தேவாலயத்திலிருந்து வெளியே வந்ததும் பிலிப் சுந்தரம் முதல் வேலையாய் தன்னுடைய செல் ஃபோனை மீண்டும் ‘ஆன்’ செய்து யாராவது தன்னை அழைத்திருக்கிறார்களா என்று பார்த்தார். அவருடைய கவலையெல்லாம் மாணிக்கம் நாடார் தன்னை அழைத்திருப்பாரோ என்றுதான்.
‘மிஸ்டு கால்’ திரை முழுவதும் அவருக்குத் தெரிந்த எண்கள்.. ஒன்றே ஒன்றைத் தவிர. அனால் அவை எதுவும் மாணிக்கம் நாடாருடையதல்ல என்று சமாதானமடைந்தார்.
தனக்கு அறிமுகமில்லாத எண்ணைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் ஒருமுறைக்கு மேலிருந்த எண்களில் முதலில் இருந்த அவருடைய வங்கியின் ஆக்டிங் சேர்மன் சுந்தரத்தின் எண்ணை டயல் செய்து எதிர்முனையில் எடுத்ததும், ‘சாரி மிஸ்டர் சுந்தரம், நான் கோயிலுக்குள்ள இருந்தேன்.’ என்றார்.
‘அப்படியா? நினைச்சேன்.’
‘என்ன சார், சொல்லுங்க?’ பங்கு பேரவையின் உபதலைவர் தூரத்திலிருந்து ‘டைம் ஆயிருச்சி சார்’ என்று தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காட்டுவது தெரிந்தது, ‘ஒன் செக்கண்ட். வந்திர்றேன்.’ என்பதுபோல் பதிலுக்கு சைகைக் காட்டினார்.
‘பிலிப், இன்னைக்கி நம்ம சேர்மன் வர்றார் இல்லையா? அதான் ரிசீவ் பண்ண போவேணாமான்னு நம்ம சேதுகிட்ட காலைல பேசினேன்.’
‘அப்படியா? என்ன சொல்றார் மனுஷன்?’
‘மனுஷன் பயங்கரமா கோபப்படறார் பிலிப். நம்மக்கிட்ட எந்த ஃப்ளைட்ல வரேன்னு சொல்லாதவர நாம போய் ஏன் ரிசீவ் பண்ணனுங்கறார். நீங்க என்ன சொல்றீங்க?’
என்ன சொல்றது? சேது மாதவன் நிச்சயம் எதையோ மனசுல வச்சிக்கிட்டுத்தான் இந்த மாதிரி பேசியிருப்பார். ஆனாலும் அவர் சொல்றத இக்னோர் பண்ணிட்டு எப்படி போய் ஏர்போர்ட்ல நிக்கறது என்று யோசித்தார்.
‘அப்படியா சொல்றார்? நீங்க என்ன சொல்றீங்க சார்?’
‘அதான் எனக்கும் புரியலை பிலிப். என்ன பண்ணலாம்?’
என்ன பண்ணலாம்? யோசிச்சிதான் டிசைட் பண்ணனும். இப்ப முதல் வேலை பங்கு பேரவை கூட்டம். அது முடிஞ்சதும் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கலாம். அவர் எப்படி இருந்தாலும் ஈவ்னிங் ஃப்ளைட்லதான வருவார். டைம் இருக்கே..
‘சார் எனக்கு இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சுமார் பத்து பத்தரைக்குள்ள முடிஞ்சிரும். அது முடிஞ்சதும் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வரலாம். என்ன சொல்றீங்க?’
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு எதிர் முனையிலிருந்து, ‘சரி பிலிப். உங்க மீட்டிங் முடிஞ்சதும் கூப்டுங்க. பை.’ என்று பதில் வரவே பிலிப் சுந்தரம் இணைப்பைத் துண்டித்துவிட்டு செல் ஃபோனை ‘ஆஃப்’ செய்தார். தனக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பை மறந்தே போனார்.
காரின் கதவைத்திறந்து செல் ஃபோனை முன் சீட்டில் வைத்துவிட்டு தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த அவை உபதலைவரை நோக்கி விரைந்தார்.
******
‘பிலிப் என்ன சொல்றார்?’ என்ற மனைவியைப் பார்த்தார் சுந்தரம்.
‘அவருக்கு கோயில்ல ஏதோ அர்ஜண்டா மீட்டிங்காம். அது முடிஞ்சதும் கூப்டறேன். டிஸ்கஸ் பண்ணி டிசைட் பண்லாங்கறார்.’
'ஆமாம். இவர் எப்பவுமே இப்படித்தான். கோயில், கோயில்னு அதுலயே கெடப்பார். பெண்டாட்டியா, குட்டியா.. பேசாம இவர் வேலைய விட்டுட்டு சாமியாரா போயிரலாம்.
‘ஏய்.. அப்படியெல்லாம் சொல்லாதே. பாவம் மனுஷன். அவருக்கும் நேரம் போவேணாமா? கோயில் காரியத்துல நம்மள போல இல்ல அவங்க. கிறிஸ்துவங்க வாழ்க்கையில எப்பவுமே ஒரு அர்த்தம் இருக்கும். நம்மள மாதிரி காரியம் வேணும்னா மாத்திரம் கோயிலுக்கு போறவங்க இல்ல.. வாழ்நா முழுசும் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்கு போயிடறாங்களே நம்மால அது முடியுமா?’
‘நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க. அவரப்பத்தி நமக்கு தெரியாதா? மனசுல ஒன்னு வெளியில ஒன்னுன்னு பேசறவங்க மத்தியில பிலிப் ஒரு சுத்த தங்கமாச்சே.. சரி அவர் கூப்டும்போது கூப்டட்டும், நா போயி ஒரு குட்டித்தூக்கம் போடறேன். அவர் சொல்றத கேட்டுட்டு என்ன எழுப்புங்க. அப்புறமா வைதேகிக்கு ஃபோன் பண்ணிக்கலாம்.’
‘சரி.. நீ போய் படு. நானும் ஆஃபீஸ் ஃபைல்ஸ் கொஞ்சம் பாக்கறேன்.’ என்றவாறு எழுந்து தன்னுடைய அலுவலக அறையை நோக்கி நடந்தார் சுந்தரம்..
பழைய சேர்மன் பதவி விலகியதிலிருந்து அவருடைய பொது மேலாளர் அலுவலோடு சேர்ந்து சேர்மன் அதிகாரத்திற்குள் வருகின்ற அனுமதி கோப்புகளும் சேர்ந்துக்கொள்ளவே அவற்றை தினமும் வீட்டுக்கு கொண்டுவந்து பார்ப்பது அவருக்கு வழக்கமாகிப் போனது..
‘நீங்க மாடு மாதிரி மாரடிச்சி என்ன பிரயோசனம். அனுபவிக்கிறது அந்த சேது தானே..’ என்று தினமும் புலம்பிய மனைவியைப் பொருட்படுத்தவே மாட்டார்.
****
வந்தனாவின் மனது ஒரு இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தது..
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? நான் யார்மீதெல்லாம் அன்பு வைக்கிறேனோ அவங்களை மட்டும் கடவுள் ஏன் என்னிடமிருந்து பிரிச்சிடறார்?
முதலில் அப்பா.. அப்புறம் மோகன், அவளுடைய தங்கைகள், அம்மா, இப்போ கமலி..
அப்பாவை இழந்தப்போ வாலிப வயசு.. ரெண்டே நாள் விஷக்காய்ச்சலில் அப்பா இறந்துப் போனப்போ அந்த இழப்பு பெரிசா தெரிஞ்சது. அப்புறம் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த ஒட்டுமில்லே உறவுமில்லேன்னு அண்ணா அவனோட புது பொண்டாட்டியோட பிரிஞ்சி போனப்பவும் அது ஒரு பெரிய இழப்பாத்தான் தெரிஞ்சது.. அப்புறம் மோகன்.. அந்த பிரிவு அவளை முந்தைய இரண்டு பிரிவுகளைவிட பாதித்தது என்பது உண்மைதான்.. அப்புறம் அம்மாவின் மரணம்.. எதிர்பார்த்து காத்திருந்ததுதான் என்றாலும் அதுவும் ஒரு ஆற்றமுடியயத சோகமாய்த்தான் இருந்தது. தாயின் மரணத்தையொட்டி அவளுடைய தங்கைகளும் அவளைப் புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்றது.. அது ஒரு தாற்காலிக இழப்பாயிருந்தாலும்.. அதுவும் அவளை பாதிக்கத்தான் செய்தது..
ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த இழப்பு..
தனக்கு யாருமே இல்லை என்று ஏங்கித் தவித்திருந்தபோது தனக்கு கிடைத்த கமலி.. ஒரு தாய்-மகள் உறவுக்கு ஈடாக.. எப்படி ஒட்டிக்கொண்டாள் தன்னுடன்!...
தன் தாயிடமிருந்து கிடைக்காத அன்பும், அரவணைப்பும் அவளிடமிருந்து கிடைத்தது என்று நினைத்துத்தானே அந்த பிஞ்சு மனம் தன்னிடம் அப்படி ஒட்டிக்கொண்டது?
அதைப் பிரித்துப் பார்ப்பதில் இந்த கடவுளுக்கு என்ன ஆனந்தம்?
சமையலறையையொட்டி இருந்த பூஜை அறைக்குள் நுழைந்து அப்படியே சுவரில் சரிந்து அமர்ந்தாள் வந்தனா.
ஏன், ஏன் சாமி.. எனக்கு மட்டும் இப்படி நடக்குது?
நா அப்படி என்ன பாவத்த பண்ணிட்டேன். அப்படி இந்த குழந்தைய எடுத்துக்கணும்னு நினைச்சிருந்தா எங்கிட்ட எதுக்கு கொண்டுவந்து விட்டே.. நா கேட்டனா? அம்மா போனதுக்கப்புறம் இனி எந்த உறவும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேனே.. இந்த பொண்ண கொண்டுவந்து எங்கிட்ட விடுன்னு உன்ன கேட்டனா சாமி..
நீயா கொண்டு வந்து காமிச்சே..
நான் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்காத சந்தோஷத்த எனக்கு குடுத்தே..
இப்போ.. மறுபடியும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறாப்பல பண்ணிட்டியே சாமி.. உனக்கே இது நல்லாருக்கா?
இப்போ பொணமா கெடக்கற என் குழந்தைய பாக்கறதுக்கே நான் தயங்கி நிக்க வேண்டியதாயிருச்சே..
நான் போயி அந்த வாசல்ல நின்னு அவ அம்மா உன்னாலதாண்டி எம் பொண்ணு போய்ட்டான்னு கதற்னா நான் என்ன பண்ணுவேன் சாமி, நா என்ன பண்ணுவேன்..
பூஜை அறையில் துக்கத்தின் பிடியில் முகம் கவிழ்ந்து கிடந்த வந்தனாவுக்கு படுக்கையறையில் தரையில் கிடந்து அலறிக்கொண்டிருந்த அவளுடைய செல் ஃபோனின் ஒலி அவளுடைய செவிகளில் விழவே இல்லை..
அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ..
அவளாகவே எழுந்து உணவறையிலிருந்த வாஷ் பேசினில் முகத்தை அலம்பிக்கொண்டு தலைமுடியைக் கையாலேயே கோதிவிட்டுக் கொண்டாள்..
வாசற்கதவருகின் பின்புறம் ஆடிக்கொண்டிருந்த வீட்டுச் சாவியையும் ஹாலில் சோபாவில் கிடந்த தன்னுடைய கைப்பையையும் எடுத்துக்கொண்டு கதவை சாத்தி பூட்டினாள்..
கால்கள் இரண்டும் பலவீனத்தால் நடுங்க.. தள்ளாடி, தள்ளாடி லிஃப்டை நெருங்கி, உள்ளே நுழைந்து தரைதள பொத்தானை அமுக்கி இறங்கினாள்..
வெளிறிப் போயிருந்த முகத்துடன் தரைதளத்தில் இறங்கி வாசலை நோக்கி நடந்து சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள்..
தன்னருகில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு, தன்னுடைய செய்கை மாணிக்க வேலையும் அந்த குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கப்போகிறது என்பதை உணராதவளாய் ‘தாம்பரம் போப்பா. சீக்கிரம்.’ என்றாள்..
தொடரும்..
3 comments:
அந்த நம்பர் கலியோட அண்ணன் ஃபோன் பண்ணுனதா?
ம்ம்ம்...பிரச்சனைன்னு தெரியுது...வந்தனாவப் பாசம் இழுக்குதே...பாவம்...
vandhana pavam.........
kamali,kamali thodarba ezhudhum eduvum...........
sory
adhu eppadi sooriyan 46 m sooriyan 14 m ore samayathil varuginrana?
Post a Comment