29.3.06

சூரியன் 50

புவனாவுக்கு ஒருவாறு விஷயம் புரிந்தாலும் உள்ளூர நடுங்கியவாறு தன்னுடைய தந்தையின் அடுத்த அஸ்திரத்தை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

தனபால் சாமி எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் தன் மகளையும் அவளுடைய தோழியையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். ரம்யாவை பார்ப்பதற்கு பாவமாகவும் இருந்தது அதே நேரத்தில் எதற்கு அநாவசியமாக இங்கு வந்து தனக்கு அனாவசியமான தொல்லையை ஏற்படுத்தினாள் என்று எரிச்சலாகவும் இருந்தது.

இப்பிரச்சினையை டெலிகேட்டாக கையாளவேண்டும். இல்லையென்றால் இதுவே தனக்கு அடுத்த சில தினங்களுக்கு வேண்டாத தலைவலியாகிவிட வாய்ப்பிருக்கிறது என்றும் நினைத்தார்.

‘சொல்லும்மா, ப்ளேட்ல வச்சிருக்கறது ஒன்னுமே நீ தொடலையே அதனாலதான் கேட்டேன். பசியில்லையா இல்ல சாப்டற மூட்ல இல்லையான்னு.’

ரம்யா பதில் பேசாமல் தன் தோழியைப் பார்த்தாள். ‘நீயே சொல்லிருடி..’ என்பதுபோல் தன்னைப் பார்த்தவளை பொருட்படுத்தாமல், 'ஆமா அங்கிள், அம்மாவையும் அப்பாவையும் ஒன்னா பிரிஞ்சி இருந்ததில்லை. I miss them.’ என்றாள் ப்ளேட்டைப் பார்த்துக்கொண்டே.

தனபால் சாமி தன் மகளைப் பார்த்தார். புவனா அவருடைய பார்வையை சந்திக்க துணிவில்லாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

சிறிது நேரம் யாரும் பேசாமல் நிசப்தமாக இருந்தது.

தனபால் அருகில் இருந்த குடிநீரை எடுத்து குடித்துவிட்டு தன் முன்னால் இருந்த ப்ளேட்டில் இருந்த இட்லியுடன் விளையாடிக்கொண்டிருந்த ரம்யாவின் கவனத்தைக் கவரும் விதமாய் மேசையை தன் விரல்களால் தட்டினார்.

ரம்யா திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘என்ன அங்கிள்?’

தனபால் அமைதியுடன் அவளைப் பார்த்தார். ‘உங்க அப்பாவோட செல் நம்பர் குடுக்கறியாம்மா? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.’

ரம்யா குழப்பத்துடன் தன் தோழியைப் பார்த்தாள். புவனாவோ ‘இனி உன் பாடு அப்பா பாடு’ என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொள்ள ரம்யா தனபாலைப் பார்த்தாள். ‘எதுக்கு அங்கிள்?’

‘நீ இங்கதான் இருக்கே. இன்னும் ஒரு மணி நேரத்துல கூப்டுக்கிட்டு வரேன். நீங்க அனுப்புன ஆளுங்கள இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்க.வேணும்னா போய் பெய்ல எடுத்துக்குங்கன்னு சொல்லத்தான்.’

ரம்யாவின் முகம் அதிர்ச்சியால் வெளிறிப் போவதைப் பார்த்த புவனா அவளுக்காக உடனே பரிதாபப்பட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘அப்பா, ரம்யா ஏதோ தெரியாம அவசரத்துல...’

தனபால் சாமி கோபத்துடன் கையை உயர்த்தி தன் மகளை மேலே பேச விடாமல் தடுத்தார். ‘நீ சும்மா இரு. நீ இதுவரைக்கும் செஞ்ச முட்டாள்தனம் போறும். அவளைப் பேசவிடு.’

புவனா தன் தோழியைப் பார்த்தாள். பிறகு மேசையிலிருந்த பாத்திரங்களை சமையலறைக்குள் கொண்டு சேர்ப்பதில் மும்முரமானாள். அவளுக்கு அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது.

ரம்யா ‘என்ன அம்போன்னு விட்டுட்டு போறியேடி பாவி..’ என்பதுபோல் தன் மகளைப் பார்ப்பதைப் புரிந்துக்கொண்ட தனபால் கோபத்தைத் தவிர்த்து லேசான புன்னகையுடன் மேசையின் மேலிருந்த அவளுடைய கரங்களை ஆதரவாகத் தொட்டார்.

அந்த செய்கையை முற்றிலும் எதிர்பாராத ரம்யா மனம் உடைந்து அவருடைய கரங்களின்மேல் தலையைக் கவிழ்ந்துக்கொண்டு அழலானாள். சமையலறையில் பாத்திரங்களை வைத்துவிட்டு திரும்பிய புவனா இக்காட்சியைப் பார்த்துவிட்டு திகைத்துப்போய் தன் தந்தையைப் பார்த்தாள். ‘Don’t worry. You carry on’ என்று வாயசைத்தார் தனபால். புவனா சமையலறைக்குள் திரும்பிச் சென்றாள்.

சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்த ரம்யா கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு தனபாலைப் பார்த்தாள்.

‘இப்ப சொல்லும்மா. எதுக்கு இப்படி செஞ்சே? உங்கப்பா பார்த்து வச்ச மாப்பிள்ளை பிடிக்கலையா? அப்படீன்னா நேரடியாவே உங்கப்பாக்கிட்ட சொல்லிரவேண்டியதுதானே. நீ ரொம்ப தைரியசாலின்னுல்லே நான் நினைச்சிக்கிட்டிருக்கேன். இப்படி கோழைத்தனமா வீட்ட விட்டு ஓடிவந்துட்டா பிரச்சினை சால்வாயிருமா?’

ரம்யா இல்லை என்று தலையை அசைத்தாள்.

தனபால் குழப்பத்துடன், ‘அப்படின்னா? என்னம்மா சொல்ல வர்றே?’ என்றார்.

‘எனக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காம இல்ல அங்கிள்.’

தனபால் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தார். ‘என்னம்மா சொல்றே? அப்புறம் எதுக்கு வீட்ட விட்டு வரணும்?’

ரம்யா பதில் பேசாமல் எழுந்து வாஷ்பேசினுக்கு சென்று கைகளையும் முகத்தையும் கழுவி தன்னுடைய துப்பட்டாவாலேயே துடைத்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

‘அங்கிள், உங்களுக்கும் புவனாவுக்கும் இடையில இருக்கற அன்னியோன்னியத்தப் பார்த்து பலதடவை நா பொறாமைப் பட்டிருக்கிறேன். நீங்க ஒரு கண்டிப்பான போலீஸ் ஆஃபிசராயிருந்தும் புவனாவைப் பொறுத்தவரை ஒரு பாசமுள்ள, அன்பான, பொறுப்பான அப்பாவா இருக்கறத நான் பல சந்தர்ப்பங்கள்ல பார்த்திருக்கேன். அந்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கலையேன்னு பலநாள் வீட்ல தனியா இருக்கும்போது நினைச்சிக்கிட்டு அழுதிருக்கேன் அங்கிள். ஒன்னா ரெண்டா? பதினைஞ்சி வருஷம்.. அப்பாவுக்காக, அவரோட அன்புக்காக ஏங்கியிருக்கேன் அங்கிள். அத உங்கக்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறதுன்னு எனக்கு தெரியலை.. ஏன், என்னோட அப்பா என்கிட்டயோ இல்லே அம்மாக்கிட்டயோ முகம் கொடுத்து பேசியே எத்தனையோ மாசமாயிருச்சி தெரியுமா? அவருக்கு அவரோட வேலை, பதவி, பணம் இதுதான் முக்கியம். இருபத்தி நாலு மணி நேரத்துல தூங்கற நேரத்தத் தவிர ஒரு ரெண்டு மணிநேரம் எங்களுக்குன்னு ஒதுக்கணும்னு அவருக்கு தோனியதே இல்லை அங்கிள்.’

தனபால் சமையலறை வாசலில் நின்றவாறு ரம்யா பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தன் மகளைப் பார்த்தார்.

அவருடைய மனைவி இறந்து போய் அவர் நான்கு வயது மகளுடன் தனித்துபோனதை நினைத்துக்கொண்டார்.

‘பொம்பிளைப் பிள்ளைடா.. இத வளர்த்து ஆளாக்குறதுக்காவது நீ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கோ. சித்தியா வர்ற எல்லாருமே கொடுமைக்காரிகளாத்தான் இருக்கணும்னு இல்லே. அதெல்லாம் சினிமாலத்தான். உடனே வேணாம். ஒரு ரெண்டு மூனு மாசம் யோசி..ஆனா நல்ல முடிவா எடு. எனக்கும் வயசாயிருச்சி. ஒங்க ரெண்டு பேருக்கும் வேணுங்கறத பார்த்து பார்த்து செய்யறதுக்கு என்னால ரொம்ப காலத்துக்கு முடியாதுரா.. அதனாலத்தான் சொல்றேன்.’ என்றார் அவருடைய எழுபது வயது தாயார்.

அப்போது தனபாலுக்கு மறுமணத்தில் லேசான சபலம் இருந்ததென்னவோ உண்மைதான். தகுந்த சமயத்தில் அவருடைய ஸ்டேஷனில் ஆய்வாளராகவிருந்த மகேந்திரன் ஐ.பி.எஸ் கொடுத்த அறிவுரைதான் அவரை அந்த சபலத்திலிருந்து விடுவித்தது.

‘தனபால்.. வேணாம்.. உங்கம்மா சொல்றாங்கன்னு ரீமேரேஜைப் பத்தி நினைச்சிக்கூட பாக்காதீங்க. It won’t work. உங்க குணத்துக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாம உங்க முதல் ஒய்ஃபே ரொம்ப கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். என்னோட வேலைதான் எனக்கு முதல் மனைவின்னு அலையற வர்க்கம் நீங்க. அவங்க விஷக்காய்ச்சல்ல ஹாஸ்பட்ல அட்மிட்டாயிருக்கும்போதும் நீங்க உங்க அசைன்மெண்ட்தான் முக்கியம்னு போயிருக்கலைன்னா ஒருவேளை அவங்க பிழைச்சிருக்கலாம்னு நான் இப்பவும் நினைக்கிறேன். விஷக்காய்ச்சலோட வேதனையவிட இந்த சமயத்துலயும் எங்கூட இருக்கணும்னு தோனலையே இந்த மனுஷனுக்குன்னு உங்க ஒய்ஃப் சொல்லி வேதனைப்பட்த நேர்ல கேட்டவ என் ஒய்ஃப். அவங்க இறந்துபோன அடுத்த நாளே இனிமே  அவர நம்ம வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு வர வேலைய வச்சிக்காதீங்கன்னு என் ஒய்ஃப் எங்கிட்ட கண்டிஷன் போட்டது தெரியுமா உங்களுக்கு? வேணாம், இனியொரு விஷப் பரீட்சை. உங்களால பொண்ண வளர்க்க முடியலையா அவள ஊட்டியிலருக்கற போர்டிங் ஸ்கூல் ஒன்னுல சேர்த்துருங்க..’

தன்னுடைய மனைவியின் மரணத்துக்கு தானும் ஒரு மறைமுக காரணம் என்பதை அன்றுதான் முதல்முறையாக உணர்ந்தார் தனபால். மறுமணம் செய்துக்கொள்வதில்லை என்று அன்று எடுத்த சபதத்தில் இன்றுவரை உறுதியாய் நின்றார் அவர்.

தன்னுடைய மேலதிகாரியின் அறிவுரைப்படி அடுத்த வருடமே புவனாவை ஊட்டியிலிருந்த போர்டிங் பள்ளியில் கொண்டு சேர்த்தார். மனைவி மற்றும் மகளின் பிரிவால் ஏற்பட்ட துக்கத்தை மறக்க தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழக காவல்துறை சரித்திரத்தில் மிகக் குறைந்த வயதிலேயே எஸ்.பி பதவிக்கு உயர்த்தப்பட்டவர் என்ற சாதனையைப் படைத்தார்.

எத்தனை வேலையிருந்தாலும் மாதம் இருமுறை தன்னுடைய மகளை அவளுடையப் பள்ளியில் சென்று பார்ப்பதில் கவனமாயிருந்தார். புவனா மெட்ரிக்குலேஷன் முடித்த கையோடு தான் அப்போது பணியிலிருந்த மதுரைக்கு அழைத்துச் சென்று சிறந்த பள்ளியொன்றில் சேர்த்தார். அவள்  பள்ளியிறுதி பரீட்சை எழுதி முடிக்கவும் தனபால் எஸ்.பியாக பதவி உயர்வு பெறவும் சரியாக இருந்தது.

பதவி உயர்வைத் தொடர்ந்து அவருக்கு சென்னைக்கு மாற்றல் உத்தரவு வரவே மகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து நகரில் மிகச்சிறந்த பெண்கள் கல்லூரியில் சேர்த்தார்.

புவனாவுக்கு தன் தந்தையிடம் அளவுக்கடந்த பாசம் தோன்றியதில்லை. ஆனால் அதே சமயம் மரியாதை இருந்தது. தனக்காக தன்னுடைய வாலிபப் பருவத்தை தியாகம் செய்தவர் தன் தந்தை என்ற ஒரு மதிப்பும் இருந்தது, நகரில் மிகக் கண்டிப்பான, நேர்மையான அதே சமயம் கனிவு நிறைந்த அதிகாரி என்று தன்னுடைய தந்தையை மற்றவர்கள் தன் காதுபடவே புகழ்ந்ததைக்கேட்டு தன் தந்தையைக் குறித்து ஒரு பெருமையும் இருந்தது அவளுக்கு..

தொடரும்.

2 comments:

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்.....வேலை பெரிதுதான். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம். வாழ்வதற்குதான் வேலை. வேலைக்காக வாழக்கூடாது. என்னவோ...இப்பொழுதாவது ரம்யா உண்மையைச் சொன்னாளே....இனி தனபால் கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவு எடுப்பார்னு நெனைக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நேற்று நான் கேரளா சென்றிருந்தேன். லஞ்ச் டைமில் பதிவை இட்டேனே தவிர பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்ய நேரமே கிடைக்கவில்லை.

இப்பொழுதாவது ரம்யா உண்மையைச் சொன்னாளே....//

வேற வழி? கையும் களவுமா மாட்டியாச்சி..