14.3.06

சூரியன் 40

வட்டமடித்து வந்து அவர்கள் முன் நின்ற ட்டோவில் மாணிக்கவேல் ஏறிக்கொள்ள அவரை விசாரித்தவரும் ஏறிக்கொண்டு, ‘தி நகர் போப்பா.. சீக்கிரம்.’ என ஆட்டோ சீறிக்கொண்டு விரைந்தது..

வீட்டை நெருங்க, நெருங்க, அடி வயிற்றிலிருந்து கிளம்பி வந்த துக்கம் தாங்காமல் கலங்கிப் போனார் மாணிக்கவேல்.

‘Please Mr.Manickam, control yourself. நீங்களே இந்த மாதிரி உடைஞ்சிப் போனா.. வீட்ல இருக்கறவங்கள யார்.. எப்படி..’ மாணிக்கத்தினுடன் ட்டோவில் பயணம் செய்தவர் மேலே பேச முடியாமல் தடுமாற ஆட்டோ வீட்டையடைந்தது..

வாசல் கேட் விரிந்து திறந்து கிடக்க அப்போலோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் நிற்பது தெரிந்தது..

ஆட்டோ நிற்பதற்குமுன் பதறி இறங்கிய மாணிக்கத்தை விழாமல் தாங்கிப் பிடித்த ஆட்டோ ஒட்டுனர், ‘சார் பார்த்து சார்.. வாங்க.’ என்று கைத்தாங்கலாக பிடித்து வாசலுக்குக் கொண்டு சென்றார்.

வாசலில் இருந்த போர்ட்டிக்கோ ஓரத்தில் இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த தன்னுடைய தந்தையை பரிதாபமாகப் பார்த்தார் மாணிக்கவேல். வயதான காலத்தில் இந்த இழப்பை அவர் எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறார் என்று நினைத்தார்.

வீட்டின் உட்புறத்திலிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து தன்னை நோக்கி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய வேசத்துடன் ஓடிவந்த தன்னுடைய மனைவியை வெறுப்புடன் பார்த்தார்.

‘அடப்பாவி மனுஷா. சாவப்போற ஒங்கப்பன் மேலருந்த அக்கறையில கொஞ்சமாவது எங்க மேல காட்டியிருந்தா இப்படி அநியாயமா எம் பொண்ண பறிகுடுத்திருக்க மாட்டேனே.. இப்படி அநியாயமா வாரிக்குடுத்திட்டியே.. நீ நல்லாயிருப்பியாய்யா.. நீ நல்லாயிருப்பியா..?’

மாணிக்கத்திற்கு அப்படியே தன் மனைவியின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்தாலென்ன என்று தோன்றியது. அவளைப் பிடித்து முரட்டுத்தனத்துடன் தள்ளிவிட்டு வீட்டினுள் நுழைந்து நடு ஹாலில் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் உயிரற்ற உடலாய் கிடத்தப்பட்டிருந்த தன் ஒரே மகளைப் பார்த்தார்.

அருகிலிருந்த அவருடைய மகன் சந்தோஷ் தன்னுடைய தந்தை தன் கண் முன்னாலேயே உடைந்து கீழே சரிந்து விழுவதைப் பார்த்துவிட்டு ஓடிவர சுற்றிலுமிருந்த மருத்துவமனை ஊழியர்களும் அவரை தாங்கிப் பிடித்து அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தனர்..

மாணிக்கம் கண்களில் நிறைந்து நின்ற கண்ணீரினூடே தன் மகனைப் பார்த்தார்.

‘சந்தோஷ்.. இது.. இது எப்படிறா... எப்படி.. நா நேத்து படுக்கப் போகும்போது கூட நல்லாயிருந்தாளேடா... நா காலைல எழுந்து போறப்பக் கூட இத கவனிக்கலையேடா.. என்னாச்சிரா.. இத நீ எப்ப பார்த்தே?’

சந்தோஷ் தன் தந்தை மூச்சு விட முடியாமல் தடுமாறியதைப் பார்த்து அருகிலிருந்தவர்களிடம், ‘ஃபிர்ட்ஜிலருந்து ஒரு பாட்டில் தண்ணி கொண்டாங்க ப்ளீஸ்.’ என்றான்..

அவர்கள் கொண்டுவந்த பாட்டிலைத் திறந்து தன்னுடைய தந்தையின் வாயருகில் கொண்டு சென்று, ‘இத கொஞ்சம் குடிங்கப்பா.. நீங்க இப்ப இருக்கற டென்ஷன்ல.. நான் எல்லாத்தையும் சொல்றேன்.. நீங்க கொஞ்சம் தண்ணி குடிங்க..’ என்று அவரை வற்புறுத்த வாசலருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராணி ஓடி வந்து அவனுடைய கையிலிருந்த பாட்டிலைத் தட்டிவிட்டு, ‘டேய், உங்கப்பா தண்ணி குடிச்சா என்ன குடிக்காட்டி... இனிமே என்னடா... அதான் எம்பொண்ணே போய்ட்டாளே..’ என்று பெருங்குரலெடுத்து அழ மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாமல் மெள்ள வாசலை நோக்கி நகர்ந்தனர்...

சந்தோஷ் அழுது புலம்பும் தன் தாயை சமாதானப்படுத்துவதா அல்லது மூச்சு விட முடியாமல் திணறும் தன் தந்தையைக் கவனிப்பதாவென தெரியாமல் திகைத்து நின்றான்.

மாணிக்கத்துடன் ஆட்டோவில் வந்திருந்த நண்பர் வீட்டிற்குள் நுழைந்து, ‘தம்பி, அந்த தண்ணி பாட்டிலை இங்க குடுங்க. நீங்க உங்கம்மாவ கவனிங்க.. உங்கப்பாவ நா பாத்துக்கறேன்..’ என்று சந்தோஷிடமிருந்த பாட்டிலை எடுத்து கண்மூடி அமர்ந்திருந்த மாணிக்கத்தின் முகத்தில் தண்ணீரை லேசாக தெளித்து துடைத்துவிட்டு அவருடைய வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து தண்ணீரை மெள்ள, மெள்ள ஊற்றினார்.

தரையில் படுத்து அரற்றிக்கொண்டிருந்த தன் தாயை அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்த சந்தோஷ் அவரைப் படுக்கையில் கிடத்திவிட்டு அவர் எழுவதற்கு முன் வெளியே வந்து அறைக்கதவைச் சாத்திவிட்டு தன் தந்தையிடம் திரும்பினான்.

தண்ணீர் குடித்ததும் சிறிது சுவாசமடைந்த மாணிக்கவேல் தன்னை நோக்கி வந்த தன் மகனுடைய கரத்தை எட்டிப் பிடித்தார். ‘டேய் சந்தோஷ். இப்படி உக்கார்.. என்னாச்சிடா.. I am now all right. Please tell me everything.. என்னாச்சி..’

சந்தோஷ் தன் தந்தையை ஆதரவாய் தொட்டு தடவிக்கொடுத்தான். ‘டாட், நேத்து நீங்க படுக்கப் போனதும் நானும் கமலியும் சாப்டு படுத்துட்டோம்.. பண்ணண்டு மணி இருக்கும். என் ரூம் கதவு தட்டுற சத்தம் கேட்டு வெளியே வந்தேன். வாசல்ல கமலி தலைய புடிச்சிக்கிட்டு, ‘பயங்கரமா பின்னந்தலை வலிக்குது சந்தோஷ். ஒரு மாத்திரை இருந்தா குடேன்’ன்னு நின்னுக்கிட்டிருந்தா.

‘தலைய வலிச்சிதாம்மா? டேய், அப்பவே என்னை எழுப்பியிருக்கக் கூடாதாடா.. நா ஏதாச்சும் செஞ்சிருப்பேனே..’ என கண்கலங்கிய தன் தந்தையை தட்டிக்கொடுத்துவிட்டு தொடர்ந்தான் சந்தோஷ்..

‘இல்ல டாட். அவ போன ரெண்டு மாசமாவே இப்படித்தான். அடிக்கடி தலைய வலிக்குதும்பா.. அப்புறம் ஒரு அனாசின் போட்டு காப்பிய குடிச்சதும் போயிருச்சிம்பா.. இப்பவும் அந்த மாதிரி தலைவலின்னுதான் நானும் நினைச்சேன். எப்பவும் என் ரூம்லருக்கற அனாசின கொடுத்தேன். இன்னைக்கி ஜாஸ்தி வலிக்குது சந்தோஷ் இன்னொரு மாத்திரை குடேன்னா.. சரின்னு குடுத்துட்டு சூடா ஒரு காப்பியும் போட்டு அவ ரூம்ல கொண்டு கொடுத்துட்டு அவ அத குடிக்கற வரைக்கும் இருந்துட்டுதான் நான் போய் படுத்தேன்.. அப்புறம் எப்படி இப்படியாச்சின்னு.. தெரியலைப்பா..’ என்று மேலே தொடர முடியாமல் விசும்பத் துவங்கிய மகனை தன் தோள்மேல் சாய்த்துக்கொண்டார் மாணிக்கவேல்..

எழுந்து மருத்துவமனை ஊழியர்களை நெருங்கினார். ‘தம்பி உங்க டாக்டரோட ஃபோன் நம்பர் இருந்தா குடுங்களேன். நான் பேசணும்..’

அவர்களில் ஒருவர் தன்னுடைய கையிலிருந்த உறையை அவரிடம் நீட்டி, ‘சார், உங்க டாட்டருக்கு ப்ரெய்ன் ஹெம்மரேஜ் ஆயி யாரும் கவனிக்காததனால ப்ளட் ஃப்ளோ ஜாஸ்தியாயி...’ மாணிக்கவேலின் முகம் போன போக்கைக் கவனித்த ஊழியர், ‘சாரி சார்.. இதுலருக்கற ரிப்போர்ட்ல எல்லாம் தெளிவா இருக்கு.. அப்புறமா படிச்சிப் பாருங்க..’ என்றவாறு ஹாலில் இருந்த சந்தோஷைப் பார்த்து, ‘மிஸ்டர் சந்தோஷ், நாங்க போய்ட்டு சாயந்திரமா வந்து ஸ்ட்ரெச்சர எடுத்துக்கறோம்..’ என்று கூறிவிட்டு விரைந்து வெளியேறி தங்களுடைய மருத்துவமனை வாகனத்தில் ஏறிக்கொள்ள அது புறப்பட்டுச் சென்றது..

புறப்பட்டு சென்ற ஆம்புலன்சையே சிறிது நேரம் பார்த்தவாறு பிரம்மைப் பிடித்ததுபோல் நின்றுக்கொண்டிருந்த மாணிக்கவேல் தன் கையிலிருந்த உறையை தரையில் வீசியெறிந்துவிட்டு நடு ஹாலில் கிடத்தப்பட்டிருந்த தன் மகளை நெருங்கினார்..

அடிப்பாவி மகளே.. சாகறா வயசாடி ஒனக்கு? தலை வலிக்குதுங்கறத அப்பாக்கிட்டருந்து மறைக்கணுமா? அண்ணாகிட்ட சொன்னத அப்பாக்கிட்ட சொல்லணும்னு தோனலையாடி.. நீ என்ன பண்ணுவே? பொழுது விடிஞ்சா, பொழுது போனா சண்டையும் சச்சரவுமா இருக்கற இந்த வீட்ல இந்த அப்பா அனுபவிக்கற கொடுமையோட நாமளும் கொஞ்சம் சேர்க்கணுமான்னு நினைச்சிருப்பே.. இந்த வீட்ல இருக்கறத விட நிம்மதியா போயிரலாம்னு முடிவு பண்ணிட்டே..

அதான் வாயை மூடிக்கிட்டு இந்த கஷ்டத்த அனுபவிச்சிக்கிட்டு...

Let God bless you my child.. Let God give you all the peace that you wanted in this world.. Goodbye..

இனி அழுதது போறும் என்ற முடிவுடன் முகத்தை அழுந்தத் துடைத்த மாணிக்கவேல் தன் மகனை நெருங்கி அவனுடைய தோளை தரவாய் தொட்டார்..

‘நீ எப்பப்பா கமலிய காலைல பார்த்தே?’

‘நீங்க கிளம்பி போய் ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும் டாட். ராத்திரி தலைவலின்னு சொன்னாளே இப்படி எப்படியிருக்குன்னு கேக்கலாம்னு நினைச்சி அவ ரூமுக்கு போனேன். கதவு சாத்தியிருந்திச்சி.. தட்டலாம்னு கையை வச்சேன் தானாவே திறந்துக்கிச்சி.  கமலி கட்டில்ல காணல.. உடனே அவ பாத்ரூம பார்த்தேன். திறந்திருச்சி.. உள்ள எட்டிப்பார்த்தேன்.. அவ வாஷ் பேசினுக்குக் கீழ கிடக்கறா. காதுலருந்தும் மூக்குலருந்தும் ரத்தம் வழிஞ்சி தரையெல்லாம். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. உடனே டெலிஃபோன் டேபிள்ல  அப்பாவுக்காக நீங்க எழுதி வச்சிருந்த அப்போல்லோ ஹாஸ்பிடல் நம்பர் இருந்தத பார்த்தேன். என்ன ஏதுன்னு யோசிக்காமயே ஃபோன் பண்ணி எடுத்தவங்கக் கிட்ட நான் பார்த்தத சொன்னேன். அடுத்த பதினஞ்சி நிமிஷத்துல அவங்க அடையார் எக்ஸ்டென்ஷன்லருந்து ஆம்புலன்ஸ் வந்துது.. அம்மா ரூம எட்டிப் பார்த்தேன். அவங்க ராத்திரி தூங்க போம்போது ஸ்லீப்பிங் டாப்ளட் சாப்பிடற ஞாபகம் வர அவங்கள் எழுப்ப முடியாதுன்னு நினைச்சி நா மட்டும் வீட்ட பூட்டிக்கிட்டு ஆம்புலன்ஸ்லயே ஏறி போய்ட்டேம்பா.. ஆனா கமலி வீட்லயே இறந்துபோய்ட்டான்னு அவள செக் பண்ண டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. ஒரு பத்து நிமிஷம் அவங்க ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தோம். அப்புறம் புறப்பட்டு நேரா.. வீட்டுக்கு வந்தப்புறம்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.’

மாணிக்கவேல் தன் மகனைப் பார்த்தார்., ‘ஏண்டா சந்தோஷ், இந்த அப்பாவுக்கு கமலிய பார்த்ததுமே ஃபோன் பண்ணனும்னு தோனலையாடா..’

சந்தோஷ் குனிந்து அவரைப் பார்த்தான். ‘நீங்க சாதாரணமா உங்க செல் ஃபோன வாக்கிங்க் போம்போது எடுத்துக்கிட்டு போ மாட்டீங்களே டாட்.. நான் ஆஸ்பத்திரியிலருந்து வந்ததும்தான் நீங்க இன்னும் வரலைன்னு தெரிஞ்சதும் உங்க ரூம போய் பார்த்தேன். அங்க டேபிள்ல உங்க செல் ஃபோன் இல்லன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்..’

‘டேய் அப்பனும் மவனுமா சேர்ந்து இன்னும் யாரை கொலை பண்ணலாம்னு திட்டம் போடறீங்க? இப்ப கதவை திறக்கறியா இல்லை உடைக்கட்டுமா?’ என்ற தன் தாயின் அலறலைக் கேட்டு திரும்பிய சந்தோஷ்.. திரும்பி தன் அருகிலிருந்த தன் தந்தையைப் பார்த்தான்..

தன் மனைவியின் அலங்கோலத்தைப் பார்த்த மாணிக்கவேலின் முகம் பாறையென இறுகியது.. ‘Don’t worry about her Santosh. Let her be there inside for some more time. நீ போய் தாத்தாவை அழைச்சிக்கிட்டு அவரோட ரூம்ல கொண்டு படுக்க வை.. தாத்தா தூங்கறதுக்கு நா போடற இஞ்ஜெக்ஷன் ப்ஃரிட்ஜில இருக்கும். நா அத எடுத்துக்கிட்டு வரேன்.’

‘டாட்..’ என்று தன் தாயைப் பார்த்து தயங்கி நின்ற சந்தோஷை முதுகில் கைவைத்து தள்ளினார், ‘You don’t look at her. போ.. தாத்தாவக் கூட்டிக்கிட்டு போய் படுக்க வை.. நான் வரேன்.’ என்று அவர் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து தனக்கு வேண்டியதை ஊசி மருந்தை எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அறையை நோக்கி நடந்தார்.

தொடரும்..






10 comments:

G.Ragavan said...

my god. itz most depressing to read this part. so no comments.

dondu(#11168674346665545885) said...

நான் பயத்துடன் எதிர்பார்த்தது தந்தையின் மரணம். ஆனால் சிறு பெண் மரணம்? ரொம்பக் கொடுமை.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு நார்மலாக இருப்பதற்காகக் கூறுகிறேன். மாணிக்கவேலர் வீடு தி. நகரில்? தாம்பரம் இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்.

மாணிக்கவேலர் வீடு தி. நகரில்? தாம்பரம் இல்லை?//

எல்லாம் இந்த கன்வேர்ட்டர் கொடுமை.. ஆதி நகர் (தாம்பரத்தில் இருக்கிறது) கன்வேர்ட்டர் 'ஆ' வை விழுங்கிவிட்டது..

மத்தபடி கமலியின் சாவு கொடுமைதான். இதைத்தான் நான் ஏன், ஏன், ஏன் என்ற பதிவில் இறைவன் செயல் என்று எழுதியிருந்தேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

Yes.. It is indeed depressing. But what to do..

dondu(#11168674346665545885) said...

அப்படித்தான் "வேங்கை நாட்டு வீரன்" என்ற சினிமா போஸ்டரின் மேல் இன்னொரு போஸ்டர் ஒட்டப்பட, அதில் "வேங்" மறைய, கை நாட்டு வீரன்" என்று காணப்பட்டது!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

Oh! Put a lot of things in perspective.

What a waste of human energy and lives from these conflicts.

A moving account of life as it flows.

டிபிஆர்.ஜோசப் said...

மீண்டும் வருக டோண்டு சார்,

"வேங்" மறைய, கை நாட்டு வீரன்" என்று காணப்பட்டது!!//

ஹ,ஹா,ஹா!

ஆனால் ஒன்று உண்மையிலேயே கைநாட்டு வீரர்கள் நம் நாட்டில் நிறையவே இருக்கிறார்கள்:>)

டிபிஆர்.ஜோசப் said...

வானக் மா. சிவக்குமார்,

What a waste of human energy and lives from these conflicts.//

Yes, indeed.

Thanks for your comments.

siva gnanamji(#18100882083107547329) said...

enna pavam seythal? kamalikku en indha mudivu? twist venungradhukkaga..........idhu aniyayam

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சி.ஜி,

இது நிச்சயம் ட்விஸ்ட்டுக்காக இல்லேங்கறத போகப் போக நீங்களே தெரிஞ்சிப்பீங்க.

இத்தொடரில் நான் எழுதும் ஒவ்வொரு குடும்பமும் நான் நேரில் சந்தித்த குடும்பங்கள். ஒரு இளம் மகளின் இத்தகைய எதிர்பாராத மரணம் என்ன விளைவுகளை அக்குடும்பத்தில் ஏற்படுத்தும் என்பதை நேரில் கண்டு அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அந்த சுய அனுபவம்தான் அந்த எப்பிசோடை எழுதும்போது வெளிவந்தது..

இளம் வயதில் ஒருவர் மரித்துப்போவது அநியாயம்தான்.. ஆனால் என்ன செய்வது? அதுதான் இறைவனின் சித்தம்..