13.3.06

சூரியன் 39

சோபாவில் கிடந்த செல் ஃபோன் சிணுங்குவதைப் பார்த்த பாபு சுரேஷ் எடுத்து யார் என்று பார்த்தார்..

செல் ஃபோன் திரையில் தெரிந்த முன், பின் தெரியாத எண்ணைப் பார்த்தவர் தயக்கத்துடன், ‘ஹலோ.. ஹ¥ இஸ் திஸ்?’ என்றார்..

‘சார்.. நான் பத்மநாபன்னு சேது மாதவன் சாரோட ஆள் பேசறேன்.’

சேது மாதவனோட ஆளா? ஏதாச்சும் அடியாளாத்தான் இருப்பான். என்ன எதுக்கு கூப்டறான்?

‘ஒனக்கு என்ன வேணும் இப்போ..?’ என்றார் கோபத்துடன்.

எதிர்முனையிலிருந்து கோபத்துடன் வந்த குரல் செவியில் அறைய தன்னுடைய செல் ஃபோனை சற்றே தள்ளிப் பிடித்தான் பத்மநாபன். சார் நம்மள மாதிரி ஆளா இருப்பார் போலருக்கே? இருந்தாலும் நமக்கென்ன? நாம கேக்க வேண்டியத கேட்ருவோம்.

‘சாரி சார். ஒங்க பொண்ணோட்டோ ஒன்னு வேணும். அதான் கூப்டேன்.’

‘எம் பொண்ணு போட்டோவா? எதுக்குய்யா?’

ஊம்? கல்யாணம் பண்ணிக்கறதுக்கு! யோவ் ஒம் பொண்ணு என்ன ஒலக அழகியாக்கும்? ஃபோட்டோவே வச்சே இந்த மெட்றாஸ்ல கண்டுபிடிக்கறது கஷ்டம். மாதவன் சாராச்சேன்னு சரி ட்ரை பண்ணி பாக்கலாம்னு புறப்பட்டா நீ ரொம்பத்தான்..

‘மாதவன் சார் சொல்லித்தான் கேக்கறேன் சார். ஃபோட்டோ இல்லாம ஒங்க பொண்ண எப்படி கண்டுபிடிக்கறது சார்? நா ஒங்க வீட்டு கேட்டுக்கு வெளியத்தான் நிக்கறேன். சீக்கிரமா கொடுத்தா இன்னைக்கி ராத்திரிக்குள்ள கண்டுபிடிச்சிரலாம்..’

பாபு சுரேஷ் யோசித்தார். வேறு வழி தெரியாததால் அரை மனதுடன், ‘நீ அங்கேயே நில்லு.. ரெண்டு நிமிஷத்துல கொண்டு வரேன்.’ என்று செல் ஃபோனுடன் தன் மகள் ரம்யாவின் அறைக்கு விரைந்தார்.

****

ரம்யா காலையில் எழுந்ததும் ‘நாம எங்க இருக்கோம். இது நம்ம பெட் ரூம் இல்லையே’ என்று ஒரு நொடி குழம்பிப் போய் அடுத்த நொடியே தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர தன் கட்டிலுக்கு அருகிலிருந்த கட்டிலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தன் தோழி புவனாவைப் பார்த்தாள்.

இவ மட்டும் நேத்து ராத்திரி தன்னை சேர்த்துக்கலைன்னா என் கதி என்னாயிருக்கும்? ஏதோ தைரியத்தில, அப்பாவுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு வீட்ல அம்மாக்கிட்டக் கூட சொல்லாமல் தான் வீட்டை விட்டு புறப்பட்டு வந்தது நினைவுக்கு வர தான் செய்தது சரிதானா என்று நினைத்துப் பார்த்தாள். இவ மட்டும் தங்கறதுக்கு ஒத்துக்கிட்டிருக்கலைன்னா என்ன ஆயிருக்கும்?

எதிர் சுவற்றிலிருந்த மணிக்காட்டியைப் பார்த்தாள். காலை மணி 5.00 என்றது.

கண்களை மீண்டும் மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள். உறக்கம் வரவில்லை..

பாவம் அம்மா. நேத்து ராத்திரில்லாம் தூங்கினாளோ இல்லையோ..

என்னை காணலையேங்கற கவலையோட அப்பாவோட ஏச்சையும் பேச்சையும் கேட்டு அம்மா என்ன பாடுபடறாளோ தெரியலையே..

முந்தைய நாள் இரவு புவனாவின் வீட்டு வாசலில் வந்த நின்றதை நினைத்துப் பார்த்தாள். அவளையுமறியாமல் கண்கள் கலங்கி குளமாகின..

***

‘என்ன ரம்யா இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறே?’

‘எனக்கு வேற வழி தெரியலைடி.. நீ எனக்கு ஒரு ரெண்டு வாரத்துக்கு மட்டும் தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணாப் போறும்.’

ரெண்டு வாரமா?

ரம்யாவின் கல்லூரித்தோழி புவனா என்ன பதிலளிப்பதென தெரியாமல் வாசலில் நின்ற ரம்யாவையே பார்த்தாள்.

ரம்யாவுக்கு நெருப்பில் நிற்பதுபோலிருந்தது.

புவனா ஒரு முடிவுக்கு வந்தவள்போல், ‘சரி, உள்ள வா.’ என்றாள்.

ரம்யா அப்போதும் திருப்தியடையாமல், ‘ஏய் புவனா. உனக்கு ஏதும் பிரச்சினையாயிருந்தா சொல்லிரு.. இதுல உங்கப்பா உன்ன ஏதாச்சும் சொல்வாரோன்னு நினைச்சா நா வேற எங்கயாச்சும் தங்கிக்கறேன். என்னால உனக்கு ஏதும் பிரச்சினை வந்துறக்கூடாது.’ என்றாள்..

புவனா யோசித்தாள். இவ சொல்றதும் சரிதான். அப்பா உண்மை தெரிஞ்சா நிச்சயம் ஒத்துக்க மாட்டார். ஒரு உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியே வீட்டை விட்டு வந்த ஒரு பெண்ணுக்கு, அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு, அவளுடைய பெற்றோருக்கு தெரியாமல் அடைக்கலம் கொடுத்தார் என்று அவருடைய டிப்பார்ட்மெண்ட்டுக்குத் தெரிந்தால் அவருடைய வேலைக்கே வேட்டு வைத்தாலும் வைப்பார்கள்..

ஆனாலும் இவளப் பார்த்தாலும் பாவமா இருக்கே. இவ இந்த ராத்திரி நேரத்துல எங்க போயி.. நா இவள திருப்பியனுப்பி அப்புறம் ஏதாச்சும் நடக்கக்கூடாதது நடந்திருச்சினா அது நம்ம மனச போட்டு அறுக்குமே வாழ்நாள் முழுசும்..

சரி.. இன்னைக்கி ஒரு ராத்திரி இவ இங்க தங்கட்டும்.. ஊர்க்கு போயிருக்கற அப்பா நாளைக்கு பகல் வந்துரட்டும்.. எதையும் மறைக்காம அவர்கிட்ட சொல்லிட்டு என்ன பண்ணணுமோ பண்ணலாம்.

‘ஏய் உள்ள வாடி.. வாசல்லயே நின்னுக்கிட்டு.. யாராச்சும் பாக்கறதுக்கு முன்னாடி உள்ள வா.. நல்ல வேளை, இதுவரைக்கும் கேட்ல நின்னுக்கிட்டிருந்த கான்ஸ்டபிள் இப்பத்தான் வீட்டுக்கு போனாரு. நைட் டூட்டி கான்ஸ்டபிள் வர்றதுக்குள்ள நீ படுக்க போயிரணும். அவர் வந்ததும் ஹாலுக்குதான் முதல்ல வருவாரு.. உன்ன இந்த நேரத்துல பார்த்துட்டா வேற வினையே வாணாம்.’

ரம்யா அரைமனதுடன் உள்ளே நுழைந்து ஹாலிலிருந்த சோபா ஒன்றின் முனையில் அமர்ந்தாள். அவள் பலமுறை வந்திருந்த வீடானாலும் தான் அப்போதிருந்த ரம்யா இல்லையே இப்போது..

‘ரொம்ப தாங்ஸ்டி புவி..’ என்றாள் மெல்லிய குரலில்.

புவனா ரம்யாவின் அருகில் சென்றமர்ந்து சில்லிட்டுப் போயிருந்த அவளுடைய கரங்களைப் பற்றினாள். ‘என்னடி இது இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு உன் கை.. பயத்துலயா?’

ஆமாம் என்று தலையை அசைத்த ரம்யாவின் தலையில் செல்லமாய் ஒரு குட்டு குட்டினாள். ‘ஏண்டி, இந்த பயம் வீட்லருந்து கிளம்பணும்னு நினைச்சப்பல்லே வந்திருக்கணும்? வீட்ட விட்டு வெளியில வந்தாச்சி. அப்புறம் பயந்து நடுங்கி என்ன பண்றது? சரி.. ஏதாச்சும் சாப்ட்டியா?’

‘இல்லடி.. பசியா இப்ப நினைவுக்கு வரும்? நீ எங்க ஏதாச்சும் சொல்லி என்ன திருப்பிக் கொண்டு எங்க வீட்ல விட்டுருவியோன்னு ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன் தெரியுமா?’

புவனா பதிலளிக்காமல் ரம்யாவைப் பார்த்தாள். ‘சீ லூசு.. நீ வந்து நின்னதும் ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு தெரியாம நா திகைச்சுப் போய் நின்னதென்னவோ உண்மைதான். ஆனா உன்ன திருப்பி உங்க வீட்டுக்கு அனுப்பற எண்ணம் மட்டும் நிச்சயமா எனக்கு வரலை.. உங்கப்பாவப் பத்திதான் எங்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கியே.. அவருக்கு, நீ செஞ்சது சரின்னுதான் எனக்கு தோணுது. அப்பா வரட்டும். அவருக்கும் உன்னோட நிலமை புரியும்னு நம்பறேன். இல்லே.. அதெல்லாம் முடியாது உன் ஃப்ரெண்டு இங்க இருக்கறத நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னார்னு வையி.. நானும் ஒங்கூடவே புறப்பட்டு வந்துருவேன்..’

ரம்யா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள். ‘ஐயையோ, என்னடி நீ என்னென்னமோ சொல்றே? தயவு செஞ்சி உங்கப்பாக் கிட்ட நா எங்கப்பாக்கிட்ட கோச்சிக்கிட்டு வந்திருக்கேன்னு மட்டும் சொல்லிராத.. ‘அவ அப்பாவும் அம்மாவும் ஊர்ல இல்ல.. கல்யாண இன்விடேஷனஸ் ஊர்ல டிஸ்ட்ரிபியூட் பண்றதுக்கு போயிருக்கா.. வீட்ல தனியா இருக்கப் பிடிக்காம எங்கூட வந்து இருக்கேன்னாப்பா’ன்னு மட்டும் சொல்லுடி.. இல்லன்னா நா இங்க இருக்கறதுக்கு உங்கப்பா நிச்சயம் ஒத்துக்க மாட்டார். எனக்காக இந்த ஒரு பொய்ய மட்டும் சொல்லுடி புவி.. ப்ளீஸ்.’

என்ன செய்வதென தெரியாமல் தன்னையே குழப்பத்துடன் பார்த்த தன் தோழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ரம்யா கெஞ்ச, ‘சரிடி, நீ சொல்றா மாதிரியே சொல்றேன்.. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த நடத்தலாம்னு சொன்னதுல இந்த மாதிரி பொய்யும் சேர்த்தியோ என்னவோ.. நீ அழ ரம்பிச்சிராத.. வா ஃப்ரிட்ஜ்லருக்கற ப்ரெட்டும் ஜாமையும் சாப்டுட்டு என் ரூம்ல போய் படு.. நா நைட் டுட்டி கான்ஸ்டபிள் வந்ததும் வரேன்..’

***

‘ஏய்.. கண்ண மூடிக்கிட்டு வெறுமனே படுத்துக்கிட்டிருக்கறது நல்லாவே தெரியுது.. எழுந்திரு..’ என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த ரம்யா எதிரில் காப்பி கோப்பையுடன் நின்ற தன் தோழி புவனாவைப் பார்த்தாள் ரம்யா.

எதிரில் நின்ற புவனாவின் புன்னகை அவளுடைய உதடுகளிலும் தொற்றிக்கொள்ள எழுந்து காப்பிக் கோப்பையுடன் சேர்த்து அவளுடயை கரங்களையும் பற்றிக்கொண்டாள்.

‘புவி.. நீ மட்டும் நேத்து ராத்திரி...’

‘ஏய், ஏய். போறும். நேத்து ராத்திரி யம்மான்னு ஆரம்பிச்சிராத.. இன்னும் ஒரு மணி நேரத்துல அப்பா வந்துருவாரு.. அவர எப்படி பேசி சமாளிக்கறதுன்னு நா தடுமாறிக்கிட்டிருக்கேன்.’

ரம்யாவின் முகத்தில் கலவரம் பற்றிக் கொள்ள, ‘ஏய் என்னடி? திடீர்னு ஒரு குண்ட தூக்கிப் போடறே?’ என்றாள்.

புவனா உரக்கச் சிரித்தாள். ‘குண்டா? நானா? நீ நேத்து போட்டத விடவா?’



தொடரும்..

4 comments:

G.Ragavan said...

ம்ம்ம்...அந்த நேரத்தில் புவனா செய்ததுதான் சரி. இரவு வேளையில் எங்கே போய் என்ன செய்வாள். பாதுகாப்பு என்றும் ஒன்று இருக்கிறதே. தந்தையிடம் பேசி நல்ல முடிவு எடுப்பாள் என்று நம்புவோம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

அந்த நேரத்தில் புவனா செய்ததுதான் சரி.//

கரெக்ட். ஆனா அவ அப்பாவும் அதே கோணத்துலருந்து பாக்கணுமே..

siva gnanamji(#18100882083107547329) said...

romba riskana twist....epdi kondu pgapreenga?
analum adheedha thunichal

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சி.ஜி!

அதான் தினம் தினம் நம்ம வேலையிலயே ரிஸ்க் எடுத்துக்கிட்டிருக்கேனே.. இது என்ன கற்பனை உலகம்தானே..

ரிஸ்க் எடுக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன :-()

சமாளிச்சிரலாம்னு நினைக்கிறேன்.. பார்க்கலாம்..