16.3.06

சூரியன் 42

வந்தனா வார நாட்களில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காப்பி போட்டு குடித்துவிட்டு நாளிதழ்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவாள். அடுத்த ஒரு மணி நேரம் உலகமே இடிந்து விழுந்தாலும் செய்தித்தாளிலிருந்து எழுந்திருக்க மாட்டாள்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் இப்பழக்கத்திலிருந்து சற்றே மாறுபடுவது வழக்கம்.

காலையில் எழுந்திருக்கவே எட்டு மணியாகிவிடும்.

அன்றும் அப்படித்தான். அத்துடன் முந்தைய நாள் இரவு தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளின் தாக்கத்தால் நள்ளிரவு வரை விழித்திருந்தது அவளை இன்னும் அதிகமாகவே உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது.

வலுக்கட்டாயமாக எழுந்து ஜிவ்வென்று எரிந்த கண்களைக் குளிர்ந்த நீரால் பலமுறை கழுவிய பிறகுதான் சகஜ நிலைக்குத் திரும்பினாள்.

குளியலறையிலிருந்து வெளியேறி வாசற்கதவுக்கு வெளியே பால்காரன் வைத்துவிட்டு சென்ற பால் பைகளையும் செய்தித்தாள்களையும் எடுத்துக்கொண்டு திரும்பியவள் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 9.00!

சட்டென்று நினைவுக்கு வந்தவள்போல் பரபரப்பானாள். மாதத்தின் முதல் ஞாயிறன்று காலையிலேயே காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவது வழக்கம்.. நேரே மேல் மருவத்தூர் கோவில். அதன் பிறகு  அதனை அடுத்து அச்சரப்பாக்கத்திலிருந்த இருந்த மழை மலை மாதா கோவில்..

மாதம் ஒருமுறை இந்த இரு வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கோவில்களுக்கு சென்று வரும் பழக்கம் அவள் சென்னைக்கு மீண்டும் மாற்றலாகி வந்ததிலிருந்தே இருந்து வந்தது..

அதென்ன மழை மலை மாதா கோவில்?

எல்லாம் அவளுடயை உடன் பிறவா சகோதரனாக அவள் கருதிய மாணிக்க வேலுடைய யோசனையால் தான்.

அவள் துணைப் பொது மேலாளராக அவளுடைய தலைமையலுவலகத்திற்கு மாற்றலாகி வந்தபோது அவளுடைய அந்தரங்க காரியதரிசியாக நியமிக்கப்பட்ட மாணிக்க வேலை ஆரம்பத்தில் அவளுக்கு பிடிக்கவே இல்லை.

அதற்கு மூல காரணம் அவர் ஒரு கடைநிலை சிப்பந்தி (Peon) ஆக வேலையில் சேர்ந்து குமாஸ்தாவாகி பிறகு அதிகாரியானவர் என்பதால்தான்.

இவரை வேண்டும் என்றே நம்முடைய தலையில் அப்போது எச்.ஆர். தலைவராயிருந்த சேது மாதவன் கட்டிவிட்டார் என்று நினைத்தாள்.

ஆனால் நாட்கள் செல்ல, செல்ல மாணிக்க வேலின் அபிரிதமான திறமை அவளை அவர்பால் ஈர்த்தது. வந்தனாவின் குணத்தை அவள் வந்து சேர்ந்த மிகக்குறைந்த நாட்களிலேயே முழுவதும் படித்துக்கொண்டு அவளுடைய அன்றாட மனநிலைக்கு ஏற்றார்போல் நடந்துக்கொண்ட விதம் அவளை வெகுவாய் கவர்ந்தது.

‘எப்படி மாணிக்கம், நான் நினைச்சதையே செய்றீங்க, எனக்குப் பிடிச்சதையே பண்றீங்க, எனக்கு என்ன சாப்ட பிடிக்கும்கறத கூட தெரிஞ்சி வச்சிருக்கீங்க. நான் கைப்பட வளர்த்து ஆளாக்குன என் தங்கைகளாலக் கூட புரிஞ்சிக்க முடியாத என்னை எப்படி பழகுன ரெண்டே மாசத்துல புரிஞ்சிக்கிட்டு.. நீங்க ஒரு விசித்திரமான ஆள்தான் மாணிக்கம்.  I like you so much.’ என்றாள் ஒருநாள்.

மாணிக்க வேல் அப்போதும் ஒரு மென்மையான சிரிப்புடன், ‘இதுல பெரிசா ஒன்னும் இல்ல மேடம். எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு ஈடுபாடோட செய்யணும்னு சொல்வார் எங்கப்பா..’ என்று கூற அன்று துவங்கியது அவர்களுடைய நட்பு. நாளடைவில் அந்த நட்பு நெருக்கமடைந்து 'மேடம் என்னை உங்க தம்பின்னு நினைச்சிக்குங்க.  டேய்னு  நீங்க தாராளமா கூப்டலாம்..’ என்ற மாணிக்கத்தை கேலியுடன் பார்த்தாள் வந்தனா. ‘அப்ப நீ மட்டும் என்னை மேடம்னு கூப்டறே.. நீ என்ன அக்கான்னு கூப்டு. நா உன்ன டேய்ன்னு கூப்டறேன்.’ என்றாள்..

‘சேச்சே.. இல்ல மேடம்.. உங்கள அக்கா ஸ்தானத்துக்கும் மேல நா வச்சிருக்கேன்.. நீங்க எப்பவும் எனக்கு மேடம்தான்.’ என்று பதிலுக்கு மாணிக்கம் கூறியதை நினைத்துக்கொண்டாள் வந்தனா.

அவர் ஒரு கிறீஸ்துவப் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பி ஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்றாள் வந்தனா.  மாணிக்க வேலின் மனைவி ராணியைப் பிடித்ததோ இல்லையோ பிள்ளைகள் சந்தோஷ் மற்றும் இரண்டே வயது பூர்த்தியாயிருந்த கமலியையும் மிகவும் பிடித்துப்போனது.  தன் தாயைத் தவிர தனக்கு வேறு யாருமில்லை என்று அதுவரை நினைத்திருந்த வந்தனாவுக்கு நல்லதொரு குடும்பத்தின் நட்பு கிடைக்கவே கெட்டியாய் பிடித்துக்கொண்டாள்.

கமலி வளர, வளர அவளை தன்னுடைய சொந்த சகோதரனுடைய மகளாகவே பாவிக்க துவங்கின வந்தனா அவளை வாரம் ஒரு முறையாவது பார்க்காவிட்டால் எதையோ இழந்துவிட்டதைப் போல உணரத் துவங்கினாள். கமலியும் எப்போது ஞாயிற்றுக் கிழமை வரும் என்று ஏங்கத் துவங்கவே ராணிக்கு அவர்களுடைய உறவில் பொறாமை தலைகாட்ட ஆரம்பித்ததை அவள் உணரவில்லை.

மாணிக்க வேல் மேலும் பதவி உயர்வு பெற்று சென்னையிலிருந்து மாற்றலாகிப் போன இரண்டொரு மாதங்களில் ராணி தன் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டத் துவக்கினாள்.

‘இங்க பாருங்க மேடம். எங்க வீட்டுக்காரர் உங்கக் கீழே கொஞ்ச நா வேலை பார்த்தாருங்கறதுக்காக இங்க சும்மா வந்து போறது எனக்குப் பிடிக்கலீங்க. நீங்க பாட்டுக்கு குழந்தைகளுக்கு தேவையில்லாததையெல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு போயிடறீங்க. அதுங்க கண்டதையும் தின்னுட்டு உடம்புக்கு வந்து அவஸ்தைப் படறப்போ டாக்டர் கிட்ட தூக்கிட்டு ஓடறது நானு. நீங்களாவே புரிஞ்சிக்கிருவீங்கன்னு பார்த்தேன். ஒங்களுக்கு புள்ளைங்கள புடிக்கும்னா ஏதாச்சும் அனாதை புள்ளைங்கள தத்தெடுத்து வளங்க.. எம்புள்ளைங்கள விட்டுருங்க..’ என்றாள் ஒருநாள்.

அவளுடைய சுடுசொல்லின் வடு ஆறவே வெகுநாள் பிடித்தது. ஆனாலும் கமலியை மறக்க முடியாமல் வாரம் ஒரு நாள் அவள் படித்த பள்ளிக்கே சென்று அவளைப் பார்க்கத் துவங்கினாள்.

அடுத்த இரண்டாண்டுகளில் அவள் வங்கியின் எச்.ஆர். தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவள் செய்த முதல் வேலை மாணிக்க வேலை சென்னைக்கே கிளை மேலாளராக மாற்றியதுதான்.

மாணிக்க வேலும் அதைப் புரிந்துக்கொண்டு தன் மனைவியின் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் கமலியும் வந்தனாவும் நெருங்கிப் பழக வழிவகுத்தான்.

ஆனாலும் ‘ராணியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாய்ட்டே போகுது மேடம். அவ இப்பல்லாம் நம்ம ரெண்டு பேரோட நட்பையே சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டா. அதனால இனிமே நீங்க வீட்டுக்கு வராம இருக்கறது நல்லது..’ என்று ஒருநாள் மாணிக்கம் நேரில் வந்து கூறியபோது மனம் உடைந்து போனாள் வந்தனா. ‘

‘நீங்க கவலைப் படாதீங்க மேடம். நீங்க கமலிய மாசத்துல ஒருநாளாவது  சந்திக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.’ என்று மாணிக்க வேல் கூறிய யோசனைதான் இந்த மழை மலை மாதா கோவில் விசிட்.

‘நீங்க மேல் மருவத்தூர் கோயிலுக்கு போற பாதையில தாம்பர லெவல்க்ராசிங்லருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போறும் நான் கமலிய மட்டும் கூட்டிக்கிட்டு வரேன். நீங்க அவள கூட்டிக்கிட்டு உங்க கோயிலுக்கு போய்ட்டு அப்படியே அச்சரப்பாக்கத்திலருக்கற மாதா கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்க.. கமலிக்கு அந்த மாதா மேல ரொம்ப நம்பிக்கை. மாசத்துல ஒரு நாளாவது அந்த மலைமேல இறங்கறதுன்னு நேர்ச்சையும் இருக்கு.. நீங்களும் ஒரு அரை நாள் முழுசும் அவ கூட இருக்கலாம் இல்லையா. ராணிக்கு நாங்க ரெண்டு பேரும் மாசத்துல முதல் ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கி அந்த கோவிலுக்கு போய்ட்டு வரோங்கறது ரொம்ப நாளாவே தெரியும்.’ என்று ஒருநாள் மாணிக்க வேல் அவளிடம் கூற அதை உடனே பற்றிக்கொண்டாள்.

ஆக, கடந்த இரண்டு வருடங்களாக எது தவறினாலும் இந்த மேல் மருவத்தூர், அச்சரப்பாக்க விசிட் தவறியதே இல்லை. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னையை விட்டு வெளியூர் செல்ல வேண்டி வந்துவிட்டால் உடனே அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்றுவிடுவாள். மாணிக்க வேலுவும் அந்த சமயங்களில் வீட்டில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அந்த பயணத்தை அடுத்த வாரத்திற்குத் தள்ளிபோட்டு விடுவார். இது கமலிக்குத் தெரிந்தாலும் தன் தாயிடம் இருந்து மட்டுமல்ல சந்தோஷிடமும் கூறாமல் மறைத்துவிடுவாள்..

வந்தனா சாதாரணமாக மாதத்தின் முதல் சனிக்கிழமையன்றே மாலையில் மாணிக்கத்தை அழைத்து அடுத்தநாள் விசிட்டைப் பற்றி ஞாபகப் படுத்துவது வழக்கம். ஆனால் நேற்று அவருடைய செல் ஃபோனுக்கு எத்தனை முறை முயன்றும் முடியாமல் போனது.. ராணியின் குணத்தையறிந்து அவருடைய வீட்டு தொலைப்பேசியை அழைக்காமல் இருந்துவிட்டாள்.

அது நினைவுக்கு வரவே தன்னுடைய செல் ஃபோனை எடுத்து அவருடைய செல் ஃபோன் எண்ணை டயல் செய்தாள். பல முறை முயன்றும் ‘பிசி’ என்று பதில் வந்தது. காலை நேரத்தில் அப்படிய் யாருடன் பேசுகிறார் என்று நினைத்தாள்.

அவரை வீட்டுத் தொலைப்பேசியில் அழைப்பதா வேண்டாமா என்று சில விநாடிகள் தயங்கினாள். சரி அழைப்போம், ராணி எடுத்தால் துண்டித்துவிடுவோம் என்று நினைத்தவாறு அவருடைய வீட்டு எண்ணை தேடவும் அவளுடைய செல் ஃபோன் சினுங்கவும் சரியாக இருந்தது..

செல் ஃபோன் திரையில் மாணிக்க வேலின் செல்ஃபோன் எண் தென்பட அட! திங்க் ஆஃப் தி டெவில்.. சீச்சி.. மாணிக்கத்துக்கு இந்த வார்த்தை பொருந்தாது.. ஹி ஈஸ் என் ஏஞ்சல்.. என்று தன்னைத்தானே திருத்திக்கொண்டு.. சந்தோஷத்துடன் ‘ஹலோ மாணிக்கம்.. என்ன காலைலருந்து ட்ரை பண்ணிக்கிட்டே...’ என்று பேச ஆரம்பித்தவளின் முகம் இருண்டு, கண்கள் கலங்கி, குரல் உடைந்து, ‘டேய் பாவி.. என்னடா சொல்றே... கமலியா.. ஐயோ சாமி.. எப்படிறா? கையிலிருந்த செல் ஃபோனை தவறவிட்டு சரிந்து தரையில் விழுந்து கதறினாள் வந்தனா..

எதிர் முனையில் இருந்து, ‘மேடம்.. மேடம்.. நீங்க உடனே புறப்பட்டு வீட்டுக்கு வந்திராதீங்க.. ராணி இப்ப இருக்கற நிலையில நீங்க வந்தா பிரச்சினையாயிரும்..’ என்று செல் ஃபோன் வழியாக வந்த எச்சரிக்கை அவளுடைய காதில் விழவில்லை..

தொடரும்

2 comments:

G.Ragavan said...

வந்தனா கமலிக்குள்ள இப்பிடி ஒன்னா.......ஐயோ பாவம் வந்தனா......கண்ணிலான் பெற்றிழந்தான் என உழன்றான்னு கம்பராமாயணத்துல தசரதனைப் பற்றிச் சொல்வாரு கம்பர். அதே நெலமையாகிப் போச்சி.

டிபிஆர்.ஜோசப் said...

கண்ணிலான் பெற்றிழந்தான் என உழன்றான்னு .../

என்ன பொறுத்தமான வரிகள்..

சூப்பர் ராகவன்.

துள்சி பின்னூட்ட ராணின்னா நீங்க ராசா!