கண்களில் தளும்பி நின்ற கண்ணீரினூடே ராசம்மாள் தன் தந்தை செல்வதையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.
‘என்னத்தடி பார்த்துக்கிட்டுட நிக்கறே? உங்கப்பாரப் பத்தித்தான் நமக்கு தெரியுமே. வீட்ட விட்டு எறங்கிட்டாருன்னா அவுகளுக்கு அவுக ஓட்டல பத்திதானே நெனப்பெல்லாம்? இதுல ஒன்ன பத்தி நெனக்கறதுக்கு எங்க அவுகளுக்கு நேரமிருக்கப் போவுது?’
ரரசம்மாள் சில விநாடிகள் பதில் பேசாமல் தன் தாயையே பார்த்தாள்.
யாரை நொந்துக்கொண்டு என்ன பயன்? தன்னுடைய விருப்பத்தின்படி நடந்த திருமணமாயிற்றே..
ராசேந்திரனை முதன் முதலாய் பார்த்த நாள்தான் தன் வாழ்விலேயே துரதிர்ஷ்டம் பிடித்த நாள் என்று நினைத்தாள்.
செல்வம் கறுப்புங்கற ஒரே காரணத்துக்காக அவரை வேண்டாம் என்று நிராகரித்ததன் பலன்தானே இத்தனை வேதனைகளுக்கும் காரணம்?
மற்றபடி செல்வத்தையும் ராசேந்திரனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் செல்வம் சொக்கத் தங்கம் என்றால் ராசேந்திரன் வெறும் பித்தளை.. ஏன்? அதை விட கேவலம்.
தன்னை திருமணம் செய்துக்கொண்டதே தன்னுடைய தந்தையின் திரண்ட சொத்துக்காகத்தான் என்று அவளுடைய முகத்தைப் பார்த்தே ராசேந்திரன் கூறியபோதுதான் அவளுக்கு தன்னுடைய மடத்தனம் உறைத்தது..
அப்போது திருமணம் முடிந்து ராசேந்திரனுடைய வாரிசு அவளுடைய வயிற்றில் ஐந்தாவது மாதம்.
இல்லையென்றால் போடா சரிதான் என்று அந்த உறவையே உதறிவிட்டு வந்திருப்பாள். அந்த நிலையிலும் செல்வம் அவளை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டிருப்பான்.
இப்படி ஒரு முறிவை எதிர்பார்த்துத்தானோ என்னவோ தன் தந்தை எவ்வளவு வற்புறுத்தியும் அவளுடைய திருமணம் முடிந்து சுமார் ஒரு வருடத்திற்கும் கூடுதலாக திருமணம் செய்துக்கொள்ளாமல் செல்வம் காத்திருந்தான்போலும்..
அதை கண்டுக்கொள்ளாத முட்டாளாக, கண் இருந்தும் குருடியாக இருந்துவிட்டோமே என்று இப்போது நினைத்து மனம் நொந்தாள் ராசம்மாள். அந்த நினைப்பே அவளையுமறியாமல் கண்கள் கலங்கி ததும்பி கன்னங்களில் இறங்கியது..
கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரைக் கூட துடைக்கத் தோணாமல் தன் முன் நின்ற மகளைப் பார்த்து பரிதவித்துப் போனாள் ராசாத்தியம்மாள்.
எத்தனை செல்லமாய் வளர்ந்த பெண்..
‘பொம்பள புள்ளைய இத்தன செல்லம் கொடுத்து வளக்கணுமாக்கும்? ஆம்பள புள்ள கணக்கா பேண்டும் சட்டையும் குட்ட முடியும்.. இப்படியே போனா ஒம் பொண்ண யாரையாச்சும் ஒரு வெள்ளக்காரனுக்குதேன் கட்டிக் குடுக்கணும்.. அவளுக்குன்னு பொறந்ததிலருந்தே காத்துக்கிட்டிருக்கற செல்வத்த இவ எங்கடி கட்டப் போறா? இவ இப்ப இருக்கற கோலத்துல, இவ அவன் மேல ஆசைப்பட்டாலும் ஏன், அவன் இவள கட்டுறதுக்கு சம்மதிச்சாலும் நா சம்மதிக்க மாட்டேன்..’ என்று அன்று புலம்பிய அவளுடைய மாமியார் கிழவியின் சாபம்தானோ என்னவோ திருமணம் முடிந்து ஒரு வருடம் முடியறதுக்குள்ளவே வாளாவெட்டியா திரும்பி வந்து..
தேவையாடி மவளே இது.. தேவையா?
இப்ப கண்ணீர் வடிச்சி என்ன பிரயோசனம்?
நீதான் சின்ன பொண்ணு.. கறுப்பு வேணாம்னு நின்னே.. எனக்கெங்க போச்சி புத்தி? நானும் ஒன்னோட சேர்ந்துக்கிட்டு அந்த செல்வம் பையன வேண்டாம்னு குதிச்சேனே என் புத்தியத்தான் செருப்பால அடிக்கணும்..
கண்ணீருடன் நின்ற தன் மகளை நெருங்கி அவளுடைய தோளை தொட்டாள் ராசாத்தியம்மாள். ‘என்னத்தம்மா யோசிக்கறே? எல்லாம் அந்த பளனி முருகன் பாத்துப்பார். நீ தெம்பா இருந்தாத்தான் நானும் நிம்மதியா இருக்க முடியும். ஒங்கப்பாவ நம்பிக்கிட்டிருக்காம அந்த செல்வம் பயகிட்ட பேசுவோம். என்ன சொல்றே?’
ராசம்மாள் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து அறைக் கதவை சாத்திக்கொண்டாள்..
கட்டிலில் படுத்து கண்களின் ஓரத்தினூடே வழிந்தோடிய கண்ணீரைப் பொருட்படுத்தாமல் ..
தன்னுடைய இப்போதைய அவல நிலையை நினைத்து அவளையுமறியாமல் அவளுடைய உதடுகள் முனுமுனுத்தன ...
நிறைய கனவுகளுடன் ஆரம்பிக்கிறது
எல்லா உறவுகளும்..
கனவுகளுக்கும், நிகழ்வுகளுக்கும்
இடைவெளி நிறைய என்பதை
புரிந்து கொள்ள கொடுத்த விலை அதிகம்...
என் மனதில் வலி அதிகம்...
முட்கள் குத்தியவுடன் ரத்தம்,
அழகாகத்தான் இருந்தது
தூரத்தில் ரோஜா...
உறவுகளின் உன்னதத்தை
உணராத என் கணவன்
சிதைத்தது என்னை மட்டுமா..
என் கனவுகளும், எதிர்பார்ப்புகளும்
கலைந்து போயின
கற்பனையிலே...
கறுப்பின் மீது கொண்ட வெறுப்பால்
வெளுப்பின் பக்கம் ஒதுங்கினேன்..
கணவனின் குணம் புரிந்தபோது
வெளுப்பு கறுப்பானது
வாழ்க்கை ஒளியிழந்தது...
அன்பினால் ஆனது இவ்வுலகம்
பண்பிலா கணவனையடைந்தது சோகம்..
நிறத்தைப் பார்த்து
குணத்தை இழந்த என் கதை
எச்சரிக்கும் தவறி நடப்போரை..
எதிர்காலம் என்னை ஞாபகம் வைத்திருக்க
நிகழ்காலம் தொலைத்தவள் நான் !!
(கவிதை உபயம்: சோம்பேறிப் பையன்)
மூடியிருந்த கதவையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்ற ராசாத்தியம்மாள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் சமையல்கட்டை நோக்கி நடந்தாள்.
தொடரும்..
No comments:
Post a Comment