30.1.06

சூரியன் 15

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்கலானார் பாபு சுரேஷ்..

அவருடைய கைத் தொலைபேசி சிணுங்கியது. 'யார் இந்த நேரத்துல?' என்று எரிச்சலுடன் பார்த்தார்.

எம்.டி. சேதுமாதவன்!

இந்த ஆளு எங்க இந்த நேரத்துல? குழந்தையை கிள்ளி விட்டுட்டு தொட்டில ஆட்ட வந்திருக்கானா?

கண்டுக்காம விட்டுடலமா? வேணாம். அப்புறம் இந்த ஆள் விரோதத்த வேறு சம்பாதிச்சிக்கணும்.  எடுத்து பேசுவோம்.

‘யெஸ் சார்.’ என்றார் தொலைப்பேசியில். யாராயிருக்கும் என்பதுபோல் முரளிதரன் தன்னுடைய சகாக்களைப் பார்க்க 'எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்' என்பதுபோல் விழித்தனர் சகாக்கள்..

‘என்ன சுரேஷ், எங்க இருக்கீங்க? ஆபீஸ்லயா? வீட்ல கூப்டப்போ நீங்க இன்னும் வரலைன்னு சொன்னாங்களே?’

இவருக்கு எத்தனை தரம் சொன்னாலும் பாபு சுரேஷ் என்ற பெயரில் சுரேஷ் என்பதுதான் இவருக்கு மிகவும் பிடிக்கும். எல்லோருக்கும் அவர் பாபு என்றால் இவருக்கு மட்டும் சுரேஷ்!

பாபு தன் முன்னால் நின்ற கும்பலைப் பார்த்தார். ஆமா சார். ஆபீஸ்லதான்..’

எதிர் முனையில் ஒலித்த அட்டகாசமான சிரிப்பு அவரை எரிச்சலூட்டியது. இங்க நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறது இந்த ஆளுக்கெங்க தெரியப்போவுது?

‘என்ன சார்.. பொண்ணுக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு சனிக்கிழமை அதுவுமா  ஆபீஸ்ல இருக்கீங்க? இன்னும் ஒரு மாசம் கூட இல்லையே கல்யாணத்துக்கு? வீட்ல கேட்டா அவர் எப்பவுமே இப்படித்தாங்கறாங்க? ஆபீஸ்ல அப்படியென்ன வேலை?’

பாபு சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினார். எதிரில் தன்னை எரித்துவிடுவதுபோல் முறைத்த முரளிதரனைப் பார்த்தார். சட்டென்று முடிவெடுத்து.. ‘இங்க ஒரு பிரச்சினை சார்..’ என்றார்.

சேதுமாதவனின் உரத்த சிரிப்பு எதிர்முனையிலிருந்து. இதுக்கும் சிரிப்பாய்யா?  

‘யார் முரளியா? அவன் அங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான் உங்கள கூப்டேன்.’ அடப்பாவி நீதான் அனுப்புறா மாதிரி அனுப்பிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி எங்க இருக்கே எப்படியிருக்கேன்னு கேக்கறியா? எல்லாம் நேரண்டா.. இருங்க எல்லாருக்கும் வைக்கறேன் வேட்டு..

‘உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று இழுத்தார்.

‘நீங்க வீட்ல இல்லேன்னதும் உங்க ப்ராஞ்சுக்கு ஃபோன் பண்ணேன். உங்க சீனியர் மேனேஜர்தான் எடுத்து சார் கேபினுக்குள்ள ரெண்டு மணியிலருந்து சிறைக்கைதி மாதிரி மாட்டிக்கிட்டு முழிக்கிறார் சார்னார்.. அதான் உங்கள ரெஸ்க்யூ பண்ணலாம்னு கூப்டேன். அதுவுமில்லாம நீங்க சோமசுந்தரம் சார பாக்க வரேன்னு சொல்லியிருந்தீங்களாமே. அவர் வேற நீங்க எங்க இருக்கீங்கன்னு ரெண்டு தரம் கூப்டுட்டார்.. சரி அதுபோட்டும்.. முரளி பக்கத்துலதான் இருக்கானா?’

‘ஆமா சார்.’

‘அவன் கிட்ட குடுங்க.’

பாபு தன் முன்னால் நின்ற முரளிதரனை நோக்கி தொலைப்பேசியை நீட்டினார்.

‘யார் சார்? யாராயிருந்தாலும் சரி நா இங்க இல்லை.’

டேய், ரொம்ப துள்ளாத. அப்புறம் வருத்தப் படுவே..

‘முரளி, நம்ம எம்.டி. லைன்ல இருக்கார்.’

முரளிதரன் திடுக்கிட்டு நம்பாததுபோல் அவரையே பார்த்தான். அவருடைய கையிலிருந்து வெடுக்கென தொலைப்பேசியைப் பிடுங்கி.. ‘எந்தா சாரே?’ என்றான் எரிச்சலுடன்.

‘எடோ அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க? தான் இப்பத்தன்னே புறப்பட்டு இங்கோட்டு வா....’

முரளிதரன் கோபத்தின் உச்சிக்கே சென்றான். ‘எந்துனா? எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்குது. அத முடிச்சிட்டுதான் வரமுடியும்.’

‘எடோ அத விட தலை போற விஷயம் இங்க நடந்துருக்கு. நீ உங்க ஆளுங்கள அனுப்பிட்டு இங்க உடனே வா.’

முரளிதரன் தன் முன்னே ஒன்றும் தெரியாதவனைப்போல் அமர்ந்திருந்த பாபுவைப் பார்த்தான். மவனே இப்ப தப்பிச்சிட்டே. உன்னை அப்புறம் பாத்துக்கறேன்..

‘எந்தா சாரே அத்தற அர்ஜண்டா?’ என்றான் தொலைப்பேசியில்.

‘நம்ம கல்கத்தா ப்ராஞ்சுல சீஃப் மேனேஜர உங்க யூனியன் ள் அடிச்சிட்டானாம். அவர் இங்க யார்கிட்டயும் கேக்காம போய் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டார். அங்க ஒரே டென்ஷனாயிருக்காம். நீ உடனே ஃபோன் பண்ணி உங்க ஆளுங்க கிட்ட பேசி சரி பண்ண பாரு. திங்கள்கிழமை காலைக்குள்ள சரி பண்ணிரணும். இல்லன்னா புது சேர்மன் ஜாய்ன் பண்ற அன்னைக்கு  பிரச்சினையா போயிரும்.’

முரளிதரன் தன்னுடன் வந்திருந்த தன் சகாக்களைப் பார்த்தான். ‘எல்லோரும் வெளிய போங்க’ என கண்ணால் சாடை செய்தான். என்ன ஏது என்று கேட்காமல் எல்லோரும் வெளியே செல்ல பாபு சுரேஷ் என்ன நடக்கின்றது என புரியாமல் குழப்பத்துடன் முரளிதரனைப் பார்த்தார்.

‘இப்ப வரேன் சார்.’ என்று தொலைப்பேசியில் கூறிவிட்டு வேண்டுமென்றே அதை மேசையின் மேல் வீசியெறிந்தான்.

பிறகு குனிந்து பாபு சுரேஷின் முகத்திற்கு நேரே தன் முகத்தை வைத்துக் கொண்டு பேசினான். ‘இன்னைக்கி தப்பிச்சிட்டே சாரே.. இப்ப போறேன்.. ஆனா அப்புறமா வருவேன். நீங்க அந்த லெட்டர எழுதி வச்சிக்குங்க.. அத உங்கக் கிட்டருந்து வாங்காம விடமாட்டேன்..’

பாபு ஏதோ சொல்ல வாயெடுக்க முரளி அதைக் கண்டுக்கொள்ளாமல் அறையின் கதவை முரட்டுத்தனமாக திறந்துக் கொண்டு வெளியேறினான்.

பாபு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஏழு!

‘மை காட். அஞ்சு மணி நேரம்! வாட் எ வேஸ்ட்.’

அறைக்கதவைத் திறந்துக் கொண்டு வந்த தனக்குக் கீழ் பணிபுரிந்த சீனியர் மேலாளர் கோபால் சர்மாவைப் பார்த்தார். முரளியை வரவைத்தது இவனாயிருக்குமோ.. யாருக்குத் தெரியும்? இவன் இல்லன்னா இன்னொருத்தன். மாட்டிக்காமயா போயிருவானுங்க?

‘சாரி சார். இவனுங்க இப்படி திடீர்னு உள்ள வந்து கலாட்டா பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல. அதான் எம்.டி கூப்டப்போ நடந்தத முழுசும் சொன்னேன் சார். அவர் நான் பாத்துக்கறேன்னார்.’

பாபு சுரேஷ் ஒன்றும் பதில் பேசாமல் தன் லாப்டாப் பையை ஒரு கையிலும் தன்னுடைய கைப்பெட்டியை ஒரு கையிலும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றார். ‘தாங்க்ஸ் ஷர்மா. ஐ வில் ரிமெம்பர் வாட் யூ டிட் டுடே.. நீங்க ஆஃபீசை மூடிக்கிட்டு போங்க. நான் புறப்படறேன்.’

கோபால் ஒதுங்கி நின்று வழிவிட பாபு அவசர அவசரமாக வெளியேறி கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் ஓப்பல் ஸ்ட்ராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

தொடரும்

No comments: