9.3.06

சூரியன் 37

‘எந்தா நந்து.. ஒன்னும் பறையாத்த?’ நளினியின் கோபத்தை சிறிதும் சட்டை செய்யாமல் எதிர்முனையிலிருந்து வந்தது நந்துவின் பதில்.

‘அதனாலென்ன? காலையில நம்ம யூனியன் செக்ரட்டரி முரளி கூப்டுருந்தாரு.. கொல்கொத்தாவுல ஏதோ பிரச்சினையாம். நீ உடனே புறப்பட்டு வான்னு சொல்லும்போது உன்கிட்ட சொல்லிக்கிட்டு கிளம்பணும்னு எனக்கு தோனல..’

என்ன திமிர் இவனுக்கு? பெண்டாட்டி என்றால் அத்தனை அனாவசியம்? யூனியன் பிரச்சினை அதை விட முக்கியமாகப் போய்விட்டது.

அந்த முரளி ஒரு சரியான தறுதலை..

சென்னை கிளையொன்றில் அவள் துணை மேலாளராக பணி புரிந்தபோது இந்த முரளி அவளுக்குக் கீழ் குமாஸ்தாவாக பணிபுரிந்தவன்...

எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் செய்வதில்தான் குறியாயிருப்பானே தவிர ஒரு வேலையையும் செய்யமாட்டான். தினந்தோறும் அவனுடன் போராடுவதே அவளுக்கு வேலையாயிருந்தது.

சம்பளம் வாங்குவது வங்கியில். ஆனால் அவனுடைய முழு நேர வேலையோ தொழிலாளர் சங்கத்தில். இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன் மேடம் என்று காலை பத்து, பத்தரைக்கு எழுந்து போனால் மாலை வங்கி அலுவல் நேரம் முடியும் தருவாயில் வந்து நிற்பான்!

சரி.. நேரம் கழித்து வந்தோமே தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறிது நேரம் இருந்து முடித்துக் கொடுப்போம் என்று நினைக்க மாட்டான். அவனை நம்பி வேறு யாரிடமும் கொடுக்காமல் வைத்திருந்த வேலையை அப்படியே அரைகுறையாய் வைத்துவிட்டு போய்விடுவான்.

அவன் கூப்பிட்டானாம், இவர் உடனே எழுந்து ஓடிவிட்டாராம்!

‘அந்தாளு இருக்கறது சென்னையில. நீங்க இங்கருந்துக்கிட்டு என்னத்த பண்ண போறீங்க?’ என்று சீறினாள் செல் ஃபோனில்.

அப்போதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், ‘இங்க பார். முரளி எங்கருந்தா என்ன? நம்ம யூனியன் ஆளுங்கள ஒருத்தன் போலீஸ்ல போயி கம்ப்ளெய்ண்ட் பண்ணி பெரிய பிரச்சினையாயிருக்கு. என்ன வீட்ல உக்கார்ந்துக்கிட்டு உங்கிட்ட கொஞ்சிக்கிட்டிருக்க சொல்றியா? இங்க நானும் நம்ம யூனியன் சகாக்களும் சேர்ந்து இங்க லோக்கல் மார்க்சிஸ்ட்காரங்களோட இதுக்கு என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். நான் இங்கருந்து அப்படியே அலெப்பிக்கு போயிருவேன். இனி அடுத்த சனிக்கிழமைதான். அதச் சொல்றதுக்குத்தான் கூப்டேன்.’ என்று கூறிவிட்டு நளினி பதிலளிக்கும் முன் இணைப்பைத் துண்டிக்க கோபத்தில் சிவந்துபோன முகத்துடன் தன்னுடைய செல் ஃபோனையே பார்த்துக்கொண்டு நின்றாள் நளினி.

சட்டென்று சங்கீத்தாவின் நினைவு வர திரும்பி தொலைப்பேசி மேசையைப் பார்த்தாள். ஒலி வாங்கியிலிருந்து லேசான ஒலி வந்துக்கொண்டிருந்தது.

உடனே விரைந்து சென்று எடுத்து, ‘சங்கீத்தா.. நீயானோ..?’ என்றாள்.

சங்கீத்தாவின் குரலில் சோகம் ஒலித்தது. ‘எந்தாயி சேட்டத்தி? நந்தேட்டன் மீண்டும் பிணங்கியோ?’

நளினி என்ன பதில் சொல்லலாம் என்று ஒரு நொடி யோசித்தாள். எப்படியிருந்தாலும் நந்து அடுத்த சனிக்கிழமை வரை வரப்போவதில்லை. நாம் பேசாமல் சங்கீத்தாவின் வீடு வரை சென்று வந்தாலென்ன என்று முடிவெடுத்தாள்.

‘புதுசா பிணங்குறதுக்கு என்ன இருக்கு.’ என்றாள் பொதுவாக. ‘அப்புறம் இன்னைக்கி ஒனக்கு என்ன ப்ரோக்ராம்?’

சங்கீத்தாவின் குரலில் மீண்டும் சந்தோஷம். ‘எந்தான சேட்டத்தி? ஒரு ப்ரோக்ராமும் இல்லே.. ஒன்னு செய்தாலா?’ என்றாள்.

‘எந்தா, பறயி?

‘இன்னைக்கி சாயந்திரம் ஞானும் சக்தியும் அங்கோட்டு வந்நாலா? சங்கரையும் விளிக்காம். அவனெ கண்டுட்டும் கொற நாளாயி. எந்தா சேட்டத்தி?’

நளினிக்கு அதைக் கேட்டபோது சந்தோஷமாயிருந்தது. நாம் அவளுடைய வீட்டுக்கு சென்றாலும் மனம் விட்டு பேச முடியுமோ என்னவோ.. அவர்கள் இங்கு வருவது நல்லதுதான்.

‘நல்ல ஐடியா சங்கீத்தா.. ஞான் வேணங்கில் சங்கர விளிச்சி வராம் பறையாம்.’ என்றாள்.

‘ஐயோ.. அதொன்னும் வேண்டா.. ஞான் விளிச்சி பறயாம்.. கொறச்ச நேரம் சம்சாரிட்டு.. ஒரு போட் ரைட் சென்னு வந்நா எந்தா சேட்டத்தி?’

நளினிக்கு அவளுடைய யோசனை எதற்கென்று புரிந்தது. தன்னுடைய மனநிலையை மாற்ற அவளுடைய அந்த யோசனை பிடித்திருக்க உடனே சரி என்று சம்மதித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்..

சங்கீத்தாவின் அக்கறையும், அன்பும் அவளையுமறியாமல் அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

கண்களில் துளித்து நின்ற கண்ணீரை சுண்டியெறிந்துவிட்டு அவர்களிருவரும் வருவதற்குள் வீட்டை ஒழுங்கு படுத்துவோம் என்று நினைத்தவாறு பரபரப்பானாள்..

***

சுந்தரலிங்கம் தன்னுடைய செல் ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டு அருகில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.

‘இந்த சேதுவுக்கு நான் சொன்ன நியூஸ் பிடிக்கலைன்னு தெரியுது. ஆனா ஏன்னுதான் புரியலை. நேத்தைக்கி என்கிட்ட பேசினப்போ கூட கவனிச்சேன்.. சம்திங் சம் வேர் ராங்..’ என்று ஓடியது அவருடைய சிந்தனை..

‘ஏங்க, என்ன ஃபோன் பேசி முடிச்சதுலருந்து என்னவோ மாதிரி இருக்கீங்க?’ என்ற தன் மனைவி கனகாவைப் பார்த்தார்.

‘ஒன்னுமில்லே கனகு.. அந்த சேது மாதவன நினைச்சிக்கிட்டேன். நேத்தைக்கி சபா ஃபங்ஷனுக்கு வர்றதுக்கு ஏன் லேட்டாச்சி கேட்டியே. அந்த பிரச்சினை சுமுகமா முடிஞ்சிருச்சின்னு அந்த முரளி இருக்காரே அவர் ஃபோன் பண்ணார்னு இவர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்றேன்.. ஏதோ இதுல அவ்வளவா இஷ்டமில்லாத மாதிரி பேசறார்.. அதான் ஒன்னும் புரியாம உக்காந்திருக்கேன்.’

கனகா தன்னுடைய பெரிய உடலை கஷ்டப்பட்டு சோபாவில் அவருக்கருகில் இறக்கி மூச்சு வாங்க அவரைப் பார்த்தார்.

சுந்தரலிங்கத்துக்கு தன் மனைவியைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அம்பத்தஞ்சி வயசுல பாவம் இவளுக்குத்தான் எத்தனை வியாதிகள். ப்ளட்ல சுகர், ப்ளட்ல பிரஷர், கால்ல வாதம்.. மூட்டுல வலி..

‘என்னாச்சி கனகு.. இப்படி மூச்சு வாங்குது.. ஆஸ்த்மா மாத்திர போட்டுக்கிட்டியா இல்லையா?’ என்றவாறு தன் மனைவியுடைய தோளை தொட்டார்.

அவருடைய கையைத் தட்டிவிட்ட கனகா.. ‘அந்தாளுதான் ஒரு ஃப்ராடுன்னு ஏற்கனவே தெரிஞ்சதுதானே.. இந்த பிரச்சினை சால்வானது பிடிக்குமா என்ன? புது சேர்மன் வர்ற நேரத்துல இந்த பிரச்சினை அப்படியே இருந்தா உங்க பேர்தானே கெட்டுப் போகும்? அந்தாளுக்கு நல்லதுதானே?’ என்றாள் எரிச்சலுடன்.

சுந்தரலிங்கம் வியப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். இந்த முப்பது வருஷத்துல தன்னுடைய வங்கியைப் பற்றி தன் மனைவிக்கு எத்தனை தெரிந்திருக்கிறதென்று நினைத்தார்.

இவளைத் தூத்துக்குடியிலிருந்து திருமணம் செய்துக்கொண்டு சென்னை வந்த புதிதில் தன்னோடு சாலையில் ஒன்றாக சேர்ந்து நடக்கவே வெட்கப்பட்ட கனகா இவள் என்று பலமுறை வியந்திருக்கிறார் அவர்.

ஆனால் இந்த முப்பதாண்டுகளில் சென்னையில் அவளுக்கு தெரியாத சபாக்களும் இல்லை, பெண்களின் சங்கங்களும் இல்லை. சென்னை மேல்குடி மக்களின் கூட்டத்தில் கனகா மேடத்தை அறியாதவர்கள் இல்லையென்னும் அளவுக்கு அவள் அத்தனை பிரசித்தம்.

‘என்னங்க நா சொல்றது சரிதானே.. அவரப்பத்தி உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா எங்க லேடீஸ் க்ளப்புல அவரப்பத்தியும் அவரோட மேனா மினுக்கி பொஞ்சாதிய பத்தியும் எல்லாருக்கும் தெரியும்.’

சுந்தரலிங்கத்துக்கு தன்னுடைய மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்ததால் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நினைப்புடன் சோபாவிலிருந்து எழுந்து நின்றார்.

‘ஆமா, இன்னைக்கி முதல் ஞாயிற்றுக்கிழமையாச்சே.. பெசண்ட் நகர் லக்ஷ்மி கோவிலுக்கு போ வேணாம்? போ.. குளிச்சிட்டு ரெடியாவு.. அப்படியே நம்ம தேவகிக்கு ஃபோன் பண்ணி மாப்ளையையும் கூப்டுக்கிட்டு கோவிலுக்கு வரச்சொல்லு.. போன மாசமே சொல்லியிருந்தேன்.. மறந்துருப்பா.’

ஆனால் கனகா எழுந்திருக்காமல் தன் கணவனைப் பார்த்தாள். ‘ஏங்க இன்னைக்கிதானே உங்க புது சேர்மன் சென்னை வரார். நீங்க ரிசீவ் பண்ண போகலையா?’

சுந்தரம் புன்னகையுடன் தன் மனைவியை குனிந்து பார்த்தார். ‘அதான் கனகு ஆச்சரியமா இருக்கு. என்ன சார், போ வேணாமான்னு சேதுக்கிட்ட கேக்கறேன். அதுக்கு நம்மகிட்ட எந்த ஃப்ளைட்ல வரேன்னு சொல்லலையே அப்புறம் நாம எதுக்கு போணும்னு வாதாடறார்.’

கனகா கஷ்டப்பட்டு சோபாவில் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாட சுந்தரம் விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்தார். ‘எதுக்கு இப்ப டென்ஷனோட எழுந்திருக்கிறே?’

மேல் மூச்சு வாங்க அவரையே பார்த்த கனகா, ‘நீங்க வேற.. அந்தாளு சொல்றத நம்பிக்கிட்டு நீங்க இருந்துராதீங்க. உங்கள வெட்டி விட்டுட்டு அந்தாள் மட்டும் அந்த நாசமாப் போற டாக்டரோட போனாலும் போயிருவான். நீங்க பேசாம நம்ம பிலிப் சார கூப்டுங்க.. போங்க.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்டுன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்தாமாதிரி கோவில்க்கு போறதப்பத்தி ப்ளான் பண்ணலாம்.. நான் குளிச்சிட்டு வரேன்..’ என்று தள்ளாடியவாறு கீழ்தளத்திலிருந்த குளியலறையை நோக்கிச் சென்ற தன் மனைவியைப் பார்த்தவாறே சிறிது நேரம் நின்ற சுந்தரம் சோபாவிலிருந்த செல் ஃபோனை எடுத்து பிலிப் சுந்தரத்தின் எண்ணை டயல் செய்தார்..

தொடரும்..

No comments: