எப்போது என்றே தெரியாமல் அப்படியே உறங்கிப் போனார் மாணிக்கவேல் விடிந்ததும் ஏற்படப் போகும் பெறும் இழப்பை உணராதவராய்..
தினமும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்துவிடுவது அவருடைய வழக்கம்.
முந்தைய நாள் வாங்கிய பால் பாக்கெட்டில் மீதி இருந்த பாலில்
ஸ்ட்ராங்காய் ஒரு காப்பியைக் குடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு வாக் போனால் ஒரு மணி நேரம் கழித்துத்தான் வருவார்.
அவர் இருந்த தாம்பரம் பகுதியில் இருந்து புறப்பட்டு தாம்பரம் முக்கிய சாலையில் போக ஐந்து கிலோ மீட்டர் வர ஐந்து கிலோ மீட்டர் என பத்து கிலோ மீட்டர் துரத்திற்கு வேகமாக நடக்கும் பழக்கம் கடந்த ஐந்து வருட காலமாய் இருந்தது. அதாவது முதன்மை மேலாளராக பதவி உயர்வு பெற்று சென்னையிலிருந்த பெரிய கிளைகளுள் ஒன்றிற்கு மாற்றலாகி வந்ததிலிருந்து..
அலுவலகத்தில் அன்றாடம் சந்தித்த பிரச்சினைகள் பலவற்றிற்கும் முடிவு எடுப்பது இந்த ஒரு மணி நேர நடையின்போதுதான்.
அலுவலகத்திலும் வீட்டிலும் அவ்வப்போது சந்திக்க நேர்ந்த பிரச்சினகைளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நேரத்தில் எல்லாம் மனத்தை ஒரு நிலைப் படுத்தி இறுக்கத்தைப் போக்க உதவுவதும் அந்த தினசரி காலை நடைதான்.
அன்றும் அப்படித்தான். முந்தைய நாள் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலால் வெகு நேரம் வரை உறங்காதிருந்தபோதும் எப்போதும்போல் காலையில் எழுந்து சில்லென்ற குளிர்ந்த காற்று முகத்தின் மேல் பட கைகளை வீசி நடந்தபோது மனசு லேசானதை உணர்ந்தார் மாணிக்கவேல்..
அவரையும் அறியாமல் மனம் பின்னோக்கி ஓடியது..
அவருடன் பிறந்தவர்கள் மூத்தது இருவர், இளையவர் இருவர். அவருடைய மூத்த இரு சகோதரர்களையும் அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வீட்டிலிருந்து பார்த்ததே இல்லை.. பிறகுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் ஏழைச் சிறுவர்கள் தங்கி பயிலும் போர்டிங் பள்ளியில் படித்து வளர்ந்தார்கள் என்பதை..
அவர்களிருவரும் பள்ளிப் படிப்பு முடித்து வீடு திரும்பியது வேலுவும் அவருக்கு அடுத்த தம்பியும் அதே விடுதியில் சேர்க்கப்பட்டார்கள். இறுதியில் பிறந்த தம்பி மட்டும்தான் வீட்டிலேயே தங்கி இருந்து படிப்பை முடித்தான்.
மாணிக்க வேல் பத்தாவது முடிந்து வீடு திரும்பியபோது அவருடைய இரு மூத்த சகோதரர்களும் வீட்டில் இல்லை.. ‘எங்கேம்மா?’ என்றபோது அம்மா சொன்னாள், ‘மூத்த அண்ணன் சித்தப்பாவோட கடையில திருநெல்வேலியில வேல பாக்கான். சின்னண்ணன் டவுண்ல ஒரு மெக்கானிக் ஷாப்ல இருக்கான். அவங்க முதலாளி மாசத்துல ஒரு நா தான் வீட்டுக்கு விடுவாரு.. வருவான்.. இன்னும் ரெண்டு வாரத்துல வருவான்..’
வேலுவுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசைதான். மூத்தவர்கள் இருவரும் பத்தாவதிலேயே தேர்ச்சி பெறாததால் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்.. அவர் பத்தாவது முடித்துவிட்டு விடுதியிலிருந்து வீட்டுக்கு கிளம்பும்போதே அவருடைய விடுதி தலைவர் அவருடைய தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்தனுப்பினார்.
அதை படித்துப் பார்த்த அப்பா கவலையுடன் அவரைப் பார்த்தார். ‘இங்க பாரு வேலு.. அப்பா உங்க எல்லாரையும் இவ்வளவு தூரம் படிக்க வைக்கறதுக்கே படாத பாடு பட்டுட்டேன்.. உங்க அண்ணன்க மாதிரி நீயும் வேலைக்கு போறத தவிர வேற வழி தெரியலையேப்பா.. ஆனா நீ பத்தாங் கிளாஸ் பாஸ் பண்ணவன்.. அவன்கள மாதிரி கடையிலல்லாம் வேலைக்கு போவேணாம். நம்ம பக்கத்து போஸ்டாபீஸ்லருக்கற போஸ்ட் மாஸ்டர்கிட்ட ஏற்கனவே ஒன்னப் பத்தி சொல்லி வச்சிருகேண்டா.. பரீட்சை முடிச்சதும் ஒம் பையன கூட்டிக்கிட்டு வா ஆறுமுகம்னு சொல்லிருக்கார்.. ரெண்டு நா போட்டும். நா அவர்கிட்ட கேட்டுக்கிட்டு ஒன்ன கூட்டிக்கிட்டு போறேன்.. இல்லன்னு சொல்லாம ஏதாச்சும் வேல குடுப்பாரு.. அப்புறம் ஒன் சாமர்த்தியம்..’
வேல் நிராசையுடன் அவருடன் அடுத்த வாரமே அந்த போஸ்ட மாஸ்டரைப் போய் பார்த்தார்.
அவருடைய அதிருஷ்டம்.. அவரைக் கண்டதுமே அஞ்சலகத் தலைவருக்கு பிடித்துப் போக உடனே சார்ட்டர் (sorter) வேலை கிடைத்தது. எந்த ஒரு கிறுக்கல் கையெழுத்தானாலும் எழுதியிருந்த விலாசத்தைப் பார்த்தவுடன் புரிந்துக் கொண்டு அவர் தபால்களைக் கையாண்ட விதம் அஞ்சலக தலைவருக்கு அவருடைய திறமையில் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களிலேயே தற்காலிக தபால் பட்டுவாடா பதவிக்கு மாற்றப்பட்டார்..
அதுவும் அவருடைய வாழ்வில் ஏற்படவிருந்த மாற்றத்திற்கு அடிகோலியது..
சரியான நேரத்தில் அப்பா மட்டும் தன்னை அங்கு கொண்டு சேர்த்திராவிட்டால் தானும் தன்னுடைய மற்ற சகோதரர்களைப் போல இன்னும் ஒரு சராசரி குடும்பஸ்தனாக தினச் சாப்பாட்டுக்கே போராடிக் கொண்டு இருந்திருப்பேன்...
அந்த நன்றி அப்பா, அம்மா இருவர் மேலும் இருந்தது அவருக்கு. ‘நீங்க ஏன் அனாவசியமா அங்கயும் இங்கயும் போறீங்க? நாந்தான் என் வீட்லயே உங்க ரெண்டு பேரோட கடைசி காலம் வரைக்கும் இருங்கன்னு சொல்றேன்ல? இனி உங்களுக்கு நான் மட்டும்தான் பிள்ளை.. வேற யாரும் இல்லன்னு நினைச்சிக்குங்களேன்.. உங்க ரெண்டு பேரையும் வேணாம்னு உங்க பிள்ளைங்களே சொல்லிட்டதுக்கப்புறம் நீங்க ஏன் பேரப் பிள்ளைங்கன்னு அடிச்சிக்கிட்டு அவங்க வீட்டு வாசல்ல போய் நின்னு அவமானப் படறீங்கம்மா? தம்பிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு நான் உங்க கூடவே உங்களுக்காகவே இருப்பேம்மா..’ என்பார்.
மாணிக்கவேல் அவ்வாறு கூறும்போதெல்லாம் அவரை அதட்டுவார் அப்பா. ‘டேய் என்ன பேச்சு பேசறே.. மூத்தவனுங்களுக்கு வந்து அமைஞ்சதுதான் அப்படீன்னா ஒனக்கும் அப்படியே வரணும்னு இருக்கா என்ன? ஒன் கொணத்துக்கு எல்லாம் நல்லபடியாத்தான் அமையும். ஒளுங்கு மரியாதையா நாங்க பாத்து வைக்கிற பொண்ண கட்டிக்கிட்டு ரெண்டு புள்ளைங்கள பெத்துக் குடு..’
ஆனால் தன்னுடைய திருமணத்தைப் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை மாணிக்க வேல். அவர் தபால் பட்டுவாடா செய்யும் போஸ்ட் மேன் வேலையிலேயே தன்னுடைய காலம் முழுவதையும் கழிப்பதில் விரும்பவில்லை.. இது வேறு வேலை கிடைக்கும் வரைதான் என்பதில் அவன் உறுதியாயிருந்தார். நல்லதொரு நிரந்தர வேலை கிடைத்ததும் படிப்பை விட்ட இடத்திலிருந்தே தொடர வேண்டும் என்பதும் அவருடைய லட்சியங்களில் ஒன்று..
அவர் பணிபுரிந்த அஞ்சலகத்தில் எல்லைக்குட்பட்டிருந்த வங்கிகளில் ஒன்றில் அப்போதிருந்த மேலாளருக்கு மாணிக்க வேலின் சுறுசுறுப்பும்.. பணிவும் மிகவும் பிடித்திருந்தது..
ஒரு நாள் அவர் தபால் பட்டுவாடா செய்வதற்கு மேலாளருடைய அறைக்கு சென்றபோது.. ‘மாணிக்கம்.. இந்த வேலை உனக்கு பிடிச்சிருக்கா?’ என்றார்.
அவர் வியப்புடன் அவரைப் பார்த்தார். ‘எதுக்கு சார் கேக்கறீங்க?’
‘இல்ல, சீரியசா கேக்கறேன். இத விட நல்லதா ஒரு வேலை கிடைச்சா போயிருவியா? ஏன் கேக்கறேன்னா இது ஒரு கவர்ன்மெண்ட் வேலையாச்சே எப்படிடா போறதுன்னு நினைப்பியா?’
வேல் சிறிதும் சிந்திக்காமல், ‘அது கிடைக்கற வேலை, வேலை செய்யற கம்பெனிய பொறுத்திருக்கு சார்.’ என்றார் சாதுரியமாக.
மாணிக்கவேலின் புத்திசாலித்தனமான பதில் அவருக்கு பிடித்திருந்தது. ‘கரெக்ட். நல்லா யோசிச்சி பதில் சொல்ற. இப்ப சொல்றேன். எங்க பேங்க்ல ஒரு பியூன் வேலை இருக்கு. நான் சொன்னா ஹெட் ஆஃபீஸ்ல மறுப்பு சொல்ல மாட்டாங்க. இப்ப கிடைக்கிற சம்பளத்த விட பெருசா கிடைக்காது.. ஆனா போகப் போக சம்பளம் உயரும்.. என்ன சொல்றே?’
அவர் உடனே ‘சரி சார்.’ என்று பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தவருக்கு.. ‘எத்தனை நாளைக்குள்ள நான் பதில் சொல்லணும் சார்..’ என்ற பதில் வியப்பைத் தந்தது. அவர் மேலிருந்த மதிப்பு மேலும் கூடியது.
புன்னகை மாறாமல் அவனைப் பார்த்தார். ‘குட்.. இதுவும் எனக்கு புடிச்சிருக்கு.. ரெண்டு மூனு நாள் எடுத்துக்கோ.. யோசிச்சி சொல்லு..’ என்றார்..
மாணிக்கவேல் அடுத்த நாள் இரவே விவரத்தை தன் தந்தையிடம் கூறினார்.
‘ஒனக்கு தெரியாதது ஒன்னுமில்லே வேலு.. உன்ன பத்தி அப்பாவுக்கு நல்லா தெரியும்.. நீ எதையும் ஒன்னுக்கு ரெண்டு தடவ யோசிச்சித்தான் முடிவெடுப்பேன்னு.. நீ என்கிட்ட வந்து கேட்டப்பவே எனக்கு தெரியும், நீ ஒரு முடிவுக்கு வந்துட்டேன்னு.. சந்தோஷமா செய் வேலு.. முருகன் மேல பாரத்த போட்டுட்டு போய் போஸ்டாபீஸ் அய்யா கிட்ட சொல்லிட்டு போய் சேர்ந்துக்கோ..’ என்ற தன் தந்தையைப் பார்த்து பாசத்துடன் புன்னகை செய்தார்.
அவர் சென்று விஷயத்தைக் கூறியதும் அஞ்சலகத் தலைவர் சிறிதும் பதட்டப் படாமல் அவர் கூறிய வங்கி மேலாளரிடம் அவருக்கு வாக்களித்த வேலையைப் பற்றி தீர விசாரித்தார். பிறகு, ‘நான் உன்ன முத நாள்லருந்தே வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கேன் வேல்.. உனக்கு இந்த வேலைக்கு வேண்டியத விட திறமையிருக்கு.. உங்கப்பா முகத்துக்காகத்தான் நான் வேல குடுத்தேன்னாலும்.. உன் வேலைய பாத்ததுமே உன்ன எனக்கு ரொம்ப புடிச்சி போச்சிடா.. நீ போற எடத்துலயும் நல்லா வருவே.. சந்தோஷமா போய் சேர் போ..’ என்று சீர்வதித்து வழியனுப்பினார்.
அப்படி கிடைத்ததுதான் இந்த வேலை..
இதோ.. இந்த முப்பதாண்டுகளில் அவர் கடந்து வந்த பாதை..
பியூனிலிருந்து குமாஸ்தாக பதவி உயர அவருக்கு சுமார் பத்தாண்டுகள் பிடித்தன..
குமாஸ்தாவாக பதவி உயர்வு கிடைத்தபோது அவருக்கு வயது முப்பதாகியிருந்தது. இனியும் பதவி உயர்வு கிடைக்க வேண்டுமென்றால் தான் ஒரு பட்டதாரியாக வேண்டியது நிச்சயம் என்பதை உணர்ந்தார்..
அவருடைய அதிர்ஷ்டம் அப்போதுதான் சென்னை பல்கலைக் கழகம் அஞ்சல் வழி பட்டதாரி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.. நேர்முகத் தேர்வில் கலந்துக்கொண்டு சிரமப்பட்டுப் படித்து தேர்ச்சி பெற்றார். வங்கி ஊழியத்திற்குத் தகுதியான படிப்பு காமர்ஸ் இளநிலை பட்டதாரி என்பதை அவருடைய அப்போதைய கிளை மேலாளர் கூறவே அதிலேயே சேர்ந்தார்..
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் இருவருடனும் அவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினார்..
தொடரும்..
No comments:
Post a Comment