20.1.06
சூரியன் - 9
Is it? I did not know that?’ என்ற சோமசுந்தரம் நாடாரைப் பார்த்தார். இவனுக்கு தெரியாமயா சுந்தரம் போயிருப்பார். இந்தாளு தெரிஞ்சும் தெரியாதமாதிரி டிராமா போடறானா? 'என்ன நாடார்? கபூர் சொல்றது விளங்குதா?' என்றார்
‘ஒரு எளவும் புரிய மாட்டேங்குதே?’
‘ஒன்னுமில்லை நாடார். நம்ம சி.ஜி.எம். சுந்தரம் ரெண்டு வாரத்துக்கு முன்னால ரிசர்வ் பேங்குக்கு போயிருந்தாராமேன்னு கேக்கறார். உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேட்டேன்?’
சிலுவை மாணிக்கம் நாடாரின் கறுத்த முகம் சட்டென்று கோபத்தால் மேலும் கறுத்தது..
அப்படியா? அப்ப ஏன் அந்த படுபாவி சுந்தரம் என் கிட்ட ஒன்னுமே சொல்லலை? விடக் கூடாது. ஒரு பிடி பிடிக்கணும்.
‘டாக்டர், இதோ ஒரு நிமிஷத்துல பதிலோட வரேன். இவனுங்களுக்கு ஒரு பெக் ஊத்தி குடுங்க..’ என்றவாறு எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்று போர்டிகோவிலிருந்து சுந்தரத்தின் கைத்தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்தார்.
மணி அடித்துக் கொண்டே இருந்தது.. நான்கு மணிக்கப்புறம் பொறுமையில்லாமல் துண்டித்துவிட்டு வீட்டுக்குள் நுழைய முயன்ற போது அவருடைய தொலைப் பேசி அழைக்கவே நின்று யாரென்று பார்த்தார். சுந்தரம்!
‘என்னவே அதுக்குள்ளாறயே தூங்கிட்டீரா? நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே?’ என்றார் எரிச்சலுடன்.
சுந்தரம் எதிர்முனையில் தன் எரிச்சலை காட்டிக் கொள்ளாமல், ‘இல்ல சார், நாளைக்கு நம்ம பங்குல பொதுக்குழு கூட்டம் இருக்கு. அதுக்குத்தான் பிரிப்பேர் பண்ணிக்கிட்டிருந்தேன்.. சொல்லுங்க சார்.’ என்றார்.
நாடாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'ஆமா. இப்ப அதுதான் முக்கியம். சரிவே.. நீரு ரிசர்வ் பேங்குக்கு போயிட்டு வந்தீராமே.. எதுக்குவே நா கூப்டப்போ சொல்லலே.. வேணுக்கும்னே என்கிட்டருந்து மறைச்சிட்டீராவே.. அப்படியிருந்தா அது நல்லால்லேவே.. சொல்லிட்டேன்.’
சுந்தரம் பதறிப் போய் சில நொடிகள் என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறினார். எல்லாம் எம்.டியின் வேலையாய்தான் இருக்கும் என்று நினைத்தார்.
‘சார் நான் போன விஷயத்துக்கும் நீங்க கேட்ட விஷயத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை சார். அதான் சொல்லலை..’
‘அத நீர் என்னவே முடிவு பண்றது? போனேன், வந்தேன்னு வரவா போனீரு? அப்படியே நமக்கு வேண்டியதையும் கேட்டிருக்க வேணாமா இல்லையா? சரி என்னதாம்யா கேட்டான் அவன்?’
சுந்தரம் என்ன சொல்லி சமாளிப்பதென தெரியாமல் தடுமாறினார். தன்னிடம் அங்கே கேட்கப்பட்ட கேள்விகளையும் தான் அதற்கு அளித்த பதில்களையும் இவரிடம் கூறினால் என்ன ஆவது? என்ன சொல்லலாம், என்ன சொல்லலாம் அவர் யோசித்துக் கொண்டிருக்க, ‘என்ன வேய், சத்தத்தையே காணோம்.. என்ன கதை விடலாம்னு யோசிக்கீறீராக்கும்?’ என்ற குரல் காதைக் கிழித்தது.
‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சார். அவங்க என்னை கூப்பிட்டதே வேறொரு விஷயாமா. மாதவன் சாரை நியமிச்ச இலாக்காவுக்கு இல்ல சார் நான் போனது.’ என்றார் உண்மைக்கு புறம்பாக. ஏன் பொய் பேசுகிறாய் என்று அதட்டிய மனசை சட்டை செய்யாமல். ‘நாலு பேருக்கு நல்லதுன்னா பொய் சொல்றதுல தப்பில்ல.. என்று தனக்குள் சமாதானம் செய்துக் கொண்டார். ‘அதில்லடா.. நீ அந்த காட்டான் நாடார்கிட்டருந்து தப்பிக்கத்தான பொய் சொல்றே’ என்று வாதிட்டது அவருடைய மனசாட்சி..
‘சரி, நீரு போன புண்ணாக்கு விக்கற இலாக்காவுக்கு இல்லல்லே.. நானும் ஆடிட் கமிட்டி உறுப்பினர்தாங்கறத மறந்திட்டீராக்கும். ரிசர்வ் பேங்க் விஷயமெல்லாம் கமிட்டிக்கு ரிப்போர்ட் பண்ணனும்னு உமக்கு தெரியாதாக்கும். அங்க வந்து என்ன சொல்றீர்னு பாத்துக்கறேன். இப்ப வைக்கிறேன்.’ என்று சுந்தரம் மறுபதில் பேசுவதற்கு முன் வைத்துவிட்டு கோபத்தை கஷ்டப் பட்டு அடக்கிக்கொண்டு வீட்டினுள் மீண்டும் நுழைந்தார் நாடார்.
‘என்ன நாட்டார் எங்கே போனே..’ என்ற கோபால் மேனனின் அரைகுறை தமிழை சட்டை செய்யாமல் சோமசுந்தரத்தின் அருகில் சென்று, ‘டாக்டர் நம்ம சி.ஜி.எம் போனது வேற விஷயமாவாம்.’ என்றார்.
சோமசுந்தரம் அவரை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தார். பிறகு சமாளித்துக் கொண்டு அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அவரைப் போலவே குழுமியிருந்தவரில் எவருக்கும் நாடார் சொன்னதில் நம்பிக்கையில்லை. இருப்பினும் அதை பெரிதுபடுத்த விரும்பாமல் மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியாமல் வாளாவிருந்தனர்.
சோமசுந்தரம் எல்லோரையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு தொடர்ந்தார். ‘நாம எல்லோரும் இந்த நேரத்துல ஒரு முடிவுக்கு வரணும். நாம இப்ப என்ன பண்ணாலும் பிரச்சினையாத்தான் முடியும். நம்ம பழைய சேர்மன் ராகவன் போர்ட் மெம்பர்சோட என்னால ஒத்துப் போக முடியலைன்னு ரிசைன் பண்ணதிலிருந்தே ரிசர்வ் பேங்குக்கு நம்ம போர்ட் மேல சந்தேகம் வந்திருக்கும். அதப் பத்தி கேக்கறதுக்காகத்தான் சி.ஜி.எம் சுந்தரத்த கூப்டிருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்.சேர்மன் இல்லாத நேரத்துலருந்து நாம ஃபார்ம் பண்ண சேர்மன் கமிட்டிதான் சேர்மனோட இடத்துலருந்து நிர்வகிச்சிக்கிட்டு வரோம். அந்த ஆங்கிள்லருந்து பார்த்தா நம்ம சி.ஜி.எம் அங்கருந்து வந்தவுடனே போன வாரம் நடந்த கமிட்டிக்கு ரிப்போர்ட் பண்ணியிருக்கணும். ஏன் ரிப்போர்ட் பண்ணலைன்னு ஒரு விளக்கம் கேக்கலாம்னு சஜ்ஜஸ்ட பண்றேன். வாட் டு யூ சே?’
எல்லோரும் ஒரே நேரத்தில் நாடாரைப் பார்த்தனர். சி.ஜி.எம். நாடாரின் வலக்கரம் என்று எல்லோருக்கும் தெரியும்.
நாடார், சோமசுந்தரம் தன்னிடம் இதைப் பற்றி பேசாமல் எப்படி இப்படி பொதுவில் பேசலாம் என்ற எரிச்சலுடன் ஒன்றும் பேசாமல் இருந்தார்.
சோமசுந்தரம் வேண்டுமென்றே ‘என்ன நாடார் நீங்க என்ன சொல்றீங்க?’ என்று அவரை சீண்டினார். அவருக்கு இவர் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறார் என்ற கோபம்.
‘டேய் டாக்டரே ஒன் புத்தி ஒன்ன விட்டு எங்க போவும்? ஃப்ராடு பய.. ஒன்ன மாதிரி இல்லடா நானு.. ஒரு வா சோத்துக்கு சிங்கியடிச்சதுலருந்து இந்த மாதிரி ஒரு பேங்குல பதினேளு பர்சண்ட் ஷேர் வச்சிருக்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா அது உன்ன மாதிரி ஆளுங்களல்லாம் கவுத்திப்பிட்டு வந்ததுனாலலே. எங்கிட்ட வேணாம்’ என்று மனதுக்குள் கறுவிய நாடார் சோமசுந்தரத்தைப் பார்த்து, ‘நான் என்னத்த டாக்டர் சொல்றது? நீங்க சொன்னா மாதிரியே கேட்டுருவோம்.. ஆனா எழுத்துல வேணாம்.. கமிட்டிக்கு வருவார்லே.. நேர்லயே கேட்டுட்டா போச்சி.. எழுத்துல கேட்டா அப்புறம் நம்ம எம்.டி அதையே சாக்கா வச்சிக்கிட்டு அவர வறுத்தெடுத்துருவாறு.. வேணாம்.’ என்றார்.
சோமசுந்தரம் அவருடைய சாதுரியமான பேச்சை ஒப்புக்கொண்டது போல் குழுமியிருந்தவர்களைப் பார்த்தார். ‘அப்புறம் இன்னொரு விஷயம். மாதவன் கொஞ்ச மின்னால என்னைக் கூப்டுருந்தார். நாளைக்கு சாயந்திர ஃப்ளைட்ல மும்பைலருந்து வராறாம். என்னை பார்த்து பேச முடியுமான்னு கேட்டார். நான் யோசிச்சி சொல்றேன்னு சொன்னேன். சொல்லுங்க.. அவருக்கு என்ன சொல்லட்டும்?’
எல்லோரும் ஒருவரையொருவர் கேள்வியுடன் பார்த்தனர்.
‘Why Doctor saab? What does he want?’
சோமசுந்தரம் கபூரைப் பார்த்து ‘தெரியாது’ என்று தலையை அசைத்தார்.
நாடார், ‘எனக்கென்னவோ நீங்க எதையாவது சொல்லி அவர தவிர்க்கறதுதான் நல்லதுன்னு தோனுது.. அதான் திங்கக் கிழமை ஸ்பெஷல் போர்ட் மீட்டிங் இருக்கில்லே.. நான் இன்னைக்கி ராத்திரி ஊருக்கு போயிட்டு திங்கக்கிழமை ஆடிட் கமிட்டி மீட்டிங் சமயத்துலதான் வருவேன்.’ என்றார் சோமசுந்தரத்தை பார்க்காமல்..
‘யோவ் நாடார்.. நீ என்ன பெரிய இவனா?.. நீ இரு, இல்லாம போ.. எனக்கென்ன? நான் யார பாக்கணும் யார பாக்கக் கூடாதுன்னு நீ யார்யா சொல்றது? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா..’ என்றார் சோமசுந்தரம் தனக்குள்..
‘டேய் டாக்டரே, நீ என்ன மனசுக்குள்ள நினைக்கிறேன்னு எனக்கு தெரியாதாக்கும்.. எண்ணி ஒரே மாசத்துக்குள்ள வர்ற ஆளை கைக்குள்ள போட்டுக்கிட்டு ஒனக்கு வக்கிறேன் வேட்டு.. ஒனக்கு ஏழு வருஷம் முடிய இன்னும் நாலோ அஞ்சோ மாசந்தான இருக்கு. பாக்கறேன் யார போர்டுக்குள்ள கொண்டு வரேன்னு..’ என்றார் நாடார் தனக்குள்..
இதுதான் மேல் மட்டத்து சண்டைக்கும் கீழ் மட்டத்து சண்டைக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலான சமயங்களில் இம்மாதிரியான நிழல் குத்துகள் முன்னும் பின்னும் வீசிக்கொள்ளப்படுவது வழக்கம். வீசியவரின் முகத்திலும் புன்னகையிருக்கும். பெறுபவரின் முகமும் சிரித்துக்கொண்டு இருக்கும். யார் யாரை அடிக்கிறார்களென்றே தெரியாது..
இதெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பு நாடாரின் தயவால் போர்டில் நுழைந்த செட்டியாருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் எப்போதும் போல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நாடாரை கலந்தாலோசிக்காமல் அவராக எதுவும் பேசமாட்டார்.
போன வருடத்தில் ஒரு நாள் நாடார், வணிகர் கூட்டத்தில் அவரைப் பார்த்து, ‘செட்டியார் நம்ம போர்ட்ல ஒரு வேக்கன்ஸி வருது.. ஒரு அம்பது லட்சத்த போட்டு கொஞ்சம் ஷேர் வாங்கிருங்க.. உங்கள இழுத்து விட்டுடறேன்.. பின்னால பெரிசா வரக்கூடிய பாங்குங்க.. நம்மக் கிட்ட காசு இருந்து என்ன பிரயோசனம்? வெளிய போன என்ன ஓட்டல்காரங்கறான். உங்கள பாத்திரக் கடைக்காரங்கறான். நம்ம தொழிலுக்குன்னு தனியா இல்லாத கவுரத்த இந்த பேங்க் டைரக்டர்ங்கற பதவி தரும்லே? அதுக்காக சொல்றேன்.. எங்கிட்டருக்கற ஷேர்ல கொஞ்சம் நீங்க வாங்கிட்டாலே போறும். போர்ட்ல புகுந்துரலாம், என்ன சொல்றீங்க?’ என்று வினவ அவருக்கும் அது சரியான யோசனை என்று படவே உடனே காசைக் கொடுத்து பங்குகளை வாங்கினார்.
நாடார் கூறிய படியே அடுத்த போர்டிலேயே அட்-ஹாக்காக அவரை சேர்த்துக் கொள்ள வைத்தார். அடுத்த பங்குதாரர் தேர்தலில் அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்க வைத்து அடுத்த ஏழு வருடங்களுக்கென்று நிரந்தர அங்கத்தினராக்கினார். நாடார் இருந்த எல்லா கமிட்டிகளிலும் அங்கத்தினராகவும் சேர்க்கப் பட்டார். ஒவ்வொரு மாதமும் இரு போர்ட் கூட்டங்கள், நான்கு கமிட்டி கூட்டங்களென ஒவ்வொரு கூட்டத்திற்கும் சிட்டிங் ஃபீசே மாதம் இருபத்தையாயிரம் என பாக்கெட் மணியாக வரவே குஷியாகிப் போனார் செட்டியார். அந்தஸ்த்துக்கு அந்தஸ்த்து, பணத்துக்கு பணம்.. அத்துடன் வங்கியில் அவர் செய்திருந்த முதலீட்டுக்கு கடந்த வருடம் 20% டிவிடண்ட் தொகையே கணிசமாக வந்தது.
எல்லாவற்றிற்கும் நாடார்தான் காரணம் என்ற நன்றியுணர்வு அவரை எதிர்த்து எந்த கூட்டத்திலும் பேசாமல் அவருக்கு விசுவாசமாயிருந்தார் அவர்.
சோமசுந்தரம் தன் மணிக்கட்டிலிருந்த ரோலக்ஸ் வாட்சைப் பார்த்தார். மணி நள்ளிரவைக் கடந்திருந்தது..
குழுமியிருந்தவர்களைப் பார்த்தார்.. நாடாரையும் செட்டியாரையும் தவிர எல்லோரும் மதுவின் மயக்கத்தில் இருந்தது தெரிந்தது..
இரு கைகளையும் தட்டியாவாறே எழுந்து நின்றார். ‘இன்னைக்கி இது போறும்னு நினைக்கிறேன்.. டின்னர் ரெடியாயி ஒரு மணி நேரத்துக்கு மேலாவுது.. வாங்க சாப்பிடலாம்.. யார் யார் இங்கேயோ தங்கணும்னு நினைக்கிறீங்களோ அவங்க எந்த கெஸ்ட் ரும் வேணுமோ சொல்லிருங்க.. அவங்க லக்கேஜை ரூமுக்கு அனுப்ப வசதியாயிருக்கும். நாடார் உங்க ப்ரோக்ராம சொல்லீட்டீங்க.. செட்டியார் நீங்க? தங்கறீங்களா? இல்ல...’
நாடார் செட்டியாரைப் பார்த்தார்.. ‘அவர் ஏன் இங்க தங்க போறார்? என்ன செட்டியார்? நாலெட்டு வச்சா அவர் வீடு.. டிரைவர் வேற காத்து கெடக்கான்..’ என்றார்.
சோமசுந்தரம் எதற்கு சொல்கிறார் என்று ஊகித்தவண்ணம் ஒரு மர்ம புன்னகையுடன் செட்டியாரைப் பார்த்தார். அவரோ நாடாரைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்தார். ‘என்ன நாடார் இவனுங்கெல்லாம் புட்டிகள கட்டிப் பிடிச்சிக்கிட்டு தூங்கிருவானுங்க.. நாம யார.. இல்லங்க.. என்னத்த கட்டி பிடிச்சிக்கிறது... வீட்லத்தான்.. என்ன சொல்றீங்க..?’ என்று தான் அடித்த அசட்டு ஜோக்குக்கு தானே உரக்க சிரித்தவாறு எழுந்து நின்றார்.
‘யோவ் செட்டியார்.. என்னவே, நீரும் இவனுங்க கூட சேர்ந்து கெட்டுப் போயிராதேயும்.. நம்ம ஊரு மானத்த காப்பாத்தும்.. டாக்டர் வெளிநாடெல்லாம் சுத்துனவரு.. அவரு எப்படி வேணும்னாலும் இருக்கலாம். என்ன டாக்டரே?’
சோமசுந்தரத்திற்கு இந்த ஆள் கழுத்தைப் பிடித்து நெரித்தாலென்ன என்று தோன்றியது. சிரித்து மழுப்பியவாறு.. திரும்பி, வரவேற்பறைக்கு அடுத்திருந்த விசாலமான உணவறையை நோக்கி நடந்தார்..
தொடரும்..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
என்னென்ன விஷயங்கள் நடக்குது பெரிய இடத்துல. ஒய்யாரக் கொண்டைக்குத் தாழம்பூவாம். பிரிச்சுப் பாத்தா ஈறும் பேனுமாம். அந்த மாதிரீல்ல இருக்கு.
வாங்க ராகவன்,
உயரம் பாக்கறதுக்குத்தான் அழகா இருக்கும். ஏறிப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.
ஜோசப், இந்த கூத்தெல்லாம் படிச்ச பிறகு எனக்கு தலை சுத்துது :-)
ஆமா, நாடார் ஏன் செட்டியாரை போர்டுல சேத்து விட்டாரு, அதனால் அவருக்கு என்ன லாபம் ?
வாங்க சோ.பையன்,
ஆமா, நாடார் ஏன் செட்டியாரை போர்டுல சேத்து விட்டாரு, அதனால் அவருக்கு என்ன லாபம் ?
காரணம் இருக்கு. சில சமயங்கள்ல ஒரு டைரக்டருக்கு போர்ட்ல ஒரு காரியம் ஆகணும்னா ஒரு குறிப்பிட்ட அளவு ஓட்டு வேணும். அதுக்காக இந்த மாதிரி விசுவாசமான ஆளுங்கள வச்சிக்கறது நல்லது. ஆனா நாம சேர்த்து விட்டவரு தொடர்ந்து அப்படியே விசுவாசமா இருந்தா சரி.. நமக்கே வேட்டு வச்சாலும் வச்சிருவாரு..
இத விட கேவலமான விளையாட்டெல்லாம் இந்த மாதிரி உயர்மட்டத்துல நடக்கும். ஏன் இந்த அம்பானி சகோதரர்கள் விஷயத்துல நடக்காததா? எவ்வளவெல்லாம் நடந்தது.. இவர் கம்பெனியிலருக்கற டைரக்டர்கள, அதிகாரிகளை ஒருத்தருக்கொருத்தர் தன் பக்கம் இழுக்கறதுக்கு என்ன பாடுபட்டாங்க?
Post a Comment