இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை. லீவு.
இன்னைக்கென்ன, குறைஞ்ச பட்சம் இன்னும் ஆறுமாசத்துக்காவது உனக்கு லீவுதானடா என்றது அவனுடைய மனது.
ரவி படுக்கையில் படுத்தவாறே கூரையில் ஸ்லோ மோஷனில் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையே பார்த்துக்கொண்டிருந்தான். இப்படித்தான் இலக்கில்லாமல் என்னுடைய வாழ்க்கையும் ஆகிப்போனது என்று நினைத்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நேரத்தில் யாராவது அவனிடம் வந்து ‘டேய் ரவி, அடுத்த ரெண்டு வருஷத்துல நீ இந்த பதவியிலேயே இருக்க மாட்டே.. பார்த்துக்கிட்டே இரு..’ என்று கூறியிருந்தால் அதை ஏளனத்துடன் பொருட்படுத்தியிருக்கவே மாட்டான்.
அத்தனை உச்சத்தில், உயரத்தில் இருந்தான் அவன். அவ்வாண்டின் சிறந்த மேலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய சேர்மன் க்ளப் உறுப்பினரானவன். ‘ You should be aware that It is an exclusive group Mr.Ravi Prabhakar. At present you are the youngest member in my Club.’ என்று சேர்மன் அவனைத் தோளில் தட்டி உற்சாகப்படுத்தியது...
அதே ஆண்டில் நடந்த பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வில் கிளை மேலாளர் பதவியிலிருந்து முதன்மை மேலாளராக (chief manager) பதவி உயர்வுபெற்று மனத்தளவில் இந்த உலகின் உச்சிக்கே.. சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றது...
இப்படி அதள பாதாளத்தில் விழுவதற்கா அத்தனை வேகமாக உயர்ந்தேன்..?
இதிலிருந்து எப்படி, எப்படி நான் மீளப் போகிறேன்..? அப்படியே மீண்டாலும் என்னுடைய வங்கி வாழ்க்கையில் இனியும் யாராவது என்னைப் பொருட்படுத்துவார்களா?
What am I going to do? Is it worth living? தலைக்கு மேல் சுழன்றுக்கொண்டிருந்த மின் விசிறி அவனை அழைப்பதுபோல் தோன்றியது..
என்னைப் போன்ற நிம்மதியிழந்து தவித்த எத்தனையோ ஆத்மாக்களுக்கு இவ்வுலக நரகத்திலிருந்து விடுதலையளித்ததாயிற்றே..
படுக்கையில் எழுந்தவன் கட்டிலில் சுருண்டு கிடந்த போர்வையையும் மின்விசிறையையும் மாறி, மாறி பார்த்தான்.
எழுந்து நின்றான். படுக்கைக்கு நேர் எதிரே இருந்த வாஷ் பேசினுக்கு மேல் இருந்த நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தைப் பார்த்தான். What do you say? Should I go ahead and commit.....?
‘என்ன ரவி இது சின்ன குழந்தையாட்டமா? எத்தனை எச்.ஆர் ப்ரோக்ராம்ஸ் அட்டெண்ட் பண்ணியிருப்பீங்க? When things get tough, tough gets goingனு கேள்விப்பட்டதில்லை நீங்க? சோதனை வரும்போதுதான் நாம இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கணும்.’
நேற்று அவனிடம் கூறிய பிலிப் சுந்தரம் சாரின் வார்த்தைகளை அவனையுமறியாமல் நினைவுகூர்ந்தான். It is easy to preach Sir.. But to practice is not.. அவனையுமறியாமல் கண்கள் கலங்கி அவனுடைய பிம்பமே கலங்கலாக தெரிய திரும்பி அறைவாசலைக் கடந்து பால்கனியை அடைந்தான்.
பத்தாவது மாடியிலிருந்து சென்னை நகரம் பார்வைக்கு எத்தனை அழகாக இருக்கிறது.. வானம் இன்றைக்குப் பார்த்து எந்த களங்கமும் இல்லாமல் நீலமாக.. பளிச்சென்று இருந்தது..
இதேபோல் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த களங்கம் போய்.. Is it possible? Will I be able to come out unscathed?
குனிந்து பார்த்தான். அந்த பலமாடி குடியிருப்பில் குடியிருந்தவர்களின் பணக்காரத்தனமான வாகனங்கள் காலை வெய்யிலில் சில பளபளப்புடன், சில உறைகள் அணிந்து, அணிவகுத்து நிற்பது தெரிந்தது.
இங்கருந்து தாவுனா கீழருக்கற பார்க்கிங் லாட்டுக்கு போய் சேர்றதுக்கு எத்தனை செக்கண்ட் ஆவும், இல்ல நிமிஷமா? அந்த இடைபட்ட நிமிஷங்கள்ல எவ்வளவு லேசா.. ஏதோ ஆகாசத்துல மிதக்கறதப் போல.. இந்த எல்லா தொல்லைகள்லருந்தும் விடுதலைக் கிடைச்ச ஒரு ஃப்ரீடம்..
‘இப்ப என்ன நடந்திருச்சின்னு கவலைப்படறீங்க? We have ordered only to suspend you, we have not terminated your services!’
மறுபடியும் எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க பிலிப் சார்? But I should be grateful to you Sir. But for you I might be in prison today.. அது மட்டும் நடந்திருந்தா எனக்குன்னு யார் இருக்கா, வந்து பார்க்க மஞ்சுவைத் தவிர..
மஞ்சு.. மஞ்சு.. where are you மஞ்சு?
கீஈஈஈஈஈழே ஓசையில்லாமல் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தான். எத்தனை இயந்திரத்தனமானது இந்த வாழ்க்கை..? எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களைப் போலத்தானே நானும் இருந்தேன்..
என்னவோ நான் இல்லையென்றால் இந்த வங்கியே இல்லையென்று நினைத்துத்தானே ஓடிக்கொண்டிருந்தேன்? வார நாளுக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் வித்தியாசம் தெரியாமல்.. வங்கியை விட்டால் வேற வாழ்க்கையில்லேன்னு நினைச்சிக்கிட்டுத்தானே வீட்ல காத்துக்கிடந்த மஞ்சுவை மறந்துப்போனேன்..
இன்னைக்கி..
‘எப்படிறா ரவி உன்னால மட்டும் இது முடியுது? எங்களுக்கு கொடுக்கற பட்ஜெட்டையே வருஷம் பூரா முட்டி மோதினாலும் கடைசி நேரத்துல விண்டோ ட்ரெஸ் பண்ணித்தான் அச்சீவ் பண்ணமுடியுது. அதுக்கே முளி பிதுங்கிப் போவுது. நீ எப்படிறா பட்ஜெட்டுக்கு மேல வருஷா வருஷம் அதுவும் இருநூறு பர்செண்ட் க்ரோத் எல்லாம் காமிக்கறே?’ என்பார்கள் அவனுடைய சக மேலாள நண்பர்கள்.
அதானே! எப்படி என்னால அது முடிஞ்சது..? ஒரு பக்கம் அச்சீவ்மெண்ட் மேல அச்சீவ்மெண்ட்.. இன்னொரு பக்கம் தோல்விக்கு மேல தோல்வி..
‘எனக்குன்னு ஒரு குழந்தைய குடுக்க முடியலையே உங்களால.. ஆஃபீஸ்ல நீங்க அச்சீவ் பண்றதெல்லாம் அஞ்சி மணிக்கு மேல உதவாது ரவி..’ என்ற மஞ்சுவின் கேள்வியும்,
‘When you go home at the end of the day how do you look at yourself.. just a husband? Are you satisfied with what you have achieved at home Ravi?’
அவனுடைய தந்தையின் நெருங்கிய நண்பர், அவனுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு அவனுடைய குடும்பத்துக்கு தரவாய் இருந்தவர், பட்டாபி ஐயர் கேட்டபோது அவனால் பதில் கூற முடியாமல் விழித்த காட்சியும் அவன் கண்முன்னே ஓடியது..
சில்லென்ற நீர்த்துளிகள் முகத்தில் படவே திடுக்கிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் தெளிவாக இருந்தது. பின்னே எங்கிருந்து?
அண்ணாந்து மேல் மாடியைப் பார்த்தான். கட்டிடத்துக்கு மேலிருந்த தண்ணீர் தொட்டி நிறைந்து நீர்த்துளிகள் தெறித்து சிதறுவது தெரிந்தது..
‘இந்த வாட்ச்மேன்கிட்ட எத்தனதடவைதான் சொல்றதுன்னே தெரியலை.. அவனவன் தண்ணிக்கு லாட்டரி அடிக்கிறான். இவன் மோட்டர போட்டுட்டு எங்கத்தான் போறானோ..’ என்ற குரல் கேட்டு அடுத்த வீட்டு பால்கணியைப் பார்த்தான்.
அதே நேரத்தில் அங்கு நின்றுக்கொண்டிருந்தவரும் திரும்பிப் பார்க்க, ‘என்ன ரவி.. ரெண்டு மாசத்துல ஆளே மாறிப்போய்ட்டீங்க? ஏதாச்சும் கோவிலுக்கு வேண்டுதலா?’ என்றார் அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்.
அவருடைய பெயர் இவனுக்குத் தெரியாதிருக்க அவருக்கெப்படி தன்னுடைய பெயர் தெரிந்தது? ஆனால் அவர் சென்னையிலிருந்த ஒரு பிரபல சட்ட நிறுவனத்தில் (Law Firm) பங்குதாரராக இருப்பவர் என்பதுமட்டும் அவனுக்கு தெரியும்.. அதுவும் மஞ்சு வழியாகத்தான்.
‘இல்ல சார்.. சும்மாத்தான்..’ என்று இழுத்தான்.
அவர் சிரித்தார். ‘என்ன சார். ரெண்டு வருஷமா பக்கத்து பக்கத்து ஃப்ளாட்ல இருக்கோம்னுதான் பேரு. உங்க மிசஸ்சும் நம்ம மிசஸ்சும் ஃப்ரெண்ட்ஸ்.. ஆனா நம்மள பாருங்க. உங்க பேரே உங்க மிசஸ் சொல்லித்தான் தெரியும்..’
மஞ்சு... ஆம் நண்ப, நண்பிகளைக் கவர்வதில் மிகவும் சமர்த்து அவள்.. அப்படித்தானே முதல் முதலாக தன்னைப் பார்த்ததுமே அவளுடைய அந்த அழகிய வெண்பற்கள் நிறைந்த சிரிப்பால் கவர்ந்தாள்? அழகு மட்டுமா, நல்ல மென்மையான இதயம் கொண்டவளாயிற்றே என் மஞ்சு? நாந்தான் அவளைப் புரிந்துக்கொள்ளவில்லை..
சட்டென்று மனதில் தோன்றிய எண்ணத்துடன் அவரைப் பார்த்தான், ‘சார் if you don’t mind. Can you spare a minute?’
அவர் வியப்புடன் அவனைப் பார்த்தார். ‘சொல்லுங்க மிஸ்டர் ரவி.’
‘என்னுடைய ஆஃபீஸ் விஷயமா.. ஒரு ரெண்டு நிமிஷம்..’
‘You mean you want to consult me?’
‘Yes Sir. I won’t take more than two minutes.’
அவர் சிரித்தார். ‘மிஸ்டர் ரவி.. எதுக்கு ரொம்ப ஃபார்மலா பேசறேள். இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைதானே? எங்க வீட்ல எல்லாரும் எழுந்துக்கறதுக்கே ஒன்பது மணியாயிரும். என்னால அது முடியாது. காலங்கார்த்தால எழுந்து ஃபில்டர் காப்பிய குடிச்சுட்டு ஒரு முக்கா மணிநேரம் வாக் போலன்னா மண்டை வெடிச்சுரும்.. தோ வர்றேன். எங்க வீட்ல வேணாம்.. உங்க ஃப்ளாட்டுக்கு வரேன்.’
தொடரும்..
No comments:
Post a Comment