முடித்துவிட்டு சுமார் ஐந்து மணிக்கு அவளுடைய அறையிலிருந்து வெளியேறியவளை தடுத்து நிறுத்தியது அவளுடைய கைத் தொலைபேசி.. யார் என்று பார்த்தாள்.
அவளுடைய வட்டார மேலாளர். ‘எதுக்கிப்ப இந்த மனுஷன்..’ என்ற எரிச்சலை மறைத்துக் கொண்டு.. ‘யெஸ் சார்.’ என்றாள்.
‘நளினி திங்கள் கிழமை நம்ம புது சேர்மன் வந்து ச்சார்ஜ் எடுக்கறார்னு தெரியுமில்ல.’
அதான் தெரியுமே.. அதுக்கென்ன இப்போ. என்று தனக்குள் நினைத்த நளினி. ‘தெரியும் சார்.’ என்றாள் பவ்யத்துடன்.
‘அதனாலத்தான் கூப்டேன். சிட்டியிலருக்கற எல்லா ப்ராஞ்ச் மேனேஜர்சையும் கூப்டுருக்கேன். நீங்க நேரா புறப்பட்டு அஞ்சரை மணிக்குள்ள நம்ம ஜோனல் ஆஃபீஸ் பக்கதுலருக்கற ஹோட்டலுக்கு வந்துருங்க.. அரைமணி நேரம்தான்.. டோண்ட் மிஸ் இட்.’
சே.. இன்னைக்காவது சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னா, இந்த மனுஷன் வேற.. பேச ஆரம்பிச்சார்னா நிறுத்தவே தெரியாதே.. சுத்த யூஸ்லெஸ் மாதிரி எங்கயாவது ஆரம்பிச்சி எங்கங்கயோ போயி.. எங்கயாவது முடிச்சி.. என்ன சொல்ல வரார்னே தெரியாது... மீட்டிங்க முடியறதுக்குள்ள முடிய பிச்சிக்கிட்டு ஓடலாமான்னு இருக்கும்..
இன்னைக்கி நந்து வர்ற நாள். இன்னைக்கி பார்த்து லேட்டா போனா... ஏற்கனவே கோபமா இருக்கார். சனிக்கிழமை அதுவுமா நான் வருவேன்னு தெரிஞ்சும் லேட்டா வரா பாருன்னு சண்டைக்கு வந்தாலும் வருவானே என்று நினைத்து அவனுடைய கைத்தொலைபேசிக்கு டயல் செய்தாள். அவுட் ஆஃப் ரேஞ்ச் என்று பதில் வர, சரி பிறகு கூப்பிடலாம் என்ற நினைத்தவள் மறந்தே போனாள்.
அவள் நினைத்தது போலவே அவருடைய மீட்டிங் வழக்கம் போல அரை மணி நேரம் என்ற முன்னுரையுடன் துவங்கி இரண்டு மணி நேரம் கழித்துத்தான் முடிந்தது..
சனிக்கிழமை மாலைநேர போக்குவரத்தை சமாளித்து அவளுடைய 1988 மாடல் பிரிமியர் பத்மினியை ஓட்டிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..
உண்மையை சொல்லப் போனால் அந்த வண்டி அவளுடையதல்ல. நந்துவினுடையது. அவளுடையது புத்தம் புதிய ஆல்டோ. கடந்த வருடம் சீஃப் மேனேஜராக பதவி உயர்வு பெற்ற பிறகு கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று நினைத்து வாங்கியது. நந்துவின் பொறாமைக்கு எல்லையே இல்லாமல் அவனுடைய பிரிமியரை விட்டுவிட்டு ஆசையாய் வாங்கிய அவளுடைய வண்டியை வலுக்கட்டாயமாக அலெப்பிக்கு கொண்டு சென்று விட்டான். அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
அவளும் நந்துவும் காதலர்களாக பழகிய அந்த நாட்களிலிருந்த நந்துவா இவன் என்ற அளவில் அவன் சுத்தமாய் மாறிப் போய்விட்டதை நினைத்து அவள் தனிமையில் நினைத்து அழாத நாட்களே இல்லை...
அவனுடன் பழகிய அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை..
நந்துவிடம் அவளுக்கு மிகவும் பிடித்தது அவனுடைய ஆணாதிக்கம்தான். நளினி அவளுடைய வீட்டில் ஒரே செல்ல மகளானதால் வீட்டில் அவள் பேச்சுக்கே அப்பீலே இருந்ததில்லை. சிறு வயதில் அது அவளுக்கு சந்தோஷத்தை தந்தாலும் நாளடைவில் அதில் ஒரு த்ரில் இல்லாமல் போரடிக்க ஆரம்பித்தது.
கல்லூரியில் அவளுடைய தோழிகள் தங்கள் வீட்டில் தம்பி, தங்கைகளுடன் அன்றாடம் நடக்கும் சில்லரை சண்டைகளை, பிணக்கங்களை வகுப்பில் வந்து விவரிக்கும்போது சே.. நமக்கு இப்படி ஒரு அனுபவம் இல்லையே என்று ஏங்குவாள்.. வீட்டில் வந்து.. ‘அம்மே எனிக்கொரு அணியன், அணியத்தி இல்லாண்டு.. எந்தா அம்மே.. இப்பெழங்கிலும் ஒன்னு தா அம்மே..’ என்பாள்.
‘சீ.. போடி, பைத்தியக்காரி..’ என்று சிரித்து மழுப்பி விடுவாள் நளினியின் தாயார்..
அப்படி வளர்ந்தவளுக்கு தன்னுடன் வங்கியில் சேர்ந்த நந்துவின் முரட்டு சுபாவமும் அவனுடைய ஆண் என்ற கர்வமும் ஒரு புது அனுபவமாக இருந்தது.
ஆரம்பத்தில் அவளுடன் சகஜமாக பேசுவதையே விரும்ப மாட்டான். தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதைவிட்டு வெளியே வர முடியாமல் அவன் தவிப்பது போன்று தோன்றியது அவளுக்கு..
அவள் எதைச் சொன்னாலும் அதில் உள்ள தவற்றையே சுட்டிக் காட்டுவதில் குறியாயிருந்தான் அவன். இருவரும் ஒரே நேரத்தில்தான் பணியில் சேர்ந்திருந்தார்கள் என்றாலும் அவன் ஏற்கனவே வேறொரு வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்திருந்த அனுபவம் இருந்ததால் அவளை விட வங்கியின் நியதிகள் அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தன..
ஆகவே அவன் எவ்வளவு உதாசீனப் படுத்தினாலும் அவள் பொருட்படுத்தாமல் அவனிடம் வலிய சென்று உரையாடுவாள்.. அவன் கோபத்துடன் ஒதுங்க நினைத்த போதெல்லாம் அவள் வேண்டுமென்றே அவனை சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பாள்.
அப்படித்தான் ஒரு நாள். ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய சேவிங்ஸ் கணக்கை முடிக்க வேண்டி அவள் இருந்த இருக்கைக்கு வந்து நின்றார். ஆனால் அவள் வேறொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால் நந்துவின் இருக்கைக்குச் சென்று வாடிக்கையாளரின் கோரிக்கையின்படி செய்து தர இயலுமா என்று வினவினாள். அவன் கோபத்துடன் முடியாதென மறுப்பதைப் பார்த்த இருவருடைய மேலதிகாரியாக இருந்த கிளை துணை மேலாளர் இருவரையும் அழைத்து என்ன பிரச்சினை என்று வினவினார்.
நளினி சுருக்கமாக விளக்கினாள். அவர்கள் மூவர் உரையாடுவதை கவுண்டரின் மறு பக்கத்திலிருந்து கவனித்த வாடிக்கையாளர் கோபத்துடன், ‘நான் கேட்டத விட்டுட்டு அங்க என்ன பேச்சு.’ என்ற சப்தமிட துணை மேலாளர் நந்துவிடம் எரிச்சலுடன்.. ‘போய் அவரோட வேலைய முடிச்சிட்டு உங்க வேலைய பாருங்க.. போங்க’ என்று விரட்டினார்.
நந்து முனகிக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்று கணக்கை முடித்து வாடிக்கையாளரை அனுப்பி வைத்தான். வாடிக்கையாளர் செல்லும் வரைக் காத்திருந்த நளினி தன் கை வேலையை அப்படியே போட்டுவிட்டு வேண்டுமென்றே அவனிடம் சென்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.. ‘நா கேட்டப்பவே ஹெல்ப் பண்ணியிருந்தா சார்கிட்டருந்து திட்டு கிடைச்சிருக்காதில்லே..’ என்று அவனை சீண்டினாள். நந்தகுமார் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் வேலையிலேயே குறியாய் இருந்தான்.
பகல் உணவு வேளை நெருங்கிக் கொண்டிருந்தது..
எல்லோரும் அவரவர் வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு உணவு அறையை நோக்கி செல்வதைப் பார்த்த நளினி அவனை மிகவும் நெருங்கி.. ‘என்ன சார்.. ரொம்ப கோபமா இருக்கீங்க போலருக்கு.. இப்பவாவது இந்த பொம்பளைங்க சக்திய புரிஞ்சிக்குங்க..’ என்று மீண்டும் சீண்ட நந்தகுமார் பொங்கியெழுந்தான்.
அடுத்த ஐந்து நிமிடம் அவன் அவளைப் பார்த்து கூறிய வார்த்தைகள்...
அடிக்காத குறைதான்..
கிளை மேலாளரும், துணை மேலாளரும் அவர்களுடைய இருக்கையில் இல்லாத தைரியத்தில் நந்தகுமார் அவளை ஆத்திரம் தீர திட்டித் தீர்க்க உணவறையிலிருந்த சகல ஊழியர்களும் வந்து நந்துவின் கோபத்தைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர். நளினி அவமானம் தாங்காமல் தன் இருக்கைக்கு சென்று வெகு நேரம் அழுதுத் தீர்த்தாள். பிறகு துணை மேலாளர் வந்ததும் தலை வலிக்கிறது என்று அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றாள்.
துணை மேலாளர் உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தவுடன் பணியாளர்களுள் ஒருவர் வத்தி வைக்க அவர் உடனே சென்று மேலாளரிடம் சென்று அன்று காலை நடந்ததைக் கூறினார். கோபமடைந்த மேலாளர நந்துவை அறைக்குள் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
இதை அடுத்த நாள் காலை வேலைக்கு திரும்பிய நளினி கேள்விப்பட்டு, ‘ஐயோ, தன் விளையாட்டுத்தனத்தால் அவனுக்கு கெட்ட பெயர் வந்துவிட்டதே’ என்று கவலைப்பட்டு அவனிடம் பேசுவதற்கு நேரம் பார்த்து காத்திருந்தாள். ஆனால் அவனோ அவளை அன்று முழுவதும் மட்டுமல்ல அடுத்த நாளும் கண்டுக் கொள்ளவேயில்லை.
அதனால் மனமுடைந்துப் போன நளினி மன்னிப்பு கேட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன அன்றிரவு முழுவதும் யோசித்து, யோசித்து ஒரு வழியாக எழுதி முடித்தாள்..
ஆனால் அவள் நினைத்தது போல் கடிதமாக அல்ல, ஒரு அழகிய கவிதையாகவே வந்திருந்தது..
தொடரும்..
5 comments:
இந்தக் காதலும் கவிதையும் ஒன்னாத்தான் வரும் போல. நேரெதிர் துருவங்கள்தான் ஈர்க்குமுங்குறது சரியாத்தான இருக்கு. நந்து மரப் பொந்து மாதிரி கும்முன்னு இருக்கான். நளினி கிளி நீங்குறமாதிரி அதுக்குள்ள போய் உக்காந்து கிட்டாளா? நல்லதுதான்.
வாங்க ராகவன்,
நந்து மரப் பொந்து மாதிரி கும்முன்னு இருக்கான். நளினி கிளி நீங்குறமாதிரி அதுக்குள்ள போய் உக்காந்து ..
சூரியன் 6 ஆவத ரத்தின சுருக்கமா எவ்வளவு அழகா சொல்லீட்டீங்க ராகவன்.. சூப்பர்ப்..
இந்த கடைசி வரியில வர்ற கவிதைய நம்ம சோம்பேறிப் பையன் இன்னைக்கி எழுதி அனுப்புனாத்தான் நாளைக்கு மீதிய எழுத முடியும்..அவருக்கு இந்த பதிவோட காப்பிய மெய்ல அனுப்பியிருக்கேன்..
அவர் கொடுத்த தைரியத்துல நான் கவிதைன்னு வேற எழுதிட்டேன்..
எனக்கும் கவிதைக்கும் காத தூரம்..
அவர் என் மெய்ல எப்ப பார்த்து.. எப்ப எழுதி.. எப்ப அனுப்பராறோ தெரியலையே..
தேவுடா..
// சூரியன் 6 ஆவத ரத்தின சுருக்கமா எவ்வளவு அழகா சொல்லீட்டீங்க ராகவன்.. சூப்பர்ப்.. //
நன்றி சார். ஏதோ தோணிச்சு...எழுதீட்டேன்.
// இந்த கடைசி வரியில வர்ற கவிதைய நம்ம சோம்பேறிப் பையன் இன்னைக்கி எழுதி அனுப்புனாத்தான் நாளைக்கு மீதிய எழுத முடியும்..அவருக்கு இந்த பதிவோட காப்பிய மெய்ல அனுப்பியிருக்கேன்..
அவர் கொடுத்த தைரியத்துல நான் கவிதைன்னு வேற எழுதிட்டேன்.. //
பிரமாதம் போங்க.
// எனக்கும் கவிதைக்கும் காத தூரம்..
அவர் என் மெய்ல எப்ப பார்த்து.. எப்ப எழுதி.. எப்ப அனுப்பராறோ தெரியலையே..
தேவுடா.. //
என்ன கவித...பெரிய கவித.....இலக்கியக் கவிதைய நளினி எழுதப் போறதில்லை. ஒருவேளை கவிதாயினியா அவ இருந்தா நல்ல கவிதைக்கு நாயாப் பேயா அலைய வேண்டியிருக்கும்.
ஒரு சாதாரணப் பொண்ணு எழுதுற கவித...கவித மாதிரியா இருக்கும்....நீங்களே எழுதலாம்....
நந்து
மனச் சந்துகளில்
இன்பம் தந்து
ஒலிக்கும் பெயர் நந்து
உன்னைப் பார்க்கையில்
நெஞ்சம் பாடுவது சிந்து
என்னோட மனசுக்குள்ள
வந்து குந்து-ன்னு சினிமாக் கவிதை எழுதுங்க...எல்லாம் சரியா வரும்.
சோம்பேறிப் பையந்தான...சீக்கிரம் அனுப்பீருவாங்க....
விஷப் பரீட்சையா ராகவன்.
வேணாம்.. இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கிறேன்..
அதுசரி.. ஏன் நீங்களே நளினி எழுதறாமாதிரி ஒரு மன்னிப்பு கவிதை எழுதி தரக்கூடாது?
சீரியஸாத்தான் கேக்கறேன்.
நானா...
கவிதை எழுத நானா...
நானும் ஒரு கவிஞன் தானா...
(நானா பாடுவது நானா மெட்டில் பாடவும்)
இன்னைக்கு முயற்சி செஞ்சு பாக்குறேன். வரலைன்னா...நாளைக்குச் சொல்றேன். வந்துச்சுன்னாலும் நாளைக்குச் சொல்றேன்.
Post a Comment