7.3.06

சூரியன் 36

நளினி அன்று காலை கண்விழித்தபோது முதலில் கண்ணில் பட்டது அவளுடைய படுக்கைக்கு அருகிலிருந்த குறுமேசையில் திறந்து கிடந்த குறிப்பேடு.

நந்துவின் தம்பியையும் தங்கையையும் அழைத்து பேச வேண்டுமென்று நினைத்து அவர்களுடைய தொலைப்பேசி எண்களைக் குறித்துவைத்துவிட்டு படுக்கச் சென்றது நினைவுக்கு வரவே குறிப்பேட்டை எடுத்து ஒரு முறைப் பார்த்தாள்.

இவர்களை அழைத்துப் பேசுவதால் தனக்கும் நந்துவுக்கும் இடையிலுள்ள பிரச்சினை தீர்ந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்தாள்.

நந்தக்குமாரின் தந்தை பணியிலிருந்து ஓய்வுப் பெற்றப் பிறகு அக்குடும்பத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னுடைய தம்பியையும் தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கி திருமணமும் செய்துவைத்தவன் தன் கணவன் என்பது அவள் அறிந்ததுதான். அவ்வளவு ஏன், அவர்கள் இருவருடைய திருமணமுமே தன்னுடைய முயற்சியால்தானே நடந்தது?

ஆகவே, அவர்கள் இருவருக்குமே தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் அக்கறை இருக்கும் என்று நம்பினாள் நளினி.

அவளுக்கும் நந்துவுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த பிணக்குகளை அவர்களிருவருமே அறிந்து வைத்திருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

‘அண்ணா எப்பவுமே அப்படித்தான்.. மத்தவங்க மனச புரிஞ்சிக்கத் தெரியாத ஜடம்னு கூட சொல்லலாம். அவருக்கு அவரோட யூனியன், சகாக்கள் இவங்கதான் முக்கியம். சேட்டத்தி ஒண்ணும் விஷமிக்கேண்டா.. எந்தெங்கிலும் பிரஸ்ணம் உண்டாவும்போ பறஞ்சா மதி.. ஞானும் சங்கரும் வராம். நெங்கள் பறஞ்சா சேட்டன் கேக்கும்.’ என்பாள் நந்துவின் தங்கை சங்கீத்தா.

நளினி கட்டிலிலிருந்து எழுந்து படுக்கையறைக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே ஹாலுக்கு வந்து தன்னுடைய கணவனின் அறையைப் பார்த்தாள்.

அறைக் கதவு திறந்திருந்தது.

ஆச்சரியத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தாள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் சாதாரணமாய் பத்து மணிக்கு முன்னால் எழுந்ததே இல்லை. முந்தைய நாள் குடித்ததின் போதை இறங்கவே காலை பத்து மணியாகிவிடும் என்பது அவள் அறிந்ததுதான்.

ஆகவேதான் இத்தனைக் காலைப் பொழுதில் அவனுடைய அறை திறந்திருந்தது அவளுக்கு வியப்பை அளித்தது.

அவனுடைய கட்டில் காலியாயிருக்கவே வியப்பு மேலிட அறைக்குள் நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். படுக்கையறையிலிருந்த குளியலறையும் திறந்து கிடக்க அவனைக் காணவில்லை.

அறைக் கோடியிலிருந்த குறு மேசையில்தான் அவன் ஊரிலிருந்து கொண்டு வரும் பெட்டியை வைப்பது வழக்கம். நேற்று இரவு படுக்கச் செல்லும்போதும் அதை அங்கு பார்த்ததாய் ஞாபகம்.

இப்போது அது காலியாயிருந்தது. குழப்பத்துடன் அவனுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அலமாரியைத் திறந்துப் பார்த்தாள். அதில், அவள் இரண்டு நாட்களுக்கு முன் துவைத்து, இஸ்திரி போட்டு வைத்திருந்த நந்துவின் துணிமனிகள் காணாமல் போயிருந்தன.

அவன் அலெப்பியிலிருந்து கொண்டு வந்திருந்த அழுக்குத் துணிகள் ஒரு லெதர் பையில் வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தாள்.

ஆக, பட்சி பறந்துவிட்டது.. இனி அடுத்த சனிக்கிழமைதான்.

ஏன்? என்ன விஷயம்?

தன்னிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு செல்ல வேண்டிய அத்தனை அவசியமான அல்லது அவசரமான காரணம் என்னவாயிருக்கும்?

அறையை விட்டு வெளியே வந்து வாசற்கதவைத் திறந்தாள். எப்போதும் வாசலில் கிடக்கும் பால் பாக்கெட்டும் மாத்ரபூமி, மனோரமா செய்தித்தாள்களையும் காணவில்லை. காலை சாயா இருக்கிறதோ இல்லையோ இவ்விரண்டு செய்தித்தாள்களையும் படிக்காவிட்டால் நந்துவின்  தலை வெடித்துவிடும் என்பது அவளுடைய நினைவுக்கு வந்தது.

நந்து காலையிலேயே எழுந்து சென்றிருக்கிறான் என்பது ஊர்ஜிதமாக வாசற்கதவை அடைத்து தாளிட்டுவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

நந்து தேநீர் உண்டாக்கிய சுவடுகளாய் சமையல் மேடையில் சிதறிக்கிடந்த பாத்திரங்களும் காலியாய் கிடந்த பால் பாக்கெட்டும்..

மவுனமாய் அறையை பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்ற நளினி ஒரு பெருமூச்சுடன் முன் ஹாலுக்குத் திரும்பிச் சென்று சோபாவில் அமர்ந்தாள்.

மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு வழியும் தெரியாமல் வேண்டா வெறுப்பாக எழுந்து குளியலறைக்குள் சென்று பல்துலக்கி, குளித்து முடித்தாள்.

நந்து ஏன் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பிச் சென்றான் என்ற கேள்வி மீண்டும் வந்து தொத்திக்கொள்ள தன்னுடைய செல் ஃபோனை எடுத்து அவனைக் கூப்பிட்டாலென்ன என்று ஆலோசித்தாள்.

அவளையுமறியாமல் அவனுடைய எண்ணைத் தேடிப்பிடித்து டயல் செய்ய எதிர் முனையில் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. வேண்டுமென்றே அவன் எடுக்காமல் இருப்பானோ என்று தோன்றவே சலிப்புடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு செல் ஃபோனை சோபாவில் எறிந்தாள்.

கண்கள் அவளையுமறியாமல் கலங்க அப்படியே சோபாவில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்..

Where do we go from here?

விடை தெரியாத கேள்வி இது என்பது அவளுக்குத் தெரியும்.

சரி.. இப்படியே அமர்ந்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று தீர்மானித்தவளாய் முந்தைய நாள் இரவு குறித்து வைத்திருந்த நந்துவின் தங்கையின் தொலைப்பேசி எண்ணுக்கு டயல் செய்தாள்.

மறுமுனையில் இதற்கெனவே காத்திருந்ததைப் போல் எடுத்த குரல் சங்கீத்தாவின் மாமியாருடையது!

அவர் ஒரு முசுடு.. கோபக்காரி என்பது அவளுக்கு முன்னமே தெரியும். அவளையும் சங்கீத்தாவையும் சேர்த்து பார்த்த நேரத்திலெல்லாம் சங்கீத்தா அங்கே சந்தோஷமாய் இருக்கிறாளா என்று கூட நினைத்திருக்கிறாள்.

அப்போதெல்லாம், ‘இல்லே சேட்டத்தி. அம்மே அப்படியில்லை.. அடிக்கடி கோபம் வரும். பக்க்ஷே நல்லவளா. சேட்டன் அம்மேயோட ஒரே மோனல்லே.. அதுகொண்டா.. நான் என்ன சொன்னாலும் உடனே ஒத்துக்க மாட்டாங்க. ஆனா அதப்பத்தியெல்லாம் நா விஷமிக்கிறதில்லே.. சிரிச்சிக்கிட்டே போயிருவேன்.. ஒருத்தரோட கோபத்த எதுக்கறதுக்கு நாமளும் கோபப்படணும்னு இல்லே சேச்சி.. நம்மளோட சிரிப்பிலேயே அத சமாளிச்சிரலாம்.. என்னோட இந்த ட்ரிக் எண்டே சேட்டனுக்கும் வளர இஷ்டமான, அறியோ..’ என்பாள் சங்கீத்தா.

எத்தனை அருமையான பெண்.. நந்துவின் தங்கையா இவள் என்று பல சமயங்களிலும் அசந்து போய் நின்றிருக்கிறாள் நளினி.

நளினி திருமணமான புதிதில் அந்த பந்தத்தை முழு மூச்சாய் எதிர்த்த நந்துவின் அப்பாவை எத்தனை சாதுரியமாய் கையாண்டவள் இந்த சங்கீத்தா!

‘அச்சன் சொல்றதயெல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்க வேண்டாம் சேட்டத்தி. அவருக்கு நந்து சேட்டன் மேல பயங்கர பிரியம். அத்தோட அவர நம்பித்தான் நாங்க மூனு பேருமே இருக்கோம் இல்லையா? அதான், எங்க நீங்க சேட்டன பத்திக்கிட்டு போயிருவீங்களோன்னு ஒரு பேடி.. மத்தபடி உங்க மேல எந்த தேஷ்யமும் இல்லே..’ என்பாள்.

நாட்கள் செல்ல, செல்ல அவள் கூறியது சரிதான் என்பதைப் புரிந்துக்கொண்டாள் நளினி. ஆனால் அவர் மரிக்கும்வரை தன்னை வந்து பார்க்கவே இல்லை என்பதையும் தன்னை மருமகளாக அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதையும் பலமுறை நினைத்து வருத்தப்பட்டதுண்டு.

‘யாரான? விளிச்சிட்டு சம்சாரிக்காதிருந்தா எங்ஙன?’ என்ற எரிச்சலுடன் கூடிய குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு.. ‘அம்மே.. ஞான் நளினியான.. சங்கீத்தா வீட்டிலயுண்டோ..’ என்றாள்.

‘சங்கீத்தையோ.. உண்டல்லோ.. சேட்டத்தியானல்லே.. எங்ஙன உண்டு.. சுகந்தன்னேயில்லே..’ என்ற குரலில் தொனித்த ஸ்நேகம் சங்கீத்தா அவரைப் பற்றி கூறியது சரிதான் என்று நினைத்தாள் நளினி. ‘தோ, இப்போ விளிக்காம்.’ என்றவாறு அவர் ஒலிவாங்கியை வைத்துவிட்டு செல்ல அருகிலிருந்த தொலைக்காட்சியின் ஒலி தொலைப்பேசி வழியாகக் கேட்டது..

சிறிது நேரம் கழித்து, ‘ஐய்யோ, சேட்டத்தியோ.. எங்ஙன இண்டு சேட்டத்தி.. விளிச்சிட்டு எத்தற காலமாயி..’ சங்கீத்தாவின் குரலில் கொப்புளித்த சந்தோஷம் நளினியையும் தொற்றிக்கொள்ள அவளை அழைத்த விஷயத்தையோ மறந்துவிட்டு அடுத்த சில நிமிடங்கள் அவளிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தாள் நளினி.

அவளுடைய சடுதி நேர சந்தோஷத்தைக் கலைக்கும் விதமாக சோபாவில் கிடந்த அவளுடைய செல் ஃபோன் சப்தத்துடன் ஒலிக்க, ‘மோளே.. ஒரு மினிட்டு யாரோ விளிக்கான.. தோ சேட்டத்தி இப்போ வராம்.’ என்று ஒலிவாங்கியை மேசையில் வைத்துவிட்டு கட்டிலில் கிடந்த செல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள்.

நந்து!

‘எந்தா நந்து இது ஒன்னும் பறையாத ராவில எழுந்த? போவும்போ என்னோடெந்தா பறையாதது?’ என்றாள் கோபத்துடன்..

நளினியின் கோபக்குரலை எதிர்முனையிலிருந்து கேட்ட சங்கீத்தாவின் முகம் இருளடைந்தது..
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாயிற்றே. நந்து சேட்டன் எதற்காக சேட்டத்தியிடம் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்?

இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினையா?

அவளுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்துக்கொண்டே அவளை நெருங்கிய அவளுடைய கணவன் சக்திப் பிரசாத் அவளுடைய தோளை ஆதரவாய் தொட்டு ‘எந்தா? மீண்டும் பிரஸ்னமானோ?’ என்றான்.

தொடரும்..

2 comments:

G.Ragavan said...

சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டுப் போறது ரொம்பத் தப்பு. அது வீட்டுல இருக்குறவங்களுக்கு ரொம்ப கஷ்டம். போனது எங்கையோ! பட்டது என்னவோன்னு பயந்துக்கிட்டு இருப்பாங்க.

இப்பிடித்தான் தூத்துக்குடீல சின்னப் பையனா இருந்தப்ப...எங்க மச்சான் வந்திருந்தாரு. அவரு பள்ளி இறுதி. அதுனான பெரியவருதான. திடீர்னு சைக்கிள எடுத்துக்கிட்டு ராகவா வா போவோம்னு சொன்னாரு. நானும் ஏறிக்கிட்டேன். அவரு ஜோசப் தேட்டருக்குக் கூட்டீட்டுப் போனாரு. ஏதோ விட்டலாச்சாரியா படம். பாத்துட்டு வீட்டுக்கு வந்தா அம்மாவும் அத்தையும் பயந்து போயிருக்காங்க. ரெண்டு பேரையுங் காங்கலைங்குறதால பெரிசா இருக்கலை. ஆனாலும் திட்டு விழுந்தது. இன்னோரு வாட்டி நான் பள்ளிக்கூடத்துல இருந்து வர்ர வழியில விளையாண்டுகிட்டே ரொம்ப லேட்டா வந்தேன். இருட்டீருச்சு. வந்து பாத்தா வீட்டு வாசல்ல அம்மா உக்காந்திருக்காங்க. அப்பாவும் ஊருல இல்ல. அம்மாவப் பாத்தா திக்குன்னு இருக்கு. திடீர்னு பத்துப் பதினைஞ்சு வயசு கூடீட்டாப்புல இருக்காங்க. ஒன்னும் சொல்லித் திட்டலை. ஆனா அதுக்கப்புறம் நான் முடிஞ்சவரைக்கும் சொல்லீட்டுதான் போறது. இன்னமும் அந்த முகம் நினைவிருக்கு. அந்த ஒரு சூடு போதும் எனக்கு.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

பட்டது என்னவோன்னு பயந்துக்கிட்டு இருப்பாங்க.//

நம்ம நளினி நிச்சயம் நந்து காணோமேன்னு நினைச்சி பயந்துருக்கமாட்டாங்க.

கணவன் மனைவிக்கிடையிலருக்கற மனத்தாங்கல்தான் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு சென்றதற்கு காரணம்..

மத்தபடி நீங்க சொன்ன மாதிரி பல சமயங்கள்ல நடந்திருக்கு. சமயம் வரும்போது சொல்றேன்..